மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர் – இறுதிப்பகுதி

கி.ஆறுமுகம்

Oct 10, 2015

puli thevar11புலித்தேவர் மேற்குத் தொடர்ச்சி மலையின் குகையில் இருந்துகொண்டு படைபலத்தினை பெருக்கிக் கொண்டிருந்தார். மீண்டும் தனது கோட்டையை வெள்ளையர்களிடமிருந்து கைப்பற்றிட தீவிரமாக செயல்திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தார். புலித்தேவர் தனது ஒற்றர்களின் மூலம் வெள்ளையர்களின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருந்தார். குகையில் இருந்து கொண்டே நாட்டில் என்ன நடக்கின்றது என்பதை உன்னிப்பாக கவனித்து அனைத்தையும் அறிந்து கொண்டார்.

வெள்ளையர்கள் தென்தமிழகத்தில் புலித்தேவரை பிடித்துவிட்டால் போதும், மற்ற பாளையங்கள் அனைத்தையும் மிக எளிதாக வெற்றி கொள்ள முடியும், நமக்கு இருக்கும் ஒரே முக்கியமான எதிரி புலித்தேவர் மட்டும்தான் என்று அவரை கைது செய்திட மிகத் தீவிரமாக முயற்சி செய்தனர்.புலித்தேவரின் கோட்டையைக் கைப்பற்றியதும், அவரது குடும்பம் எங்குள்ளது என்பதை அறியாமல் தேடிக் கொண்டிருந்தனர் வெள்ளையர்கள். பின்னர் அவர்கள் இருக்கும் இடத்தினை அறிந்து கொண்டதும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் குடிசையில் இருக்கும்போது, சற்றும் எதிர்பாராத நேரத்தில் குடிசைக்கு தீ வைத்து விட்டனர்.

புலித்தேவரின் படைகளில் இருந்த ஒரு தளபதி, புலித்தேவரின் குடும்பத்தை ரகசியமாக பாதுகாத்துக் கொண்டிருந்தார். தீயில் குடிசை முழுவதும் எரிந்துவிட்டது. இந்தத் தீயில் புலித்தேவரின் மனைவி படுகாயம் அடைந்து இறந்துவிட்டார். அவரது குழந்தைகளை படைத்தளபதி தீயிலிருந்து காப்பாற்றினார். இதில் மூத்த மகனை, பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் தாத்தா, தன்னுடன் பாஞ்சாலங்குறிச்சிக்கு அழைத்துச் சென்று வளர்த்தாகக் கூறப்படுகிறது. வெள்ளையர்கள் புலித்தேவரைக் கண்டு மட்டும் அச்சம் அடையவில்லை, அவரது பரம்பரையில் ஒருவரும் இருக்கக் கூடாது, அப்படி இருந்தால் அந்த வீரத்தின் இரத்தம் மீண்டும் தங்களைத் தாக்கக் கூடும். எனவே புலித்தேவர் வாரிசு என்று எவரும் இருக்கக் கூடாது, அவரது பரம்பரை முழுவதையும் அழித்தால்தான் தென்னகத்தில் தங்கமுடியும், நிம்மதியாக வரிவசூல் செய்யமுடியும் என்று நினைத்தனர். அவரது குடும்பத்தை தீக்கு இரையாக்கிவிட்டு புலித்தேவரை மிகத் தீவிரமாக தேடிக்கொண்டிருந்தனர். ஆனால் புலித்தேவர் எங்கு உள்ளார் என்று வெள்ளையர்களினால் கண்டுபிடிக்க முடியவில்லை.

