மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம்

தேமொழி

Sep 3, 2022

Siragu rani-velu-nachiyar

இந்தியாவின் 75-வது சுதந்திரதின அமுதப் பெருவிழாவைச் சிறப்பிக்கும் வகையில், ஆகஸ்ட் 13, 2022 சனிக்கிழமை மாலை 6 மணிக்குச் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் ‘வேலுநாச்சியார்’ வரலாற்று நாட்டிய நாடகம் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டது.தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை மூலம் ஓவிஎம் தியேட்டர்ஸ் நிறுவனம் வேலுநாச்சியார் நாட்டிய நாடகத்தை உருவாக்கி அரங்கேற்றியது. மேடையில் மட்டுமே 62 கலைஞர்கள் பங்கேற்ற இந்த கலைநிகழ்ச்சியின் இயக்குநர் ஸ்ரீராம் சர்மா.

கடந்த குடியரசு நாளில் டெல்லியில் நடைபெற்ற விழா ஊர்வலத்தில் பங்குபெற அன்றைய ஆங்கிலேயர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்ததன் அடையாளமாகத் தமிழ்நாடு அரசு முன்மொழிந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளான வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வ. உ. சி, மகாகவி பாரதியார் ஆகியோரைக் காட்சிப்படுத்திய அலங்கார ஊர்தி இந்தியப் பாதுகாப்புத்துறையின் உயர்நிலைக்குழுவால் புறக்கணிக்கப்பட்டது. இந்தியச் சுதந்திரத்தில் பங்கேற்ற தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றை மறைக்கும் எந்த முயற்சியும் பலிக்காது என்று அறிவித்த தமிழ்நாடு அரசு, அதே குடியரசு நாளில் சென்னையில் நடைபெற்ற ஊர்வலத்திலும், அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியைக் காட்சிப்படுத்தியது.

Siragu Velu Nachiyar3

இப்பொழுது மீண்டும் அதே வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி வென்ற வரலாற்றை சுதந்திரதின விழாவிற்கு மிகப் பொருத்தமான கதைக் களமாகத் தேர்வு செய்து வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல் திரைப்படம் வெளியாகி 100 ஆண்டுகள் கடந்துவிட்டது, இன்று பல தொழில்நுட்பங்களுடன் திரைப்படங்கள் உருவாகி வரும் காலம் இது. இத்தகைய சூழலில் மேடை நாடகத்தில் போர்க்களக் காட்சி போன்ற சவால் நிறைந்த காட்சி அமைப்புகளை ஒலி ஒளி காட்சிகளைத் திறமையாகப் பயன்படுத்திக் காட்சிப்படுத்திய இயக்குநரையும் நடிகர்களையும் பாராட்ட வேண்டும். அதிலும் ஆர். எஸ். மனோகர் நாடகங்கள் போன்று மேடையில் மக்களை வியக்கவைக்குமாறு காட்சிகளை நகர்த்த வாய்ப்பின்றி இசையார்ந்த நாட்டிய நாடகமாக அமைந்தால் ஒவ்வொரு காட்சியும் பாடலும் ஆடலுமாக நாடகக் காட்சிகள் சற்றொப்ப ஒன்றே கால் மணி நேர அளவில் விரிகிறது. இடையில் நிகழ்ச்சிகளைப் பின்னணி குரல் விளக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. பார்வையாளர்கள் பங்கேற்க அனுமதி இலவசம் என்ற அறிவிப்போடு சென்னை, ஈரோடு, மதுரை, திருச்சி, கோவை எனத் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இசையார்ந்த நாட்டிய நாடகம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சி நடைபெற்ற நாளில் நேரலையாக இணையம் வழியாகவும் (https://youtu.be/zj-jVonk9sk?t=1080) கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது சிறப்பு.

