மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இலங்கை வடமாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் உரை

சிறகு நிருபர்

Jul 18, 2015

vigneshwaran urai1அன்பார்ந்த ஆன்றோர்களே, சான்றோர்களே, எனதருமை வடஅமெரிக்கவாழ் சகோதர சகோதரிகளே, என் மகன் Boston பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற படித்துக்கொண்டிருந்த காலத்தில் இந்த நாட்டுக்கு நான் வந்தபின், சுமார் பதினோரு வருடங்கள் கழித்து நான் உங்கள் அமெரிக்க மண்ணில் காலடிகள் பதிக்கின்றேன். இத்தனை பெருவாரியான தமிழ் உள்ளங்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில் பங்குபெறுவதில் மனமகிழ்வடைகின்றேன். எங்கள் எல்லோரையும் பிணிக்கும் சக்தியாக துலங்குகின்றாள் தமிழன்னை. எமக்கு பெருமை சேர்க்கும் தனித்துவமான குணாம்சமாக அவள் மொழி விளங்குகின்றது. பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் ஒருமுறை கூறினார், இமயமலை தமிழ்நாட்டில் இல்லை என்பதற்காக ஆண்டவன் கம்பனை இங்கு பிறப்பித்தார் என்று.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,

வள்ளுவன்போல், இங்கோவைப்போல்

பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை

உண்மை வெறும் புகழ்ச்சியில்லை என்கின்றான் பாரதியார். அதே பாடலில் தொடர்ந்து கூறுகின்றார்,

ஊமையராய், செவிடர்களாய், குருடர்களாய்

வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்! என்று.

தமிழ்மொழியை எங்கும் முழங்க வைக்கவேண்டும் என்பதில் பாரதியார் கண்ணாக இருந்தார். அக்காலத்தில் உள்ளூரில் தமிழ் முழங்கவேண்டும் என்று எண்ணியிருப்பார் என்று பொதுவாக நாம் நம்புகின்றோம். ஆனால் உள்ளூரில் இருந்துகொண்டே வெளிஉலகத்திற்கு கலங்கரை விளக்கமாக தமிழ்மக்கள் இருக்கவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்லுவதில் ஓர் மகிமை இல்லை, திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்று கூறுவதிலிருந்து எமது ஆற்றல் வெளிநாட்டிற்குத் தெரியவேண்டும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆகவே திறமான தமிழ்ப்புலமை உலகெங்கிலும் பரவவேண்டும் என்று கனவுகண்ட பாரதியாரின் கனவை நனவாக்குவதுபோல் உங்களின் இந்தப் பெருங்கூட்டம் அமைந்துள்ளது. உலகெங்கும் பரந்துவாழும் தமிழ்மக்களிடையே மூன்று முக்கிய எதிர்ப்பார்ப்புகள் இருப்பதைக் காண்கின்றேன். ஒன்று தமிழை வளர்க்கவேண்டும், அடுத்தது தமிழை நிலைக்க வைக்கவேண்டும், மூன்றாவது தமிழர் நலம் காக்க வேண்டும் என்பது.

vigneshwaran urai5தமிழை வளர்த்தல் பற்றிப் பார்த்தோமானால் தமிழை வளர்க்க பாரதி கூறிய அறிவுரைகள் யாவை என்று பார்த்தால், முன்னர் கூறியவற்றையும் சேர்த்து ஒன்று தேமதுரைத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகையில் செய்தல் வேண்டும் என்றார். அடுத்து சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்ய வேண்டும் என்றார். மூன்றாவது பிற நாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் என்றார். நான்காவது எமது திறமான புலமையை வெளிநாட்டோர் வெளிப்படையாக வணங்கிப் போற்றவேண்டும் என்று கூறினார். இன்று தமிழர்கள் தங்கள் பிறந்தகங்களில் இருந்து வந்து புகுந்தகங்களில் தமிழ் வளர்க்க கங்கணம் கட்டிக்கொண்டிருப்பது எம் எல்லோருக்கும் பெருமை அளிக்கின்றது. தேமதுரைத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்படி அமைத்துவிட்டீர்கள், உலகமெல்லாம் பரவும்போது தெருவில் தமிழ் முழக்கம் செழிக்காதா? அதையும் செய்துவிட்டீர்கள்.

