மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வைரமுத்துகளுக்கு எச்சரிக்கை

இராமியா

Feb 3, 2018

Siragu vairamuththu2

தருண்விஜய் என்ற பா.ச.க. தலைவர் ஒருவர் திருக்குறளின்மேல் ஆர்வம் கொண்டு அதன் அருமை, பெருமைகளைப் பரப்புரை செய்துவருகிறார். அப்படிச் செய்வதன்மூலம் தமிழக மக்களைக் காவி வட்டத்திற்குள் இழுத்துப்போகவும் கடுமையாக முயல்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாது செய்தொழில் வேற்றுமையான் என்ற திருக்குறளின் உயிருக்கு நிகரான கருத்தைப் புறந்தள்ளிவிட்டு,அதற்கு நேர் எதிரான வர்ணாசிரம அதர்மத்தை வலுப்படுத்த முனையும் அவரது நோக்கத்தை தமிழகமக்கள் பலர் புரிந்துகொண்டு உள்ளனர். ஆனால் ஆளும் வர்க்கத்தை அனுசரித்துப் போனால் ஆதாயம் கிடைக்கும் என்று நம்பும் சிலர் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கவும் செய்தனர். அப்படிப்பட்டவர்களுள் வைரமுத்துவும் ஒருவர்.

வைரமுத்து அத்துடன் நிற்கவில்லை. காவிகளை மேலும்மேலும் புகழ்வதன் மூலம் தனக்குப் பேரும்புகழும் கூடும் என நினைத்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை “நட்டுவைத்த வேலுக்குப் பொட்டு வைத்ததுபோல் நிமிர்ந்து நிற்கிறார்” புகழ்ந்து தள்ளினார்.

அதன் தொடர்ச்சியாக வைரமுத்துவுக்கு ஞானபீட விருது கிடைக்கும் என்பது போன்ற ஊகம் கசியத்தொடங்கியது. பின் பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது ஆளுமையையும் புகழ்ந்தார். ஞானபீட விருது என்று கசிந்த ஊகம் நீர்த்தாரை வடிவம் பெறத்தொடங்கியது. ஆனால் செய்தியாக உருவெடுக்கவில்லை.

இந்திய ஆளும் வர்க்கமாகிய பார்ப்பனர்கள் புகழ்ச்சியை மட்டும் ஏற்றுக்கொண்டு எந்த விதமான பிரதிபலனையும் அவ்வளவு எளிதாக வழங்கிவிடமாட்டார்கள். அவாளுக்கு வேண்டியது எல்லாம் ஒடுக்கப்பட்ட வகுப்புமக்களின் ஒற்றுமையின்மையும், அடிமைப்புத்தியும், காட்டிக்கொடுக்கும் தன்மையும்தான். இந்தத் திசையில் செல்வோரைத்தான் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்வார்கள். இதைப் புரிந்துகொண்ட ஒடுக்கப்பட்ட வகுப்புத்தலைவர்கள் பலர் அத்திசை வழியில்சென்று “பலனை” அடைந்து இருக்கிறார்கள்.

Siragu vairamuththu1

தருண் விஜயை வரவேற்று, தமிழக மக்களிடையே ஒற்றுமையின்மைக்கு ஆதரவு தெரிவித்தாகி விட்டது. மக்கள் நலனுக்கு எதிரான நோக்கம் கொண்டுமட்டும் அல்ல. அதைச் செயல்படுத்துவதில் நிர்வாகத் திறமையும் இல்லாத மோடியைப் புகழ்ந்துதள்ளி அடிமைப் புத்தியைக் காட்டியாகி விட்டது. இன்னும் ஞானபீட விருது ஊகமாகத்தானே இருக்கிறது? எப்பொழுது செய்தியாக மலரும்? ஆழ்ந்து சிந்தித்த கவிஞருக்கு “அவாளுக்கு மிகவும் பிடித்த காட்டிக்கொடுக்கும் செயலைச் செய்யவில்லையே?அதனால் தான் சுணங்குகிறதோ?”என்று தோன்றியது போலும். அதையும் செய்து விடலாம் என்று முடிவெடுத்தார்.

எங்கோ (இண்டியானா பல்கலைக்கழகத்தில்) யாரோ (சுபாஷ் சந்திர மாலிக் என்பவர்) ஆண்டாள் தேவதாசியாக இருந்தார் என்று எழுதியதைச் சுட்டிக்காட்டினார். அதன் மூலம் “ஆண்டாளைப் பற்றி இப்படிக் கூறியது யார்?அவனைச் சும்மா விட்டுவிடக்கூடாது” என்றெல்லாம் பார்ப்பனர்கள் வெகுண்டு எழுவார்கள் என்று எதிர்பார்த்தார். அவ்வாறு தங்களுக்குத் தெரியாத ஒரு சனாதன “எதிரியைக்” காட்டிக் கொடுத்ததற்குப் பரிசாக ஞானபீட விருது எனும் கனவு உண்மை உருவம் பெறும் என்றும் எதிர்பார்த்தார் போலும். ஆனால் அவாளை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொண்டுவிட முடியுமா?

