மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ராமராஜ்ஜிய ரதயாத்திரையும், தமிழக அரசின் 144 தடையுத்தரவும்.!

சுசிலா

Mar 24, 2018

Siragu ramrajyarathayatrai1

கடந்த மாதம்,  உத்திரபிரதேச மாநிலத்திலிருந்து ராமராஜ்ஜிய ரதம் என்ற ஒன்று கிளம்பி, கர்நாடகா வழியாக தென்னிந்தியாவிற்குள்  நுழைந்து,  கேரளா வழியாக, இரு தினங்களுக்கு முன், தமிழ்நாட்டிற்குள் வந்ததும், அதனைத் தொடர்ந்து நம் மாநிலத்தில் நடந்த போராட்டங்களும், கைதுகளும், சிலை உடைப்பு சம்பவங்கள் போன்றவைகளும் நடந்தேறியிருக்கின்றன என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.  இந்த ரதயாத்திரையின் நோக்கம் ராமராஜ்ஜியம் அமைப்பது, ராமர் கோவில் கட்டுவோம்  என்பதாகும். அயோத்தியில், 400 ஆண்டுகள் பழைமையான பாபர் மசூதி இடிக்கப்பட்டதும், அதனைத் தொடர்ந்து நடந்த மதக்கலவரங்களும், முன்னாள் மத்திய அமைச்சர் அத்வானி அவர்களின் ராமராஜ்ஜிய ரதயாத்திரை ஏற்படுத்திய விளைவுகளும் நாடறிந்த செய்தியாகும். உண்மை இப்படியிருக்கையில், இப்போது, மறுபடியும், விஸ்வ இந்து பரிஷத் என்ற இந்துத்துவ அமைப்பு, இந்த ரதயாத்திரை என்ற ஒரு விசயத்தை கையில் எடுத்துக்கொண்டு ஐந்து மாநிலங்கள் வழியாக உலா வருகிறோம் என்ற பெயரில் நாட்டில் மதக்கலவரங்களை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.

இந்த ரதயாத்திரை என்பது தேவையில்லாத ஒன்று. இன்னமும், இந்த வழக்கு நீதிமன்றத்தில் முடிவடையாத நிலையில், ராமர் கோவில் கட்டுவோம் என்பது நீதிமன்ற அவமதிப்பு அல்லவா. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. பல இனங்கள், கலாச்சாரங்கள், பல மொழிகள் பேசும் மக்கள் என  பன்முகத்தன்மையுள்ள நாடு. அப்படியிருக்கையில், ஒரு மதத்தை சார்ந்து ஆட்சி அமைப்போம் என்று சொல்வது நேர்மையாகுமா.? வடஇந்தியாவில், மதத்தை வைத்து அரசியல் செய்து, வெற்றி பெற்ற பா.ச.க அரசு, இங்கும் அதே யுக்தியை கையாளப்பார்க்கிறது என்பது தானே உண்மை.

நம் தமிழ்நாடு, மதநல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கும் மாநிலம். இங்கு அனைத்து மதத்தினரும், எவ்வித பிரச்சினையுமின்றி, ஒற்றுமையுடன் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதில் குளறுபடிகள் செய்து, அதன் மூலம் குளிர்காயப் பார்க்கிறது இந்த பா.ச.க மதவாத அரசு.

மற்ற மாநிலங்கள் அனுமதி கொடுப்பது என்பது அவரவர் விருப்பம், புரிதல். ஆனால், சமூகநீதிக்கு, மாநில சுயாட்சிக்கு சான்றாகவும், தனக்கென தனித்தன்மை வாய்ந்த மாநிலம் நம் மாநிலம். ரதயாத்திரை என்ற பெயரில் மதக்கலவரத்தை தூண்டக்கூடிய இந்த ஊர்வலத்திற்கு நாம் அனுமதி கொடுத்திருக்கக் கூடாது என்பதுதான் தலைவர்கள் உட்பட மக்கள் வரையிலான  பெரும்பாலோர் கருத்து. இதனை எதிர்த்து, போராட்டம் நடத்துவோம் என்று பல கட்சிகள், அமைப்புகள் அறிவித்தன. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பல தலைவர்களை, திரு. வைகோ, திரு. தோல். திருமாவளவன், திரு. வேல்முருகன் உள்ளிட்டோரை முன்கூட்டியே, அதாவது, முதல் நாள் இரவே, கைது செய்தது இந்த தமிழக அரசு. அதோடு மட்டுமல்லாமல், நெல்லை மாவட்டத்திற்கு  144 தடையுத்தரவு போடுகிறதென்றால், இந்த அதிமுக அரசு யாரைக் காப்பாற்ற ஆட்சி நடத்துகிறது என்ற கேள்வி நமக்குள் எழாமல் இல்லை.

நம் மாநில ஆட்சி வரலாற்றிலேயே இதுபோன்று நடந்ததில்லை என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அதிலும், இந்த தடை உத்தரவு என்பது போராடுபவர்களுக்கு மட்டும் தானாம். ஊர்வலம் வருபவர்களுக்கு கிடையாதாம்.  நான்கு பேர்கள் கூடினாலே கைது செய்யப்பட வேண்டும் என்ற 144 உத்தரவை போட்டுவிட்டு, ஊர்வலத்துக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. இந்த அதிமுக அரசு, மத்திய பா.ச.க அரசிற்கு துதிபாடும் போக்கிற்கு ஒரே அளவே கிடையாதா.  இதற்காக ஆயிரக்கணக்கில், காவலர்களை குவித்து, முழு பாதுகாப்பு கொடுத்து, இந்த ரதயாத்திரையை நடத்திக் கொடுக்கிறது. அயோத்தியில், கோவில் கட்டுவதற்கும், இங்கே ரதயாத்திரை வருவதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா… அதற்காக தடையுத்தரவு போட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்க வைக்க வேண்டியதன் அவசியமென்ன… நம் மாநிலத் தலைவர்களை கைது செய்ய வேண்டிய கட்டாயம் எதற்கு வந்தது. இதுபோன்ற பல கேள்விகளை, நாம்  தமிழக அரசிடம் முன்வைக்க வேண்டியுள்ளது.