தெருக்கோடி வானொலிகள் உங்கள் தமிழோசையை எடுத்து இயம்பிக் கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சிகள் தொலைதூரம் நின்று உங்கள் தமிழோசையை மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. உங்கள் மொழிபெயர்ப்புகள் பிறநாட்டு சாத்திரங்களை எமக்கு உணர்த்தும் வகையாக அமைந்துள்ளன. நீங்கள் எழுதும் புது நூல்கள் எம் தமிழ் மொழியை பெருமைபெற வைக்கின்றன. திறமான உங்கள் புலமைகூட உலகறியச் செய்துள்ளீர்கள். ஆகவே தமிழை வளர்க்க பாரதி எவ்வெவற்றைக் கனவு கண்டானோ, அவற்றையே நீங்கள் செய்து அவன் கனவை நனவாக்கி வந்துள்ளீர்கள், வருகின்றீர்கள்.

அடுத்து தமிழை நிலைக்க வைத்தல் பற்றி, தமிழை நிலைக்க வைப்பதானால் தமிழை முறைப்படி பேசவேண்டும். எமக்கு அடுத்து வரும் சமுதாயத்திற்கு அம்மொழி பற்றி கூறவேண்டும். அதில் பாண்டித்தியம் பெற வைக்கவேண்டும். இதுபற்றி நீங்கள்தான் எனக்கு அறிவுரை வழங்கவேண்டும். உங்கள் மக்களுக்கு நீங்கள் தமிழ் சொல்லிக் கொடுக்கின்றீர்களா?, தமிழ் மொழியின் தொன்மையையும், சிறப்பையும், அம்மொழியே நமது இனத்தின் ஆணிவேராக இருப்பதையும் எடுத்து இயம்பி வருகின்றீர்களா? நாங்கள் தமிழர்கள் என்று கூறிவிட்டு, எமது மக்களை பிறமொழி வித்தகர்களாக ஆக்கினோமானால், தமிழ் நிலைக்கமாட்டாது என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை.

நான் ஒரு முறை இங்கிலாந்து சென்றேன், இந்து மதம் பற்றி தமிழ் இளைஞர்கள், யுவதிகள் என்னுடன் கலந்துரையாட ஆசைப்படுகின்றார்கள் என்று ஒழுங்கமைப்பாளர்கள் கூறினார்கள், அதற்கென்ன என்றேன், ஓழுங்குபடுத்திவிட்டார்கள் கூட்டத்தை. சுமார் ஐம்பது மாணவ மாணவியர் அங்கு நின்றார்கள். ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆங்கிலத்திலேயே என்னுடன் பேசினார்கள். தமிழ் தெரியுமா என்று கேட்டேன், பலர் not really என்றார்கள். அதாவது பெற்றோர் எங்காவது எவருடனாவது தமிழில் பேசுவதைக் கேட்டுத்தான் கிரகித்துக்கொண்ட தமிழ்தான் இவர்களுக்குத் தெரிந்த தமிழ், தாமாக படிக்கவில்லை.

