மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அந்தரப் பிழைப்பின் அவலம்

தவமுதல்வன்

Sep 30, 2017

(இலங்கை தோட்ட இந்திய தொழிலாளர் அந்தரப் பிழைப்பு – கோ .நடேசய்யர் நாடகத்தை முன்வைத்து)

Siragu andhara pizhai10

அரசாங்கத்தின் பேருந்து மட்டும் சென்று வரும். தனியார் வாகனங்கள் செல்ல இயலாது. அப்படி செல்ல வேண்டியிருந்தாலும் சோதனைச் சாவடியில் எல்லா விபரங்களையும் பதிவு செய்தபின்பே செல்லமுடியும். தொழிலாளர் வீடுகளில் நடக்கும் எந்த நிகழ்வுகளுக்கும் உறவினர் யாரேனும் வருவதாக இருப்பின் நிர்வாகத்திற்கு முன்னமே சொல்லி அவர்களின் விபரங்களையெல்லாம் கொடுத்து அனுமதி பெறவேண்டும். தொழிலாளிக்கு திடீரென உடல்நிலை கோளாறு ஏற்படால்கூட நிர்வாகத்தின் அனுமதியின்றி வெளியில் மருத்துவமனைக்கு செல்லக்கூடாது.

நிர்வாக பகுதிக்குள்ளே பொதுவெளியில் புகை பிடிப்பதுகூட நிர்வாகத்தை அவமதிப்பது ஆகும். இதைப் போன்ற ‘ஐ.எஸ்.ஐ முத்திரை கொண்ட உலகத்தரம் வாய்ந்த தேயிலைத்தூளை’ தயாரிக்கும் நிறுவனங்கள் இன்றைக்கும் உண்டு. “அதெல்லாம் அந்தக் காலம் இப்ப அப்படியில்லை” என சொல்லுவோர் நீலகிரியின் வழக்கமான நகரங்களை விடுத்து தொலை தூரங்களில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்று பார்க்க வேண்டும். நூற்றுக்கணக்கான திறந்தவெளிசிறைகளாக உள்ள தோட்டங்களை காணமுடியும். நாம் சொல்லிக்கொண்டிருக்கிற குறைந்தபட்ச சனநாயகத்தின் வாடைகூட அங்கே இருக்காது. இன்றைக்கே நிலைமை இப்படி என்றால், இருநூறு ஆண்டுகளுக்கு முன் கடல்கடந்து வெள்ளைக்காரனின் ஆளுகையின்கீழ், இன்னொரு நாட்டிற்கு அடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்ட தேயிலைத்தோட்ட தொழிலாளரின் நிலைமை என்னவாக இருந்திருக்கும்.

Siragu andhara pizhai11

அந்த சொல்லொண்ணா துயர வாழ்வை பேசுகிறது கோ.நடேசய்யரின் இலங்கை இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு என்கிற இந்த நாடகம். அன்றைக்கு மலையகத்தமிழர் வாழ்வு பற்றிய பேசிய, போராடிய மிக முக்கியமான ஓர் மாமனிதன் கோதண்டராம நடேசய்யர் (1887-1947) என்கிற கோ. நடேசய்யர் என்பதும் மலையகத்திற்காக மக்களின் நலனை முன்னிருத்திப் போராடிய முன்னணி போராளி என்பதும் அவர்தம் செயல்பாட்டின் வழியாக அறியலாம். கலை, இலக்கியம், தொழிற்சங்கம், பத்திரிக்கையாளன், ஊக்கமிக்க செயல்பாட்டாளன், இலங்கையின் சட்டசபையில் தோட்டத்தொழிலாளிகளுக்கான பிரதிநிதி என பல்வேறு தளங்களில் நின்று போராடிய அந்த மானுடனின் சிந்தனையில் உதித்த இந்த நாடகம் இன்றைக்கும் தொழிலாளிகள் செல்லவேண்டிய திசையைக் காண்பிப்பது எத்துனை தொலைநோக்குப் பார்வை வேண்டும் அவருக்கு!