மற்ற மாநிலங்கள் நடத்தும்போது நாம் மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் ஒருவர் கேட்கிறார். நம் தமிழகம் தானே அனைத்திற்கும் கேள்விகேட்கும் மாநிலமாக இருக்கிறது. சமூகநீதியை, இந்த இந்திய நாட்டிற்கே உணர்த்திய மாநிலம் நம் மாநிலம். நீட் நுழைவுத் தேர்வு வேண்டாம், அதற்கான விலக்கு வேண்டும் என்றும் நாம் தானே கேட்கிறோம். மற்ற மாநிலங்கள் கேட்கவில்லையே. இந்த புரிதல் கூட இல்லாமல், இவர்கள் எப்படி ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கிறார்கள் என்பது தான் தெரியவில்லை. இதில் உச்ச்கட்டக் கொடுமை என்னவென்றால், அன்று இரவு, புதுக்கோட்டை மாவட்டத்தில், தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்படுகிறது. தலை துண்டிக்கப்படுகிறது என்றால், இந்த காலி(வி)கள் எந்த அளவிற்கு தமிழகத்திற்குள்  ஊடுருவி இருக்கிறார்கள் என்பதை நாம் உணர  வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் ஒரு சமூக சிந்தனையாளர். சமூக சீர்திருத்தவாதி. சமூக விஞ்ஞானி. சாதிய பாகுபாட்டை எதிர்த்து போராடி, இடஒதுக்கீடு மூலம் நம் சமூகம் மேம்பட, தம் வாழ்நாள் முழுதும் அர்ப்பணித்தவர். அவருடைய சிலையை உடைக்குமளவிற்கு துணை போகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது என்பது மிகவும் கண்டனத்துக்குரியது அல்லவா.!

இம்மாதிரியான செய்கைகளை ஊக்குவித்து, மதக்கலவரங்களை உருவாக்கி, சட்டம், ஒழுங்கு சரியில்லையென்று ஆளுநர் ஆட்சியை அமல்படுத்துவதற்கான திட்டம் என்றே நம்மால் கணிக்க முடிகிறது., மேலும், பக்தி என்ற மூடத்தனத்தை மூலதனமாக்கி, மக்களை அறியாமை என்ற புதைகுழியில் தள்ளி, அதன் மூலம் வாக்குகள் பெற்று ஆட்சியை பிடித்து  விடலாம் என்ற பகற்கனவு காணுகிறது மத்திய பா.ச.க மோடி அரசு. அதற்கு அடிபணிந்து, அடிமை சேவகம் புரிகிறது, இந்த அதிமுக அரசு.

” இராமாயணம் என்பதே, ஆரியர் – திராவிடர்  போரட்டம் தான்.”

என்று முன்னாள் பிரதமர் பண்டித ஜவார்லால் நேரு அவர்கள், தன்னுடைய ‘டிஸ்கவரி ஆப் இந்தியா’ என்ற நூலில் எழுதியிருக்கிறார்.

ஏற்கனவே, ராமர் பாலம் இடிக்கப்படக்  கூடாது என்று, தமிழகத்திற்கு மிகுந்த பலனைத் தரக்கூடிய சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை கிடப்பில் போட்டு இருக்கிறது, இந்த  மத்தியஅரசாங்கம். ஒரு மதச்சார்பற்ற நாட்டில், ஒரு குறிப்பிட்ட மதத்தை வைத்தே, அரசியல் செய்யப்படுகிறதென்றால், அது வெட்கக்கேடான ஒன்று அல்லவா.!

இராமாயணத்தில், சம்பூகன் என்ற சூத்திரன், இறைவனை எண்ணி தவம் இருந்ததற்காக இராமன், அவனுடைய தலையை கொய்தான் என்ற கதை எழுதப்பட்டு இருக்கிறதே. இந்த சாதி படிநிலை கட்டமைப்பு என்பது  ஆரியகலாச்சாரம் அல்லவா.!

நம்முடைய மண் திராவிட மண். திராவிடம் தான் நமக்கான வாழ்வியல் முறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’ என்ற நாகரீக வாழ்வு வாழ்ந்தவர்கள் நாம்.  இவர்கள் சொல்லும் இந்து மதத்திற்கும், நமக்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லை என்பது தானே  உண்மை.

“பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.”

என்று பறைசாற்றும் வள்ளுவம் தான் நமக்கான வாழ்வியல். இதனை உணர்ந்து, இந்த அரசாங்கம் இனிமேலும், காவி அரசியலுக்கு துணை போகாமல், நல்லாட்சி புரிய வேண்டும் என்று வலியுறுத்துவோம்.


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ராமராஜ்ஜிய ரதயாத்திரையும், தமிழக அரசின் 144 தடையுத்தரவும்.!”

அதிகம் படித்தது