அவாளின் ஒரே இலக்கு பராசரஸ்மிருதியில் 8வதுஅத்தியாயத்தில் 25வதுஸ்லோகத்தில் கூறி உள்ளபடி “பிராமணன் இழிந்தவனாக இருந்தாலும் வழிபடத்தக்கவன்; சூத்திரன் உயரிய நற்குணங்கள் உருவெடுத்தவனாக இருந்தாலும் உயர்நிலைக்கு வரத்தகாதவன்.” என்பது தான். சமூகத்தை இத்திசையில் நகர்த்திச்செல்லவே அவாள் விரும்புகின்றனர்.

siragu aandaal3

வைரமுத்து காட்டிக்கொடுக்கும் சுபாஷ் சந்திர மாலிக் மீது பாய்வதால் சமூகத்தை இந்தத் திசையில் நகர்த்திச்செல்ல முடியுமா? அதற்குப் பதிலாக “ஆண்டாளை அவமதித்து விட்டார்” என்று வைரமுத்து மீது பாய்ந்து, தமிழ்நாட்டில் பெரும்சர்ச்சையைக் கிளப்பினால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களிடையே இந்துமத வெறி உணர்வை வளர்க்கலாம். அதன் மூலம் பராசரஸ்மிருதி சொல்லும் சமூக அமைப்பை நோக்கி நகர்த்தலாம். இவற்றை எல்லாம் கணக்கிட்டுத்தான் வைரமுத்து மீது பாய்ந்து இருக்கிறார்கள். அதிலும் ஆண்டாளை அவமதிக்கும் எண்ணம் தனக்குச் சிறிதும் இல்லை என்றும், தன்னுடைய உரை முழுமையிலும் ஆண்டாளைப் புகழ்ந்தே இருப்பதாகக் கூறியதுடன் மட்டும் நிற்காமல், தன்னுடைய உரையால் யார் மனதாவது புண்பட்டு இருந்தால் அதற்காக வருந்துவதாகக் கூறிய பின்னும் சர்ச்சையைப் பெரிதுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

வைரமுத்துவின் ஞானபீட விருதுக்கனவு தகர்ந்து போய்விட்டது. தான் ஆரத்தி எடுத்து வரவேற்ற தருண்விஜய், நட்டுவைத்த வேலுக்குப் பொட்டுவைத்தாற்போல் எனப் புகழ்ந்து தள்ளிய நிர்மலா சீதாராமன், இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்த மோடி யாருமே வைரமுத்துவுக்குத் துணைவரவில்லை.

வைரமுத்துவைப்போல் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் பலர் இருக்கிறார்கள். காவிகளுக்கு அனுசரணையாக நடந்துகொள்வதன் மூலம் ஏதாவது பலனை அடையலாம் என்ற நப்பாசை அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது. அவாளைப் பொறுத்தமட்டில் பராசரஸ்மிருதியில் சொல்லப்பட்டு உள்ள நோக்கத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். சமூகத்தை அதைநோக்கி உறுதியாக நகர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட வகுப்புமக்கள் அதைத்தடுத்து நிறுத்தாவிட்டால், இரண்டு மூன்று தலைமுறைகளுக்குப் பின் வர்ணாசிரம அதர்மம் வெளிப்படையாகவே சட்டமாகிவிடும். நம் எதிர்காலத் தலைமுறையினர் நாம் இதுவரையிலும் போராடிப் பெற்று இருக்கும் உரிமைகளைப் பறிகொடுத்துவிட்டு, அடிமைச்சேவக வேலைகளைச் செய்யவேண்டிவரும்.

அப்படி இல்லாமல், மகாத்மாபுலே, தந்தைபெரியார், மேதை அம்பேத்கர் அரும்பாடுபட்டு ஈட்டிக்கொடுத்த உரிமைகளை முழுமையாகப் பெறவேண்டும்.நமது எதிர்காலத் தலைமுறையினர் அவாளுக்கு அடிமைகளாகி விடக்கூடாது என விரும்பும் ஒடுக்கப்பட்ட வகுப்புமக்கள் அனைவரும் அவாள் முன்னெடுக்கும் சர்ச்சையில் இருந்து விலகி இருக்கவேண்டும்.

ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே! அனைத்து வகுப்பு மக்களிலும் அனைத்து நிலைத்திறமை உடையவர்களும் இருக்கிறார்கள் என்பது மாற்றமுடியாத இயற்கை நியதி. அதன்படி கல்வி, வேலைவாய்ப்பு, பிற சமூக நடவடிக்கைகளில் அனைத்து வகுப்பு மக்களும் அனைத்து நிலைகளிலும் பங்குபெற்று இருக்கவேண்டும். அப்படி இல்லை என்றால் பொதுப்போட்டி முறையில் சூது நிறைந்து உள்ளது என்று புரிகிறது அல்லவா? இதைமாற்றி இயற்கை நியதிப்படி அனைத்து வகுப்பு மக்களும் அனைத்து நிலை வேலைகளிலும் பங்குபெறும் விதமாக விகிதாச்சாரப் பங்கீடு முறையைச் செயல்படுத்த வேண்டும் என்ற இலக்கை நோக்கி அல்லவா நமது போராட்டம் இருக்க வேண்டும்? அதை விடுத்து நம்மை திசை திருப்பும் (ஆண்டாள் சர்ச்சை உட்பட) பிற சர்ச்சைகள் தேவையா?

ஆண்டாள் சர்ச்சை வைரமுத்துவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை அல்ல. உண்மையில் அது வைரமுத்துகளுக்கு அதாவது காவிகளுக்கு அனுசரணையாக நடந்துகொள்ள விரும்பும் ஒடுக்கப்பட்ட வகுப்புமக்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வைரமுத்துகளுக்கு எச்சரிக்கை”

அதிகம் படித்தது