newsletter oct 3 2015-3அவர் தலைமறைவாக இருந்தாலும் அவர் வீரத்தின் மீதும், அவரின் படைவீரர்களின் வீரத்தின் மீதும் வெள்ளையர்கள் மிகவும் அச்சம் கொண்டிருந்தனர். புலித்தேவர் எந்த நேரத்திலும் படையுடன் வெளிவருவார் என்ற அச்சத்தில் வெள்ளையர் கூட்டம் உறைந்து போய் இருந்தது. புலித்தேவர் காட்டில் குகையில் இருந்தாலும் அவரின் மதிப்பும் புகழும் மக்களிடத்தில் சற்றும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது. இதனால் அவரை விரைவில் கைது செய்திட வெள்ளையர்கள் தீவிரமாக செயல்பட்டனர். புலித்தேவரை நேருக்கு நேர் போரில் எதிர் கொண்டு எத்தனை முறை போரிட்டாலும் அவரை வெற்றி கொள்ள முடியாது, அவரை கைது செய்ய முடியாது. எனவே அவரை வஞ்சகமாக சூழ்ச்சி செய்தால்தான் கைது செய்ய முடியும் என திட்டம் தீட்டினார்கள் வெள்ளையர்கள்.

புலித்தேவரின் பாளையத்துடன் நண்பர்களாக இருந்த, பாளையங்களை பிரித்தாளுதல் வேண்டும் என்று அவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி பொன், பொருள், பதவி கொடுத்து தங்களுக்கு விசுவாசமாக இருக்க செய்திட வேண்டும் என்று எண்ணினர் வெள்ளையர். இந்தத் திட்டத்தின்படி திருவிதாங்கூர் மகாராஜாவை தங்கள் வலையில் விழவைத்தனர் வெள்ளையர்கள். வெள்ளையர்களின் நயவஞ்சகமான வார்த்தைகளை நம்பி திருவிதாங்கூர் இராஜா வெள்ளையர்களுடன் கைகோர்த்திட்டார்.

புலித்தேவர் குகையில் இருந்துகொண்டு ஒற்றர்களின் மூலம் அனைத்தையும் அறிந்து கொண்டிருந்தார். மற்றும் தனக்கு நெருங்கிய பாளையக்காரர்களை இரகசியமாக வரவழைத்து போர் தொடுப்பதைப் பற்றி திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தார். 1767ம் ஆண்டில் ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவன் புலித்தேவரை சந்தித்து, நான் வெள்ளையர்கள் போல் போர் ஆயுதம் தயாரிப்பதற்கு, புதிதாக ஒரு திட்டம் தீட்டி அதனை செயல்படுத்திட உள்ளேன். அந்தப் போர் கருவிகள் உற்பத்தி செய்யும் இடத்திற்கு தங்கள் ஒரு முறை வந்து பார்வையிட வேண்டும் என்று புலித்தேவரிடம் வேண்டுகோள் வைக்கிறான். சற்று சிந்திக்கிறார் புலித்தேவர், இவனை நம்பி நாம் செல்லலாமா அல்லது நம் சார்பாக வேறொருவரை அனுப்பலாமா என்று புலித்தேவர் சற்று தயங்கியதை கவனித்த அனந்த நாராயணன், மறவர் படைத் தலைவரே தாங்கள் சிந்திக்காமல் வந்து போக வேண்டும், நீங்கள் வந்து ஆயுதங்களை மேற்பார்வையிட்டு எங்களுக்கு தக்க ஆலோசனைகளை கூறுவீர்கள் என்று நான் நம்புகிறேன் என்றான். புலித்தேவரும் சரி நான் வருகிறேன் என்று வாக்கு கொடுக்கிறார். உயிரே போனாலும் கொடுத்த வாக்கை காப்பாற்றும் மறவர் அல்லவா புலித்தேவர், குறித்த நேரத்தில் ஆயுதங்களை பார்வையிட செல்கிறார். அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்து செல்லும் போது, ‘நாம் ஆயுதங்களைப் பார்க்கும்போது உங்கள் வாள் எதற்கு, அதை என்னிடம் கொடுங்கள், நான் பத்திரமாக திருப்பி செல்லும்போது தருகிறேன்’ என்று கூறி புலித்தேவரின் வாளை வாங்கிக் கொள்கிறான்.