vigneshwaran urai4கொழும்பில் சட்டம் பயின்ற எம் மாணவ மாணவியர் அங்கு தற்பொழுது குடும்பம் நடத்துகின்றார்கள். ஏன் உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கவில்லை என்று கேட்டேன். அதிக தொலைவு அவர்களைக் கொண்டுசெல்லவேண்டும், அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் தமிழ்மொழி பயிற்சி கிடைக்கும், எனவே வீட்டில் சொல்லிக் கொடுக்கின்றோம் என்றார்கள். குழந்தைகளிடம் தமிழில் கேள்வி கேட்டால் ஆங்கிலத்தில் பதில் வந்தது, ஏன் என்று கேட்டேன், வீட்டில் சொல்லிக்கொடுக்க நேரம் கிடைக்கவில்லை என்றார்கள். அதே நிலைதான் இங்கும் இருக்குமோ என்று நானறியேன். ஆனால் இங்கிருந்த இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பொழுது அவ்வாறான நிலை இங்கு இல்லை என்றுதான் எனக்குப் படுகின்றது.

ஆனால் தமிழை நிலைக்கவைக்க வேண்டுமானால் எமது குழந்தைகள் தமிழை கட்டாயமாகப் படிக்க வழிசெய்து தரவேண்டும். தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை நெறி. எமது கலை, கலாச்சாரம், பண்பாடு, வாழும் முறை யாவையும் எமது தமிழ் மொழிக்குள்ளேயே பிண்ணிப் பிணைந்துள்ளது. அதனை நாம் எமது வருங்கால சந்ததியினருக்கு புகட்டுவதில்தான் தமிழின் நிலைப்பு தங்கியிருக்கின்றது.

ஒருமுறை என் மகனைப் பார்க்க ஒரு அமெரிக்கப்பெண் கொழும்பு வந்தார். இருவரும் Boston பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள். அவரின் பெயரைக்கேட்டேன், போலந்துநாட்டு பெயர் போல தொனித்தது, நீங்கள் போலந்து நாட்டைச் சேர்ந்தவரா என்று கேட்டேன். எனது தாத்தா போலந்து நாட்டிலிருந்துதான் அமெரிக்கா வந்தார் என்றார். உங்களுக்கு போலந்து மொழி தெரியுமா என்று கேட்டேன், தெரியாது என்றார். உங்கள் குடும்பத்தில் எவரும் போலந்து மொழியில் பேசுவதில்லையா என்று கேட்டேன், இல்லை என்றார். உங்களுக்கு ஆங்கிலம் தவிர வேறு ஏதேனும் மொழி தெரியுமா என்றும் கேட்டேன், ஆம் பிரெஞ்சு மொழி தெரியும், ஜெர்மானிய மொழி தெரியும் என்றார். அப்போது ஏன் உங்களது பாரம்பரிய மொழியையும் கற்கவில்லை என்று கேட்டேன், எவரும் சொல்லிக் கொடுக்கவில்லை என்றார். இந்த நிலை உங்களது குழந்தைகளுக்கும் வந்தால் தமிழ் நிலைக்காது என்பதை நான் கூறவேண்டுமா?. பேசுவதால்தான் ஒரு மொழி வளர்ச்சியடைகின்றது. ஆகவே தமிழை நிலைக்கவைக்க நாம் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதை நீங்கள் ஆற, அமர சிந்தித்து ஆனவற்றை செய்ய முன்வரவேண்டும். தமிழ்மீது எமக்கு இருக்கும் பற்றில் எமது குழந்தைகளுக்கும் வரவேண்டும் என்பதை இந்தத் தருணத்திலே சொல்லிவைக்கின்றேன்.

