மன்னியுங்கள் அப்பா, மன்னியுங்கள் அம்மா
தீபக் தமிழ்மணிJul 9, 2016
அன்புள்ள அம்மா, அப்பாவுக்கு
இதுவரை உங்களுக்கு நான் கடிதம் எழுதியதில்லை, எழுத நினைத்ததும் இல்லை. ஆனால் இன்று எழுதுகிறேன். ஒருவேளை இனிமேல் உங்களுக்கு கடிதம் எழுத முடியாமல் போகலாம். இதுவே என் கடைசி கடிதமாகவும் ஆகலாம். எனவே எழுதுகிறேன்.
சென்ற வாரம் ஆனந்திற்கும் ஆனந்திக்கும் திருமணம். அவர்கள் பெயர்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமை போல, அவர்களின் உள்ளங்களும் ஒன்றுபற்றிருந்தது. எனவே நானும், துளசியும், சில நண்பர்களும் சேர்ந்து திருமணத்தை முன்நின்று நடத்தி வைத்தோம்.
ஆனந்த், ஆனந்தியின் மனங்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டதுபோல், அவர்களின் பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. காவல்நிலையம் போனார்கள், சட்டம் மணமக்களுக்கு ஆதரவாக இருந்தது. கெஞ்சிப் பார்த்தார்கள், தற்கொலை மிரட்டல் விடுத்தார்கள், கொலை மிரட்டலும் விடுத்தார்கள் பயனில்லை. கடைசியாக சாபமும் விட்டார்கள். அந்த சாபம் எனக்கும் சேர்த்துதான். பெற்றோர்களிடம் இருந்து அவர்களின் பிள்ளைகளை நான் பிரித்துவிட்டேன் என்றும், எனவே இதுபோல் திருமணம் நானும் செய்து உங்களை அவமானப்படுத்துவேன் என்பதுதான் அவர்களின் சாபம் அல்லது ஆசை அல்லது பழிதீர்த்தல்.
இந்த சம்பவங்களுக்குப் பிறகு நிறைய சிந்தித்தேன். அப்படி ஒருமுறை யோசித்துக் கொண்டிருக்கும்போது, என் விரல்களுக்கிடையில் சிகரெட்கூட சுட்டிருக்கிறது. ஒருவேலை நானும் துளசியும் காதலிப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என்று என் சிந்தனை பற்றி கேட்டுவிட்டு, துளசி எனக்கு பதிலளித்தால், ‘உங்க அப்பா, அம்மா மட்டுமல்ல, பல பெற்றோர்கள் சாதியைக் கடந்த திருமணங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காதல் திருமணங்களை எதிர்ப்பதன் நதிமூலம் சாதிப் பற்றுதான். ஒரு மணப்பெண்ணிற்கு சீதனம் கொடுக்கும்போது, தன் சொந்த சாதிக்காரனுக்கு சாதியை சீதனமாகக் கொடுக்கிறார்கள். மாறாக மணமகன் தன் சாதியை பிள்ளைகள் மூலம் பெருக்க வேண்டும். இதுதான் இங்கு வழக்கமாக திருமணம் என்ற பெயரில் நடைபெறுகிறது’ என்றாள்.
அவளின் தீர்க்கமான ஆழ்ந்த பார்வை சற்று தாழ்ந்துவிட்டது. அவளின் சோகம் என்னையும் தொற்றிக் கொண்டது. வெகு நேரம் அமைதியாய் இருந்தோம். நானே அந்த அமைதியைக் கலைத்தேன். நாமும் ஆனந்த், ஆனந்தியைப் போல் திருணம் செய்துகொள்வோமா என்றேன். உதடுகள் விரிய புன்னகைத்தாள்.
நாளை காலையில் நாங்களும் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம். சாதியை மறுத்து, சடங்குகள் இல்லாமல் இந்த இணை ஏற்பு விழா நடக்கப்போகிறது. இவைகளைப் பற்றி பேசிவிட்டு, இப்பொழுதுதான் அவரவர் அறைக்கு பிரிந்தோம். இப்பொழுதுதான் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
துளசி சொன்னது உண்மைதான், நீங்களும் எங்களை ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை. ஆனந்தியின் அம்மா கேட்டது போல், ‘எங்களைவிட உனக்கு காதல்தான் பெருசா?,சாதி சனத்துக்கு என்ன பதில் சொல்வேன்’ என்று கதறியபடி நீங்களும் என்னைப் பார்த்து கேட்கலாம். ஆனால் ஆனந்தி போலல்லாமல் நான் உங்களை திருப்பி கேட்கிறேன் “எங்களின் ஆசைகளை விட உங்கள் சாதிதான் பெருசா?.
