மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மூன்று சொற்கள் முகவரி

தேமொழி

Sep 17, 2022

siragu what3words

உலகில் பல இடங்களுக்குத் தெளிவான முகவரி இருக்கும் என்று சொல்வதற்கில்லை. குறிப்பாக, சிற்றூர் பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வயல் வெளிகளுக்கு நடுவில் குடியிருப்பு அமைந்தால் அவற்றை அடையாளப்படுத்துவது கடினம். எடுத்துக்காட்டாக ஊட்டி தோடர் கிராமத்தில், தோடர் கோயில் அருகில் ஒரு கட்டிடம் என்று சொல்வதற்கு மேல் தெளிவாகச் சொல்ல இயலாமல் போகலாம். இது போன்ற சூழ்நிலையில், தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் புவியிடக்குறிப்பு (Global Positioning System /GPS) தகவல் கொடுப்பது இருப்பிடத்தை அறிய உதவும். கைபேசி வழியே உலக வரைபடத்தில் நாம் இருக்கும் இடத்தின் புவியிடக்குறிப்பைத் தெரிந்து கொள்ள முடியும். புவியிடக்குறிப்பு: 11.420066008317477, 76.7156849687087 என்பது தோடர் கோயிலை உலக வரைபடத்தில் காட்டும்.

லண்டனைத் தலைமை இடமாகக் கொண்டு, 2013 ஆண்டில் துவக்கப்பட்ட ‘what3words’ என்ற நிறுவனம் இதற்கு மாற்றாக மற்றொரு வரைபட முறையை உருவாக்கி உள்ளது. புவியில் ஓர் இடத்தை துல்லியமாகவும் எளிமையாகவும் அடையாளம் காட்டுவது என்பது இந்த வரைபட முறையின் அடிப்படை நோக்கம். இம்முறையில் நாம் வாழும் உலகம் 57 டிரில்லியன் சதுரங்களாக (57 trillion squares) பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கடல் பகுதிகள் மட்டுமே 15.6 டிரில்லியன் சதுரங்களைக் கொண்டதாக அமைகிறது. ஒவ்வொரு சதுரத்தின் பக்க அளவும் மூன்று மீட்டர் கொண்ட சதுரங்களாகப் பிரித்தால்(3m x 3m பரப்பளவு), 57 டிரில்லியன் சதுரங்களில் உலகம் அடங்கிவிடுகிறது. இந்த ஒவ்வொரு சதுரத்திற்கும் சமவாய்ப்பு முறையில் (random) 3 சொற்களைத் தேர்வு செய்து, வரிசைப்படுத்தி அடையாளம் கொடுக்கிறது. ஒரு வரிசையில் அமையும் மூன்று சொற்கள் மீண்டும் வேறு இடத்திற்கு அமையவே அமையாது. இந்த குறிப்புகள் உலகில் உள்ள அத்தனை இடங்களையும் தெளிவாக அடையாளம் காண உதவுகிறது. ஒவ்வொரு 3 மீட்டர் பக்கம் கொண்ட சதுர இடத்தின் 3 சொற்கள் கொண்ட முகவரியும் மாறாதது. இது ‘what3words address’ என்று குறிப்பிடப்படுகிறது. நாம் தமிழில் ‘மூன்று சொற்கள் முகவரி’ என்று குறிப்பிடலாம். ஆகவே, உலகை 57 டிரில்லியன் (தனித்துவம் கொண்ட) மூன்று சொற்கள் முகவரியில் குறிப்பிட முடியும். இதன் அடிப்படையில்,

தோடர் கிராமம் கோயில் — https://what3words.com/timing.flight.schematic

அருகில் உள்ள கட்டிடம் — https://what3words.com/body.defrost.responds

எட்டு இலக்கங்கள் கொண்ட புவியிடக்குறிப்பு எண்களை நினைவு வைத்துக் கொள்வதைவிட, பயன்படுத்துவதைவிட, மூன்று சொற்களை நினைவு வைத்துக் கொள்வதும் பயன்படுத்துவதும் எளிது.

