விசித்திர வழக்குகள் பகுதி 3
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழிFeb 26, 2022
பொதுவாகப் பிரபலங்களைப் போல இருந்தால் நம் ஊரில் மகிழ்ச்சிப் பொங்க “நான் இந்த நடிகரைப் போல இருக்கேன்னு என் நண்பர்கள் கூறினார்கள், “இந்தத் தொடரில் வரும் கதாநாயகி போல என் கண்கள் இருக்குன்னு தோழர்கள் சொன்னார்கள்” எனப் பெருமையோடு திரிகின்றவர்களைப் பார்த்திருப்போம்.
ஆனால் விசித்திரமாக 2006இல் அமெரிக்காவில் வாழும் ஆலன் ரே ஹேக்கர்ட் (Allen Ray Heckard) புகழ்பெற்ற ஆப்பிரிக்க அமெரிக்கக் கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டான் (Michael Jordan) போல தான் இருப்பதாகத் தன்னைப் பார்ப்போர் கூறுவது தன்னைப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது என்று கூறி நீதிமன்றத்தை அணுகினார்.
தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம், அவமானத்திற்கு இழப்பீடு மைக்கேல் வழங்க வேண்டும் என்றார்.
அவரைப் பிரபலப்படுத்திய நைக்கின் நிறுவனர் பிஃல் என்பவர் மீதும் வழக்குப் பதிந்து மைக்கேலைப் பிரபலப்படுத்தியதால் தான் பாதிக்கப்பட்டதாகவும் அதற்கான இழப்பீடும் கேட்டார். அவர் கேட்ட இழப்பீட்டுத் தொகை 800 மில்லியன் டாலர்கள்.
இத்தனைக்கும் ஆலன் மைக்கேலை விட எட்டு வயது மூத்தவர், 30 பவுண்டுகள் எடைக் குறைவானவர், ஆறு இஞ்சுகள் உயரம் குறைவானவர்.
இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள், இருவருமே ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், இருவருமே மொட்டையடித்திருந்தனர், ஒற்றைக் காதில் கம்மல் அணிந்திருந்தனர்.
மைக்கேலை நைக் பிரபலப்படுத்தியதால், தன்னுடைய வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, தன்னைத் தனக்காக மக்கள் அடையாளப்படுத்த வேண்டும். மைக்கேலுக்காக அடையாளப்படுத்துவது தன்னைக் காயப்படுத்துகிறது என்று அவர் கருதினார். 15 வருடங்களாக தான் நிம்மதி இழந்துவிட்டதாக நீதிமன்றத்தில் கூறினார்.
தன் வயதை ஏழால் பெருக்கி இழப்பீட்டுத் தொகை கேட்டதாகக் கூறினார். இறுதியில் வழக்கைக் காரணம் கூறாமல் பெற்றுக் கொண்டார். நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கிய குற்றத்திற்காகத் தான் பணம் கொடுக்க நேரிடும் என்று அறிந்ததால் வழக்குத் திரும்பப் பெறப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “விசித்திர வழக்குகள் பகுதி 3”