vigneshwaran urai3மூன்றாவது தமிழர் நலம் காத்தல், இதுவரை தமிழ் வளர்த்தல், தமிழை நிலைக்கவைத்தல் பற்றி ஆராயும் பொழுது நீங்கள்தான் முன்னின்றீர்கள். ஆனால் தமிழர் நலம் காத்தல் என்றவுடன் நாங்கள் அங்கு வருகின்றோம். உலகத்துத் தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து தமிழர் நலம் காக்க முன்வரவேண்டும் என்று கூறவே நான் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளேன். தமிழ்மக்கள் உலகெல்லாம் பரந்திருந்து வாழ்ந்தாலும் அவர்கள் செரிந்திருந்து வாழும் ஒரு சில பிரதேசங்களில் அவர்கள் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆளாகி, இப்பொழுது ஓரளவு அதிலிருந்து வெளியேறி வந்துகொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கைத்தரம் மிகவும் ஒரு இக்கட்டான நிலையில் இருக்கின்றது. அதை விளக்கவைக்கவே, விளங்கவைக்கவே நான் வந்துள்ளேன். தமிழர் நலம் காக்கவேண்டும் என்றால் எம்மிலும் பார்க்க குறைந்த ஒரு சமூக, சமுதாய, பொருளாதார, கல்வி, கலாச்சார, தொழில்நிலை, இத்தியாதி நிலைகளில் இருப்பவர்களை மேலெழுப்ப வேண்டியது எமது கடமையாகின்றது. இருப்பவர்களும் இல்லாதவர்களும் ஒருங்கிணைந்தால்தான், தமிழர் நலம் பேணப்படலாம், தமிழர் தம் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றலாம்.

முதலில் வெள்ளையர்களிடமிருந்து நாட்டை விடுவிக்க எமது முன்னோர்கள் அரும்பாடுபட்டார்கள், இது பாரதத்திலும் நடந்தது, இலங்கையிலும் நடந்தது. ஆனால் பாரதத்தின் தென்பகுதியில் தமிழர் வாழ் பகுதிகளில் சுதந்திரம் கிடைத்தபின் நடைபெற்றதை சமூகச்சிக்கல் என்றே குறிப்பிடலாம். தமிழ் பேசும் மக்களிடையேயே முரண்பாடுகள் மிகவும் உக்கிரமாகக் முன் கொண்டு வரப்பட்டன. திராவிடர், ஆரியர் போன்ற கருத்துக்களால் தமிழ் பேசும் சமூகத்தில் பேதங்கள் கூர்மை பெற்றன. ஆனாலும் தென் பாரதத்தில் தமிழ் பேசும் மக்களின் நிலை பொதுவாக விருத்தி அடைந்து வந்தது என்றுதான் கூறவேண்டும், இதற்குக் காரணம் இந்திய நாட்டின் அரசியல் யாப்பு. பாரதநாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் போதிய அதிகாரங்கள், உரிமைகள் வழங்கப்பட்டன. தம்மைத்தாமே ஆள அவர்களுக்கு போதிய சட்ட அதிகாரங்கள் மத்தியால் பகிர்ந்துகொடுக்கப்பட்டன. இதைத்தான் நான் அண்மையில் எம்மிடையே பாரதப்பிரதமர் கௌரவ நரேந்திர மோடி அவர்கள் வந்திருந்த போது அவர் முன்னிலையிலே அவருக்கு எடுத்துக்கூறினேன். ஆங்கிலத்தில் கூறியதை அப்படியே தருகின்றேன், “The Indian Constitutions provides for the facilitation of sustainable development, internal security, law and order, policing and protection pertaining to land and so on with in the state. Our inability to function in our province to the extent you were able to help Gujarat on Indian Constitutions needs to be understood”என்று கூறினேன். அதாவது பதிமூன்றாவது திருத்தச் சட்டம் எம்மக்களுக்கு போதுமான அதிகாரங்களை வழங்கவில்லை, மத்தியே எம்மை கட்டுப்படுத்தி நிற்கின்றது என்பதை எடுத்துக்காட்டினேன்.