Siragu andhara pizhai5

ஆயிரத்து எண்ணூற்று முப்பதுகளில் தமிழகத்திலிருந்து காப்பியும் தேயிலையும் பயிர் செய்யப் போன மக்களின் குடியிருப்பு எத்தனை குறுகிய சுகாதார வசதியற்றது என்பதை இன்றும் பல தோட்டங்களில் நாம் காணலாம். கண்டாக்கு, கங்காணி, சில்லறை கங்காணி, துரை போன்றோர்களே அதிகாரவர்க்கமாக சிறைக்கூடம் போன்ற நிர்வாகத்தில் மக்களுக்கான உரிமைக் குரலை எழுப்பச் செய்வது எளிதான காரியமில்லை என்பதை இன்றைய நிகழ்வோடு பொருத்திப்பாருங்கள் புரியும். எப்போதுமே அடக்கப்படுகிற, ஒடுக்கப்படுகிற, சுரண்டப்படுகிற மக்கள் விழிப்படையாதவாறு பார்த்துக்கொள்வது அவர்களை அடக்கி ஆளுவோரின் பிரதான வேலை. ஆகவேதான் அவர்களுக்கு எதிரான எந்த கருத்தையும் ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய முற்படுகிறார்கள். அப்படியிருந்த தோட்ட குடியிருப்புகளுக்குள் புடவை விற்கும் வியாபாரியாகச் சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு சங்கம் கட்டியவர் நடேசய்யர் அவர்கள்.

பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு இன்றைக்கே பல தடைகள் இருக்கும்போது அன்று சொல்லவா வேண்டும். அந்த வெற்றிடத்தை அவர் மனைவி மீனாட்சியம்மாள் ஈடு செய்கிறாள். தொழிலாளிகளின் துயரை பாடல்களாகப் பாடுகிறார். தோட்டத் தொழிலாளிகளின்மேல் கணவன் வைத்திருக்கும் அளப்பறியா நேசத்திற்கு உறுதுணையாக அவரும் இருக்கிறார். கணவனின் வசனமும் மனைவியின் பாடல்களும் ஒன்றுக்கொன்று இணையாக படைப்பின் உள்ளடக்கத்தை உயிர்ப்பிக்கும் இந்த நாடகம் உண்மையில் எழுத்தாளர் மு. நித்தியானந்தம் சொல்வதுபோல இலங்கையின் முதல் அரசியல் நாடகம் என்பது முற்றிலும் உண்மையே.

Siragu andhara pizhai6

சுரண்டல் அமைப்பைக் கொண்டுள்ள சமூகத்தில் மனிதன் தன் எல்லா நிலைகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டு, அவன் வெறும் நுகர்வு பண்டமாக மாற்றப்பட்டு அவனிடம் இருக்கும் உழைப்பை, விற்பதற்கும் வாங்குவதற்குமான ஒரு பொருளாக அவன் மாறிபோவதை மனித உறவை வர்க்கமாக உற்று நோக்கினால் புரியும்.

இப்படித்தான் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளிலும் இந்தியாவை விட்டு குறிப்பாக தமிழகத்திலிருந்து பல நாடுகளுக்கும் தமிழர்கள் இடம்பெயர்ந்தார்கள் என்று சொல்வதைவிட பசியும்பட்டினியைவிட சாதியத்தின் கொடுமையிலிருந்து தப்பிக்க ‘ஏதோ ஒரு விடிவை’ தேடினார்கள். இலங்கையில் வெள்ளைக்காரனுக்கு காப்பியும் தேயிலையும் விளைவிக்க தோதான ஆள் இந்த கரைகளில் கிடைத்தார்கள். அடிமாடுகளைப் போல கூட்டிக்கொண்டு போன மக்களை கசக்கிப் பிழிந்த அந்த துயரம் வெளியே தெரியாதவாறு பார்த்துகொண்டார்கள். தேயிலைத்தூரிலே தேங்காயும் மாசியும் கிடைக்கும் என்கிற கதையை மட்டும் இங்கே சொல்லவில்லை. இன்னும் நிறைய கதைகளைச் சொன்னார்கள். நம்பிப்போனவர்களுக்கு நேர்ந்த கதி எழுதி மாளாது. கரைக்கு அந்தபக்கம் கண்டிச்சீமையில் கங்காணிகளும், வெள்ளைகார துரைகளும் நடத்தும் கொடுமைகளை இந்த கரைகளில் வசிக்கும் மக்களுக்கு சொல்லவேண்டும் ஆசிரியரின் அகம் விருப்பம்.

