மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மாமனிதர்கள்

முனைவர் மு.பழனியப்பன்

Nov 26, 2022

siragu pakthi ilakkiyam2

மனிதர்கள் பிறந்து, வாழ்ந்து, மறைபவர்கள் மட்டுமல்ல. புகழால் உலகம் அளந்து நிற்பவர்கள் ஆவர். மனிதர்கள் புகழ் பெறவேண்டுமானால் பல நல்ல பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும். மனிதர்கள் மாமனிதர்களாக விளங்க என்ன என்ன நல்ல பண்புகள் பெறவேண்டும் என்று ஒரு வினா எழுப்பினால் அதற்கு விடை காண்பது விரிவாக அமையும். இருந்தாலும் அடிப்படையான சில நல்ல பண்புகள் மனிதர்கள் மாமனிதர்களாகத் தேவைப்படுகின்றன.

மனிதர்கள் மென்மையான மனம் பெற்றவர்கள். மனிதர்களுக்குள் அன்பும், கருணையும் நிரம்பிவழிகிறது. மனிதர்களின் மனம் என்பது பக்குபவப்படுத்தப்பட வேண்டியது. நிலையில்லா மனதின் போக்கில் மனிதர்கள் நடந்தால் நிலையற்றுப்போகிறார்கள். நிலையான வலிமையான எண்ணங்களுடன் மனதை வழி நடத்தும் மனிதன் வெற்றி பெற்றவன் ஆகிறான்.

மனதை யார் வழி நடத்த முடியும்? நம் மனமே நம்மை வழி நடத்திவிட முடியுமா? மனதை வழிப்படுத்தும் வல்லமை யாரிடம் இருக்க முடியும். அந்த மனத்திடம் தான் இருக்க முடியும். மனம் என்பது வெற்றுப் பை. அந்தப் பைக்குள் என்ன நிரப்புகிறோம் என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம். மனம் எனும் வெற்றுப் பைக்குள் அறிவு சார்ந்த கருத்துகளை நிரப்ப வேண்டும். மனதிற்குள் கருணையை நிரப்ப வேண்டும். மனதிற்குள் ஞானத்தை நிரப்ப வேண்டும். மனதிற்குள் நேர்மையை நிரப்ப வேண்டும். சுறுசுறுப்பை நிரப்பவேண்டும்.

உள்ளே வலுவூட்டப்பெற்ற மின்கலத்தைப் பொருத்தினால் கைவிளக்கு அதிக ஒளியுடன் எரிகிறது. வலுவூட்டப் பெற்ற மின்கலம் வலு குறைவானால் ஒளி குறைகிறது. மீண்டும் வலுவூட்ட வேண்டியுள்ளது. இப்படித்தான் மனதையும் வலுவும் பொலிவும் பெறச் செய்ய வேண்டியிருக்கிறது. மனதிற்குள் நல்ல பல செய்திகளைப் பண்புகளைக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. அதற்கு மனமும் இடம் தரவேண்டும். இடம் தந்து நல்லவைகளைப் பெற்று நாளும் அவற்றை நினைவுபடுத்தி மனிதரை நல்ல வழியில் நடக்கச் செய்ய வேண்டும்.

மனதை வலுவூட்ட என்ன வழி? நல்ல சொற்களைக் கேட்கலாம். நல்ல நூற்களைப் படிக்கலாம். நல்ல சிந்தனைகளை நல்ல வழிகளில் பெறலாம். எனவே மனதை நல்ல குணங்களின் இருப்பிடமாக ஆக்கவேண்டுவது தேவையாகின்றது.
நல்ல நூற்களை விரும்பிக் கற்பவன் அறிஞன் ஆகிறான். அவன் தன்னையும் வழிப்படுத்திக் கொள்கிறான். சமுதாயத்தையும் வழிப்படுத்துபவன் ஆகிறான். கருதிய நூல் கற்பவன் அறிஞன் ஆகின்றான். அவன் தன் மனதிற்கும் நல்லவைகளைக் கற்றுத் தருகிறான். சமுதாயத்திற்கும் நல்லவைகளைக் கற்றுத்தருகிறான்.
கற்பதில் அளவில்லா நிலை வேண்டும். ஆனால் பேசுவதில் அளவு வேண்டும். கணக்கறிந்து பேசுபவன் காலம் அறிந்து பேசுபவன் ஆகிறான். பேசுவதில் கணக்கு வேண்டும். ஆனால் கேட்பதில் கணக்கு வேண்டுவதில்லை. பேசுவது என்பது சொற்களின் செலவுதான். கேட்பது என்பது சொற்களின் வரவாகும். வாழ்வது நலமாகும்.

