மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அல்கட்ராஸ் தீவில் . . .(பகுதி-3)

தேமொழி

Oct 21, 2017

Siragu alkatras1

III. உலகப்புகழ் பெற்ற அல்கட்ராஸ்:

லண்டன் நகரில் (செப்டம்பர் 28, 2017 அன்று) அமெரிக்காவின் அல்கட்ராஸ் சிறைச்சாலை அமைப்பை அடிப்படையாகக் கொண்ட “Alcotraz” (speakeasy-style bar called Alcotraz) என்ற ஒரு மதுபான விடுதி திறக்கப்பட்டுள்ளது. ஒரு சிறைச்சாலையின் மாதிரியில் துவக்கப்படும் மதுபான விடுதி என்பதுமக்களை எந்த அளவு அல்கட்ராஸ் சிறைச்சாலை ஈர்த்துள்ளது என்பதையே காட்டி நிற்கிறது.

உலகப் புகழ் பெற்றுள்ள அல்கட்ராஸ் மத்திய சிறைச்சாலையின் நோக்கம் கைதிகளை சீர்திருத்தி மறுவாழ்வு அளிக்கும் நோக்கமல்ல. ஒருமுறை அல்கட்ராஸ் வந்தால் அதுவே அவர்களின் முடிவு என்ற நிலையே இருந்தது. அதைக் கைதிகளும் அறிந்திருந்தனர். எந்த நீதிமன்றமும் அல்கட்ராஸ் சிறையில் அடைக்கவும் எனக் கைதிகளுக்கு தண்டனைக் கொடுத்ததில்லை. பிற மத்திய சிறைச்சாலைகளில் இருந்து தப்பிக்க முயல்பவர்கள், வன்முறையாளர்கள், அதிக அளவு கண்காணிப்பில் இருக்க வேண்டியவர்கள் என்பவர்கள் அல்கட்ராஸ் சிறைக்கு மாற்றப்படுவார்கள். அதாவது தண்டனை பெற்ற கைதிகள், குற்றம் செய்து அதிக அளவு தண்டனையாக அல்கட்ராஸ் சிறைக்குப் போவது (“the prison system’s prison”) வழக்கம். அல்கட்ராஸ் சிறைச்சாலைகளின் சிறை.

அதனால் மிகவும் பிரபலமாக செய்திகளில் அடிபட்ட கொலை, கொள்ளை, கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டவர்கள் அல்கட்ராஸ் சிறைக்கு வர நேர்ந்தது. இவர்களைச் சீர்திருத்தும் முயற்சியைவிட, இவர்கள் மீண்டும் மக்களிடையே நடமாடி மக்களுக்கு மேன்மேலும் தொல்லை தராமல் இருக்கவே அதிகக் கண்காணிப்பின் கீழ் அல்கட்ராஸ் சிறையில் அடைத்து வைக்கப்பட்டார்கள் என்பதே நடைமுறையாக இருந்தது.

புகழ்பெற்ற கைதிகள்:

அல் கப்போன் (Al Capone) என்ற சிக்காகோ பெரும்புள்ளி அவரது சமூக விரோத செயல்களுக்காகத் தண்டிக்கப்பட்டார். இவர் நாயகன் திரைப்படத்தின் வேலுநாயக்கருடன் ஒப்பிடக்கூடிய வகையில் வாழ்ந்தவர். கொலைக் குற்றத்திற்காக அல் கப்போனை அட்லாண்டா சிறையில் அடைத்தாலும், சிறைக்காவலர்களுடன் ஊழல் செய்து, அவர்கள் உதவியுடன் மறைமுகமாகச் சிக்காகோ நகரின் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தனது ஆளுமையைக் காட்டி வந்தார். இதனால் இவரை அல்கட்ராஸ் சிறைக்கு மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அல்கட்ராஸ் சிறையில் 1930-களில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத்தண்டனையை அனுபவித்தார். இது செய்தித்தாளில் தலைப்புச் செய்தியாக அதிக பரபரப்பாக வெளியாகியவண்ணம் இருந்தது.

