மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மேகி நூடுல்சில் மட்டுமா கலப்படம்?

சித்திர சேனன்

Jun 20, 2015

kalappadam6Nestle, மேகி நூடுல்சுகளில் காரீயம் என்ற மண் கலந்தே விற்பனைக்கு வருகிறது என்ற உண்மையை இப்பொழுதுதான் நமது அதிகாரிகள் கண்டுபிடித்து களையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வளவு நாட்களாக ஏன் இதைக் கண்டுகொள்ளவில்லை?, உணவுத் தர நிர்ணய அதிகாரிகளின் மெத்தனப் போக்கின் உச்சமே இது எனலாமா?, இதுவரை நூடுல்சை சப்புக்கொட்டி சாப்பிட்டவர்களின் நிலை என்ன?, இப்படி பல கேள்விகள் சிறுமூளையில் சிக்கிக் கொண்டிருக்கின்றன.

siththa maruththuvam6சரி…. இந்த மேகி நூடுல்சில் மட்டுமா கலப்படம்?, வேறு உணவுப் பொருட்களில் இல்லையா? என நமது நெற்றிக்கண்ணைத் திறந்து பார்த்தால்… மூச்சே மூர்ச்சையாகிவிடும் அளவிற்கு நம் தமிழகத்தில் கலப்பட உணவு விற்பனை களைகட்டுகிறது.

உலகின் சிறந்த உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனமான ‘Nestle’ தயாரிப்புகளில், நூடுல்சு மட்டுமின்றி குதிரை மாமிசமும் கலக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் இந்நிறுவன உணவுகளை இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் வாங்குவதை நிறுத்தியுள்ளது. ஆனால்… இந்தியாவில் மேகி நூடுல்ஸ் தவிர இன்னும் இந்நிறுவன பொருட்கள் சந்தைகளில் சகஜமாக விளையாடுகின்றன.

kalappadam2பிரபல குளிர்பான நிறுவனமான பெப்சியை சில மாதத்திற்கு முன்பு நெய்வேலியை அடுத்த தெற்கு சேப்பளநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சாபுலி என்பவர் தனது குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். இதைக் குடித்த இவரின் மூன்று குழந்தைகள் ரத்த வாந்தி எடுத்து இறந்தனர். இப்பாட்டிலில் (Band Aid) பேண்ட் எய்ட் என்ற வேதிப்பொருள் இருந்தாலும், காலாவதியான பானம் என்பதாலுமே இம்மரணம் ஏற்பட்டது என பின்னால் செய்த ஆய்வில் கண்டுபிடித்தனர்.

பெப்சி, கொக்கோகோலா குளிர்பானத்தின் காணொளி ஒன்று யூடியூப்பில் நான் பார்த்தேன். ஒருவர் அந்த குளிர்பானத்தை ஒரு சட்டியில் ஊற்றி கொதிக்க வைக்கிறார். நன்கு கொதித்த பின் இந்த குளிர்பானம் தார் (சாலை போடப் பயன்படும்) போல் ஆகிவிட்டது. இவை நம் வயிற்றுக்குள் சென்றால் என்னவாகும் என்ற கேள்வியோடு காணொளி முடிந்தது.

பின்பு மற்றொரு சோதனையில் பல்லை ஒருவர், இந்தக் குளிர்பானத்தில் போட்டுவிட்டு, மறுநாள் எடுத்து பல்லைப் பிதுக்குகிறார். பல்… மாவுபோல் குழைந்து வருகிறது. ஆகவே மக்களாகிய நாம் தான் எவை சரியான உணவு என்பதை அறிந்து உபயோகப்படுத்த வேண்டும்.

kalappadam3குழந்தைகள் விரும்பி உண்ணும் நொறுக்குத் தீனியில் முக்கியமானது குர்குரே. விரல் போல் சிவப்பு நிறத்தில் பொறித்து இருக்கும் இப்பொருளில் உப்பும் காரமும் மிகையாக இருக்கும். முக்கியமாக இதில் பாலிவினைல் குளோரைடு எனப்படும் வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. நேர்மையாகக் கூறினால் (பிளாஸ்டிக்) நெகிழித்தன்மை இதில் உள்ளது. இதை உட்கொண்டால் உடலுக்கு பல்விதமான பிரச்சனை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. சந்தேகம் இருப்பவர்கள் குர்குரேவை தீயில் எரித்துப் பார்த்து நம்பவும்.