சிவகங்கையின் அரசி வேலுநாச்சியார், 280 ஆண்டுகளுக்கு முன்னர், 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்த முதல் வீரமங்கை. வடபுலத்து ஜான்சி ராணிக்கும் 75 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய முதல் வீரப்பெண்மணி வேலுநாச்சியார். ஆங்கிலேயர்களுடனான போராட்டத்தில் ஜான்சி ராணி தோல்வி அடைந்தார், ஆனால் வேலுநாச்சியார் வெற்றி கொண்டு தன் மண்ணை மீட்டுக் கொண்டார். அவரது மறைக்கப்பட்ட வரலாற்றை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுவதாக அறிமுகம் கொடுக்கப்படுகிறது. வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆதரவுடன் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி, வலுவான ஓர் எதிர்ப்புப் படையினை உருவாக்கியவர். மைசூர் மன்னர் ஹைதரலி போர்க்கருவிகள் தந்து வேலுநாச்சியாருக்கு ஆதரவளித்தார். ஏழு ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு மாபெரும் வெற்றி பெற்று சிவகங்கை சீமையை மீட்டெடுத்த வேலுநாச்சியார் பின்னர், 1789ம் ஆண்டு வரை சிவகங்கையை ஆட்சி செய்தார் என்பது வரலாற்றுப் பின்னணி.

Siragu Velu Nachiyar2

சிவகங்கை பூமி பெருமை, வீரமங்கை வேலுநாச்சியார் வீரம், மருது பாண்டியர் புகழ் கூறும் பாடலாக ‘மருது பாண்டியர் உலவும் பூமி’ என்ற பாடலுடன் 8 பெண்கள் 8 ஆண்கள் சிலம்பம், ஒயிலாட்டம் ஆகியன ஆடும் காட்சியுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. அதைத் தொடர்ந்து தமிழின் பெருமையையும் தமிழர் பெருமையையும் கூறும் நோக்கில் இரு ஆடல் காட்சிகள் தொடர்கிறது. தமிழே எங்கள் உயிராகும், தமிழ் மண்ணே எங்கள் உறவாகும் என்ற கருத்துடன் ‘பொங்குக தமிழ்’ என்ற பாடலுடன் பத்து பெண்களுடன் வேலுநாச்சியர் அறிமுகம் ஆகும் பாடல் காட்சி மற்றும் அடுத்து தமிழ் காப்போம் என்று குலவையிடும் பாடல் ஆகிய இரு காட்சிகளுக்குப் பிறகு கதை தொடங்குகிறது.

திரை செலுத்து இல்லாவிடில் சிவகங்கையை எமதாக்கிக் கொள்வோம் என்று ஆங்கிலேயத் துரை மிரட்டல் விடுத்துச் செல்ல, மக்கள் புலம்ப, சின்ன மருதுவும் பெரிய மருதுவும் ஆங்கிலேயரை ஒரு கை பார்ப்போம் என்று தோள் தட்டி வீர முழக்கம் இடுகிறார்கள். அரசிக்கு ஆதரவாக நிற்கிறார்கள். ஒரு பிரதோஷ நாளில் காளையார் கோவிலுக்கு வழிபடச் செல்லுகிறார் மன்னர் முத்து வடுகநாதர். தொண்டைமானும் கர்னல் பாஞ்சோவும் தங்கள் சதித் திட்டத்தின் அடுத்த கட்டமாக அரண்மனையில் உள்ள அரசி வேலுநாச்சியாரை கப்பம் கட்டச் சொல்கிறார்கள். எங்கள் பூமி இது, வணிகம் செய்ய வந்த உனக்குக் கப்பம் எதற்கு என்று விரட்டி விடுகிறார் அரசி. ‘கப்பம் கட்டணும் நாளை இது கர்னல் பாஞ்சோவின் ஆணை’ என்ற பாடலும் ஆடலும் சிறப்பு.

