மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மூட்டுவலி பிரச்சினைக்குத் தீர்வு

சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்

Aug 9, 2014

arunchinnaiahவணக்கம், நான் சித்தமருத்துவர் அருண்சின்னையா, மிகுந்த காலஇடைவெளிவிட்டு நாம் சந்திக்கிறோம். பல்வேறு வேலைப்பளுவின் காரணமாக சிறகு இணையதள வாசகர்களை தாமதமாக சந்திப்பதற்கு முதலில் என்னுடைய மன்னிப்பைக் கோருகிறேன். நிறைய மருத்துவமுறைகள் சார்ந்து நாம் பேசியிருக்கிறோம். குறிப்பாக சர்க்கரை வியாதிக்கு நான் எழுதிய கட்டுரை உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்களிடையே மிகச் சிறந்த வரவேற்பு பெற்றதை நான் நன்கு அறிவேன்.

Acute pain in a woman kneeஇன்று நான் பேசக்கூடிய தலைப்பு என்னவென்றால் உலகம் முழுக்க இருக்கக்கூடிய மக்களிடையே மிகப்பெரிய பிரச்சனை என்பது மூட்டுவலி. இந்த மூட்டுவலி என்பது மூட்டுகளில் வருவது மட்டுமே என்று கணக்கில் எடுத்துக்கொள்ளமுடியாது. எந்தெந்த இடங்களில் எல்லாம் எலும்பு வளையக்கூடிய தன்மை உள்ளதோ அந்த இடங்களில் உண்டாகக்கூடிய பாதிப்புகள் தான் வலி என்று சேர்ப்போம். உதாரணமாக சொன்னால் மூட்டுவலி, கழுத்துவலி, இடுப்புவலி, குதிங்கால்வலி, கெண்டைக்கால் சதை வலி. இந்த மாதிரியான வலிகள் வருவதற்கான காரணங்கள் பலவகையாக இருக்கிறது. முப்பது வயதைத் தாண்டிய ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் சாதாரணமாக வரக்கூடிய வலி என்ன என்றால் அதை மூட்டுவலி என்று சொல்லலாம்.

moottuvali2வயதான காலத்தில் ஒரு அறுபது வயதிற்கு பின்னால் உடலில் இருக்கக்கூடிய வளர்சிதை மாற்றங்கள் அடிப்படையில் மூட்டுவலி வந்தால் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய விசயமாக இருக்கும். ஆனால் இன்றைக்கு பார்த்தீர்களானால் இளையதலைமுறைகள் இந்த மூட்டுவலியால் அவதிப்படக்கூடிய சூழல் உண்டாயிருக்கிறது என்றால் நம் வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றம்தான் மிகமுக்கியமான காரணம் என்று சொல்லவேண்டும். அந்த காலத்து உணவுப்பொருட்கள் இன்றைக்கு இல்லாததையும் காரணம் காட்டமுடியும். மேற்கத்திய மோகம் அடிப்படையில், மேற்கத்திய பாணியில் நம் கலையையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மாற்றிக்கொண்டதால் மேற்கத்திய மக்கள் சாப்பிடக்கூடிய உணவுவகைகளான துரித உணவுகள் அதிகம் எடுக்கக்கூடியவர்கள் இன்று இந்த மூட்டுவலியால் அவதிப்படக்கூடிய சூழல் இங்கு உண்டாகியிருக்கிறது.