Siragu andhara pizhai7

இப்போது வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்ப பல ஏஜென்சிகள், பயண ஏற்பாட்டாளர்கள் உள்ளனர். அந்த காலத்திலோ கங்காணிதான் அந்த வேலையை ‘ஆள்காட்டியாக’ செய்கிறான். இன்றைக்கு வடமாநில மக்களை கோவை. திருப்பூர் போன்ற நிறுவங்களில் வேலையாளாக சேர்த்துவிட்டு கமிசன் பெரும் மேஸ்திரிகளைப்போல, அன்று வெள்ளைக்காரனின் பணத்திற்கு கங்காணிகள் கரைகடந்து வருகின்றனர். தனக்கேற்ற அடிமைகளைக் கூட்டிவர இவர்களைத்தான் நம்பியிருக்கிறான். எத்தனை ஆட்களைக் கொண்டுவருகிறானோ அந்த அளவிற்கு அவன் அதிகாரம் தோட்டத்தில் கொடிகட்டிப் பறக்கிறது. உணவகக் கடையில் கூட ‘இலங்கைச் சீமை பெருமை’ பேசி கடை நடத்துவோரை மற்றும் ஒரு தரகராக நியமித்து இந்தியாவில் ஆள் பிடிக்கிறார்கள். அங்கு செல்லும்வரையான செலவிற்கு பணத்தைக் கொடுத்து எல்லாவற்றையும் கணக்காக வைத்து அந்த அற்பத்தொகைக்கு கடன்காரனாக்கி மலையில் வேலையை வாங்குகிறார்கள்.

சாப்பாடு நேரத்திற்கும்கூட சில நேரங்களில் அனுமதி மறுக்கப்படுகிறது. கணக்கு எழுதுவது, பேர் பதிவது, கொழுந்துகளின் எடையைத் தீர்மானித்து எழுதுவது, அவைகளின் தரத்தை நிர்ணயம் செய்வது, பற்றுச்சீட்டு கொடுப்பது என எல்லா அதிகாரங்களும் கண்காணியின் வசமிருக்க துரைகூட அவனுக்கு வளைந்துகொடுக்க வேண்டியிருக்கிறது. ஆளை வைத்திருப்பவன் அவன்தானே. தனி ஆளாக இருந்தால் ஓடிப்போய்விடுவார்கள் என்று அப்பனையும் மகளையும் கணவன் மனைவியாகக் கூட சோடி சேர்த்து கூட்டிவந்தவன் அவன்தானே.
சோடி வேட்டி வாங்கி தருவேன் நல்ல
சொகுசான பிராந்தி விஸ்கி ஜின் முதலான
வாடிக்கைக் குடிக ளெல்லாம் நித்தமும்
வகைவகையாக நானும் வாங்கி தருவேன்
நித்தமொரு கல்யாணம் செய்யவுந்தான்
நேர்த்தியான பெண்களை சேர்த்துத் தருவேன்
பொன்குவியல் குவியலாக இலங்கையில்
பூமி முழுவது மெங்குபார்த்தாலும்
நவரெத்தினம் விளையும் நாடு அங்கே போனால்
நரேந்தர பதியைபோல் நாமும் வாழலாம்
உண்மையை உறைத்தேன் நான் இன்னம்
உள்ளதெல்லாம் சொல்லநா ஓன்று போதாது .

Siragu andhara pizhai4

இப்படி அந்த நாட்டைப் புகழ்ந்து மக்களை கடத்திப்போனவன் அவன்தானே. துரை தேயிலையால் வரும் லாபத்தைக் கொண்டு சொகுசாக வாழ்கிறான். கங்காணியோ ‘கள்ளப்பேர்’ எழுதி வரும் பணம், தொழிலாளிகளின் கமிசன் பணம், போன்றவைகளோடும் அதிகாரத்திற்கு அடங்கிய பெண்களோடும் சொகுசாக வாழ்கிறான். என்னென்னவோ தகிடுதத்தங்கள் செய்து தொழிலாளிகளை ஏமாற்றி தோட்ட நிர்வாகம் செயல்பட்டாலும் தொழிற்சங்க செயல்பாடுகளுக்குப் பின் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட ஆங்காங்கே எதிர்ப்பு முணுமுணுப்பாக வருகிறது.

