மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வரலாற்றுச் சிறப்பு மிக்க “அமெரிக்க நெடுஞ்சாலை 66″

தேமொழி

Jun 25, 2022

siragu America-route-66

அமெரிக்க நாட்டின் கிழக்குப் பகுதியின் வடக்கில் உள்ள சிகாகோ நகரையும், நாட்டின் தென் மேற்கில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரையும் இணைக்கும் வகையில், நாட்டின் ஒரு கோடியிலிருந்து மறுகோடிக்குத் தென்மேற்காகச் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட புகழ் வாய்ந்த அமெரிக்க நெடுஞ்சாலை “ரூட் 66″(“Route 66”) என்று அறியப்படும். அமெரிக்க நெடுஞ்சாலை 66 சுமார் 2500 மைல்கள் நீளம் கொண்டது. இந்த நெடுஞ்சாலை இலினாய்ஸ் (300 மைல்கள்)→ மிசௌரி(317மை.)→ கன்சாஸ்(14மை.)→ ஓக்லஹோமா(400மை.)→ டெக்சாஸ்(185மை.)→ நியூ மெக்சிகோ(535மை.)→ அரிசோனா(350மை.)→ கலிபோர்னியா(345 மைல்கள்), என எட்டு மாநிலங்களின் வழியாகச் செல்லும் நெடுஞ்சாலை. தற்பொழுது சற்றொப்ப 100 ஆண்டு என்ற எல்லையை எட்டவிருக்கும் இந்த நெடுஞ்சாலையின் மீதும், அதன் வரலாற்றின் மீதும் அமெரிக்கர்களுக்கு என்றுமே தனி ஆர்வமும் அன்பும் உண்டு. இதை அண்மையிலும் கவனிக்க நேர்ந்தது.

சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில், 1926 ஆண்டு நவம்பர் 11 அன்று இந்த நெடுஞ்சாலை கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் அதற்கான திட்டத்தின் முன்மொழிதலோ அதற்கும் முன்னரே, 1926 ஆண்டு ஏப்ரல் 29 அன்று எடுக்கப்பட்டது. இந்த நாளை நினைவுகூர்ந்து சிறப்பிக்கும் வகையில், 96 ஆண்டுகள் கழித்து ஏப்ரல் 29, 2022 அன்று கூகுள் நிறுவனம் கூகுள் டூடுல் படம் (https://www.google.com/doodles/celebrating-route-66) ஒன்றையும், காணொளிப்படம் (https://youtu.be/ZoPJVcHYlU0) ஒன்றையும் வெளியிட்டது.  இந்தப் படம் நெடுஞ்சாலை 66இன் வழியே பயணம் செய்வது போல அமைக்கப்பட்டிருந்தது. இந்த சாலையின் ஆதி காலத்து உணவகங்கள், தங்கும் விடுதிகள், பெட்ரோல் பங்குகள், திறந்தவெளி திரையரங்கங்கள், பளீர் என்று ஒளிரும் நியான் ஒளி விளக்குகள் கொண்ட அறிவிப்புகள், ரோடியோ வீர விளையாட்டு, மலைப்பாங்கான பாதை, கொடுமையான வெயில் கொண்ட அரிசோனா மாநிலத்துப் பாலைவனம் போன்ற வழிப்பயணத்தில் காணக்கூடிய பலவற்றைப் படங்களாக இணைத்து, அக்கால கார் ஒன்றின் வானொலியில் பாடல் கேட்டுக் கொண்டே பயணிப்பது போல காணொளி அமைந்திருந்தது.

அவ்வாறு வானொலியில் இசைக்கப்படுவதாக இணைக்கப்பட்டிருந்த பாடல், அக்காலத்தில் புகழ் பெற்ற ‘இஃப் யூ எவர் பிளான் டு மோட்டார் வெஸ்ட்’ (If you ever plan to motor west) என்ற நெடுஞ்சாலை 66இன் புகழ் பாடும் ஒரு பாடல்.  நீங்கள் சிகாகோவில் இருந்து கலிபோர்னியாவிற்கு மேற்கே காரில் பயணம் செய்வது என்றால் நெடுஞ்சாலை 66இன் இந்த சிறப்புகளைத் தவற விடாதீர்கள் என்ற பொருள் படும் பாடல் அது. இப்பாடலை எழுதிப் பாடிய பாடகர் ‘பாபி டுருப்’ (Bobby Troup- https://youtu.be/kLUYf6cekMA) என்பவர். இந்த காணொளிப் படத்தைக் கூகுள் தளத்தில் வெளியிட்ட அன்று அமெரிக்கா, மெக்சிகோ, அர்ஜெண்டினா, இங்கிலாந்து மேலும் சில ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர் என்று ஒரு சில நாட்டினரே அன்று பார்த்திருக்க இயலும். உலகம் முழுவதும் உள்ளவர்களைச் சென்றடையும் வண்ணம் இந்த டூடுல் படம் கூகுளால் பரவலாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.siragu Route 66-2

