மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தில் பட்டதாரிகள் சந்திக்கும் வேலை இல்லா திண்டாட்டம்

சித்திர சேனன்

Sep 27, 2014

velai illaa thindaattam1வேலையே

என்னிடம் வந்துவிடு

இல்லையேல்

நான்

நான்கு பேருக்கு

வேலை தருவேன் – என்று வேலையில்லாமல் அவதிப்பட்ட ஒரு இளைஞன் எழுதிய கவிதையே இது. ‘வேலை இல்லை’எனும் வார்த்தை உலக இளைஞர்களை அச்சுறுத்தும் ஒரு வார்த்தையாக உருவெடுத்து உள்ளது. ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்லாது அம்மனிதன் பூமியில் வாழும் வரை அவனுக்கு உறுதியாய், ஊக்கமாய் இருப்பது இந்த வேலையே. படித்தால் தான் நல்ல வேலை கிடைக்கும், நல்ல வேலை கிடைத்தால் தான் நல்ல சம்பளம் கிடைக்கும். நல்ல சம்பளம் கிடைத்தால்தான் நல்ல துணைவி கிடைப்பாள். நல்ல துணைவி கிடைத்தால் தான் நல்ல வாழ்க்கை அமையும்.

இவ்வாறு இந்த வாழ்க்கையானது ஒரு சங்கிலித்தொடர்போல ஒன்றையொன்று சார்ந்தே அமைந்துள்ளது. படித்தவனும்,படிக்காதவனும் இன்று நாடி ஓடுகின்ற ஒரே குறிக்கோள் வேலை…வேலை…வேலை…. இன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறான துறைகளில் வேலை இல்லாமல் இருப்பவர்களில் பொறியியல் படித்தவர்களே முன்னிலை வகிக்கின்றனர். தனது அப்பா,அண்ணன், அக்காள் கூறினார்கள், அதனால் நான் இந்தப் படிப்பைத் தேர்வு செய்தேன். இதைப் படித்தவுடன் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் எனக்கூறினர் என்று கூறி தன் இயலாமையைக் கூறி புலம்பும் பல பொறியியல் மாணவர்களை நான் கண்டிருக்கிறேன்.

சென்னையில் மட்டுமல்லாது தமிழகமெங்கும் இந்த கல்வி ஆண்டில் பல பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்பதற்கு அடிப்படை ‘இதை முடித்;தால் நல்ல சமீபத்தில் வேலை கிடைக்காது’என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இன்றைய நிலை.

எனக்குத் தெரிந்து பல படித்த இளைஞர்கள்,தான் படித்ததற்கும் செய்கின்ற வேலைக்கும் சம்பந்தம் இல்லாமல் பணி செய்கின்றனர். இதில் பலர் ஆட்டோக்களை ஓட்டுபவர்களாகவும்,ஓட்டுபவர்களாகவும்,தொண்டு நிறுவனங்களில் பணிபுரிபவராகவும்,சுய தொழில் புரிபவர்களாகவும் பரிணமித்திருக்கிறார்கள்.

இதே போன்று தமிழகத்தில் தமிழ்,வரலாறு,வேளாண்மை,சமூகவியல் படித்தவர்களின் நிலையும் அதே கதியில் உள்ளது. என்னுடன் லயோலா கல்லூரியில் தமிழ் படித்தவர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் அரசியலிலும், காய்கறி விற்பனையாளராகவும், விவசாயக் கூலிகளாகவும் உருவெடுத்துள்ளனர்.

velai illaa thindaattam5அரசு,மற்றும் அரசு சாரா வேலை வாய்ப்புகளை பெறுவதற்கான கல்வித் தகுதியைப் பெற்றவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் இவர்களுக்கு அரசு தரப்பில் வேலை வாய்ப்பு தருவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது தமிழ்நாட்டில் இளநிலை பட்டதாரி,முதுநிலை பட்டதாரி என பணி இல்லாதவர்கள் எண்ணிக்கை 94லட்சத்து 58,161 ஆக உள்ளது. இதில் பொறியியல் படித்தவர்கள் 3 லட்சத்து 51,277 பேர். பொறியியல் படித்தவர்களுக்கே இந்த நிலை என்றால் மற்ற துறை படித்த மாணவர்களின் நிலையைக் கேட்கவா வேண்டும்.

தற்போதைய தமிழக நிலவரப்படி கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் வேலை இல்லாமல் இருக்கும் நிலையில்,இவர்களில் சுமார் 1 லட்சம் பேருக்கு மட்டும் அரசு மாதாந்தோறும் உதவித்தொகை என்ற பெயரில் ரூ150 முதல் ரூ300 வரை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் படித்தவர்கள் வாழ்வில் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்கவதுதான் ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துத் தரும். தவிர படித்த இளைஞர்களின் வாக்குகளை வாங்குவதற்காக அளிக்கப்படும் இந்த உதவித்தொகை ஒரு போதும் மாற்றத்தை ஏற்படுத்தாது.