அப்பா, நீங்கள் என்னை உங்கள் மகன் என்பதைவிட, இந்த சாதியின் பிரதிநிதியாய் நினைத்து பெருமைப்படுவதை எல்லாம் இப்பொழுது நினைத்தால்,”மணமகன் தன் சாதியை பிள்ளைகள் மூலம் பெருக்க வேண்டும் என்பதுதான் இங்கு சமூக விதி” என்று துளசி விளக்கமளித்தது எவ்வளவு உண்மை என புரிகிறது.
உங்களது சாதி பாசமும்கூட உண்மை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படியென்றால் சித்தப்பாவின் நிலப் பிரச்சனைக்கு, ஏன் துரைசிங்கம் மாமாவை கொன்னாரு. அவரும் நம்ம உறவுதானே, அவரும் நம்ம சாதி தானே.
கண்ணுக்கு தெரிந்து முத்துக்குமார் அண்ணன் நன்றாக வாழ்ந்தார். ஆனால் தொழில் படுத்து அவரு சிரமப்படும்போது யாரும் உதவல, நாமும் உதவல. நம்ம சாதியில பொருளாதாரத்தில கஷ்டப்படறவனுக்கு எல்லாம் நம்ம சாதிக்காரங்க சொத்துல பங்கு கொடுத்து காப்பாத்தனும்னா? நமக்குன்னு ஒரு சாதி சங்கத்தை வெச்சுக்கிட்டு நம்ம பொண்ணை கட்டுறவனை வெட்டுவேன்னு சொல்லிக்கிட்டு யாரும் ஒருத்தன்கூட இருக்கமாட்டாங்க.
இன்று லட்சுமி அண்ணிய எல்லோரும் ஒழுக்கங்கெட்டவள்னு திட்டுறவங்கதான், அண்ணியோட காதலனை கள்ளக்காதலனா ஆக்குனவங்க. அண்ணி காதல் வெவகாரம் தெரிஞ்சு யாருமே கட்டிக்காத போது 15 வருச வித்தியாசத்தோட ராசா அண்ணன கட்டிவச்சீங்க. அண்ணி பழைய காதலனோடவே பழகுனாங்க, இது கள்ளக்காதலா.
இவற்றை எல்லாம் எண்ணி மனதில் புழுங்கிக் கொண்டிருந்த நேரம் தான், “ விடு அவங்க சொந்த சாதிகாரங்க முன்னேறனும்னு உழைக்கறாங்க. நாம உரிமை மறுக்கப்பட்ட எல்லோருக்காகவும் போராடலாம். மனிதனுக்கு மொழி, சாதி, மதம், இனம், நாடு என அனைத்தையும் கடந்து அவனுக்குரிய உரிமையும், கண்ணியமும் கொடுக்கப்பட வேண்டும். இவை மறுப்பவர்களுக்காகப் போராடுவோம். மனித குலத்தின் ஒட்டுமொத்த நன்மைக்காக உழைப்போம்” என்று ஒரு மழைக்கால மாலையில் துளசி சொன்னது என்னையும் ஈர்த்துவிட்டது.
உன்னதமான லட்சியங்களை சுமந்து கொண்டிருக்கிற என் துளசி எனக்கு மிக உன்னதமானவளாகத் தெரிந்தாள். நான் அவளை காதலிக்கத் தொடங்கினேன். அவளுக்கும் என்னைப் பிடித்துவிட்டது. துளசியின் குணம், ஒழுக்கம், அறிவு எல்லாவற்றையும் விட சாதி எனக்கு பெரிதாகத் தெரியவில்லை.
நாங்கள் இருவருமே படித்தவர்கள், எங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம் அம்மா. கனத்த மனதுடன் விடை பெறுகிறேன்.
இறுதியாக துளசியின் சாதியை சொல்லிவிடுகிறேன், பட்டியல் இனத்தை சேர்ந்தவள். அவள் சாதியை சொல்வதற்குக் காரணம். நாளை சாதிப் பஞ்சாயத்தில் அப்பா பங்கெடுக்கும்போது, அவரது மருமகளே பட்டியல் இனத்தவள் என்பதால், அப்பாவின் மனசாட்சி குறைந்தபட்சம் அமைதி காக்கும் அல்லது சாதிப் பஞ்சாயத்துகளில் பங்கேற்காமலும் போகலாம்.
நன்றி எல்லாவற்றுக்கும்.
தீபக் தமிழ்மணி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மன்னியுங்கள் அப்பா, மன்னியுங்கள் அம்மா”