பின்னர் ஒரு கூண்டை காண்பித்து இது எவ்வாறு உள்ளது என்று கூறுங்கள், தேவரே உள்ளே சென்று முழுவதையும் பரிசோதனை செய்யுங்கள் என்கிறான். புலித்தேவர் உள்ளே சென்றதும் கூண்டு மூடப்படுகிறது. வெள்ளையர் கூட்டம் வருகிறது, புலித்தேவரைக் கைது செய்கிறது. புலித்தேவர் என்ற புலியை நேரில் எதிர்கொள்ள வீரம் இல்லாத எதிரிகள், அவரை வஞ்சமாகக் கைது செய்கிறார்கள். இதனை சற்றும் எதிர்பாராத புலித்தேவர் நம்மை இப்படி நம்பவைத்து, உறவாடி துரோகம் செய்து விட்டானே என்று கவலையுற்றார். எதிரியின் கையில் தன் உயிர் போகக் கூடாது என்று மனம் வருந்துகிறார். புலித்தேவரை கைது செய்த மகிழ்ச்சியில் வெள்ளையர்கள் கூட்டம் இருக்கிறது.

புலித்தேவரை கைது செய்து சங்கரன் கோவிலில் உள்ள சங்கர நாராயணர் கோவில் முன் செல்லும் போது, புலித்தேவர் ‘நான் இறைவனை வழிபட வேண்டும்’ என்று கூறுகிறார். வெள்ளையர்கள் புலித்தேவரை மிக பாதுகாப்பான சங்கிலியிணைப்புடன் ஆலயத்தினுள் செல்ல அனுமதிக்கின்றனர். மிக அதிக பாதுகாப்புடன் உள்ளே சென்ற புலித்தேவர் சிவன்முன் நின்று மனம் உருகி வழிபடுகிறார். சிவனிடம் இருந்து ஜோதி வெளிப்படுகிறது, புகைப்படலம் தோன்றுகிறது. புலித்தேவரின் கை, கால்களில் பிணைக்கப்பட்டிருந்த சங்கிலிகள் உடைகிறது. புலித்தேவர் ஜோதியில் சென்று மறைகிறார். வெள்ளையர் கூட்டம் புலித்தேவர் சென்ற இடம் தெரியாமல் தேடுகின்றனர்.

puli thevar4இத்திருக்கோவிலுக்கு புலித்தேவர் பல திருப்பணிகளைச் செய்துள்ளார். இக்கோவில் கோமதி அம்மன் ஆலயம் என்றும் அழைக்கப்படுவது உண்டு. இன்றும் இத்தலத்தில் புலித்தேவர் அறை என்று ஒன்று உள்ளது. அதில் புலித்தேவரின் உருவப்படம் ஒன்று உள்ளது. புலித்தேவர் ஆலயத்தினுள் சென்றதை அனைவரும் பார்த்தனர். அனைவரும் புலித்தேவர் சிவனுடன் ஜோதியில் இணைந்துவிட்டார் என்று கூறுகின்றனர். புலித்தேவரின் மரணம் எவருக்கும் தெரியவில்லை. ஒரு மாவீரன் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என்று ஆரம்பித்து நடத்தியவர், ஒரு சிறு பாளையத்தின் தலைவனாக இருந்து கொண்டு, 1755-ம் ஆண்டு துவங்கி 1767-ம் ஆண்டு வரை வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய மாவீரனின் வரலாற்றையும், அவர் பற்றிய வெள்ளையர்கள் எழுதிய குறிப்புகளையும் தமிழக அரசு வெளியிடாமல் வைத்துள்ளது. இது தமிழர்களுக்கு செய்யும் துரோகம். மாவீரனின் புகழ் உலகம் அறிந்திட செய்ய வேண்டும், தமிழனைக் கண்டு வெள்ளையன் கூட்டமே ஓடியது உண்மை. உண்மைக் குறிப்புகள் வெளிவர வேண்டும். புலித்தேவரின் புகழ் உலகறிய வேண்டும்.


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர் – இறுதிப்பகுதி”

அதிகம் படித்தது