14.06.2015 அன்று கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஸ்ரீராம் என்பவர் Nestle நிறுவனத்தின் பொருளான செரலாக் உணவை வாங்கினார். உண்ணப் பிரித்துப் பார்க்கும் போது உள்ளே பல வண்டுக் குவியல்கள் இருந்தன. கோவை மண்டல உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் என்பவர் இதை ஆய்வு செய்ய அனுப்பியுள்ளார். 15 நாட்களுக்குப் பிறகே இதற்கான முடிவு தெரியும்.

தமிழகத்தில் பெரும்பாலும் சைவ-அசைவ உணவகங்கள் இருக்கின்றன. இதில் வேலையாட்களை துரத்திவிட்ட முதலாளிகளே வேலை செய்யத் துவங்கியுள்ளனர். உணவகங்களில் லாபத்தைப் பெருக்க இந்த முயற்சியை மேற்கொள்கின்றனர். சரி இதைக்கூட ஒத்துக்கொள்ளலாம். சைவ உணவகங்களில் சாம்பார், பொறியல், கூட்டு வைக்கும் காய்கறிகளுக்கு அழுகிய, முதிர்ந்த காய்கறிகளை பயன்படுத்துகின்றனர். அசைவ உணவகங்களில் நோய்வாய்ப்பட்டு இறக்கும் கோழிகளைச் சமைப்பது, நேற்று வைத்த கறிகளைக் கழுவி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மறுநாள் அக்கறியில் மசாலாப் பொருட்களை தடவி எண்ணெயில் பொறித்துத் தருகின்றனர். தவிர கெட்டுப்போன முட்டைகளையும் பயன்படுத்துகின்றனர்.

இதனால் உண்ணும் வாடிக்கையாளர்கள் வயிற்றுப் போக்கு, வயிற்றுவலி போன்று உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகின்றது.

kalappadam5

பால்:

சில மாதங்களுக்கு முன் ஆவின் பாலில் கலப்படம் என்று பரபரப்பாகப் பேசப்பட்டு அடங்கிவிட்டது, மக்களும் மறந்துவிட்டனர். இப்பாலில் தண்ணீர், யூரியா உரம், சோப்பு பவுடர், காஸ்டிக் சோடா, பார்லி கஞ்சி, மைதா மாவு போன்ற பொருட்கள் கலப்படம் செய்யப்படுகின்றன.

எண்ணெய் வகைகள்:

தேங்காய் எண்ணெயில் பெட்ரோலியக் கழிவான மினரல் எண்ணெய் எனப்படும் கனிம ஆயில், ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்க்கு 9 லிட்டர் வேக்ஸ் ஆயில் என்ற விதத்தில் கலப்படம் செய்யப்படுகிறது. மினரல் ஆயில் ஒரு லிட்டரின் விலை ரூ.15 மட்டுமே. இந்த மினரல் ஆயில் நிறமோ, மணமோ இல்லாதது. எல்லா எண்ணெய்களிலும் இதைக் கலப்படம் செய்யலாம். ஆனால் கண்டுபிடிப்பது கடினம்.

உணவு எண்ணெய்:

இந்த உணவுக்கு பயன்படும் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கனிம எண்ணெய், ஆர்ஜிமோன் எண்ணெய், பருத்திக்கொட்டை எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், முந்திரி எண்ணெய் என பல வகை எண்ணெய்கள் கலப்படம் செய்யப்படுகிறது.

நெய்: இதில் மாட்டுக்கொழுப்பு, மிருகங்களின் கொழுப்பு, வனசுபதி, பனை எண்ணெய், மெழுகு, பாமாயில், வேதிப்பொருட்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் என கலப்படம் செய்யப்படுகிறது.