moottuvali7முன்பெல்லாம் பார்த்தோம் என்றால் நிறைய சிறுதானியம் சார்ந்த உணவுகளை எடுப்போம். வரகு, திணை, குதிரைவாலி, சாமை, கம்பு, சோளம், ராகி இவையெல்லாம் பிரதான உணவுகளாக இருந்தபொழுது இந்த சிறுதானியங்களின் அடிப்படையில் நிறைய நார்ச்சத்து கிடைக்கக்கூடிய ஒரு வாய்ப்பு இருந்தது. அந்த மாதிரியான நார்ச்சத்து அதிகம் இருந்ததால் நம்முடைய எலும்புகள் நன்றாக வலுவாக இருந்தது, நரம்புகள் வலுவாக இருந்தது, இரத்தஓட்டமும் நன்றாக இருந்தது. நம்முடைய சதை ஒழுங்கான முறையில் இருந்தது, ஒரு பதினெட்டு வயதில் செதுக்கிவைத்த சிற்பம் மாதிரி இருந்த பெண்கள் நிறையபேர் இருந்தார்கள். ஒரு பெண் இந்த உடல் கூறுகளில்தான் இருப்பார்கள், என்று சொல்லி அன்றைய காலத்தில் அன்றைய உணவால் மதிப்பீடு செய்யக்கூடிய ஒரு சூழல் இருந்தது. ஆனால் இந்த துரித கலாச்சாரத்தால், நிறைய எடுக்கக்கூடிய உணவு கலாச்சாரத்தால், நாம் எடுக்கக்கூடிய உணவுகளில் புளிப்புகள் இருக்கிறதால், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் இந்த மூட்டுவலி அதிகமாக உண்டாகக்கூடிய சூழல் உண்டாகியிருக்கிறது. இதை முழுமையாக நீக்கவேண்டும் என்றால் உணவுசார்ந்த சில சீர்திருத்தங்கள் செய்யும் பொழுது கண்டிப்பாக சரிசெய்ய முடியும்.

உதாரணமாக எண்ணெயில் வறுக்கக்கூடிய உணவுகள் நிறைய எடுக்கக்கூடிய ஆணுக்கும் பெண்ணுக்கும் மூட்டுவலி வரக்கூடிய வாய்ப்பு நிறைய உண்டு. எனவே அதீத எண்ணெய் எடுக்கும்பொழுது மூட்டுகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளியில் Inflamation அதாவது கிருமித்தொற்று வரக்கூடிய வாய்ப்பு உண்டு. அதனால் இந்த Infective condition அதிகமாக மூட்டுகளில் இருக்கும் பொழுது அதனாலே அந்த மூட்டில் தொற்று உண்டாகி அதன் அடிப்படையில் இந்த வலி வேகமாக பரவக்கூடிய வாய்ப்பு உண்டு அதே போல் ஆணும் பெண்ணும் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடிய சூழல் இருக்கிறது. இம்மாதிரியான இருசக்கரவாகனங்கள் ஓட்டக்கூடிய ஆண்களும் பெண்களும் சரியான உணவு எடுக்காத நேரத்தில் தேய்வு, தேய்மானங்கள் வரக்கூடிய வாய்ப்பு உண்டு. ஒரே நாளில் 50 கிலோமீட்டரிலிருந்து 100 கிலோமீட்டர் வரை பயணம் செய்யக்கூடிய ஆண்களுக்கு முதுகெலும்பு பிரச்சனை சாதாரணமாக வரக்கூடிய வாய்ப்பு உண்டு. L4,L5 என்று சொல்லக்கூடிய எலும்புகள் முழுமையாக தேய்ந்துபோய் அல்லது L4,L5 கால்சியம் Decalcificationஆவது. இதனால் கூட அந்த எலும்புவலியால் அவதிப்படக்கூடிய ஆண்கள் நிறையபேர் உண்டு. அதே போல் பெண்களுக்கும் முதுகெலும்பு தேய்ந்து போவது, கழுத்து எலும்பு தேய்ந்துபோவது, மூட்டுஎலும்பு தேய்ந்து போவது என்று சொல்லி, இருபது வயதிற்கு பிறகிலிருந்தே வலிகள் எல்லாம் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றால் அதற்கான உணவுகளைத்தான் நாம் காரணமாக சொல்லமுடியும்.

