மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதல் சுதந்திர போராட்ட மாவீரர் பூலித்தேவர் – பகுதி-7

கி.ஆறுமுகம்

Sep 19, 2015

pulithevar iiமருதநாயகத்தினை தூக்கில் போட்டு, இறந்த பிறகு, அவரது ஆத்மா வெள்ளையர்களை தூங்கவிடவில்லை இரவில் வெள்ளையர்களின் கனவில் சென்று அவர்களை அச்சமடையச் செய்தார். இது போன்று ஆற்காடு நவாப்பின் மனநிலையும் இருந்தது. வெள்ளையர்களுக்கும், ஆற்காடு நவாப்பிற்கும் மருதநாயகம் யூசுப்கானாக மாறி எத்தனை நன்மைகளை செய்தார், அத்தனைக்கும் சிறு நன்றி உணர்வு கூட இல்லாமல், அவர் குடும்பத்தை சிதைத்து அவரை தூக்கில் போட்டு கொன்றதினால், நன்றி மறந்ததினால் அவர்கள் மன நிம்மதியை இழந்து தவித்தனர். இந்த நிலைமையை சரி செய்ய வழியின்றி இவர்கள் தவித்தனர். மன நிம்மதியை இழந்து தவித்த வெள்ளையர்களும், ஆற்காடு நவாப்பின் ஆட்களும் சேர்ந்து மருதநாயகத்தின் உடலை பல துண்டுகளாக வெட்டி எடுத்தனர். அந்த வெட்டி எடுத்த உடல் உறுப்புகளை வெவ்வேறு இடங்களுக்குச் சென்று எரித்தனர் மற்றும் புதைத்தனர். மருதநாயகத்தின் தலை திருச்சியிலும், கைகள் பாளையங்கோட்டையிலும், கால்கள் தஞ்சாவூரிலும், மற்றவையை மதுரையிலும் வைத்து அனைத்து காரியங்களையும் செய்து முடித்தனர்.

இது போன்று இவர்கள் செய்வதற்குக் காரணம், மருதநாயத்தினைக் கண்டு அந்த அளவிற்கு அவரின் வீரத்தினைப் பார்த்து, அவர் மீது அச்சம் கொண்டிருந்ததுதான். மேலும் அவர் இறந்தாலும் மீண்டும் உயிர் பெற்று வந்து விடுவார் என்று அவர்கள் பெரிதும் அச்சம் கொண்டிருந்தனர். எனவேதான் அவர்களின் செயல்பாடுகள் இவ்வாறு இருந்தது.

இது போன்று வீரம் செறிந்த மருதநாயகம், 1759-ம் ஆண்டு திருநெல்வேலியிலிருந்து நெற்கட்டான் செவ்வல் பகுதி மீது போர் தொடுத்தான். இந்தப் போர் மிக நீண்ட நாட்கள் நடைபெற்றது. இதில் புலித்தேவரின் மறவர் படைத் தாக்குதலுக்கு முன் நிற்க முடியாமல் மருதநாயகத்தின் படைகள் பின் வாங்கியது. மருதநாயகம் தோல்வி கண்டு திருநெல்வேலி திரும்பினார். இந்த செய்தி வெள்ளையர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அனைத்துப் போர்களிலும் ஐரோப்பியர்கள் போன்று, அதி நவீன ஆயுதங்களைக் கொண்டு போர் செய்த மருதநாயகம் தோல்வி கண்டு திரும்புகிறார். புலித்தேவரின் மறவர் படைகள் வேல், வில் மற்றும் வாள் என்று தமிழர்களின் போர்க் கருவிகளைக் கொண்டு மட்டும் போர் செய்தனர். இவர்களின் வீரத்திற்கும், நாட்டுப்பற்றுக்கு முன் அதிநவீன போர்ஆயுதங்கள் பயன்படுத்தி போர் தொடுத்தவர்கள், அனைத்தும் தோற்று புறமுதுகிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று போர்களத்தில் இருந்து ஓடினர்.

