மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஸ்டெப்பி மேய்ப்பாளர்கள்: இனக்குழுவின் பரவலும் மாடு மேய்ப்புத் தொழிலின் வளர்ச்சியும்

தேமொழி

Sep 18, 2021

siragu Yamnaya-related_migrations-wiki

ஆரியர்களின் மூதாதையர்களான ‘யம்னயா’ இனக்குழுப் பரவலுக்கு பால்பொருட்களின் பயன்பாடும் காரணமாக அமைந்தது. சக்கரங்கள் கொண்ட மாட்டு வண்டிகளும், குதிரைச் சவாரியும், பால்பொருட்கள் உணவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சியும் மேய்ப்பாளர்களை உருவாக்கியது. இத்தகைய மாற்றம் மனிதயினப் பரவலுக்கு அடிப்படையாக அமைந்தது. அதாவது, ஒரு புதிய உணவு, அது உருவாக்கிய புதிய பொருளாதாரம், அதனால் ஒரு புதிய வாழ்க்கைமுறை என வரலாற்றில் மனிதர்களின் பரவலுக்கு ‘பால்’ காரணமாக அமைந்தது.

மனித வரலாற்றில், 5000 ஆண்டுகளுக்கும் முன்னரான வரலாற்றுக் காலத்திற்கும் முற்பட்ட வெண்கலக் காலகட்டத்தில் (Bronze Age), ஐரோப்பா கண்டத்தின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த, வேட்டையாடியும் சேகரித்தும் உண்ட (Hunter-gatherer) இனக்குழுவினரின் பரவலுக்கு அவர்கள் பால்பொருட்களை உணவாகப் பயன் கொண்டதும் ஒரு காரணம் என்ற கருதுகோள் ஆய்வாளர்களால் முன்னரே முன்வைக்கப்பட்டது. இவர்கள் ‘யம்னயா’ (Yamnaya) குழுக்கள் எனப்பட்டனர். இவர்கள் ஸ்டெப்பி புல்வெளியின் (Steppes of Eurasia) நாடோடி மேய்ப்பர்களான (herders) ஆரிய இனத்தின் மூதாதையர்கள் என்பதையும், இந்தியப் பகுதிக்குள்ளாக ஆரியர்களின் தெற்காசிய ஊடுருவல் கைபர்-போலன் கணவாய் வழியாக, சுமார் பொது ஆண்டு 2,100 காலவாக்கில் நிகழ்ந்தது என்பதையும்இவர்களின் இந்திய நுழைவு சிந்து சமவெளி நாகரிகம் அழிவின் எல்லையில் இருந்தபொழுது ஏற்பட்டது என்பதையும் அறிவியல் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

உலகின் பல இனக்குழுக்களின் மக்கள், நன்னீர் ஆறுகளின் மீன்களைப் பிடித்து உண்டும், சிறிய காட்டுப் பறவைகளையும், விலங்குகளையும் வேட்டையாடி உண்டும்; காய், கனி, கிழங்கு வகைகளைச் சேகரித்து உண்டும் வாழ்ந்து வந்தவர்கள். அவர்களின் இடம் பெயரலுக்கு அவர்களது உணவுத் தேவையும் உணவுப் பழக்க வழக்கமும் முக்கியமான காரணமாக அமைந்தது. வாழும் பகுதியின் உணவுப் பற்றாக்குறை போன்றவற்றை எதிர்கொள்கையில் ஆடு, செம்மறியாடு, கோழி, மாடு போன்றவற்றை வளர்த்தும் உண்டார்கள். இதேபோன்றுதான் யம்னயா இனக்குழு மக்களும் வாழ்ந்தனர். அத்துடன் இவர்கள் உணவில் மாடுகளின் மூலம் பெறப்படும் பால்பொருட்களும் இடம்பெறத் தொடங்கியபொழுது அவர்கள் வளர்த்த மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து, பெரிய அளவில் அவற்றை மேய்க்கும் தொழிலும் தொடங்கியது. வாழும் இடத்தில் மாடுகளுக்குத் தீவனம் இல்லாத பொழுது அவர்கள் புதிய இடங்களை நோக்கி நகரத் தொடங்கினார்கள். நீர் வசதி கொண்ட ஆறுகளின் கரைகளில் குடியிருப்பும் வேளாண் தொழிலும் வாழ்க்கை முறையாயின. இவர்கள் இவ்வாறு மாடுகளை மேய்க்க புது இடம் தேடிப் பரவியதை விரைவுபடுத்தியது அவர்களின் சக்கரங்களும், மாடுகளால் இழுக்கப்பட்ட உறுதியான வண்டிகளும், மாடுகளை மேய்க்க உதவிய குதிரைகளும்தான்.