moottuvali10மூட்டுவலியெல்லாம் அந்தக்காலத்தில் இல்லாமல் இருந்ததற்கான காரணம் என்னவென்றால் ஒவ்வொரு வீடுகளிலும் உளுத்தங்களி வாரத்திற்கு ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ தொடர்ந்து சாப்பிடக்கூடிய சூழல் அன்றைய சமுதாயத்தில் இருந்தது. ஒவ்வொரு வீடுகளிலேயுமே இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய் இவற்றை நல்லெண்ணெயில் சேர்த்து நன்றாக வதக்கி அதோடு மாவையும் சேர்த்து நன்றாக கூழ் மாதிரி கரைத்து வைத்துக்கொண்டு, நன்றாக தண்ணீர் கொதிக்கவைத்துக்கொண்டு அதனுடன் நல்லெண்ணெய் சிறிது சேர்த்து களியாகக் கிண்டி அதை காரக்களியாகவோ அல்லது இனிப்பு களியாகவோ தொடர்ந்து சாப்பிடுவார்கள். உளுந்தின் தன்மை என்னவென்றால் உடம்பில் இருக்கக்கூடிய 206 எலும்புகளையும் நன்றாக வலுவாக்கக்கூடிய தன்மை உளுந்துக்கு உண்டு. இந்த உளுந்தை சித்த மருந்துகளில், ஆயுர்வேத மருந்துகளில் மருந்துப்பொருளாகவே பயன்படுத்துவது உண்டு. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் சித்தமருந்துகளில் உளுந்து தைலம் உண்டு. இந்த உளுந்து தைலம் நாட்டுமருந்து கடைகளில், சித்தமருந்துகடைகளில் கிடைக்கும். இந்த உளுந்து தைலத்தை பிடிப்புத் தைலம் என்று சொல்லுவார்கள். ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ கை-கால் அசதி, சோர்வு இருக்கும்பொழுது எலும்புகள் தளர்ந்து போகும் பொழுது, எலும்புகளில் வலி இருக்கும்பொழுது அந்தத் தைலம் தேய்த்து பிடித்துவிட்டால் உடனே வலியை நீக்கக்கூடிய தன்மை உண்டு. ஆக உளுந்து தைலம் பிடிப்புத் தைலம் என்று சொல்லுவார்கள். உளுந்து தைலத்தை மிதமாக சூடுசெய்து வலி உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து பிடித்து விடும்பொழுது கை-கால் வலி, அசதி, சோர்வு எல்லாமே சரியாகிவிடும்.

இன்றும் கிராமங்களில் பார்த்தோம் என்றால் உளுந்தை எலும்பு முறிவாக பயன்படுத்துவார்கள். சிலநேரங்களில் அடிபட்டோ, கிணற்று வேலைக்குப்போகும் பொழுதோ முதுகெலும்பு உடைந்துவிடுவது, மூட்டுகளில் வலி உண்டாவது, தவறி கீழே விழுந்துவிடுவது, சைக்கிள் மற்றும் பிரயாணத்தில் அடிப்பட்டுவிடுவது இந்த மாதிரி நேரங்களில் எலும்பு உடைந்துவிடும். அந்தமாதிரி உள்ளவர்களுக்கு இந்த உளுத்தங்களியை தினசரி உணவாக கொடுத்துக்கொண்டு, அதே உளுந்தோடு நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளக்கருவை சேர்த்து குழைத்து பருத்தி துணியில் நன்றாக தடவி அதை கட்டு மாதிரி கட்டி 21 நாட்கள் தொடர்ந்து செய்யும் பொழுது நல்ல பலன் கிடைக்கும். அந்த கட்டின இடத்தில் உளுந்து தைலத்தை விடாமல் தொடர்ந்து ஊற்றுவது, இந்த மாதிரி செய்யும் பொழுது உடைந்த எலும்புகள் கூட ஒன்றுசேரக்கூடிய தன்மை இந்த உளுந்துக்கு உண்டு. ஆகவே இந்த மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள், வேதனையில் உள்ளவர்கள் கண்டிப்பாக எந்த அளவிற்கு இந்த உளுந்தை சேர்த்துக்கொள்கிறோமோ அந்த அளவிற்கு நல்ல அபாரமான பலனைப் பெறமுடியும்.

