மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வீதி நாடக கலைக்கடலில் எனது ஒரு துளி அனுபவம்

சித்திர சேனன்

May 30, 2015

veethi naadagam5முத்தமிழின் ஒரு பகுதியான நாடகத்திற்கென்று ஒரு தனித்துவம் என்றும் உண்டு. பாட்டு, இசை, நடிப்பு என மூன்றும் கலந்த வடிவமே நாடகம். சங்ககாலம் முதல் பாணர், கூத்தர், விறலியர் என நாடக வரலாறு நம் தமிழ் சமூகத்திற்கு உண்டு என்றாலும், மேடையில் திரை வருதல், விலகுதல், ஒப்பனை, ஒலி-ஒளி வடிவம் அமைத்தல் போன்ற வடிவங்களை பார்சி இனத்தவரிடமிருந்து நாம் கற்றுக் கொண்டோம் என்பது வரலாறு.

இதன் அடிப்படையில் தமிழகத்தில் சங்கரதாசு சுவாமிகள், T.K.சண்முகம் போன்ற பல நாடக வல்லுனர்கள் மேலும் நம் நாடகக் கலையை மெருகூட்டினர். ஒரு நாடகம் நிகழ்த்த மேடை, உடை, ஒப்பனை, ஒலி, ஒளி என பல்வேறு உபகரணங்கள் தேவைப்பட்டன. இதெல்லாம் பெற்ற ஒரு குழுவே நாடகக்குழு என அங்கீகரிக்கப்பட்டது. இவைகள் ஏதும் இல்லாமலே மக்களிடத்தில் ஒரு நாடகத்தை நிகழ்த்த முடியும் என்ற ஒரு புதுக் கொள்கையை வகுத்தவரே பாதல் சர்க்கார். வங்காளத்தைச் சேர்ந்த இவர் வீதி நாடகம் என்ற புது நாடக யுக்தி ஒன்றை உருவாக்கினார்.

வீதி நாடக தன்மைகள்:

veethi naadagam2

• ஒப்பனை இல்லை.
• தெரு, சாலை, சந்து, மக்கள் கூடும் பொது இடங்களே மேடை.
• ஒளி, ஒலி இல்லை.
• மனித உடல்களே நாடகக் காட்சி உபகரணங்களாக மாறும் தன்மை.

எ.கா.1:

எடுத்துக்காட்டாக நாடகக் காட்சியில் ஒரு பானை தேவை என்றால், ஒருவர் தரையில் குத்தவைத்த முறையில் அமர்ந்து தன் இரு கைகளையும் கொண்டு கால் இரண்டை அணைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இவரின் உடல் பானை போல் இருக்கும். தலையே பானையின் மூடியாக இருக்கும். தலை கவிழ்ந்தால் பானை மூடியது எனப்பொருள். நிமிர்ந்தால் பானை மூடி திறக்கப்பட்டது எனப்பொருள்.

எ.கா.2:

ஒரு மருத்துவரை நாடக காட்சியில் காண்பிக்க வேண்டும் என்றால், நடிகரின் தோலில் உள்ள துண்டின் ஒரு பகுதியை கழுத்தில் கட்டிக்கொண்டு, மறு பகுதியின் இறுதியில் ஒரு முடிச்சு போட்டால் அது (ஸ்டெதாஸ் கோப்) நாடிமானியாகி விடும்.

எ.கா.3:

வீடு ஒன்றை காட்சியில் காட்ட வேண்டும் என்றால், பார்வையாளர்களைப் பார்த்து இருவர் நேராக நின்றுவிட்டு இவ்விருவரின் கைகளை கோபுரம் போல் மேலே உயர்த்தி தொட்டு நின்றால் போதும் அது வீடாகி விடும்.

எ.கா.4:

கிணற்றை காட்சியில் காட்ட வேண்டும் என்றால், 6 அல்லது 7 பேர் தரையில் குத்தவைத்த முறையில் வட்டமாக அமர்ந்து அனைவரின் கைகளை பிடித்துக் கொண்டால் அது கிணறாகிவிடும்.

