மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மோசடி செய்வோர் சமர்த்தர் ஆவர்

வெங்கட்ரமணி

Jan 31, 2015

nila mosadiதற்காலத்தில் மோசடி செய்யும் நபர்களை நுட்பமான சிந்தனையாளர்களாகவே நாம் கருதவேண்டியிருக்கிறது. பல நேரங்களில் மோசடி என்பது மிகப்புதுமையானதாகவும், காண்பதற்கரிய புத்திசாலித்தனத்துடனும் இருக்கிறது. நமது நடைமுறைகளையும் விதிகளையும் வெகு எளிதாக ஏமாற்றி அவற்றினுள் காணப்படும் பல குறைபாடுகளை மோசடிக்காரர்களே வெளிப்படுத்துகிறார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மோசடி ஒன்றினை சுருக்கமாக விளக்குகிறேன்.
பிரகாசு என்று வைத்துக்கொள்வோமே, இந்த நபர் தென்னிந்தியாவில் இயங்கிவந்த தனியார் வங்கிக்குச் சென்று தனது வணிகத்திற்காக கடன்களை வேண்டினார். ஏற்கனவே அந்த வங்கியில் வாடிக்கையாளராக இருந்த அவர் தமது வணிகத்தின் வரவுகளை முதல் அடமானமாகவும்;, மேலும் தமது நிலத்தை இரண்டாவது அடமானமாகவும் கடனுக்காகக் காட்டினார்.

வங்கி அதிகாரிகள் அவருடைய கிராமத்திற்கு தமது குழுவினருடன் நிலத்தை மதிப்பீடு செய்ய வந்தபொழுது, அனைவரையும் தமது நிலத்துக்கும், அங்கிருந்து நேராக சார்பதிவாளர் அலுவலகத்துக்கும் பிரகாசு அழைத்துச் சென்றார். அந்த அலுவலகத்தில் இருந்த அரசு அதிகாரிகளிடம் தமது நிலத்துக்கான புலஎண்ணை சொல்லி அதற்கான அரசு மதிப்பீட்டை வினவினார். சார்பதிவு அதிகாரிகள் தமது ஆவணங்களை சரிபார்த்து சதுரடிக்கு 1000 ரூபாய் என்று கூறினர். நகரிலிருந்து வெகு தொலைவில் இருந்த அந்த கிராமத்தில் அத்தகைய மதிப்பு சாத்தியமே கிடையாது. இருப்பினும் வங்கி அதிகாரிகள் அதனைக் குறித்துக்கொண்டு வெளியேறினர்.

பொதுவாகவே ஒரு மனையின் அரசாங்க மதிப்பீடு சந்தை மதிப்பை விடவும் மிகவும் குறைவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதுவே மனை வணிகத்தில் கறுப்புப் பணம் உற்பத்தியாவதற்குக் காரணியாக விளங்குகிறது. எப்படியென்றால் ஒரு சொத்து அரசின் மதிப்பிலேயே பதிவுசெய்யப்படும், அதற்கு மட்டும் வங்கி மூலமாக பணம் செலுத்தப்பட்டு மீதம் ரொக்கமாக செலுத்தப்படும். ரொக்கமாக செலுத்தப்படும் பணம் கறுப்புப் பணமாக மாறுகிறது. கறுப்புப் பண விவகாரத்தை நாம் இப்போது விவாதிக்க வேண்டாம்.

mosadi1வங்கி அதிகாரியிடம், பிரகாசு தமது நிலம் சந்தை மதிப்பில் சதுரடிக்கு 1500 ரூபாய்க்கு மேல் போவதாகவும் அரசு மதிப்பு குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட வங்கி அதிகாரிகள் அவரது நிலத்திற்கு சதுரடிக்கு 1400 ரூபாய் மதிப்பு என்று முடிவெடுத்தனர். அவருடைய மொத்த நிலத்திற்கான மதிப்பு கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாயைத் தொட்டது. வங்கியானது அந்தத் தொகையின் 60 சதவிகிதமான 9 லட்சம் ரூபாய் கடனை பிரகாசுக்கு அளித்தது. உடனடியாக ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பணம் அவரது வங்கிக் கணக்கை சென்றடைந்தது.

விதிகளின் படி 12 மாதங்களுக்குப் பிறகு தவணைகள் ஆரம்பிக்கப்படவேண்டும். ஆனால் பணம் கட்டப்படவில்லை. வாடிக்கையாளரைக் (பிரகாசைக்) காண முடியவில்லை, தொலைபேசி அழைப்புகள் எடுக்கப்படவில்லை. மேலும் சில மாதங்கள் காத்திருந்த வங்கி, வாடிக்கையாளரைத் தேடித் தமது அதிகாரியை அனுப்பியது. ஒருவழியாக அவரைக் கண்டுபிடித்த பிறகு பிரகாசு தமது வணிகத்தை மூடிவிட்டது உணரப்பட்டது. உலகளாவிய பொருளாதார மந்தநிலையினாலும், சீனாவிலிருந்து இறக்குமதிகள் வருவதாலும் தமது வணிகம் முற்றிலும் முடங்கியதாக பிரகாசு தெரிவித்தார். தாம் காசு அற்று இருப்பதாகவும், ஏழையாகி விட்டதாகவும் கூறினார். ஆனால் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தமது நினைவில் இருப்பதாகவும், ஆனால் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்றும் கூறினார். வேறு வழியின்றி வங்கியானது இரண்டாவது அடமான இடத்தை ஏலத்திற்கு விட்டு தங்களுக்கு சேர வேண்டிய தொகையை அதிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரகாசு உறுதி கூறினார்.

வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு நிலைமை தெரிவிக்கப்பட்டது. சட்ட ரீதியான ஏலத்திற்கு வேலைகள் தொடங்கப்பட்டன. ஏலம் விட்ட பிறகு வங்கிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பிரகாசின் நிலம் சந்தை மதிப்பில் வெறும் ஒரு லட்சம் ரூபாய் பெறுமானமுடையதாக (அதாவது சதுரடி ரூ.100) இருப்பது தெரிந்தது. ஆனால் கடனோ 9 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருந்தது. வங்கி ஆவணங்களை சோதித்தால் அதில் சந்தை மதிப்பீடு 15 லட்சம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படி கொடுமையான தவறு எவ்வாறு நிகழ்ந்தது?. மேலும் விசாரணையில் பிரகாசு வங்கி அதிகாரிகளை மிகத் திறமையான முட்டாள்களாக்கியது தெரியவந்தது. அரசு நடைமுறைகளையும் விதிகளையும் வெகுசாமார்த்தியமாக ஏமாற்றியிருந்தார்.

வங்கி கடன் தருவதற்கு 6 மாதத்திற்கு முன்பு பிரகாசு தனது நிலத்தின் சிறு பகுதியை அதன் மதிப்பை விடவும் 10 மடங்கு அதிகமாக விற்றிருந்தார். அந்த மதிப்பிற்கே பதிவும் செய்யப்பட்டு வரிகளும் கட்டப்பட்டது. அதாவது 100 ரூபாய் சதுரடி நிலத்தை 1000 ரூபாய் சதுரடி என்று விற்றிருந்தார். இரண்டு மாத இடைவெளியில் இதே போல மற்றொரு விற்பனையை நிகழ்த்தினார். இவையிரண்டும் பிரகாசின் குடும்பத்திற்குள்ளேயே நடந்தன. அவருடைய ஒரே செலவு அதிகப்படியாக கட்டப்பட்ட வரிகளும், பதிவுக்கட்டணம் மட்டுமே ஆகும்.

mosadi4மேற்படி பரிவர்த்தனைகளால் விதிகளின் படி அந்த நிலத்தின் அரசாங்க மதிப்பு உயர்ந்து விட்டது. இவ்வாறு செயற்கையாக அரசு மதிப்பை உயர்த்திவிட்ட பிரகாசு தனது மோசடியை மெதுவாக அரங்கேற்றினார். வங்கி அதிகாரிகளிடம் அரசு மதிப்பை சாமார்த்தியமாகக் காட்டி உண்மை மதிப்பை மறைத்து அதிகப்படியான கடனைப் பெற்றார். சந்தை மதிப்பு அரசு மதிப்பை விட அதிகமாக இருக்கும் என்ற மக்களின் மனநிலை மோசடிக்கு வசதியாக அமைந்தது. ஒரு லட்சம் ரூபாய் இடத்திற்கு 9 லட்சம் ரூபாய் கடன்பெற்ற பிறகு பிரகாசுக்கு அதைக் கட்ட மனம் வருமா என்ன? இவ்வாறு மிக எளிதாக அரசு மதிப்பை மாற்றிவிட முடியும் என்பதை வங்கி, பிரகாசின் மோசடியைக் கொண்டே உணர்ந்தது. மேற்படி நிலத்தின் மதிப்பீடு என்னுடைய நிறுவனத்திற்கு வங்கியின் மூலம் வந்த பொழுது இடத்தை நேரில் பார்த்து சதுரடி அதிகப்பட்சம் 200 ரூபாய் வரை செல்லும் என்று மதிப்பீடு அளித்தேன். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு அந்த நிலத்தை 2 லட்சம் ரூபாய்க்கு விற்று பணத்தை வங்கி எடுத்துக் கொண்டு மீதம் 7 லட்சம் ரூபாயை நட்டக் கணக்கில் எழுதியது.

முறையான மதிப்பீடும் விசாரணையும் சோதனைகளும் நடந்திருந்தால் வங்கி இந்த இழப்பை தவிர்த்திருக்க முடியும். அதிபுத்திசாலியான மோசடிக்காரர் பிரகாசு பணத்தை வேறெங்கோ முதலீடு செய்து செல்வத்துடன் வாழ்வதாகக் கேள்வி!.

BVe Consulting Engineers

Engineering Project Consultancy & Property Advisory Services,

Residential-Commercial-Industrial-Infrastructure Designs

Due-diligence studies -Asset valuation services

Chennai -600 083

bv.consultingengrs@gmail.com

www.bveconsultingengineers.in

www.bveconsultingengineers.com


வெங்கட்ரமணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மோசடி செய்வோர் சமர்த்தர் ஆவர்”

அதிகம் படித்தது