may 17-5ஆகவே தென்னிந்தியாவில் சமூகச் சிக்கல் நடைபெற்று ஓரளவு அதிலிருந்து விடுபட்டு வரும் தமிழ்ச்சமூகமானது கலை, கலாச்சார, பொருளாதார, தொழில் ரீதியான அபிவிருத்திகளையும் இன்று கண்டுவருகின்றது. வடகிழக்கு இலங்கை அவ்வாறல்ல, எமக்கு நேர்ந்திருப்பது சமூக சிக்கல் அல்ல, நாம் இனப்படுகொலைக்குள் அகப்பட்டுள்ளோம். அண்மையில் எமது வடமாகாண சபை இனப்படுகொலைகளைப்பற்றி ஒரு பிரேரணையை ஏற்றுக்கொண்டுள்ளது, அனுமதித்திருக்கின்றது. இன்றுவரை எமது நாட்டில் நடைபெற்ற இனப்படுகொலைபற்றி ஆவணமாக அது அமைந்திருந்தது. மனிதாபிமானத்திலும் ஆன்மீகத்திலும் இதுவரை அக்கறை காட்டிவந்த நீங்கள் இப்படியான ஒரு பிரேரணையை அனுமதிக்கவிட்டிருக்கலாமா என்று சிங்கள நண்பர்கள் பலர் கேட்டார்கள். அதற்கு நான் அளித்த பதில் மனிதாபிமானத்திலும் ஆன்மீகத்திலும் எனக்கு ஈடுபாடு இருந்ததாலேயே குறித்த பிரேரணையை நான் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளேன் என்பது. அதாவது நாங்கள் இன்று வாழ்வது ஆறாவது திருத்தச் சட்டத்தின் கீழ், நாட்டில் எவ்வாறானதொரு பிரிவினை பற்றிப் பேசுவதோ அதற்காக நடவடிக்கைகள் எடுப்பதோ, அதற்கு அனுசரணைகள் வழங்குவதோ சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது பிரிவு 157A-ன் கீழ். 150 ஆயிரம் இராணுவத்தினர் வடமாகாணத்தில் மட்டும் நிலைகொண்டுள்ளார்கள்.

அந்த நிலையில் பிரிவுபடாத இலங்கையினுள் எமது தனித்துவத்தை ஏற்று, எமது பாரம்பரிய இடங்களை ஏற்று, அதிஉச்ச அதிகாரப் பரவலை எமக்கு அளிக்கவேண்டும் என்று கேட்டுள்ளோம். அந்த அடிப்படையில்தான் மக்கள் எங்களுக்கு வாக்களித்தார்கள். அவ்வாறு நாங்கள் மிக நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளபோதும், அவற்றிற்கு தெற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. இப்போது சமூக நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்றீர்களே, சமூக நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் இதுவரை நடந்துள்ளதை அறியாமல், புரியாமல், அனுசரிக்காமல் எவ்வாறு நாங்கள் முன்னோக்கிப் போகப்போகின்றோம் என்பது பற்றி சிந்தித்தீர்களா என்று கேட்டேன் அவர்களிடம். மனிதாபிமானமுள்ள ஒருவரால் இன்றுவரை நடைபெற்ற மனித படுகொலையை ஏற்றுக்கொள்ள முடியுமா? ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டும் ஒருவர் இதுவரை காலம் நடைபெற்ற நடவடிக்கைகளை மறந்து முன்னேறவேண்டும் என்று கூறமுடியுமா? காணாமல் போனவரின் கண்ணினும் இனிய உறவுகள் காலத்திற்குக் காலம் கண்ணீர் சிந்தி கூக்குறல் எழுப்புகின்றார்களே அது உங்கள் காதுகளுக்குக் கேட்கவில்லையா? என்று கேட்டேன். அவர்களுக்கு பதில் சொல்லாமல் எவ்வாறு சமூக நல்லிணக்கத்தை, சமுதாய நல்லுறவை உண்டு பண்ணப்போகின்றீர்கள் என்று கேட்டேன். உண்மையை அறிந்துகொண்டால்தான் அது சமூக நல்லுணர்வுக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டேன். அவர்கள் எனக்குக் கூறினார்கள் நீங்கள் இராணுவத்தின் கெடுபிடிகள் பற்றித்தான் கூறியுள்ளீர்கள், உங்கள் இளைஞர்கள் செய்த அட்டூழியங்கள் பற்றி ஒன்றும் கூறவில்லையே என்றார்கள். இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தவர்கள் உங்கள் அரசாங்கங்களும் படைகளும். அவர்களின் அராஜக அடக்கு முறைகளே இந்தப் போரை உருவாக்கியது. அரசியலில் அவர்கள் ஏற்படுத்திய அவநம்பிக்கையே அருமருந்தென இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தன. நான் எங்களுக்கு நடந்த சோகக் கதையை கூறியிருக்கின்றேன், உங்களுக்கு ஏதேனும் எங்கள் இளைஞர்களால் நடைபெற்று இருந்தால் உங்கள் மாகாண சபையில் அதுபற்றி பிரேரணையைக் கொண்டு வாருங்கள். அதை விட்டுவிட்டு எமது இளைஞர்களைப் பற்றி நான் ஏன் கூறவில்லை என்று என்னிடம் கேட்காதீர்கள் என்று கூறினேன்.