எ.கா.5:

வயலுக்கு மருந்தடிக்கும் மோட்டாரைக் காட்ட வேண்டும் என்றால், ஒருவரின் முதுகில் மற்றொருவர் ஏறிக் கொண்டு பின் ஏறியவரின் வலது கால் நீட்டிய படியும், இடதுகால் நிற்பவரின் வயிற்றிலும் இருக்கும் படி செய்த பின் நிற்பவரின் அந்த நீட்டிய வலதுகாலைப் பிடித்து வாயில் டூர்…ர்…ர்…ர் என சத்தமிட்டபடி நடந்தால் அது மருந்தடிக்கும் காட்சியை மக்களுக்கு தெளிவுபடுத்தி விடும்.

இந்த முறையில் நாடகக் காட்சிக்குத் தேவையான உபகரணங்களை, மனித உடல்களைக் கொண்டு மக்களுக்கு செய்து காட்டி நாடகத்தில் ஒரு புதுப்புரட்சியை ஏற்படுத்தியவர் பாதல் சர்க்கார். இந்த வீதி நாடகக் கலையானது இன்று உலகமெங்கும் பரவி மக்களின் நாடக ரசனையை மேலும் தூண்டியுள்ளது என்பதே உண்மை.

இதை எல்லாம் நான் ஏன் உங்களுக்குக் கூறுகிறேன் என்றால், 14 வருடமாக நானும் வீதி நாடகக் கலைஞனாக தமிழகம் முதல் வட மாநிலங்கள் வரை சென்று வந்து கலைப் பணியாற்றி வருகிறேன். மதுரை மாவட்டம் – உசிலம்பட்டி பகுதியில் வசிக்கும் நான் சிறு வயதில் கண்ட வள்ளித் திருமணம், அரிச்சந்திர மயான கண்டம், வீரபாண்டிய கட்டபொம்மன், சத்தியவான் சாவித்திரி ஆகிய நாடகங்களைக் கண்டு களித்தாலும் எனது தாத்தாவான தேவர் புகழ் பாடகர் மொக்கையன் (Ex M.L.A) என்பவர் மேற்கண்ட நாடகங்களின் முக்கிய கதாபாத்திரங்களை நடித்த நாடக கலைஞன், பாடகர் என்பதாலும் எனக்கும் இந்த பாட்டு, நாடகக் கலை மீது ஒரு தனியாத மோகம் ஏற்பட்டதின் விளைவே இக்கட்டுரை எழுதக் காரணம்.

இந்த இடத்தில் எனது தாத்தாவைப் பற்றி சிறு குறிப்பு ஒன்றை கூறிவிட்டு, எனது வீதி நாடக அனுபவத்தைப் பகிரலாம் என நினைக்கிறேன். காரணம் வரலாற்றில் இடம் பெறாத செய்தி இது. 1965-ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மதுரையில் நிகழ்த்திய மாநாட்டின் தொடக்கத்தில், என் தாத்தா மொக்கையன் தேவரைப் புகழ்ந்து பாடிய பின் மேடை ஏறிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கூறியதாவது, மொக்கையன் பாடிய இந்தப் பாடலுக்கு நிகராக எனது தோலை செருப்பாகத் தைத்துப் போட வேண்டும் என பெருமிதத்துடன் தேவர் கூறியதைக் கேட்டு கண்ணீர் மல்க நின்றவர் என் தாத்தா.

அது மட்டுமா, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக ராஜபாளையம், ஒட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்ற என் தாத்தா முதன் முறையாக தமிழக சட்டசபைக்குள் சென்றும், அங்கு இருக்கும் அனைத்துத் தலைவர்களின் படத்தையும் பார்த்துவிட்டு, அதில் தேவர் படம் இல்லையே எனக் கண்டதும் கொதித்து கூட்ட சபையிலேயே பாடினார், “தேவர் எங்கே என் தேவர் எங்கே” என்று.

இப்பாடலைக் கேட்ட முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் சட்டசபைக் கூட்டம் முடிந்ததும் தேவரின் புகைப்படத்தை சட்டசபையில் மாட்ட உத்தரவிட்டார் என்றால் அது மிகையாகாது. இவ்வாறு இன்னும் பல செய்திகள் இருந்தாலும், என் தாத்தா எந்த நேரம் எனக்கு சித்திரசேனன் என்ற பெயரிட்டாரோ அன்று முதலே கலைத்தாயின் வாரிசாகவே வளர்ந்திருக்கிறேன்.