இலங்கையைப் பற்றி கங்காணிமார்கள் சொன்ன விபரங்கள் உண்மைக்கு மாறாக இருப்பதை அறிந்த மக்கள்,
ஆணை தன் தலைமேலே தானே மண் போட்டாபோல்
அய்யோ இலங்கை வந்தேன்
தீனை பெண்டாட்டி பிள்ளை பிதாயவர்களை
தேடி மனது நொந்தேன்.
சொம்தமா யிந்தியா தோட்டத்திலே தொழில் செய்து
சொகுசாய் காலம்கழித்தேன்
வந்தகங்காணியின் வார்த்தையை நம்பி
வழியில் நின்று விழித்தேன்
ஆசை வார்த்தை சொல்லி அழைத்து வந்து இங்கே
அவதிக் காளாக்கி விட்டான்.
என்று ஒரு புறம் புலம்பினாலும் தொழிலாளிகளின் இன்னலைப் போக்க எது தீர்வு? வெள்ளைக்காரனிடம் கமிசன் பெற்று தமிழகம் வந்து ஆசை வார்த்தைகள் கூறி, இலங்கை அழைத்துப்போய் சொல்லொண்ண துயரத்திற்கு மக்கள், ஆளான பிறகு என்ன செய்வது?
ஒற்றுமையாய் இருக்க வேண்டும்
உறுதி வேண்டும்
எல்லாம் ஒரு மனதாக வேண்டும்
உண்மையே வேண்டும்
சற்றுங் களைக்கா திருக்க வேண்டும்
சங்கங்கள் வேண்டும்
சன்மார்க்கம் தேட வேண்டும்
சத்தியம் வேண்டும்
தொழிற்கட்சி பலம் பெற வேண்டும் துயர் நீங்க வேண்டும்.
அழியா புகழ் வேண்டும்
அன்புதானே வேண்டும்!
கடலுக்கு இந்த பக்கமும் நிம்மதியில்லை; சென்ற இடத்திலும் நிம்மதில்லை; உடனே திரும்பவும் வழியில்லை; இரண்டும் கெட்டான் நிலையாக ‘அந்தரத்தில் தொங்கும்’ வாழ்விற்கு என்ன வேண்டும் !
தனக்கென உரிமை வேண்டும்! அதற்கு ஓர் தொழிற்சங்கம் வேண்டும்!
என தொழிலாளிகள் முடிவு செய்வதாக நாடகம் நிறைவு பெறுகிறது .

இந்த நாடகம் எழுதப்பட்ட காலமும் எழுதிய ஆசிரியரின் தொலைநோக்குப் பார்வையையும் நாம் உற்று நோக்கினால் இந்த படைப்பின் வலிமை புரியும். தான் ஒரு காங்கிரசு கொள்கை உடையோராக, காந்தியத்தின் ஆதரவாளராக இருப்பினும் வர்க்க ஒற்றுமையே தொழிலாளிக்கு விடிவைத் தரும் என்கிற உள்ளடக்க அரசியலை நாடகத்தில் முன் வைத்திருக்கிறார். ஆகவே முதல் புரட்சிகர அரசியல் நாடகம் என்பதும் இன்றைக்கும் தோட்டத் தொழிலாளிகளுக்குப் பொருந்துகிற நாடகம் என்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். புராண இதிகாச வடிவங்களே கலை இலக்கியத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த அந்த காலத்தில், எந்த வித புனைவும் இல்லாமல் மிக இயல்பாக பாத்திரங்களைப் படைத்து, எளிதான வசனங்கள் மூலமும், மனைவி மீனாட்சியம்மாள் பாடல்களாலும் படைக்கப்பட்ட இந்த நாடகம் மலையகத்திற்குக் கிடைத்த உன்னத இலக்கியம்.

இந்த நாடகத்தை பாதுகாத்து வைத்திருந்த ரோஜா முத்தையா நூலகத்திற்கும், அதனைப் பெற்று பதிப்பித்த ஆசிரியர் தோழர் ஆண்டனிஜீவா அவர்களுக்கும், குமரன் புத்தக இல்லம் பதிப்பகத்திற்கும் தோட்டத் தொழிலாளிகளின் சார்பாக நன்றிகள்!


தவமுதல்வன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அந்தரப் பிழைப்பின் அவலம்”

அதிகம் படித்தது