ஆனால், காணொளி வெளியிட்ட சில மணி நேரங்களில் அதைப் பார்த்தவர் எண்ணிக்கை மளமளவென்று எகிறியது. சில மணி நேரங்களுக்கு ஒருமுறை இப்பொழுது எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று ஆவலுடன் பின்தொடர வைத்தது. வெளியிடப்பட்ட 18 மணி நேரத்தில் 2.5 மில்லியன் முறை இந்தக் காணொளி பார்க்கப்பட்டுவிட்டது. ஆனால் கெடு வாய்ப்பாக கூகுள் நிறுவனம் காணொளி பார்க்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டுவதை நிறுத்திவிட்டு டிரெண்ட்டிங் வீடியோ (#1 ON TRENDING) என்று அறிவித்து விட்டது. இன்றுவரை இக் காணொளிப் பார்வை எண்ணிக்கையை அறிய இயலவில்லை என்பது ஒரு குறையே.

இக் காணொளிப் பார்வை எண்ணிக்கையே மக்கள் இந்த வரலாற்றுப் புகழ் மிக்க நெடுஞ்சாலையின் மீது கொண்ட ஆர்வத்தைக் காட்டுவதன் சான்றாகக் கொள்ளலாம். ஆனால் இந்த நெடுஞ்சாலை உருவாக்கப்பட்ட காலத்தை ஒப்பிட்டால் இது நாட்டின் பழமையான சாலையோ அல்லது நீளம் அதிகமான சாலை என்றோ சொல்வதற்கில்லை. அது மண்சாலைகள் மறைந்து தார்ச் சாலைகளான நெடுஞ்சாலைகள் வழக்கத்திற்கு வந்த காலம். முன்னரே துண்டு துண்டாகப் பல ஊர்களை இணைத்துப் புழக்கத்திலிருந்த சாலைகளை நீண்ட தொடராக இணைத்து உருவாக்கப்பட்ட சாலைதான் இது. எந்த தட்பவெப்ப நிலையிலும் பயணம் செய்ய ஏற்ற சாலையாக இருந்ததும், வேளாண்மையை முதலிடமாகக் கொண்டிருந்த பல சிறிய ஊரகப் பகுதிகளைப் பெரு நகரங்களுடன் இணைத்ததும் இச்சாலையின் சிறப்பு. பயணத்தில் 200 மைல்களைக் குறைக்கும் விதமாக விரைவில் செல்லுமிடத்தை அடைய உதவிய சாலையாக அமைந்தது. ஆனால் இதற்கு மாறாக, இன்றைய புதிய நெடுஞ்சாலைகளோ விரைவு கருதி, பெருநகர நெரிசல்களையும் தவிர்த்து, இடையில் உள்ள சிற்றூர்களையும் தவிர்த்து புறவழிச் சாலைகளைக் கொண்ட விரைவு நெடுஞ்சாலைகளாக உருமாறிவிட்டன.

siragu Route 66-1அமெரிக்காவில் கார்கள் உற்பத்தி பெருகி, சாதாரண மக்களும் நெடிய கார் பயணங்கள் செய்ய முடியும் என்று போக்குவரத்தில் புரட்சியான திருப்பம் ஏற்பட்ட காலத்தில் உருவான ஒரு சாலை நெடுஞ்சாலை 66. அமெரிக்க வாழ்வின் பயணப் பண்பாட்டு மாறுதல்களின் முக்கிய திருப்பத்தில் தோற்றுவிக்கப்பட்ட இப்பாதை, அமெரிக்கர்கள் வாழ்விலும் பல பொருளாதார மாற்றங்களுக்கும் வளர்ச்சிக்கும் காரணமாகவும் அமைந்தது. சாலையோர விளம்பரங்கள் முறையை வளர்ச்சிபெறச் செய்தது. வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்ட அமெரிக்காவின் நடுப்பகுதி மாநிலங்களில் 1930களில் பஞ்சம் ஏற்பட்ட பொழுது, 200,000க்கும் மேற்பட்ட மக்கள் பஞ்சம் பிழைக்க வேலைதேடி கலிபோர்னியாவை நோக்கி இச்சாலை வழியே பயணித்தார்கள். அதனால் இது மதர் ரோட் (Mother Road) என்றும் குறிப்பிடப்பட்டது. ‘வில் ராஜர்ஸ் ஹைவே’ என்றும் ‘மெயின் ஸ்ட்ரீட் ஆஃப் அமெரிக்கா’ (Will Rogers Highway &the Main Street of America) என்ற பெயர்களும் இந்த அமெரிக்க நெடுஞ்சாலை 66க்கு உண்டு.

