மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வணிக மேலாண்மை

பேரா. க .இளையராஜா

Aug 17, 2019

siragu vanigam1

பொருள் ஈட்டும் நோக்குடன் தன்னிடம் உள்ள மூலப்பொருட்களை வைத்து தொழில் செய்யும் முறைமையே வணிகமாகும் என்பர். சிறந்த வணிகத்திற்கான மேலாண்மை நடவடிக்கைகளை திருக்குறள் வழி ஒப்பிட்டறிவதே இக்கட்டுரையாகும்.

வரிச் கோண்ட்ஸ் என்ற அறிஞர் “மேலாண்மை என்பது நிருவனம் அல்லது அமைப்பின் இலக்குகளை அடைய மனித வளம், பொருள் வளம் மற்றும் நிதிவளம் ஆகியவற்றை சிறப்பாக பயன்படுத்தும் வழிமுறை” என்று வரையறுக்கிறார். மேலைநாடுகளில் மேலாண்மை என்ற துறை வளர்ச்சி பெற்று எறக்குறைய நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இந்நிலையில் வளரும் நாடுகளுக்கு இம்மேலாண்மை தத்துவங்கள் பரவி அவையும் அத்தத்துவங்கள் வழி நிற்க முயலுகின்றன. இவற்றோடு பழமையான மொழிகளில் இலக்கியங்களில் பழ மேலாண்மை கூறுகள் அமைந்து கிடைப்பதை இன்றைக்கு அறிய முடிகிறது. குறிப்பாக திருக்கயளில் பல்வேறு மேலாண்மைச் சிந்தனைகள் விரவிடக்கிடக்கின்றன.

மேரி பார்க்கர் ஃபாலட் (1868-1933), என்பவறே மேலாண்மை என்பதற்கான முதலாவது வரைவிலக்கணத்தை முன்வைத்தவராவர். இவரின் கருத்துப்படி மேலாண்மை என்பது “ஊழியர்களைக் கொண்டு செயல்களை ஆற்றுவிப்பது தொடர்பான செயற்பாடாகும்” இவரை தொடர்ந்து பலரும் மேலாண்மை என்ற சொல்லிற்கு பலவித வரை விலக்கணத்தினை அளித்துள்ளனர். இறுதியாக “மேலாண்மையாளர்கள் என்ன செய்கின்றாரோ அதுவே மேலாண்மை” என பொருட்கடுத்தியுள்ளனர். இவற்றுக்கு காரணம் நடப்புக் காலங்களில் மேலாண்மை வளர்ந்து வரும் ஒரு துறையாக இருப்பது மேலாண்மை என்பது செயல்படும் பணிகளுக்குத் தக்கவாறு வேறுபடுகிறது.
பொதுவாக நடைமுறையில் நிர்வாகமும் மேலாண்மையும் ஒரே கருத்தினில் புலங்கப்படுகின்றது, ஆயினும் நிர்வாகம் என்பது உண்மையில் மேலாண்மைக்குள் அடங்கும் ஒர் பணியாகும்.

மேலாண்மைக் கூறுகள்:-

1. திட்டமிடுதல்
2. மூலதனம்
3. தலைமை
4. கட்டுப்படுத்துதல்
5. ஒருங்கிணத்தல் போன்றவை மேலாண்மையின் கூறுகளாகும்.
திட்டமிடுதல்:-
எதிர்காலத் தேவைகளை கருதி சில குறிக்கோளகளை நிர்ணயித்து, அவற்றை அடைவதற்கான செயல்முறைகளே திட்டமிடல் எனப்படும். ஒரு தொழில் தொடங்கும் முன் அதனால் வரும் ஆதாயத்தையும் நஷ்டத்தையும் ஆராய்ந்தறிந்து தொடங்குவதே சரியான திட்டமிடுதல் ஆகும் இதை,
“அழிவதூஉம் ஆவாதூஉம் ஆகி வழிபயங்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்” (குறள்-461) என்ற