Siragu velunachiyar screen captureகாளையார் கோவிலிலிருந்து திரும்பும் அரசர் முத்து வடுகநாதர் ஆங்கிலேய வீரர்களால் சூழ்ச்சியாகச் சுட்டுக் கொலை செய்யப்படுகிறார். அரசர் கொலையுண்ட பிறகு அரசி ஆங்கிலேயர்களை ஒழிப்பேன் என்று வஞ்சினம் கூறுகிறார். ஆங்கிலேயர்கள் அடுத்து வேலுநாச்சியாரையும் கொலை செய்யக் குறி வைக்கிறார்கள். மருது வீரர்கள் ஆலோசனையை ஏற்றுத் தலைமறைவாக முடிவெடுக்கிறார் அரசி. கோபால நாயக்கரிடம் தனது பத்து வயது மகள் கௌரி நாச்சியாரை ஒப்படைத்து விட்டு, தாய்நாட்டின் ஒரு பிடி மண்ணை எடுத்து முடிந்து கொண்டு மருது வீரர்களுடன் காட்டு வழியே தப்பிக்கிறார். ஆங்கிலேயர் துரத்துகிறார்கள்.  ஆகவே, மருது வீரர்களை வேறு வழி செல்ல அனுப்பிவிட்டுத் தனித்துகாட்டு வழி செல்லும் அரசி தண்ணீர் வறட்சியால் மயக்கமடைந்து வீழ்கிறார். உடையாள் என்ற மாடுமேய்க்கும் பெண் நீர் கொடுத்து அரசியின் மயக்கத்தை நீக்குகிறார். எதிரிகளான பரங்கியர் உன்னிடம் நான் சென்ற வழி கேட்டால் உனக்குத் தெரியாது என்று சொல்லிவிடு என்று கூறிவிட்டு விரைந்து தப்பிக்கிறார் அரசி. பின்தொடர்ந்த ஆங்கிலேயர் வந்து உடையாளை மிரட்டுகிறார்கள், அவள் தெரியாது என்றவுடன் அவளின் ஒரு கையை வெட்டுகிறார்கள், அப்பொழுதும் அவள் சொல்ல மறுக்கவே உடையாளைக் கொன்று விடுகிறார்கள்.

சிவகங்கை மக்கள் ஆங்கிலேயர்களின் கொடிய அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள். ஆனால் அரசி திரும்பி வருவார் என்ற நம்பிக்கையை மட்டும் அவர்கள் இழக்கவில்லை. ‘கலங்காதே என் தாய் மண்ணே’ என்ற பாடலின் மூலம் அரசியின் துயரமும் மனவுறுதியும் காட்டப்படுகிறது. மருது வீரர்கள் ஆலோசனையின்படி தனக்கும் ஹைதரலிக்கும் பொது எதிரியான ஆங்கிலேயரை ஒழிக்க ஹைதரலியிடம் படைப் பயிற்சி, போர்க்கருவிகள் பெறலாம் என்று திட்டமிடுகிறார் அரசி. திண்டுக்கல் மலையில் தங்கியிருக்கும் ஹைதரலியைச் சந்தித்து 12 பீரங்கி, 500 துப்பாக்கி தந்து உதவுமாறு கோருகிறார்கள். வேலுநாச்சியாரின் நெஞ்சுறுதி கண்டு வியக்கும் ஹைதரலி உதவி செய்ய ஒப்புக் கொள்கிறார். ‘தமிழினத்தை நான் அறிவேன், அதன் பெருமையை நான் அறிவேன், உங்கள் வீரம் நான் அறிவேன்’ என்று ஹைதரலி பாடும் பாடல் மிக மிகச் சிறப்பு.

Siragu Velu Nachiyar4

பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும் ஹைதரலி வழங்கியதுடன், ஏழு ஆண்டுகள் போர்ப்பயிற்சியும் வேலுநாச்சியாரின் படைகளுக்கு அளிக்கப்படுகிறது. வேலுநாச்சியாரின் உறுதிப்பாட்டைக் கண்ட 16 குறுநில மன்னர்கள் தங்கள் வேற்றுமைகளை மறந்து வேலுநாச்சியாருடன் ஆங்கிலேயர்களை எதிர்க்க அரசியின் தலைமையில் ஒன்றிணைகிறார்கள். பெண்கள் மட்டுமே கொண்ட ஒரு படையை முதன் முதலில் தோற்றுவிக்கும் வேலுநாச்சியார் தன்னைக் காட்டிக் கொடுக்க மறுத்து உயிர்த் தியாகம் செய்த மாடு மேய்க்கும் உடையாளின் பெயரை அதற்கு வைக்கிறார், அத்துடன் மறைந்திருந்து தாக்கும் 108 வீரர்கள் கொண்ட கொரில்லா படை ஒன்றையும் உருவாக்குகிறார்.