மூட்டுவலி வருவதற்கான காரணங்கள் என்று பார்த்தோமென்றால் இன்றைக்கு இருக்கக்கூடிய உணவைத்தான் நாம் சொல்லவேண்டும். புளிப்பான உணவுகளை எந்த அளவிற்கு முடியுமோ குறைத்துவிடுங்கள். எண்ணெயில் வறுக்கக்கூடிய உணவுகளை முழுமையாக தவிர்த்துவிடுங்கள். அதே போல் வாயுவை அதிகப்படுத்தக்கூடிய உணவுகள் இருக்கிறது. அதில் உதாரணமாக பார்த்தோம் என்றால் வாழைக்காய். மூட்டுவலி இருப்பவர்கள் வாழைக்காயை உட்கொண்டால் வாய்வு அதிகமாகி மூட்டுவலி இன்னும் அதிகமாகக்கூடிய ஒரு சூழல் இருக்கும். எனவே வாழைக்காயை முழுமையாக நீக்கிவிடுங்கள். அதே போல் அகத்திக்கீரை, பாகற்காய் இவைகள் உடலிலே சில முரண்பாடுகளைக் கொடுக்கக்கூடிய காய்கறிகள். மூட்டுவலி இருக்கும்பொழுது பித்தவாயு அதிகமாக இருக்கும். பித்தத்தைக் குறைக்கக்கூடிய உணவுகளைத்தான் நாம் தொடர்ந்து சாப்பிடவேண்டும். அதேபோல் இரத்தத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுவகைகளை தொடர்ந்து சாப்பிடும்பொழுது நல்லபலன் கிடைக்கும்.

moottuvali11மூட்டுவலி இருக்கிறது என்றால் பித்தத்தை குறைப்பதற்கு நெல்லிக்காய்க்கு நல்ல பலன் உண்டு. அந்த நெல்லிக்காயை விடாமல் தொடர்ந்து தினசரி 4 நெல்லிக்காயை ஒன்றிரண்டாக நறுக்கி கூடவே சீரகம் சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து அதை காலையிலும் இரவிலும் தொடர்ந்து சாப்பிடும்பொழுது எப்பேற்பட்ட மூட்டுவலியாக இருந்தாலும் போகப்போக சரியாகிவிடும். ஏனென்றால் இந்த நெல்லிக்காயை ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்லுவோம். எல்லோராலும் ஆப்பிள் சாப்பிடமுடியாது. ஆனால் ஒரு ஆப்பிள் கொடுக்கக்கூடிய பலனை 4 நெல்லிக்காய் கண்டிப்பாகக் கொடுக்கும். எனவே அந்த நெல்லிக்காயை விடாமல் தொடர்ந்து சாப்பிடும்பொழுது நல்லபலன் கிடைக்கும். இன்னும் ஒருசிலருக்கு பித்தஅடிப்படையிலேயே மூட்டுவலி வருகிறது என்றால் கடைகளில் கிடைக்கக்கூடிய நெல்லிக்காய் லேகியத்தை விடாமல் தொடர்ந்து சாப்பிடும்பொழுது நல்ல ஒரு அற்புதமான பலன் கிடைக்கும். ஒரு சிலருக்கு உடலில் ஆற்றல் பற்றாக்குறையினால் மூட்டுவலி வரலாம். அந்த மாதிரி உடல் பலகீனம் அடிப்படையில் மூட்டுவலி வருகிறது என்றால் கடைகளில் கிடைக்கக்கூடிய அமுக்கரா லேகியம், அஸ்வகந்தா லேகியம் இவைகளை நீங்கள் வாங்கி சாப்பிடலாம். இன்னும் சித்த மருந்துகளில் கிடைக்கும் மகாவல்லாதி லேகியத்தைக்கூட தொடர்ந்து காலை, இரவு என்று இரண்டு வேளைகளிலும் தொடர்ந்து சாப்பிடும்பொழுது எப்பேற்பட்ட வலியாக இருந்தாலும் சரியாகும். ஆக மூட்டுவலிக்கு மேற்கொள்ளக்கூடிய ஆங்கில மருந்துகள் வேறு சில வலிகளைக் கொண்டுவரும் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது. எந்த அளவிற்கு நீங்கள் மருந்துகளிலிருந்து விலகி இருக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களது உடல் ஆரோக்கியம் கூடவே இருக்கக்கூடிய ஒரு சூழல் இருக்கும். எதற்கெடுத்தாலும் வலிநீக்கி மருந்துகள் அதாவது pain killers ஐ தொடர்ந்து சாப்பிடக்கூடிய ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி பல்வேறு பிரச்சினைகள் வரக்கூடிய வாய்ப்பு உண்டு. மூட்டுவலிக்காக எடுக்கக்கூடிய சில மருந்துகள் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவைக்கூட உண்டாக்கலாம். மூட்டுவலிக்காக எடுக்கக்கூடிய சில மருந்துகள் பெண்களுக்கு மாதவிடாய் சம்மந்தமான சில சிக்கல்களை உண்டாக்கலாம். ஏனென்றால் ஆங்கில மருந்துகளில் steroid கலப்புகள் அதிகமாக இருக்கும். ஒரு மருந்து உடனே வலியை நீக்குகிறது என்றால் அந்த மருந்தில் நிறைய பக்கவிளைவு இருக்கிறது என்பதை நீங்கள் உணரவேண்டும். ஆனால் ஒரு உணவுப்பொருள் உடனே வலியை நீக்குகிறது என்றால் அந்த உன்னதமான உணவு தான் உன்னதமான மருந்தும் கூட என்பதை கண்டிப்பாக உணரவேண்டும்.