may 17-4என்னைப் பொறுத்தவரையில் எந்தவிதமான அடக்குமுறையோ, இம்சையோ, பலாத்காரமோ வாழ்க்கையில் முடியுமானவரை தவிர்க்கப்பட வேண்டியவை. எனினும் அது ஒரு இனத்தைக் குறிவைத்து நடைபெறும்போது அதற்கு எதிர்தாக்குதல் அந்த இனத்தினால் நடத்தப்பட்டால் இனப்படுகொலையில் ஈடுபட்ட இனம் தான் அதற்குப் பொறுப்புக்கூறவேண்டும். தற்பாதுகாப்பு பற்றி சட்டத்தில் கூறியிருப்பதை உங்களுக்கு உணர்த்த விரும்புகின்றேன் என்று அவர்களிடம் குறிப்பிட்டேன். ஆகவே எமது நாட்டில் நடந்துள்ளது சமூகசிக்கல் அல்ல இனப்படுகொலை. இனவாரியாக எமது இனத்தை ஒடுக்க, அழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையே எமது பிரேரணையை உலகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தது. இவையாவும் எம் தமிழர் தம் நலன் காத்தல் என்ற தலையங்கத்தின் கீழேயே பரிசீலனை செய்து வருகின்றோம். எமது நாட்டில் தமிழர் நலம் பெற வேண்டுமானால் தமிழ்பேசும் வடகிழக்கு மக்களுக்கு சுயாட்சி பெற்றுக் கொடுப்பது அவசியம். மாவட்ட சுயாட்சி முறையை அதாவது contontment என்ற சிறிய பிரதேச சுயாட்சி முறை ஒன்றை சுவிட்சர்லாந்து நாடு மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதையொட்டி தீர்வு ஏற்பட்டால் வடமாகாண மக்கள் கிழக்கு மாகாண மக்கள், அவற்றினுள் இருக்கும் தமிழ் முஸ்லீம், சிங்கள மக்கள், மலேய தமிழ் பேசும் மக்கள், நாட்டில் பிற இடங்களில் வாழும் குறிப்பிட்ட மக்கள் கூட்டங்கள் என எல்லோருக்கும் சுயாட்சி கிடைக்கும் வகையில் தீர்வு ஒன்றைப் பெறுவதால் நாட்டில் சுவிட்சமும் சமாதானமும் ஏற்படும் என்று கூறுவாறும் உள்ளார்கள். ஆனால் சமச்சீர் அடிப்படை ஒன்றை உள்ளடக்குவது அவசியம் என்பதை இரு இன அறிவு ஜீவிகளும் இப்போது உணர்ந்து வருகின்றார்கள் என்பதுதான் எனது கணிப்பு. அதனைப் பெற நாம் யாவரும் முன்நிற்க வேண்டும். முனைந்து ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும் என்று கூறிவைக்கின்றேன்.

