மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வீர தீர சாகசச் செயல் புரிந்த பெண்களுக்காக வழங்கப்படும், ‘கல்பனா சாவ்லா’ விருது பெற்ற சுகிபிரேமலா

சா.சின்னதுரை

Aug 8, 2015

sugi premala2அப்போது நேரம் நள்ளிரவு 12.30. சுகி பிரேமலா அலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது.

“அம்மா… நியாய விலைக் கடையின் அரிசியைக் கடத்திட்டு ஒரு வண்டி, மார்த்தாண்டம் வழியாக கேரளாவுக்கு போய்க்கிட்டு இருக்கு. உடனே வாங்க”
அடுத்த 10 நிமிடங்களுக்குள் சுகி பிரேமலா குழுவினரின் வண்டி, அரிசி கடத்திக் கொண்டு செல்லும் வண்டியை விரட்டிச் செல்கிறது. சினிமாவை விஞ்சும் பரபரப்பான நிமிடங்கள் அவை. கேரளா எல்லையை நெருங்கும் நேரத்தில் குறுக்கும் நெடுக்குமாக முந்தி மடக்கிப் பிடித்து கடத்தல் அரிசியை மீட்கிறார்கள்.

சுகி பிரேமலா. கன்னியாகுமரி மாவட்ட உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பறக்கும் படை வட்டாட்சியராக பணியாற்றி வருகிறார். இதுவரை கேரளாவுக்கு கடத்த முயன்ற 110 டன் ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 50 வாகனங்கள், 22,000 லிட்டர் மண்ணெண்ணெய், ஒன்றரை டன் அமோனியம் நைட்ரேட் (வெடிபொருள்) ஆகியவற்றை துணிச்சலுடன் மடக்கிப் பிடித்து கடத்தலைத் தடுத்திருக்கிறார். இவற்றில் பல கடத்தல் வாகனங்களை விரட்டிச் சென்று பிடிபட்டவையும் அடங்கும். கடத்தலில் ஈடுபட்ட 40-க்கும் மேற்பட்டவர்கள் இவரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், சுகி பிரேமலாவுக்கு, வீர தீர சாகசச் செயல் புரிந்த பெண்களுக்காக வழங்கப்படும், ‘கல்பனா சாவ்லா’ விருதை வழங்கிப் பாராட்டியுள்ளார். அத்துடன் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கியுள்ளார்.
38 வயதான, 2 குழந்தைகளுக்கு தாயான சுகி பிரேமலாவுக்கு இந்தத் துணிச்சல் எப்படி வந்தது? அவருடன் ஒரு நேர்க்காணல்:

உங்களைப்பற்றி?

சுகி பிரேமலா: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த திருக்குறிச்சி தான் எனது சொந்த ஊர். முதுகலை பொதுநிர்வாகம் படித்திருந்தேன். எனது தந்தை நேசமணி, குமரி மாவட்டம், விளவங்கோடு பகுதியில், கிராம நிர்வாக அதிகாரியாக இருந்தவர். பணியில் இருக்கும்போது அவர் திடீரென இறந்துவிட்டதால், கருணை அடிப்படையில் எனக்கு அரசு வேலை கிடைத்தது. 1993-ஆம் ஆண்டு குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்து, பின்னர் உதவியாளரானேன். அடுத்தடுத்து வருவாய் துறை ஆய்வாளர், தக்கலை தாலுகா துணை தாசில்தார், விளவங்கோடு தாலுகா வட்ட வழங்கல் அலுவலர், குமரி மாவட்ட உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பறக்கும் படை வட்டாட்சியர் பதவி உயர்வு கிடைத்தது.

கடத்தல் நடவடிக்கைகள் பற்றி?

சுகி பிரேமலா: பெரும்பாலும் நியாய விலைக்கடைப் பொருட்களை கடத்துபவர்கள் நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் கடத்துவார்கள். அந்நேரங்களில் நாங்கள் ரோந்து மேற்கொண்டு வாகனச் சோதனையில் ஈடுபடுவோம். சில சமயங்களில் கடத்தல் தொடர்பாக ரகசியத் தகவல் எனக்கு வரும். சந்தேகத்துக்கு இடமான வாகனங்களைக் கைகாட்டி நிறுத்துவோம்.