மினரல் ஆயில் எனும் கனிம எண்ணெய்:

இந்த எண்ணெய் பெட்ரோலியத்திலிருந்து 24 வகையான பொருட்களுக்குப் பின்னர் கழிவாகக் கிடைக்கும். மணம், நிறம் இல்லாதது. இது பிரபல தேங்காய் எண்ணெய் முதல் Herbal Oil எனப்படும் நிறுவனங்கள் வரை, குழந்தைகளுக்கான johnson baby  எண்ணெய் முதல், பிரபலமான சோப்பு வகைகள் அனைத்திலும் கலப்படம் செய்யப்படுகிறது.

அரிசி:

இதில் கல், மண் கட்டிகள், பட்டை தீட்டிய சிறிய ரகம் ஆக்கப்பட்ட குருணை, தரம் குறைந்த அரிசிகள் சேர்க்கப்படுகின்றன.

துவரம்பருப்பு:

இதில் விலை குறைந்த சேசரிப் பருப்பு மற்றும் மெட்டானில் என்ற ரசாயன வண்ணம் சேர்க்கப்படுகிறது.

மஞ்சள் தூள்: இதில் லீட் குரோமைட் எனும் நிறம் கலக்கப்படுகிறது.

கொத்துமல்லித்தூள்(தனியாப்பொடி):

இதில்மரத்தூள், மிருகங்களின் சாணப்பொடி, மாவு கலக்கப்படுகிறது.

மசாலாத்தூள்:

இதில் மரத்தூள், சாணப்பொடி, செங்கல்பொடி, நிறமேற்றிய சாம்பல் கலக்கப்படுகிறது.

மிளகாய் வற்றல்:

சிவப்பான மிளகாயைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்பதை அறிந்த வியாபாரிகள் “சூடான ரேட்” எனும் வேதிப்பொருளை தரம் குறைந்த, மட்டரக மிளகாய்களில் கலந்து குடோன்களில் பல நாள் இருப்பு வைப்பதால் மிளகாய் ரத்தச் சிவப்பாக மாறி விடுகிறது.

டீத்தூள்:

ஏற்கனவே பயன்படுத்திய தூள், மரத்தூள், உளுந்து, முந்திரி, நிலக்கடலை போன்றவற்றின் தோலில் பொடி செய்த தூள் புளியங்கொட்டைப் பொடி என கலக்கிறார்கள்.

தேன்: சர்க்கரைப்பாகை கலப்படம் செய்கிறார்கள்.

மைதா: மரவள்ளி கிழங்கு மாவு கலப்படம் செய்கிறார்கள்.

ராகி: மண், சிறுகற்களை கலப்படம் செய்கிறார்கள்.

ஜவ்வரிசி: மணல், முகப்பவுடரை கலப்படம் செய்கிறார்கள்.

பழங்களை பழுக்கவைக்க: கார்பைடு என்ற வேதிப்பொருட்களால் பழுக்க வைக்கின்றனர்.

பிஸ்கட்: தவிடை கலப்படம் செய்கிறார்கள்.

பச்சைப்பட்டாணி: பச்சை நிற சாயத்தை கலப்படம் செய்கிறார்கள்.

சீனி: ரவை அல்லது வெள்ளை மணலை கலப்படம் செய்கிறார்கள்.

மிளகு: பப்பாளி விதையை கலப்படம் செய்கிறார்கள்.

இவ்வாறு நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களிலும் கலப்படம் இல்லாத பொருட்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு கலப்படம் ஊடுருவி விட்டது. இவைகளை உண்பதால் உடல் நலம் பாதிக்கப்படுவதுடன் கண்பார்வை குறைவு, குடல் புண், வாத நோய்கள், நரம்புத் தளர்ச்சி, சுறுசுறுப்பின்மை, மந்த புத்தி என பல்வேறு உபாதைகள் நம்மைத் தாக்கி எதிர்காலம் என்ற ஒன்றே இல்லாமல் செய்துவிடும் இந்தக் கலப்பட உணவுகள். ஆதலால் மக்களாகிய நாம் “வெந்தது போதும் முந்தானையில் போடு” என்ற பழமொழிக்கிணங்க நடவாமல் எது நமக்கு நல்லது என்பதை கூர்ந்து கவனித்து உண்டு வந்தால் நீண்ட நலமுள்ள வாழ்வை நிச்சயம் நீங்கள் பெறலாம்.


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மேகி நூடுல்சில் மட்டுமா கலப்படம்?”

அதிகம் படித்தது