வள்ளுவரின் குறள் வழி அறிய முடிகின்றது. ஒரு நாட்டை நிர்வகிக்க தேவையான மேலாண்மை திறன்களாக வள்ளுவர் கூறியவற்றை வணிகத்தடன் ஒப்பிட்டறியலாம். அவ்வாறு, லாபத்தையும் நஷ்டத்தையும் ஆராய்ந்து தொடங்கிய பொழுதே அந்த வணிகத்தை வெற்றியுடன் செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும் மாறாக எதையும் ஆராயாது தொடங்கி அதனால் வரும் பிரச்சனைகளைப் பிறகு பார்த்தக் கொள்ளலாம் எனக் கலங்கி நிற்பது தவறு என்றும் (குறள்-467). பிறகு சரிசெய்ய பலர் வந்து நின்னாலும் அதனால் எந்தப் பயனும் ஏற்படாது என்றும் (குறள்-468). வணிகத் திட்டமிடுதலுக்காண இலக்கணத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தெளிந்து விளக்கியுள்ளார் வள்ளுவர்.
ஒரு தொழிலைத் தொடங்கும் முன் அதனால் வரும் தடைகள், அத்தடைகள் நீக்கினால் ஏற்படும் இலாபம், தொடங்கும் தொழிலின் முடிவு போன்ற அனைத்தையும் அறிந்து செய்ய வேண்டும் என்பதை,
“முடிவும் இடையூனும் முற்றியாங்கி எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்” (குறள்-676)

என்றும், யானையைக் கொண்டு யானையைப் பிடிப்பது போல் ஒரு செயலைக் கொண்டு மற்றொரு செயலை முடித்துக் கொள்ள வேண்டும் என்பதை,

“வினையால் வினையாக்கிக் கொடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று” (குறள்-678)

என்று பதிவுசெய்துள்ளார் வள்ளுவர்.
“காலம் பொன் போன்றது”
என்பது பழமொழி. காலத்தை தகுந்தமுறையில் பயன்படுத்துபவன் எவனோ அவனே ஆளும் தகுதி படைத்தவன் ஆவான்.
காலமறிந்து தொழில்தொடங்குபவன் உலகத்தை வெல்லும்
திறனாளன் ஆகிறான் என்பதையும (குறள்-484)
உலகையே தன் செயலால் (வணிகத்தால்) ஆள நினைப்பவன் காலம் பார்த்து அச்செயலை (அவ்வணிகத்தை) தொடங்க வேண்டும் என்பதையும் (குறள்-485)
நினைத்த தருணத்தில் தொழில் தொடங்குவது என்பது மூடர்களின் செயல் ஆகும். எத்தொழிலும் காலம் இடம் பார்த்து அமைத்தால்தான் அத் தொழில் சிறப்புடனும் வெற்றியுடனும் அமையும்.
பெறும் வணிகத்துடன் போட்டியிட முடியாத சிறு வணிகமாக இருந்தாலும் கூட தக்க இடத்தில் அவ்வணிகம் அமையுமானால் பெரும் வணிகத்தையும் வெல்லலாம். தகுந்த இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட எவ்வணிகமும் அதனினும் உயர்வாக உள்ள வணிக அமைப்பை உடைத்தெரிய முடியும்.
“கால் ஆழ் களரில் நரியாடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு” (குறள் – 500)

siragu-velinaattu-uravu2

மூலதனம்:-

ஒரு தொழில் தொடங்க முக்கியமான கருவியாக அமைவது மூலதனமாகும். தான் அளிக்கும் மூலதனத்திற்கு ஏற்ற இலாபம் சரியாக வரவில்லை என்றாலும் செலவு அதிகமாக வராத அளவுக்குப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

“ஆகாறு அளவிட்டியது ஆயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை” (குறள்-478)
அது மட்டுமல்லாது கொடுத்த மூலதனத்தின் அளவிற்க்கு ஏற்பதான் செலவுச் செய்ய வேண்டும்.
“ஆளவறிந்து செலவு செய்யாதவன் வாழ்க்கை (தொழில்)
இருப்பதுபோல் தோன்றி மறைந்துவிடும்” (குறள்-479)

தலைமை (அ) கட்டுபடுத்துதல்:-

தலைமை என்பது ஒரு பதவி அல்ல. அது ஒரு பொறுப்பு. ”இலக்கு நிர்ணயிக்க திட்டமிட ஒருங்கிணைக்க, ஊக்கம் தர, வழி நடத்த, கட்டுபடுத்த என்று ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து இருக்கும் இடங்களில் எல்லாம் தலைவர்கள் தேவைபப்படுவர”;. ஒரு தலைவனுக்கு அழகு வேலையைப் பிரித்தளித்தல், ஜனநாயகப் பண்புடன் இருத்தல் தனித்து முடிவு எடுத்தல் என்பனாவாகும்.