ஐரோப்பாவின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த இந்த யம்னயா இனம் ஐரோப்பாவின் மேற்குப் பகுதிகளிலும், ஆசியாவின் மேற்குப் பகுதிகளிலும், தெற்காசியப் பகுதிகளிலும் பரவினர். இவர்களின் பரவலுக்கு பால்பொருட்கள் உணவில் இடம் பெற்றதும், பால்பொருட்களின் அடிப்படையில் வளர்ந்த பொருளாதாரமும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கருதுகோள்களை முன் வைத்திருந்தாலும், தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் மரபணு ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பின்படி இவர்களுக்குப் பால் செரிமானம் செய்யும் பண்பு இல்லாததும் (lactose intolerant) தெரிய வந்தது. இவர்கள் செரிக்கக் கூடிய நொதித்த பால்பொருட்களான லாக்டோஸ் இல்லாத தயிர், பாலடைக் கட்டி போன்றவற்றை உண்டிருக்கலாம் என்றும் கருதப்பட்டது. ஆனால் பால் உணவில் இடம்பெற்று பரவலுக்கு அடிப்படைக் காரணமானது என்பதற்கான சான்றுகளைக் காட்ட முடிந்ததில்லை.

இந்தவாரம் (செப்டெம்பர் 15, 2021 அன்று) வெளியான ஆய்வறிக்கை ஒன்று, 5,000 ஆண்டுகளுக்கும் முன்னர் வாழ்ந்த யம்னயா இனக்குழு மக்களின் உணவில் மாடுகளின் இறைச்சி மட்டுமல்ல பால்பொருட்களும் இடம்பிடித்தன என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகளை அளித்துள்ளது. தொல்லியல் ஆய்வாளர்கள் யம்னயா மக்களின் பற்களின் மேல் படிமமாகி சுண்ணாம்பால் இறுகிப்போன பற்காறைகளை (fossilized plaque from the teeth) ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். இந்த இறுகிய பற்காறை படிமங்களில் பாலின் புரதங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள். ஆகவே பால்பொருட்களின் பயன்பாடுதான் கால்நடை வளர்ப்பு, மேய்ப்புத்தொழில் என்ற அளவில் வளர்ந்து, அக்கால்நடைகளைப் பராமரிப்பதற்காகப் பரவத் தொடங்கினார்கள் என்பதை அறிவியல் சான்று மூலம் உறுதிப்படுத்த முடிகிறது. இவர்களுக்கும் முன்னோர்களாக, வால்கா-டான் (Volga – Don) ஆற்றுப் படுகைகளில் 5300 ஆண்டுகளுக்கும் முன்னர் வாழ்ந்தவர்களின் பற்காறை படிமங்களில் பாலின் புரதங்கள் இல்லாதது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆகவே, இதனால் ‘பால்பொருட்களை அடிப்படை கொண்ட யம்னயா இனக்குழு மக்களின் பொருளாதார வளர்ச்சி’ மிகக் குறுகியகாலத்தில், வெறும் 300 ஆண்டுகளில், விரைவில் புரட்சி போல வளர்ச்சியுற்றதாகவும் ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். யம்னயா இனக்குழு மக்களின் வண்டிகளும், சக்கரங்களும், மாடுகளை மேய்க்க உதவிய குதிரைகளும் அவர்களின் இந்தப் பரவலை விரிவுபடுத்தியது, விரைவுபடுத்தியது.

References:

[1]

Milk fueled Bronze Age expansion of ‘eastern cowboys’ into Europe.

Ancient proteins show the Yamnaya dairy revolution took just 300 years, Andrew Curry, Science, September 15, 2021.

https://www.science.org/content/article/milk-fueled-bronze-age-expansion-eastern-cowboys-europe

[2]

Dairying enabled Early Bronze Age Yamnaya steppe expansions. Wilkin, S., Ventresca Miller, A., Fernandes, R. et al. Nature (2021). https://doi.org/10.1038/s41586-021-03798-4

https://www.nature.com/articles/s41586-021-03798-4

[3]

Early Indians : The Story of Our Ancestors and Where We Came From, Tony Joseph, December 21, 2018.

[4]

Yamnaya culture

https://en.wikipedia.org/wiki/Yamnaya_culture


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஸ்டெப்பி மேய்ப்பாளர்கள்: இனக்குழுவின் பரவலும் மாடு மேய்ப்புத் தொழிலின் வளர்ச்சியும்”

அதிகம் படித்தது