Siragu velunachiyar screen capture2

போர்ப்பயிற்சி பெற்ற படையும் தன் தளவாடங்களுடன் சிவகங்கையை அடைகிறது. எதிரியின் ஆயுதக் கிடங்கை அழிப்பது மூலம் வெற்றி வாய்ப்பும் உறுதியாகும், உயிரிழப்பு குறையும் என்று அதற்கான தக்க சமயத்தைத் தேர்ந்தெடுக்கிறார் அரசி. ஆங்கிலேயர் தங்கள் ஆயுதக் கிடங்கை அரண்மனையின் பின்புறத்திலிருந்த ராஜராஜேஸ்வரி கோயிலில் அமைத்துள்ளார்கள் என்பதை வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறார் அரசி. அக்கோயிலில் பெண்கள் விளக்கேற்றி வழிபடும் வழக்கம். குயிலி என்ற பெண்ணை மனித வெடிகுண்டாக மாற்றி ஆயுதக் கிடங்கை அழிக்கும் திட்டம் தீட்டப்படுகிறது. அரசியின் தலைமையில் பதினான்கு பெண்கள் அகல்விளக்கேந்தி குயிலியுடன் கோவிலுக்குள் செல்கிறார்கள். விளக்குகளிலிருந்த எண்ணெய்யை தன் மேல் சரித்துக் கொண்டு தன் உடலுக்குத் தீ மூட்டிக் கொண்டு ‘வெற்றி வேல் வீர வேல்’ என்று கூவிய வண்ணம் ஆயுதக் கிடங்கில் நெருப்புப் பிழம்பாகப் பாயும் குயிலியால் ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கு அழிகிறது. திகைத்து நிற்கும் ஆங்கிலப் படையினரை வேலுநாச்சியாரின் படைகள் சுற்றி வளைத்து வென்று அடிபணியச் செய்கிறது. குயிலியின் தீப்பாய்தலும் ஆயுதக் கிடங்கு அழிப்பும், அதைத் தொடர்ந்து வரும் போர்க் காட்சிகளும் மேடையில் காட்சிப்படுத்த மிகவும் சவால் நிறைந்த காட்சிகள்.

Siragu Velu Nachiyar

மன்னிப்பு கோரி பட்டயம் எழுதிக் கொடுத்து, இனி சிவகங்கை சீமையின் அரசாட்சியில் இடையிடுவதில்லை என்று உறுதியளித்து மிஞ்சியிருக்கும் ஆங்கிலேயர் படை சிவகங்கையை விட்டு வெளியேறுகிறது. நாட்டு மக்கள் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள். ‘கொட்டு முரசே வெற்றி கொட்டு முரசே’ என்று ஆடிப்பாடிக் கொண்டாட்டத்துடன் நாட்டிய நாடகம் நிறைவு பெறுகிறது. பாடல்களும், இசையமைப்பும், நடனமும், நடிப்பும் வெகு சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது பாராட்டிற்குரியது. ஆனால் இவை அனைத்தையும் நடத்திக் காட்டிய கலைஞர்கள் பாடகர்கள் எவரையும் யார்யாரென அறிய முடியாதது ஒரு குறை. அத்துடன் இனத்தைக் குறிக்கும் வெள்ளையர் என்ற சொல்லைத் தவிர்த்து பிரிட்டிசார், ஐரோப்பியர் அல்லது ஆங்கிலேயர் என்ற சொல்லைப் பயன் கொள்ளலாம்.

தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை இது போன்று ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ச்சிகள் நடத்தலாம். தமிழக கலைகள் வளர்வதற்கும் மக்களிடம் கொண்டு செல்வதற்கும் நாட்டிய நாடகம் என்ற முறை சிறந்த முறையே. தமிழிலும் கதைகளுக்குப் பஞ்சமுமில்லை. பள்ளி கல்லூரி மாணவர்கள் நிகழ்த்திக் காட்ட வாய்ப்பாக கதைவசனத்தைக் கூட அரசு தளத்தில் வெளியிடலாம்.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம்”

அதிகம் படித்தது