இணையத்தின் வழியாக https://what3words.com/ தளத்திற்குச் சென்றும் நம் வீடு, பணியிடம், பள்ளி என்று ஒவ்வொரு இடத்தின் மூன்று சொற்கள் முகவரியையும் அறிந்து கொள்ளலாம். கைபேசி செயலியும் உதவும். ஒவ்வொரு கட்டிடமும் தோராயமாகக் குறைந்தது 4 கட்டங்கள் (20 X 20 அடிகள்) முதல் கட்டிடத்தின் அளவிற்கு ஏற்ப பற்பல சதுரங்கள் கொண்டதாகக் கூட இருக்கலாம். கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதிகளையும், காடுகளின் ஒவ்வொரு பகுதிகளையும், கடலின் ஒவ்வொரு பகுதிகளையும் கூட மூன்று சொற்கள் முகவரியில் எளிதாகக் குறிப்பிட முடியும். அத்துவானக் காட்டில் திசை தெரியாது, இருப்பிடத்தின் சரியான முகவரியோ அடையாளமோ இல்லாத பொழுது அவசர உதவி ஊர்திகள் எளிதாக இலக்கை அடையவும் இந்த மூன்று சொற்கள் முகவரி உதவும்.

இந்த மூன்று சொற்கள் முகவரிக் குறிப்பு ஆங்கிலம் தவிர்த்து மேலும் 49 மொழிகளிலும், ஒவ்வொரு மொழி வல்லுநர்கள் உதவியுடன் சொற்கள் தேர்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 50 மொழிகளிலும் மொழிவாரியாக உலகை 57 டிரில்லியன் (தனித்துவம் கொண்ட) மூன்று சொற்கள் முகவரியில் குறிப்பிட முடியும். ஒவ்வொரு மொழிக்கும் சொற்பட்டியல் உருவாக்குவதற்கு என அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் சுமார் 40 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். இந்த முயற்சியில் 2000 பல்வேறு மொழி வல்லுநர்கள் பங்களித்துள்ளனர்.

சில ஐரோப்பிய மொழிகளில் (நார்வே, டென்மார்க் நாடுகள் போன்றவற்றில்) ஒரே சொல் இரு மொழிகளிலும் இருப்பதால் தவறு நேரக்கூடும் என்பதால் பொதுவான சில சொற்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. அவ்வாறே, உச்சரிப்பில் ஒரே போன்று ஒலிக்கக்கூடிய சொற்களும் தவிர்க்கப்பட்டுள்ளன. அது போலவே, மொழிகளின் கலாச்சார பின்னணியும் கவனத்தில் கொள்ளப்பட்டு சில சொற்கள் தவிர்க்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, தமிழில் ‘ஆமை.புகுந்த.வீடு’ என்ற முகவரி விரும்பத்தகாத முறையில் அமையக் கூடிய வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையுடன் சொல் தேர்வுகள் கவனிக்கப்பட்டது. வசைச் சொற்களும் முகவரியில் இடம் பெறுவதில்லை. ஒவ்வொரு மொழிக்கும் சொற்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டதில் 50 மொழிகளுக்கும் தனிப்பட்ட சொற்கள் எனத் தொகுக்கப்பட்டதில் மொத்தம் 1.28 மில்லியன் சொற்கள் பயன்பாட்டிற்காகத் தேர்வாகின. முக்கியமாக, அவை ஆங்கிலத்தில் அமையும் முகவரியை அப்படியே மொழிபெயர்ப்பு செய்வதாக அமையாது. ஒவ்வொரு மொழிக்கும் முகவரி சொல் பட்டியல் தனித்தனியாகவே தேர்வு செய்யப்பட்டு, சமயவாய்ப்பு முறையிலேயே மூன்று சொற்கள் முகவரி அமையும். இவ்வாறு உருவாக்க ஒரு மொழிக்குக் குறைந்தது ஆறிலிருந்து பதினெட்டு மாதங்கள் வரைகூட காலம் தேவைப்பட்டிருக்கிறது.

இந்த முகவரி அமைப்பு முறையில் சென்னை உழைப்பாளர் சிலைக்கும், குமரி வள்ளுவர் சிலைக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முகவரிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னை உழைப்பாளர் சிலை:

https://w3w.co/பிறப்பதை.வைத்தவர்.மணலின்?alias=பிறப்பதை.வைத்தவர்.மணலின்

[https://what3words.com/hill.whimpered.expensive]

 siragu Kumari Valluvar

குமரி வள்ளுவர் சிலை:

https://w3w.co/கேட்டபடி.உறுதியுடன்.ஆதாரமாக?alias=கேட்டபடி.உறுதியுடன்.ஆதாரமாக

[https://what3words.com/piggyback.imagery.steamboats]