படிப்பது கேட்பது என்பன மனிதனை மாமனிதனாக்குவன. இன்னும் பல பண்புகளும் மனிதனை மாமனிதனாக ஆக்குகின்றன. நல்ல தொழிலை நாளும் செய்பவன் உலகத்திற்கு நன்மை செய்பவன் ஆகிறான். ஒரு தொழிலும் செய்யாதவன் தனக்கும் இழிவைத் தேடிக் கொள்கிறான். உலகிற்கும் இழிவைத் தந்துநிற்கிறான். செய்யும் தொழிலே தெய்வம் ஆகிறது. அத்தொழிலைத் தூய்மையுடனும் நேர்மையுடனும் செய்திடுபவன் மனிதர்களில் கர்மயோகியாகிறான்.

மனிதர்கள் எதற்கேனும் உதவியாக இருக்க வேண்டும். யாருக்காவது உதவி செய்திட வேண்டும். உதவுதல் என்பது இருபக்க நிலையிலும் அமையவேண்டும். மனிதர்கள் ஒன்று தன் உயர்விற்காக உழைக்கவேண்டும். மற்றவர்கள் உயர்விற்காக உழைக்க வேண்டும். எதுவும் செய்யாது இருப்பவன் சோம்பலைக் கொண்டவன் ஆகிறான்.

மனிதன் மாமனிதனாக்க பெரியோர்தம் வழிகாட்டலும், ஆசியும் தேவை. பெரியவர்கள், சான்றோர் அவர்களைப் பணியாமல் முன்பு மரம் போல நிற்பவன் சான்றோன் ஆக இயலாது. மரம் உணர்வற்று ஏதும் செய்ய இயலாது அப்படியே நிற்கும். அந்நிலையில் இருந்து மாறி அறிவாலும் ஞானத்தாலும் சான்றோர்களுடன் கலந்து பேசுபவன் சான்றோர்களுள் ஒருவனாகிறான்.

தனக்கு ஒரு வேலை அமைந்துவிட்டால் அதனைத் திட்டமிட்டுச் சிறப்புடன் முடிப்பவன் உண்மையானவன் ஆகிறான். வேலையைச் செய்யாமல் தட்டிக் கழிப்பவன், வேலையைச் செய்யாமைக்கான காரணத்தைச் சொல்பவன் பொய்யன் ஆகிறான்.

பசியோடு இருப்பவர்களுக்கு உணவிடுபவர்கள் புண்ணியவான்கள் ஆவர். பசிப்பவர்க்கு இட்டு உண்ணாதவன் பாவியாகிறான்.

ஒரு மனிதன் கற்றவனாக விளங்க வேண்டும். குறைவாகப் பேசுபவனாக இருக்க வேண்டும். ஒரு தொழிலைச் சீருடனும் சிறப்புடனும் செய்பவனாக இருக்கவேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்பவனாக இருக்கவேண்டும். பெரியோர்களிடத்தில் மதிப்பும் மரியாதையும் உடையவனாக இருக்கவேண்டும். பசித்துவருபவர்க்கு உணவளிக்கவேண்டும்.

கருதியநூல் கல்லாதான் மூட னாகும் கணக்கறிந்து பேசாதான் கசட னாகும்
ஒருதொழிலு மில்லாதான் முகடி யாகும் ஒன்றுக்கு முதவாதான் சோம்ப னாகும்
பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும் பேசாம லிருப்பவனே பேய னாகும்
பரிவுசொலித் தழுவினவன் பசப்ப னாகும் பசித்தவருக் கிட்டுண்ணான் பாவி யாமே.

என்று விவேக சிந்தாமணி மனிதர்களை மாமனிதனாக ஆக்கக் கூடிய நற்கருத்துகளை வழங்குகின்றது.
மனிதர்களில் எத்தனை வகைகளைக் காட்டுகின்றது விவேக சிந்தாமணி.

மூடன், கசடன், முகடி, சோம்பன், பேயன், பசப்பன், பாவி என்று மனிதர்களைப் பல வகைகளாக்குகின்றது விவேக சிந்தாமணி. இந்த குறைபாடுகள் நீங்கினால் மனிதன் மூட நிலையில் இருந்து அறிஞன் ஆகிறான். கசடன் என்ற நிலையில் இருந்து, தூய்மையானவன் ஆகிறான். முகடி சோம்பல் என்ற நிலைகளில் இருந்து சுறுசுறுப்பு உடையவனாகிறான். பேயத் தன்மையில் இருந்து மெய்த்தன்மை பெறுகிறான். பசப்பு நிலையில் இருந்து உயிர்ப்பு நிலை பெறுகிறான். பாவி நிலையில் இருந்து புண்ணிய நிலை பெறுகிறான்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மாமனிதர்கள்”

அதிகம் படித்தது