வணிக மேலாண்மையில் ஒருங்கிணைப்புத் திறன் பெற்றவராய் அதன் உரிமையாளர் செயல்பட வேண்டும். வலிமையான வீரர் பலர் இருந்தாலும் தலைவர் இல்லாப்படை நிலைக்காது என்பது வள்ளுவர் வாக்கு. (குறள்-770) தொழிலாளார்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து வேலைக்கு அமர்த்துவதும் தன்னுடைய அதிகாரத்தை அடுத்த நிலையில் உள்ளவர்க்கு அளித்து ஆணையிடுவது ஒரு வணிக தலைவனின் பணி ஆகும். வருவாயைப் பெருக்கி வணிகத்தை வளர்ப்பதற்கான தடைகளை ஆராய்ந்து அறிபவனாய் உள்ளவனே ஒரு சிறந்த வணிகத்தின் சிறந்த முதலாளி ஆவான்.

“வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை” (குறள்-512)
வணிக முதலாளி ஒருவரை வணிக மேற்பார்வையாளாராக நிர்ணயிக்கும் போது சிலவற்றை கவனிக்க வேண்டியது அவசியமானதாகும். நேர்மையானவனா? இவன் இத்தொழிலுக்கு ஏற்றவனா? என்றும் இச்செயலை இதனால் இவனால் மட்டும் தான் செய்ய இயலும் என பகுத்தாராய்ந்து அவனை பணி அமர்த்த வேண்டும் என்று

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாயிந்து
அதனை அவன்கண் விடல்”(குறள்-517)

அத்துடன் நில்லாது அவ்வுறுப்பினரை தினந்தோறும் தலைமை பொறுப்பில் இருப்பவர் மேற்பார்வை செய்ய வேண்டும். (குறள்-520) எனவும் நிறுவன பணி அமர்த்தும் முறைமையினை எடுத்தியம்புகிறது குறள்.

சுற்றத்தோடு கொடுத்துதவியும் இனிய மொழிபேசியும்
வாழ்பவனை அவன்சுற்றத்தார் சூழ்ந்திருப்பர் (குறள்-525)

அதைப்போல் தூண்களாய் இருக்கும் பணியாளர்களுக்கு அவர்களின் மணம் மகிழும் படி ஊதியம் கொடுப்பவனும் சினம் இல்லாதவனுமாகிய வணிக உரிமையாளரை பணியாளர்கள் சூழ்ந்திருப்பர். (குறள்:525-526).

தலைமை இடத்தில் இருக்கும் அரசன் இன்ன செயல் செய்ததால் அவர்கள் இத்தகுதியை உடையவர்கள் என முறையறிந்து பரிசு கொடுத்து அவர்களின் பாராட்டுதலைப் பொறுவான். (குறள்-528) அதே போல் பணியாளர்களின் உழைப்பிற்கேற்ப ஊதியம் கொடுக்க வேண்டும். தவறு செய்யும் பணியாளர்களைத் தண்டிக்கும் பொழுது அதிகம் தண்டிப்பது போல் காட்டி அளவுடன் தண்டிக்க வேண்டும் (குறள்-562)
மற்றவரின் வணிகச் சிறப்பினை அறிந்து வர ஒற்றன் ஒருவரை அனுப்பி அவனுக்கே தெரியாமல் அவன் கூறிய செய்திகள் அனைத்தும் சரியா என மற்ற ஒற்றனை அனுப்பி ஆராயந்து தொழில் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டும். (குறள்-588)

மற்ற வணிகர்களின் வணிக நுட்பத்தை அறிந்து வர ஒற்றன்கள் மூவரை அனுப்ப வேண்டும் தனித்தனியாக அனுப்பிய மூவரும் ஒரே போல் செய்தியறிந்து கூறினால் மட்டுமே அதை சரி என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். (குறள்-)

விளம்பரம்:-

வணிக பொருட்களை விற்க விளம்பரம் முக்கியமானதாகும். கேட்பவரை கவரக்கூடியதாகவும் கேளாதவரை கேட்கத் தூண்டும் வகையிலும் வணிக தொடர்பான விளம்பரம் அமைய வேண்டும்.(குறள்-643)
சொல்வண்மை மிக்க விளம்பரங்ளை இவ்வுலகம் ஏற்கும் பார்க்கும்.(குறள்-648)

முடிவுரை:-

வணிக மேலாண்மை செயல்முறைகளை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எடுத்தியம்பி பழந்தமிழரின் நிர்வாக அறிவினை வெளிப்படுத்தி நிற்கிறது தமிழ் செம்மொழி இலக்கியமான திருக்குறள்.


பேரா. க .இளையராஜா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வணிக மேலாண்மை”

அதிகம் படித்தது