ஏறக்குறைய 60 ஆண்டுகள் பலர் பயணிக்கும் சாலையாகவே இது அமைந்தது. ஆனால், பெரிய சரக்கு ஊர்திகளும், எண்ணிக்கையில் அதிகரித்துவிட்ட ஊர்திகளின் போக்குவரத்திற்கும் ஆரம்பக் காலத்தில் குறுகியதாக அமைக்கப்பட்டிருந்த இந்த சாலையால் ஈடு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.  ஆகவே, 1985க்குப் பிறகு பழமையடைந்த இச்சாலையைச் செப்பனிடுவது கைவிடப்பட்டு, சாலையின் பகுதிகள் ஆங்காங்கே புதியதாக உருவாக்கப்பட்ட ‘நெடுஞ்சாலை 40′ டன் இணைக்கப்பட்டது. பழைய சாலையின் சில பகுதிகள் இப்பொழுது ஓடும் பெரிய நெடுஞ்சாலைக்கு இணையாகப் பல இடங்களில் காணப்படுகிறது.  சாலை புதிது என்றாலும் பயணம் போகும் பாதை என்னவோ அதே பழைய பாதைதான். ஓக்லஹோமா மாநிலம் போன்ற ஒரு சில இடங்களிலேயே ஆரம்பக் கால சாலையாக மாறாமல் அமைந்திருக்கிறது. இவற்றில் பயணிப்பவர்களுக்காக ஏற்பட்டிருந்த தங்கும் விடுதிகளும் உணவு விடுதிகளும் கூட சாலை கைவிடப்பட்டு நெடுஞ்சாலையுடன் இணைந்துவிட்ட பொழுது சேவையையும் வணிகத்தையும் இழந்து வருமானம் இன்றி மூடப்பட்டன.

siragu Route 66

சாலையின் வரலாற்று முக்கியத்துவம் கருதி இதைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வமும் வரலாற்று ஆர்வலர்கள் சிலரிடம் உண்டு. ஓக்லஹோமா மாநிலத்தில் இச்சாலை குறித்த அருங்காட்சியகம் ஒன்று இருக்கிறது. அமெரிக்க அரசு சட்டம் ஏற்படுத்தி இச்சாலையைக் கடந்த கால அமெரிக்காவின் பண்பாட்டு அறிகுறியாகவும், வரலாற்றுச் சிறப்பு கொண்ட சாலையாகவும் அறிவித்தது. இந்த நெடுஞ்சாலை கைவிடப்பட்ட காரணத்தால், இன்று தனிப்பட்ட ஓரிரு சிறப்பு வரைபடங்கள் தவிர பொதுவான வரைபடங்களில் இந்த நெடுஞ்சாலை வழி காட்டப்படுவதில்லை.

நெடுஞ்சாலை 66ஐ அடிப்படையாக வைத்து திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், பாடல்கள், புதினங்கள், ஆடை அணிகலன்கள் எல்லாம் உருவாக்கப்பட்டன. தொடக்கக் காலத்தில், 1926 இல் சாலைக்கு 66 என்ற எண் கொடுக்கப்பட்டு மறு ஆண்டு 66 எண் பொறிக்கப்பட்ட கேடய வடிவ நெடுஞ்சாலை அறிவிப்புப் பலகைகள் வழி நெடுகிலும் வைக்கப்பட்டன. அந்த ஆண்டு ஓக்லஹோமாவில் துவங்கப்பட்ட எண்ணெய் நிறுவனம் அதே அறிவிப்புப் பலகை போலத் தனது நிறுவனத்தின் முத்திரையை அமைத்துக் கொண்டு ‘பிலிப்ஸ் 66′ (Phillips Petroleum Company) என்று பெயர் சூட்டிக் கொண்டது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஓக்லஹோமாவில் இருந்து எங்கள் குடும்பம் கலிபோர்னியாவிற்குக் குடிபெயர்ந்த பொழுது, நெடுஞ்சாலை 66இன்  66% (1615 மைல்கள்)ஐக் கடக்கும் வகையில் இதே வழியில் அமைந்தது. எங்கள் பயணம் ஒரு சில இடங்களில் அமெரிக்க நெடுஞ்சாலை 66லோ அல்லது அதற்கு இணையாக அமைக்கப்பட்ட புதிய நெடுஞ்சாலை 40லோ பயணிப்பதாக இருந்தது. இது என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு பயணம், குறிப்பாக, நியூ மெக்சிகோ மாநிலத்தில்  7,000 அடிக்கு மேலான உயரம் கொண்ட மலைப்பாங்கான பகுதியில் மினிவேனை ஓட்டிய வண்ணம் குடும்பத்துடன் பயணித்தது நினைவில் பசுமை மாறாமல் உள்ளது.

மேலும் தகவல் பெற உதவக்கூடிய தளங்கள்:

[1] History and Significance of US Route 66 – https://ncptt.nps.gov/rt66/history-and-significance-of-us-route-66/

[2] Towns along Route 66 – https://www.theroute-66.com/towns.html

[3] Guide to Planning a Route 66 Road Trip -https://independenttravelcats.com/guide-planning-a-route-66-road-trip/

 


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வரலாற்றுச் சிறப்பு மிக்க “அமெரிக்க நெடுஞ்சாலை 66″”

அதிகம் படித்தது