திருட்டுத்தனமாக பொருளைக் கடத்திக் கொண்டு வரும் வாகனமாக இருந்தால், நிற்காமல் வேகமாகச் செல்லும். அப்படிப்பட்ட வாகனங்களை விரட்டிச் சென்று வழி மறித்து தடுத்து நிறுத்தியிருக்கிறோம். சில நேரங்களில் கடத்தல் வாகனங்கள் தமிழக எல்லையைக் கடந்து கேரள எல்லைக்குள் நுழைந்துவிடும். அப்போது கேரள காவல்துறையின் உதவியுடன் கடத்தல் வாகனத்தைத் தடுத்து நிறுத்துவோம்.

sugi premala1

கடத்தல் சம்பவங்களைப் பற்றி?

சுகி பிரேமலா: நான் விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலராக இருந்த போது, களியக்காவிளை வழியாக கேரளாவுக்கு நியாய விலைக் கடையின் அரிசி கடத்தப்படுவதாக எனக்கு ஒரு ரகசியத் தகவல் வந்தது. இதையடுத்து நானும் மற்ற அதிகாரிகளும், அன்று இரவு முதல் அதிகாலை வரை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தோம். அப்போது காலையில் கணபதியான் கடவு பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, வேகமாக வந்த ஒரு வண்டியை நிறுத்தும்படி கை காட்டினோம். ஆனால் அது நிற்காமல் வேகமாக சென்றது. உடனே நானும், எனது குழுவினரும் வாகனத்தில், 2 கி.மீ. தூரம் வரை விரட்டிச் சென்று, மணக்காலை பகுதியில் அந்த வாகனத்தை மடக்கிப் பிடித்தோம். காரின் ஓட்டுனர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். பிறகு, காரை சோதனை செய்தபோது, 1 டன் நியாயவிலைக் கடையின் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்து விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தோம்.

ஒரு நாள் அதிகாலை வேளையில், இரவிபுதூர்கடையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வேகமாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்த சைகை காட்டினோம். அது நிற்காமல் வேகமாகச் சென்றது. உடனே நாங்கள் காரை பின்தொடர்ந்து, அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தோம். அருமனை, மஞ்சாலுமூடு, மாலைக்கோடு, மேல்பாலை வழியாக கேரளாவை நோக்கி சென்ற அந்த வண்டி, திடீரென்று செறிய கொல்லை சாவடியில் மோதி நின்றது. சாவடியில் பணியில் இருந்த காவல் துறை அதிகாரியான ஏட்டு ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. வண்டி ஓட்டுனர் இறங்கி தப்பி ஓட முயற்சித்தார். போலீசாரும் நாங்களும் அவரை மடக்கிப் பிடித்து, வண்டி சோதனை செய்தோம். அதில் மூடை மூடையாக வெடிப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 30 மூடைகளில் 1.5 டன் வெடிப் பொருட்கள் இருந்தது. பின்பு அருமனை காவல் துறை அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில், நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து கேரள மாநிலத்திற்கு வெடிப்பொருட்கள் கொண்டு செல்ல இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

கடந்த மாதம் கூட ஒரு வீட்டில் கேரளா கொண்டு செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,600 கிலோ நியாய விலைக் கடையின் அரிசியை பறிமுதல் செய்தோம்.

அச்சுறுத்தல்கள் உண்டா?

சுகி பிரேமலா: ஆம். இப்படிக் கடத்தலை தீவிரமாக தடுப்பதால், கடத்தலுடன் தொடர்பு உள்ளவர்கள் பழிவாங்கத் துணிகிறார்கள். ஒருமுறை நான் காரில் சென்று கொண்டிருந்தபோது கூத்தூர் அருகே சரக்கு வண்டி ஒன்று நேருக்கு நேர் வேண்டுமென்றே மோத வந்தது. எனது வண்டி ஓட்டுனர் சாமர்த்தியமாக காரை திருப்பியதால் நூலிழையில் உயிர் தப்பித்தோம். பிறகு, வண்டியின் நம்பரைக் குறித்துக் கொண்டு, காவல்துறையிடம் புகார் கொடுத்தேன். நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், எனது கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் கொலை மிரட்டல் விடுவார்கள். அவதூறாக திட்டுவார்கள். ஒரு சமயம், கடத்தலில் ஈடுபட்ட வாகன ஓட்டுனர் ஒருவர், பெயிலில் வந்து என்னை திட்டி மிரட்டினார். இருந்தாலும் அதைக்கண்டு நான் ஒருபோதும் அஞ்சியதில்லை. மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும் கண்டுப் பயந்தால் இந்த வேலையைப் பார்க்கவே முடியாது. இதற்கெல்லாம் கிடைத்த பலன்தான் முதல்வர் கையால் ‘கல்பனா சாவ்லா’ விருது பெற்றது.