தொழில் மயமான பெருநகர்களில் முகவரி முறை கடந்த மூன்று நூற்றாண்டுகளாக அஞ்சல் சேவைக்குச் சிறப்பாகவே உதவியுள்ளது. இருப்பினும் நகர வளர்ச்சி அளவு மீறினால் முதிய முகவரி, பழைய முகவரி என்ற குழப்பங்கள் தலைதூக்கும். சாலையின் பெயர் மாற்றங்களினால் மற்றொரு வகைக் குழப்பம் தோன்றும். இக்குறைகள் மூன்று சொற்கள் முகவரியைப் பயன்படுத்துகையில் நீங்கிவிடும். எதிர்காலத்தில் நிலம், மனை போன்ற அசையா சொத்துகளைப் பதிவு செய்யும் முறையில், இருப்பிட முகவரி, நிலத்தின் அளவு ஆகியவற்றுடன் மூன்று சொற்கள் முகவரி முறையையும் இணைத்தால் குழப்பங்களைத் தவிர்க்க வாய்ப்புண்டு. அத்துடன் தொல்லியல் தடயங்கள் காணும் இடத்தைக் குறிப்பிடவும் கூட பயன்கொள்ளலாம்.

siragu Labour Statue

என்றும் மாறாத முகவரி முறை என்பது அடையாளாம் காண, நினைவில் கொள்ள எளிதாகவே அமையும் என்பது மூன்று சொற்கள் முகவரி முறை என்பதன் பயன். இருப்பினும், சில எச்சரிக்கைகளும் எழுப்பப்படுகிறது. எழுத்தில் சொற்கள் அமையும் பொழுது தவறு ஏற்படாவிட்டாலும், அவசர உதவி தேவை போன்ற நேரங்களில் சொற்களின் உச்சரிப்பால் பிழை ஏற்பட வாய்ப்புண்டு. இதில் வட்டார உச்சரிப்பு வழக்க முறையும் சேர்ந்தால் தவறுகளுக்கு வாய்ப்புண்டு. ஆகவே எழுத்தில் இருக்கும் வரை மூன்று சொற்கள் முகவரி முறை சிறப்பே.

வாட்3வேர்ட்ஸ் செயலியை கைபேசியில் தரவிறக்கம் செய்து நிறுவினால், செயலியைத் திறக்கும்பொழுது இருப்பிடத்தின் மூன்று சொற்கள் முகவரியைக் கொடுக்கும். தன் இருப்பிடத்தைக் குறிப்பிட்டு உதவி பெற உதவும். வழி தேடிச் செல்ல உதவும் இந்த செயலி ஊர்திகளிலும் பயனுக்கு வந்துவிட்டது.

வாட்3வேர்ட்ஸ்/வாட்த்ரீவேர்ட்ஸ் – செயலி குறித்த விரிவான தகவலுக்கு:

what3words app: https://what3words.com/products/what3words-app

Google-play: https://play.google.com/store/apps/details?id=com.what3words.android&hl=en_US&gl=US

App Store – Apple: https://apps.apple.com/us/app/what3words/id657878530

what3words – how to use: https://www.youtube.com/c/What3words

References:

[1] Mapping the Globe and Creating Strong Passwords, Using the Power of 3 Random Words. Mary Lynn Reed, Professor of Mathematics, Rochester Institute of Technology August 26, 2022

https://scitechdaily.com/mapping-the-globe-and-creating-strong-passwords-using-the-power-of-3-random-words/

[2] This Startup Slices the World Into 57 Trillion Squares. Many places lack a system for addresses. What3Words’ solution is to give every spot a three-word designation. David Rocks and Nate Lanxon, August 27, 2018.

https://www.bloomberg.com/news/features/2018-08-28/mapping-startup-aims-to-disrupt-addresses-using-three-word-system

[3] Impact Stories: what3words. Ditte Fiil Ravn, December 14, 2021.

https://theindexproject.org/post/impact-stories-what3words

[4] What3words breaks the world down into phrases. John Biggs, anuary 14, 2019.

https://techcrunch.com/2019/01/14/what3words-breaks-the-world-down-into-phrases/

[5] What3Words: Startup under fire. Emergency responders and security researchers claim the service has fundamental flaws that could backfire in a critical situation. Bobby Hellard, 23 Jul 2021.

https://www.itpro.co.uk/business-strategy/startups/360335/what3words-startup-under-fire


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மூன்று சொற்கள் முகவரி”

அதிகம் படித்தது