இந்தத் தோல்வியினால் மருதநாயகம் மிக அவமானம் அடைந்தார். அதனால் பெரிய படையை திரட்டிக்கொண்டு மீண்டும் போர் தொடுக்க திட்டம் தீட்டினார். மேலும் மருதநாயகம் ஆற்காடு நவாப்புக்கும், சென்னை வெள்ளையர்களுக்கும் கடிதங்கள் எழுதினார். அதில் தற்பொழுது கைவசம் உள்ள ஆயுதங்களைக் கொண்டு புலித்தேவரை வெற்றி கொள்ள முடியாது, மேலும் அதிநவீன போர்க்கருவிகள் வேண்டும். மறவர்கள் வாள் ஒன்றைக் கொண்டு மட்டுமே நமது வீரர்கள் பலரை அவர்கள் போர்க்களத்தில் வென்றனர். மேலும் அவர்களின் கோட்டைகளை நமது பீரங்கிகள், குண்டுகள் சிறு விரிசலைக் கூட ஏற்படுத்த முடியவில்லை. எனவே மதுரை மற்றும் சென்னையிலிருந்து ஆயுதங்களும், வீரர்களும் வேண்டும் என்று செய்தி அனுப்பினார்.

puli thevar3மருதநாயகம் படை எடுத்து வந்ததை நினைத்து, புலித்தேவர் மருதநாயகத்தைப் பற்றி கவலையுற்றார். ஒரு தமிழனாகப் பிறந்து மதம் மாறி, நம்மை எதிர்த்து எங்கிருந்தோ வந்தேறிய பரங்கியனுக்கும் இந்த ஆற்காடு நவாப்புக்கும் துணையாக, இப்படி அவர்களுக்காக நம் மீது படையெடுத்து வருகிறானே இவன். இவன் சிறிதும் சிந்தித்து செயல்படவில்லையா? அல்லது பிற்காலத்தில் அன்னியர்கள் நம்நாட்டை பிடித்துவிட்டால் என்னாகும் என்று நாட்டுப்பற்றுடன் கூட இவன் சிந்திக்கவில்லையா? என்று நினைத்து மனம் வருந்தினார் புலித்தேவர். மருதநாயகம் புலித்தேவரை எப்படியாவது போரில் வெற்றி கொள்ள வேண்டும், அவருடன் இருக்கும் ஆற்காடு நவாப்பின் சகோதரரை தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தார். சென்னையிலிருந்து ஆட்களும், அதிநவீன ஆயுதங்களும் வந்து சேர்ந்தது. போர் தொடுப்பதற்கு திட்டம், ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

திருவெல்லிபுத்தூரில் இருந்த வெள்ளையர் கூட்டத்தில் இருந்த ஒரு வெள்ளையன் அதிகாரி, “நெற்கட்டான் செவ்வல் பகுதியிலிருந்து எவனாவது ஒருவன் வந்து, இங்கு இருக்கும் குதிரையை அவன் பகுதிக்கு கொண்டு செல்ல முடியுமா?” என்று ஏளனம் பேசினான். இது புலித்தேவரின் காதுகளுக்குச் சென்றது. உடனே புலித்தேவர் வெள்ளையனை தலைவேறு, உடல்வேறாக வெட்ட நினைத்து தனது வாளுடன் புறப்பட்டார். உடனே அவரின் படைத்தளபதி, “ஐயா தாங்கள் எதற்கு இந்த சிறு வேலைக்கு செல்லுகிறீர்கள், நான் ஒருவனே அங்கு சென்று அவர்களுக்கு நாம் யார் என்று நிரூபித்துக் காட்டிவிட்டு வருகிறேன். இவர்களுக்கு எத்தனை முறை நம்மிடம் தோற்றாலும் சிறிதும் கூட மானம், வெட்கம், அறிவு என்பது கிடையாது, நான் பார்த்துக் கொள்ளுகிறேன். நான் இப்போது புறப்படுகிறேன்” என்று புலித்தேவரிடம் கூறி புறப்பட்டவர் ஒண்டிவீரன் என்ற வீரர். இவர் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தவர்.

