மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விசித்திர வழக்குகள் – பகுதி 1

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jan 15, 2022

Sirgu siddur decison1
“இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது.” எனப் பராசக்தியில் கலைஞரின் வசனம் கேட்டிருப்போம், அதுபோன்றதொரு விசித்திர வழக்கைப் பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

அந்த வழக்கு “The Hot Coffee Case” என அறியப்படுகிறது. 79 வயதான மூதாட்டி Stella Liebeckஐ கோட்டீஸ்வரராக மாற்றியது இந்த வழக்கு. உணவுச் சங்கிலி நிறுவனம் Mc Donald’s மீது தொடக்கப்பட்ட வழக்கு இது. மூதாட்டி 1992 ஆம் ஆண்டு அவர் பெயரனோடு Mc Donald’s சென்றார். அங்கே drive -through வில் சூடான காபி வாங்குகிறார். அன்றைய 1989 Ford Probe இல் காபி கப்பை வைக்க இன்றிருப்பது போன்ற ஏந்தும் பலகை கிடையாது. அதனால் முட்டிகளின் நடுவில் பிடித்துக்கொண்டு கிரீமும் சர்க்கரையும் சேர்க்க முயன்றார். அப்போது காபி அவர் தொடைமீது கொட்டியது. அவர் பருத்தி முழுக்கால் சட்டை அணிந்திருந்ததால் உடனே காபியை உறிஞ்சி அவருக்கு third-degree காயம் ஏற்பட்டது.

உடலின் மற்ற பகுதியிலிருக்கும் சதையெடுத்து தொடைப்பகுதியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பல முறை மருத்துவமனை சென்று சிகிச்சையெடுத்ததில் அவரின் செலவுத்தொகை $ 20,000. இதனை மூதாட்டியின் மகள் Mc Donald’s இழப்பீடாக வழங்கவேண்டும் என நிறுவனத்திடம் கூற, நிறுவனம் அளித்ததோ வெறும் $800 வெள்ளிகள். எனவே வழக்கறிஞர் ரீட் மார்கனிடம் சென்றனர்.

மார்கன் மருத்துவர் டில்லர் என்பவரின் ஆலோசனையைப் பெற்று வழக்கைப் பதிவு செய்தார். திரவ நிலையில் உள்ளவை 180-190 டிகிரியில் இருப்பின் 2-7 நொடிகளில் third-degree burns ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் அந்த டிகிரி வெப்பத்தில்தான் காபியின் சுவைக்காக கொடுக்கப்படுகிறது என்பதையும் நிரூபித்தார். ஒருவேளை 155 டிகிரியில் காபி வழங்கினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என வாதாடப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் இதே போன்ற புகார்களை அந்த நிறுவனம் வருடந்தோறும் சந்திக்கிறது, 1982-1992 வரை 700 புகார்களை அந்த நிறுவனம் கையாண்டு $500,000 இழப்பீடாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி உள்ளது எனவும் கண்டறியப்பட்டது.

ஏற்கனவே 700 புகார்களைக் கண்ட நிறுவனத்திற்கு இந்த வெப்பநிலையில் கொடுக்கப்படும் காபியால் விளையும் விபத்துகள் தெரியும் என்றபோதும் வெப்பநிலையைக் குறைத்துக் கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே 80% நிறுவனமே இந்த விபத்திற்குப் பொறுப்பு என்று மூதாட்டிக்கு $ 200,000 இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது என்றபோதும் 20% தவறு மூதாட்டியின் கவனக்குறைவும் இருப்பதால் இழப்பீட்டுத்தொகையை $ 160,000 என அறிவித்தது. மேலும் $ 2.7 மில்லியன் தண்டனை இழப்பீடாகவும் (. அபராதம்) வழங்க உத்தரவிட்டது. இது அந்த நிறுவனத்தின் இரண்டு நாள் வருமானம்.

அபராதம் மூலமாக நுகர்வோர் பாதிக்கப்படும்போது அந்த நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பது உறுதிசெய்யப்படும்.

இந்த வழக்கு பிறகு நீதிமன்றம் வெளியே முடிவுற்றது எனினும் மூதாட்டி பெற்ற சரியான தொகை அறியப்படவில்லை.

இந்த வழக்கிற்குப் பிறகு இதுபோன்ற கவனக்குறைவால் நடைபெறும் விபத்துகளில் நுகர்வோர் உரிமையியல் நீதிமன்றத்தில் வெற்றி பெறுவது சிரமமானது. இந்த வழக்கு “the poster child of excessive lawsuits” என ABC News இல் 1990ஆம் ஆண்டு ஒளிபரப்பபட்டது.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விசித்திர வழக்குகள் – பகுதி 1”

அதிகம் படித்தது