ஆதலால் இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்பும் முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும். தவிர புதிய பணி இடங்களை ஏற்படுத்தவும் முனைய வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் போனால் நாட்டிற்கு தூண்களாக இருக்க வேண்டிய இளைஞர்கள் படுபாதகச் செயல்களில் பெருவாரியாக ஈடுபட நேரிடும். பல லட்சம் படித்த பட்டதாரிகள் நம் தமிழகத்தில் இருக்கின்றனர். இவர்களில் இதைப் படித்தவுடன் கை நிறைய சம்பாதிக்கப் போகிறோம், இதுவரை நாம் பட்ட கடன் துன்பங்கள் எல்லாம் தீர்ந்து விடும் என்று நினைத்து வாழும் பட்டதாரிகளுக்கு, படிப்பை முடித்தவுடன் அவர்களின் எண்ணத்தில் தீ மூட்டும் விதமாக வேலை இல்லா நிலை ஏற்படும். இப்படித்தான் வாழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்களை எப்படியாவது வாழ வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

ஒவ்வொரு பட்டதாரிக்கும் நாம் வசதியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும். அவனின் தேவைகள் நேர்வழியில் நடைபோடும் பொழுது கிடைக்காவிடின், தீய வழியில் நடைபோடுவதே அவன் எண்ணமாகவும், செயலாகவும் மறுவடிவம் எடுக்கிறது. இன்றைய நிலையில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் பற்பல இளைஞர்கள் அனைவரும் நன்கு படித்தவர்களே.

ஏ.டி.எம் இயந்திரத்தை உடைப்பது, நகைக்கடைக்குள் குழி தோண்டி திருடிச் செல்வது, நகை அணிந்து தனியாக வரும் பெண்களிடம் நகை பறிப்பது, ஆள் அரவம் இல்லா வீடுகளை நோட்டமிட்டு, திட்டமிட்டு திருடுவது, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களைத் திருடுவது, அரசு நிலங்களை அபகரிப்பது, நக்சலைட், தீவிரவாதம் போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு சமூக விரோதிகளாய் பற்பல பத்திரிக்கைகளில் பிடிபட்டிருப்பது படித்த இளைஞர்களே.

velai illaa thindaattam6வேலை இல்லா திண்டாட்டம், கடன், வறுமை, இதற்குள் வாழும் ஒவ்வொரு படித்த இளைஞனும் தன் வேலையைத் தீர்க்க அவன் நாடுகின்றது மேற்கூறிய தீய வழிகளே.

தமிழகத்தில் ஒரு ஆணுக்கு பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்கள் என்றால் அவர் என்ன படித்திருக்கிறார் என்று கேட்பதை விட அவர் மாதந்தோறும் என்ன சம்பாதிக்கிறார்? என்ற வினாவையே எழுப்புகின்றனர். ஒரு குடும்பத்தைத் தொடங்குவதற்கும், கட்டிய குடும்பத்தை வறுமை இல்லாமல் கட்டிக் காப்பாற்றுவதற்கும் தேவை வேலை வேலை வேலை.

முன்பெல்லாம் படித்த பட்டதாரி ஆண்களே சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றால் தற்போதைய நிலையில் படித்த பெண்களும் தங்களால் இயன்ற விபச்சாரம், திருட்டு என்ற அளவில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு ஆசிரியர் மாணவரிடம் கேட்டார். நம் நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டத்திற்கு என்ன காரணம்? மாணவன் கூறினான் “மக்கள் தொகைப் பெருக்கம். அப்படி என்றால் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு என்ன காரணம்? என ஆசிரியர் கேட்க, மாணவன் கூறினான் “வேலையில்லா திண்டாட்டம் தான்”.

எனவே ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதால் அதைத் தொடர்ந்து வரும் அடுத்த பிரச்சனையை சமாளிக்க முடியும். இல்லையேல் ஒரு சங்கிலித்தொடர் போல அடுத்தடுத்த பிரச்சனைகள் உருவாகும். இதைக் கருத்தில் கொண்டு அரசு அனைவருக்கும் வேலை என்ற நிலையை ஏற்படுத்த முன்வர வேண்டும். மற்றொரு புறம் படித்த பட்டதாரிகள் சுயதொழில் தொடங்கி நான்கு பேருக்கு வேலை தருபவராக வலம் வர வேண்டும். இவ்விரண்டும் நடக்காத பொழுது ஒரு நாடு வல்லரசென்ன நல்லரசு கூட ஆக முடியாது.


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தில் பட்டதாரிகள் சந்திக்கும் வேலை இல்லா திண்டாட்டம்”

அதிகம் படித்தது