மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஸ்காட்லாந்து மலைக்கோட்டை

வெங்கட் நடராஜன்

Aug 25, 2018

siragu edinburg castle

எடின்பரோ மலைக்கோட்டை (EDINBURGH CASTLE)

சுமார் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட எடின்பரோ மலைக்கோட்டை இன்றும் ஸ்காட்லாந்தின் சின்னமாக விளங்குகிறது. சுமார் 400 அடி உயர மலை மீது அமைந்துள்ள இக்கோட்டையில் இருந்து தலைநகர் முழுவதும் காணமுடியும். இதன் மதில் மீதிருந்து பார்த்தால், உயர்ந்த கட்டிடங்கள், புறநகர் அதற்கடுத்த கடல் என காட்சி விரிகிறது. இதன் நுழைவாயிலில் சீரும் சிங்க கேடயமும் ஸ்காட்லாந்து கிரீடமும் பொறிக்கப்பட்டுள்ளது. இது  ஸ்காட்லாந்து மற்றும் பிரிட்டிஷ் படைவகுப்பின் முத்திரையாக இன்றும் உள்ளது.

இக்கோட்டையில் ராஜரீக மாளிகை, இரத்தின காட்சியம், கைதிகள்சிறைச்சாலை, ராணுவ சிறை, போர் நினைவிடம், ராணுவ அணிவகுப்பு, சர்ச், நாய்களின் கல்லறைஎன பல கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கோட்டை அரண்

siragu edinburg jewels bldg

எந்தநேரமும் எதிரிகளை தாக்கும் விதத்தில், மதில் முழுவதும் பாதுகாப்பு பீரங்கிகள் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டையின் வட திசையில் வெள்ள கால்வாய் அமைத்து எதிரிகளுக்கு தடுப்பு உருவாக்கியிருக்கிறார்கள். பிற்காலத்தில் ஏற்பட்ட மாசு காரணமாக 18-ம் நூற்றாண்டில் வெள்ளம் வடிக்கப்பட்டது. இதைத் தவிர அக்காலத்தில் மாலுமிகளுக்கு வழிகாட்டவும், நகர மக்கள் நேரத்தை சரி பார்க்கவும், துல்லியமாக 1 மணிக்கு பீரங்கி குண்டு முழங்கப்பட்டது. அந்த வழக்கம் இன்றும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் தொடர்கிறது.

மார்கரெட் சர்ச்

siragu edinburg margaret church

சுமார் 25 பேர் வழிபடக்கூடிய சிறிய சர்ச் ஒன்று உள்ளது. மகாராணியின் மகன் கட்டிய இச்சர்ச்சில் மார்கரெட் ஓவியம் பிரதான ஜன்னலில் வரையப்பட்டுள்ளது. அதைத்தவிர மற்ற கிறித்துவ துறவிகளின் படங்களும் சுவரில் இடம்பெற்றுள்ளது. இது இன்றும் கல்யாணம் மற்றும் சிறுவிழாக்களுக்குப்  பயன்படுத்தப்படுகிறது.

ராஜ மன்றம்

siragu edinburg mag gun

உள்ளே நுழைந்ததும் பெரிய மன்றம் சுவரின் இரு புறங்களிலும் போர் ஆயுதங்கள் அலங்கரிக்க எதிர் முனையில் அகன்ற நெருப்பூட்டி ஒளிர எங்களை வரவேற்றது. ஈட்டி, கத்தி, கவசம், கேடயங்கள் போன்ற அக்கால போர் ஆயுதங்கள் பல இன்றும் சுவர்களில் படை வகுத்து நிற்பது அருமை.

இதில் அன்றாட ராஜ சபை நிகழ்வுகள் மட்டுமல்லாமல் முக்கிய ஆலோசனைகள், போர்க்கால யுக்திகள், ராஜ தந்திரங்கள், விருந்தினர் வரவேற்பு என அனைத்தும் நடைப்பெற்று இருக்கிறது. இன்றும் கூட புத்தாண்டு உட்பட பல விழாக்கள் இங்கு நடைபெறுகிறது.

அரசமாளிகை

இக்கோட்டையின் உட்புறத்தில் அரச குடும்பத்தினர் வசிக்கும் ராஜரீகமாளிகை பிரதானமாக அமைக்கப்பட்டுள்ளது.இதில் வரவேற்பறை, பொழுது போக்கு அறை, விருந்தினர் அறை, படுக்கையறை என தனித்தனியாக  அமைக்கப்பட்டுள்ளது.

siragu edinburg royal apartment

வரவேற்பறையில் நெருப்பூட்டி அதன் மேல் சீரும் சிங்கம் பதித்த ஸ்காட்லாந்து முத்திரை என நம்மை வரவேற்கிறது. இதையடுத்த நீண்ட அறையில் மேரி மகாராணி மற்றும் அவரது குடும்பத்தினர் ஓவியங்கள் சுவரில் சித்திரங்களாக காட்சியளிக்கிறது. இது தவிர கிரீடம் சூட்டுதல், வாள் ஏந்துதல் போன்ற ராஜ நிகழ்வுகளும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் முதல் அரசர்