moottuvali12கடைகளில் கிடைக்கக்கூடியது பிண்டத்தைலம். இந்தத் தைலம் சித்தமருந்துகடைகளில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான தைலம். இந்தத் தைலத்தை சூடுசெய்து கை,கால்வலி, உடம்புவலி, மூட்டுவலி, மூட்டு விலகியிருப்பது, பிசங்கியிருப்பது, பித்தவெடிப்பு எதுவாக இருந்தாலும் பிண்டத்தைலத்தை சூடு செய்து தேய்க்கலாம். அது ஒரு அற்புதமான தைலம். ஆக தைலம் முறையின் அடிப்படையில் ஒரு வலிநிவாரணத்தை தேடும்பொழுது கண்டிப்பாக பலன் கிடைக்கும். கூடுதலாக உணவுபொருட்களில் நான் சொன்னமாதிரி வெந்தயக்களி சாப்பிடலாம், உளுத்தங்களி சாப்பிடலாம் இல்லையென்றால் பஞ்சமுட்டி மூங்கில் கஞ்சி சாப்பிடலாம். இதில் பஞ்சமுட்டி மூங்கில் கஞ்சி கை-கால் வலி, உடம்புவலி, மூட்டுசார்ந்த அத்தனை பிரச்சனைகளையும் முழுமையாக சரிசெய்யக்கூடிய ஒரு அற்புதமான கஞ்சி. இதில் பஞ்சமுட்டி என்னவென்றால் பச்சரிசி, சிறுபருப்பு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு இந்த ஐந்தும் கலந்ததுதான் பஞ்சமுட்டி என்று சொல்லுவோம். சித்தர்கள் பதார்த்தகுண சிந்தாமணி என்ற நூலில் இந்த பஞ்சமுட்டியைப் பற்றி சொல்லியிருப்பார்கள். இந்த பஞ்சமுட்டியையும், மூங்கிலரிசி என்பது மூங்கில் மரத்தில் விளையக்கூடிய ஒரு வகையான அரிசி, இந்த அரிசியையும் சேர்த்து எல்லாமே சமஅளவு சேர்த்து ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக்கொள்ளலாம். இதில் ஒரு கையளவு எடுத்து 3 தம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து இந்த கஞ்சியை விடாமல் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இதுவும் மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா

எண்: 155, 94  வது தெரு,

15 வது செக்டார், கே.கே.நகர்,

சென்னை – 78

அலை பேசி: 98840 76667

-தொடரும்


சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மூட்டுவலி பிரச்சினைக்குத் தீர்வு”

அதிகம் படித்தது