குடும்பத்தினர் ஒத்துழைப்பு பற்றி?

சுகி பிரேமலா: பக்கபலமான குடும்பம், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இவைகள் தான் என் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றிக்கான காரணங்கள். இந்தப் பணியில் வேலை நேரம் என்று வரையறுத்துச் சொல்ல முடியாது. எந்த நேரத்திலும் கடத்தல் தடுப்பு வேலைக்குச் செல்ல வேண்டும். நடு இரவில்கூட நான் திடீர் சோதனைக்குக் கிளம்பினாலும் சரி, வீட்டுக்கு இரவில் தாமதமாக வந்தாலும் சரி, என் கணவர் ஜோ பாபுராஜ், ஒருநாளும் என்னை எதுவும் சொல்லியதில்லை. என்னைப் புரிந்துக்கொண்டு நடப்பவர் அவர். தற்போது எனது கணவர் காதி மற்றும் கிராமத் தொழில்கள் துறையில் இளநிலை உதவியாளராக இருக்கிறார். என் மகள் ஜெ.எஸ்.அஸ்லின் ஸ்லெபி 12-ஆம் வகுப்பும், மகன் ஜெ.எஸ். ஆன்ட்ரோ ஃப்ரடி 7-ஆம் வகுப்பு படிக்கிறார்கள்.

சிறுவயதில் இருந்தே எனது பெற்றோர் எனக்குத் தைரியத்தையும், நம்பிக்கையையும் ஊட்டி வளர்த்தார்கள். ‘எந்தவொரு பணியையும் அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும்’ என்று என் தந்தை அடிக்கடி கூறுவார். அவர்கள் வளர்த்த விதம் தான், நான் என் துறையில் தனித்துவமாக செயல்பட உதவிகரமாக உள்ளது.

அலுவலக ஊழியர்கள் ஒத்துழைப்பு பற்றி?

சுகி பிரேமலா: வருவாய் ஆய்வாளர் ஜோதிஷ் குமார் மற்றும் எனது மகிழுந்து ஓட்டுனர் முன்னாள் ராணுவ வீரருமான ஜான் ஃப்ரைட் இருவரும் எந்த நேரம் அழைத்தாலும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடத்தலைத் தடுப்பதிலும், கடத்தல் வாகனங்களை துரத்திப் பிடிப்பதிலும் உதவி புரிந்து வருகின்றனர்.

‘கல்பனா சாவ்லா’ விருதுடன் பரிசுத் தொகையாக கிடைத்த 5 லட்சம் ரூபாயில், தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், ஆய்வாளர் ஜோதிஷ் குமார் மற்றும் ஓட்டுனர் ஜான் ஃப்ரைட் ஆகியோருக்கு அன்பளிப்பாகப் பகிர்ந்தளித்தேன்.

லட்சியம்?

சுகி பிரேமலா: ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களை மலிவு விலையில் வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் நியாய விலைக்கடையின் பொருட்கள் அரசால் வழங்கப்படுகிறது. ஆனால், அதனை சில சமூக விரோதிகள் கடத்துதல், பதுக்குதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு, பொது விநியோகத் திட்டத்தையே சிதைக்கின்றனர். நியாய விலைக்கடையின் பொருட்கள் கடத்தல் இல்லாத மாவட்டமாக கன்னியாகுமரியை மாற்றிக்காட்டுவேன்.


சா.சின்னதுரை

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வீர தீர சாகசச் செயல் புரிந்த பெண்களுக்காக வழங்கப்படும், ‘கல்பனா சாவ்லா’ விருது பெற்ற சுகிபிரேமலா”

அதிகம் படித்தது