வடகிழக்குமாகாண மக்களின் வாழ்வாதாரங்களை வளப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை நான் கூறித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கருதுகின்றேன். இலங்கையில் வடகிழக்கு மாகாணங்களில் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், மனிதாபிமான செயல்பாடுகளில் வெளிநாட்டு எமது மக்கள் முதலீடு செய்ய முன்வரவேண்டும். ஒரு காலத்தில் எமது வடமாகாணத்திற்கும் பாரதத்திற்கும் தென்மாகாணத்திற்கும் இடையில் பலவித இணைப்பு நடவடிக்கைகள் இருந்துவந்தன. தூத்துக்குடியிலிருந்து தோணிகள் வந்துசென்றன. பலாலியிலிருந்து சென்னை, திருச்சி நோக்கி விமானங்கள் பறந்து வந்துகொண்டிருந்தன. இவற்றை இனி ஏற்படுத்த முடியுமா என்பதை இருநாட்டு அரசாங்கங்களும் பரிசீலிக்க வேண்டும். காங்கேசம் துறையில் இருக்கும் துறைமுகமானது செப்பனிட்டு ஆழப்படுத்துவிட்டால் இந்திய – இலங்கை வியாபார நிலைமை சீரடையும்.

vigneshwaran urai2இவற்றை எமது புதிய அரசாங்கத்திற்கு கூறுயிருக்கின்றோம். ஆனால் பாராளுமன்றத் தேர்தல் ஒன்றை எதிர்நோக்கி இருக்கும் அவர்கள் எவருமே இவை பற்றி பேச பிரியப்படுகின்றார்கள் இல்லை. தமிழர்களுக்குத் தக்கதாக தாம் நடந்துகொண்டால் தகாத ஒரு தீர்ப்பு தேர்தலில் தமக்குக் கிடைத்துவிடுமோ என்று அஞ்சுகின்றார்கள் பெரும்பான்மையின அரசியல்வாதிகள். எனினும் தமிழர் நலம் காப்பது உலகெல்லாம் இருக்கும் தமிழ்பேசும் மக்களின் தலையாய கடனாக உருவாகியுள்ளது. உலக தமிழ்மக்களின் மூன்று எதிர்பார்ப்புகள் பற்றி இதுவரை ஆராய்ந்தோம். தமிழ் வளர்த்தல், தமிழை நிலைபெறச்செய்தல், தமிழர் நலம் காத்தல். தமிழை வளர்க்கின்றீர்கள் இதுபோன்ற சிறந்த நிகழ்ச்சிகளால் என்று கூறினேன். அதே நேரம் வருங்கால சந்ததியினர் தமிழை கற்று தமிழ் மொழியை நிலைபெறச்செய்ய ஆவண செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். மூன்றாவதாக தமிழர் நலம் காத்தல் என்ற தலையங்கத்தின் கீழ் என்று உலகம் வாழ் தமிழ் மக்களிடையே மிகவும் பாதிக்கப்பட்டவர்களாக இலங்கையின் வடகிழக்கு மாகாண மக்கள் வாழ்கின்றார்கள் என்று கூறி அவர்களுக்கு உதவியளிக்க நீங்கள் யாவரும் முன்வரவேண்டும் என்றும், உசிதமான ஒரு தீர்வு உருவாக அகில உலக ரீதியில் தமிழ்மக்கள் அணிதிரள வேண்டும் என்றும் கூறிவைக்கின்றேன். நீங்கள் யாவரும் தமிழை வளர்க்கும் அதே நேரம் தமிழ் நிலைக்கவும், பாதிக்கப்பட்ட எம் தமிழ்மக்கள் நிலை மலரவும் உங்களால் ஆன உதவிகளை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டு என் சிற்றுரையை இத்துடன் முடிக்கின்றேன். நன்றி, வணக்கம்.


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இலங்கை வடமாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் உரை”

அதிகம் படித்தது