புலித்தேவர் சாதி வேறுபாடு பார்க்கவில்லை, தனது குடிமக்கள் அனைவரையும் ஒன்றாக நினைத்து, ஒரே விதத்தில், சரியான வீரம், திறமை உள்ளவர்களுக்கு தகுந்த பதவி, வேலை என கொடுத்து வேறுபாடு இன்றி அனைவரையும் சமமாக மதித்து நடத்தியவர். அன்று இருந்த அனைவரும், தற்போது உள்ளது போன்று சாதி வேறபாடுகளை பார்க்கவில்லை. அனைவரும் சமம் என்று நினைத்தனர், நாட்டுப்பற்றுடன் இருந்தனர். ஆனால் இடையில் வந்த சில அரசியல்வாதிகள் அவர்களின் சுயநலன் கருதி, சாதி வேறுபாடுகளை உருவாக்கி உன் இனம் தாழ்த்தப்பட்டது, தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள். நம் முன்னோர்கள்தான் அரசாண்ட பரம்பரை என்று தவறான வரலாறுகளை சொல்லிக்கொண்டு, மக்களை ஒற்றுமையுடன் வாழவிடாமல், சாதிக் கலவரத்தை ஏற்படுத்துகின்றனர். புலித்தேவருடன் இருந்தவர் மட்டும் அல்ல, வீரபாண்டிய கட்டபொம்மன் படைப்பிரிவில் இருந்த ஒரு படைத்தளபதி ஒருவரும் தாழ்த்தப்பட்ட இனத்தவர் தான். இன்று தென்னகத்தில் நடைபெறும் சாதி கலவரத்திற்குக் காரணம், நம் அரசியல் தலைவர்கள். இவர்கள் வாழ நம்மை அழிக்கின்றனர்.

puli thevar10புலித்தேவரின் வீரம், அவர் நடத்திய போர்கள், அவரிடம் தோற்று ஓடியது யார், அவரை எவ்வாறு கைது செய்தனர் என்று அனைத்தும் புலித்தேவரைப் பற்றி வெள்ளையர்கள் பிரிட்டனுக்கு அனுப்பிய தகவல்கள், மறவர்கள் எப்படி கோட்டையை காத்து நின்றனர்கள், அவர்களின் வீரம், நாட்டுப்பற்று, ஆற்காடு நவாப்பு எப்படி இவர்களைக் கண்டு அச்சம் கொண்டார், வெள்ளையர்கள் இவர்களை வெற்றி கொள்ள என்ன என்ன வழி முறைகளைக் கையாண்டனர் என்ற அனைத்துத் தகவல்களும், புலித்தேவரைப் பற்றி அந்நாட்களில் அவர்கள் எழுதிய கடிதம் அனைத்தும் தமிழக அரசு காப்பகத்தில் இன்றும் பாதுகாப்பாக உள்ளது. அரசு அதனை வெளியிடவில்லை. முதல் சுதந்திரப் போராட்ட மாவீரன், தமிழன், மறவர் படைத் தலைவன் புலித்தேவரின் வீரம் மறைக்கப்பட்டு உள்ளது. அவரிடம் தோற்று ஓடும் போது வெள்ளையர்கள் மற்றும் ஆற்காடு நவாப்பின் ஆட்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று போர்க்களத்தில் அவர்கள் விட்டுச் சென்ற பீரங்கிகள் மற்றும் ஆயுதங்கள் கூட இன்றும் சென்னை மற்றும் மதுரை அரசு கண்காட்சியில் உள்ளது. அங்கு சென்றால் அதை நாம் பார்க்க முடியும்.

நாம் புலித்தேவர் தளபதி புறப்பட்டதை மறந்துவிட போகிறோம், வாருங்கள் அவரை பின் தொடர்வோம், அவர் பயணத்தைப் பார்ப்போம். புலித்தேவரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்ட ஒண்டிவீரன் திருவெல்லிபுத்தூர் வெள்ளையர்கள் கோட்டையில் சென்று அங்கிருந்த குதிரை லாயத்தில் கட்டியிருந்த வெள்ளையனின் அதிகாரியின் பட்டத்து குதிரையை, லாடயத்தில் இருந்து கயிற்றை அவிழ்த்து குதிரையுடன் புறப்படும் போது அங்கு வெள்ளையரின் ஆட்கள் வருகின்றனர்.

-        வேட்டை தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல் சுதந்திர போராட்ட மாவீரர் பூலித்தேவர் – பகுதி-7”

அதிகம் படித்தது