வீதி நாடகத்தில் எனது அனுபவம்:

veethi naadagam4திசைகள் கலைக்குழு கருமாத்தூர் ரோஸ் முகிலன், அருட்சகோதரி கிளேயர், விக்ரம் தர்மா (மறைவு), தியேட்டர் லேப் சென்னை ஜெயராவ், வெளிரங்கராஜன், மரப்பாச்சி நாடகக்குழு- மங்கை, கட்டியக்காரி நாடகக் குழு -ஸ்ரீஜித், கூத்துப்பட்டறை(சென்னை) – சந்திரா ஆகியோரிடமிருந்து வீதிநாடகம், நடிப்பு, சிலம்பம், மூச்சுப்பயிற்சி, யோகா, நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம் எனப் பல்வேறு கலைகளைக் கற்றுக் கொண்டேன். இதில் பாடலுக்கு மட்டும் எனக்கு நானே குரு. வீதி நாடகத்திற்கும், திரைப்படத்திற்கும் பெரிய வித்தியாசத்தை நான் நாடக நடிகனாக இருந்த போது உணர்ந்தேன்.

  • வீதி நாடகத்தில் வசனம் பேசி நடிக்கும் போது வசனம் மறந்தால் ரீடேக் இல்லை. ஆனால் படத்திற்கு உண்டு.
  • திரையில் நடிகர்களைப் பார்ப்பவர்களுக்கு அது வெறும் பிம்பம் மட்டுமே. ஆனால் ரத்தமும் சதையுமாக பார்வையாளர்களிடமிருந்து நாங்கள் அழுது நடித்தால் அழுவார்கள், சிரித்தால் சிரிப்பார்கள். இந்த நேரிடை உணர்வு திரைப்படத்தில் இல்லை.
  • நாடகத்தில் வரும் சில காட்சிகளை நாங்கள் மக்களுக்குள் ஒருவராக இருந்து வந்து நடிப்போம் எனும் போது அது மக்களை வெகுவாகக் கவர்ந்தது.
  • வீதி நாடகத்தில் 1999-ஆம் வருடம் சூன் மாதம் மதுரையில் எங்கள் திசைகள் கலைக்குழுவினர் தொடர்ச்சியாக 57 ½ மணி நேரம் வீதி நாடகத்தை தூங்காமல் நடித்து கின்னஸ் சாதனை படைத்தோம். எனக்கும் அந்த கின்னஸ் சான்றிதழ் வந்தது. இந்த 57 ½ மணி நேரம் தூங்காமல் நடிக்க நாங்கள் பட்டபாடு சொல்லி மாளாது. தூக்கம் இரவு 1 முதல் 4 மணிக்கு வரும் அப்போது குண்டூசியை உடலில் குத்திக் கொள்வோம், அரிக்கும் செந்தட்டி என்ற காயை உடலில் தேய்த்து தூக்கத்தை துரத்துவோம். இறந்தால் நடித்தபடியே இறந்துவிட வேண்டுமென்ற வைராக்கியத்திற்கு கிடைத்த பரிசே இந்த கின்னஸ் சான்றிதழ். இந்த கின்னஸ் சாதனை நிகழ்வை இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் எங்களுக்கு பொன்னாடை போர்த்தி முடித்து வைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தோம்.

எனவே வீதி நாடகத்தின் தந்தை எனப் போற்றப்படும் பாதல் சர்க்கார் அவர்களின் கலை வாரிசாக நான் மட்டுமல்லாது என்னைப் போல ஆயிரக்கணக்கான வீதி நாடக நடிகர்கள் இன்று தமிழகத்தில் உள்ள வீதி, தெருக்கள் தோறும் இந்த நாடகக் கலையை நிகழ்த்தி மக்களிடையே பெரும் விழிப்புணர்வு ஊட்டி வருகிறார்கள். ஆகவே கலைஞர்கள் அழியலாம், இந்தக் கலைக்கு என்றும் அழிவில்லை என்பதை அனைவரும் அறிந்ததோடு மட்டுமல்லாது கவலை கொள்ளும் நெஞ்சத்திற்கு கலை காயம் ஆற்றும் களிம்பாக இருந்து வருகிறது. ஆதலால் கவலையை கலை வசம் விடுங்கள், என்றும் கலகலப்பாய் இருங்கள்.


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வீதி நாடக கலைக்கடலில் எனது ஒரு துளி அனுபவம்”

அதிகம் படித்தது