பல சவால்களுக்கு இடையில், இங்குள்ள ஒரு சிறிய அறையில், 1566-ல் மகாராணி மெரி, ஜேம்ஸ் என்ற குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால் ஒரு வருடத்தில், மேரி பதவியிழந்த நிலையில் 13 மாத ஜேம்ஸ் ஸ்காட்லாந்து அரசன் ஆனான். இவர் ஸ்காட்லாந்து மட்டுமல்லாமல், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தையும் ஆட்சி செய்த முதல் அரசர் என்கிற பெருமை கொண்டவர். இந்த நிகழ்வுகள் இவ்வரையில் ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

அருங்காட்சியம்

இதில் வைர கிரீடங்கள், இரத்தின ஆபரணங்கள் என அரசர்கள் பயன்படுத்திய அணிகலன்கள் பல காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், கல்லால் வடிவமைக்கப்பட்ட சிம்மாசனமும் உள்ளது. இந்த அரியணை தேவைப்படும்போது இங்கிலாந்தில் உள்ள WESTMINSTER ABBEY என்ற சர்ச்சுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இன்றும் இதில் முடிசூட்டு விழா நடைப்பெறுகிறது.இக்கட்டிடத்திற்குள் கேமரா அனுமதி இல்லை.

சிறைச்சாலை

siragu edinburg prison - door

போர்கைதிகளை அடைக்க இக்கோட்டையில் சிறைச்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நுழைவுப் பகுதியில் சிறையறையில் உபயோகப்படுத்தப்பட்ட மரக்கதவு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதில் கைதிகளின் உணர்வுகள் கிறுக்கல்களாக பிரதிபலிக்கிறது. இது தவிர கல்லால் குடையப்பட்ட சிறு குகைகள் கூட கைதிகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

siragu edinburg prison - craft work

18 மற்றும் 19-ம் நூற்றாண்டில் சிறை பிடிக்கப்பட்ட அமெரிக்க, பிரெஞ்சு, ஸ்பெயின், டச் போன்ற பன்னாட்டு மாலுமிகள் மற்றும் கடற்கொள்ளையர்கள் இங்கு அடைக்கப்பட்டார்கள். 2-ம் உலகப் போரில் ஈடுபட்ட இந்தியர் சிலர் கூட இங்கு சிறைப்படுத்தப்பட்டார்கள்.

இதில் அவரவர் அந்தஸ்த்துக்குத் தகுந்தாற்போல் ரொட்டி, மாமிசம், மது பாணம் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் கடற்கொள்ளைகாரர்கள் என்பதால் அவர்களுக்கு குறைந்த உணவே வழங்கப்பட்டது. இது போக, முழு நேர மருத்துவ வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

siragu edinburg prison - food

இவர்கள் பொழுதுபோக்கிற்காக, தாயம், சதுரங்கம் போன்ற பல சூதாட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

சிறைக்கைதிகள் உறங்குவதற்கு கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஊஞ்சல் போன்ற வைக்கோல் நிரப்பிய படுக்கைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கைதிகள் தாங்கள் செய்த கைவினைப் பொருட்களான நகைப்பெட்டி, கூடை, ஓவியம் போன்றவற்றை உள்ளூர் மக்களுக்கு விற்று தங்களுக்கு தேவையான துணிமணிகள், பேனா, காகிதம், போதைப் பொருட்கள்  போன்றவற்றை வாங்கியிருக்கிறார்கள்.

சிறைக்காவலர்களுக்கு லஞ்சம் கொடுக்கவும், சிறையிலிருந்து தப்பிக்கவும் சில கைதிகள் அக்காலத்திலேயே ஸ்காட்லாந்தின் போலி நாணயங்களைக் கூட தயார் செய்திருக்கிறார்கள் என்பது ஆச்சர்யம்.

ராணுவச் சிறை

19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சிறிய சிறையில், இராணுவ குற்றம் இழைத்த ஸ்காட்லாந்து படை வீரர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இதில் சிறு அறைகள், படுக்கைகள் போன்ற வசதிகள் உள்ளது. 1990-களில் கோட்டைப்படைகள் விளக்கிக்கொள்ளப் பட்டபோது, இச்சிறையும் மூடப்பட்டு விட்டது. இப்போது சுற்றுலா இடமாக உள்ளது.

இத்தனை அம்சங்கள் கொண்ட எடிபரோ மலைக்கோட்டை, வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு ஒரு பயனுள்ள அனுபவமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

More pictures at: https://photos.app.goo.gl/dUzY5R9CbdSvZfiS7


வெங்கட் நடராஜன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஸ்காட்லாந்து மலைக்கோட்டை”

அதிகம் படித்தது