Siragu Alcatraz1

இவரைப் போலவே, ஆள்கடத்தல்காரன் ‘மெஷின் கன் கெல்லி’ (“Machine Gun” Kelly), கொள்ளைக்கூட்டத் தலைவன் ‘ஆல்வின் க்ரீப்பி கார்ப்பிஸ்’ (Alvin “Creepy Karpis” Karpowicz/the first “Public Enemy #1″), கொலைகாரனும் பறவை நூல்கள் எழுதிய ‘பேர்ட் மேன் ஸ்ட்ரோவ்ட்’ (Robert Stroud/“Birdman of Alcatraz”) என மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட குற்றவாளிகள் கடைசியில் வந்து சேருமிடம் அல்கட்ராஸ் சிறையாகவே இருந்தது. விலைமதிப்பிட முடியாத உயர்வகைக் கார்களில் பயணித்து, மாளிகைகளில் வசித்து, பலரையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்தவர்களும் இறுதியில் சிறைச்சாலையின் சீருடை உடுத்தி, சிறைக் கட்டுப்பாட்டில் அனைவரையும் போலவே உண்டு உறங்கிப் பணிபுரிந்து தங்கள் வாழ்வைக் கடத்தினார்கள். பிறப்பும், இறப்பும் அனைவருக்கும் ஒன்றாக இருப்பதை ஒத்திருக்கிறது சமநீதி சிறைச்சாலை வாழ்க்கை. நீளம் 9 அடி, அகலம் 5 அடி, உயரம் 7 அடி கொண்ட குறுகிய அறையில் சிறைக் கம்பிகளுக்குப் பின்னர்தான் அனைவருக்குமே வேறுபாடில்லாத வாழ்க்கை. உணவு, உடை (வெளிர்நீல சட்டையும், சாம்பல் நிற கால்சராயும், பருத்தியிலான நீண்ட உள்ளாடைமற்றும்காலுறைகள்), வாழும் இடம், மருத்துவ உதவி போன்ற அடிப்படைத் தேவைகள் மட்டுமே அளிக்கப்பட்டன. நூலகம், வேலை, பார்வையாளர்கள் மற்றும் உறவினர்களைச் சந்திக்கும் வாய்ப்பு, அவர்களுடன் கடிதத் தொடர்பு, பொழுது போக்க உதவும் ஓவியம், இசை வாய்ப்பு போன்றவை நன்னடத்தையின் அடிப்படையில் சலுகைகளாக வழங்கப்பட்டன(entitled to food, clothing, shelter and medical attention. Anything else is a privilege, as per 1956- Penitentiary’s Rules & Regulations). ஐந்தாண்டுகளுக்குத் தொடர்ந்து நன்னடத்தை வழியில் செல்வோர் கண்காணிப்பு அதிகம் தேவையற்ற பிற மத்திய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டு விடுவார்கள். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த பேர்ட் மேன் என்ற கைதி 17 ஆண்டுகளும், ஆல்வின் க்ரீப்பி கார்ப்பிஸ் 25 ஆண்டுகளும் அல்கட்ராஸ் சிறையில் கழித்ததும் வரலாறு.

புகழ் பெற்ற தப்பும் முயற்சிகள்:

சிறைச்சாலை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்திலேயே பல தப்பிக்கும் முயற்சிகள் நடந்துள்ளன. மத்திய சிறைச்சாலையாக மாறிய பின்னரும் இது தொடர்ந்தது. முப்பதாண்டுக் காலத்தில் 14 தப்பிக்கும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு, அவற்றில் 36 கைதிகள் தப்பிக்க முயன்றுள்ளார்கள். இவர்களில் 23 பேர் திரும்பப் பிடிக்கப்பட்டுள்ளார்கள், 6 பேர் தப்பிக்கும் முற்சிக்காகச் சுடப்பட்டு இறந்து விட்டார்கள், 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள், 5 பேர் உடலாகவோ உயிருடனோ கிடைக்கவில்லை. இவர்களும் கடலில் மூழ்கி இறந்திருப்பார்கள் என அமெரிக்க அரசு எண்ணுகிறது, அவ்வாறே ஆவணப்படுத்துகிறது.

கைதிகள் தப்பமுயன்ற நிகழ்வுகளும் அதன் விளைவுகளும் அடுத்து பட்டியிலப்பட்டுள்ளது …

குப்பை எரிக்கும் வேலையில் இருந்தவர் தீவின் விளிம்பில் இருக்கும் இரும்புவேலியில் ஏறித் தப்பிக்க முயன்றபோது, இறங்குமாறு அவருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையை ஏற்று இறங்க மறுத்ததால், 75 அடி உயரத்தில் இருக்கும்பொழுது சுடப்பட்டு கீழே விழுந்து இறந்தார்.

தொழிற்கூடத்தின் சன்னல் கம்பிகளை ஏற்கனவே அறுத்து வைத்திருந்த இரு கைதிகள், ஒரு மோசமான புயல் வீசிய நாளில் கம்பிகளை வளைத்து வெளியேறிக் காணாமல் போய்விட, அவர்கள் உயிருடனோ உடலாகவோ கிடைக்காத பொழுது அவர்கள் புயலில் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று நம்பப்பட்டது.

மற்றொருமுறை தொழிற்கூடத்தில் பணியில் இருந்த சிறைக் கைதிகள் மூவர் சுத்தியலால் சிறைக்காவலரைத் தாக்கிக் கொலை செய்துவிட்டு கூரையில் ஏறித் தப்ப முயன்றபொழுது, கூரையில் காவலிருந்த மற்றொரு சிறைக்காவலரால் சுடப்பட்டதில் ஒருவர் இறந்துவிட மற்ற இருவரும் பிடிபட்டனர்.

தனிமைச்சிறையில் இருந்த ஐவர் சிறைக் கம்பிகளை வெட்டி வளைத்து வெளியேறி சன்னல் வழியாகத் தப்பி கடல்நீரை எட்டும் சமயம் காவலர்களால் பார்த்து சுடப்பட, மூவர் சரணடைந்துவிட, சரணடைய மறுத்துத் தப்பியோடிய இருவரும் சுடப்பட்டதில் பார்க்கர் என்பவர் இறந்தார். இறந்த பார்க்கரின் பெயர் அப்பகுதி கடற்கரைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது தப்பியோடினால் சுடப்படுவோம் என்பது மற்ற கைதிகளுக்கு என்றும் நினைவில் இருக்க எடுக்கப்பட்ட முயற்சி.

மற்றொரு சமயம் நான்கு கைதிகள் தொழிற்கூடத்தில் காவலர்களை பிணைக்கைதிகளாகப் பிடித்த பின்னர், மற்ற அதிகாரிகள் அவர்களிடம் என்ன செய்தாலும் அவர்கள் தப்பமுடியாது என விளக்கிய பின்னர் தானே சரணடைந்தனர்.

மற்றொரு கைதி தப்பி கடலுக்கு ஓடிய பிறகு, செப்டம்பர் மாதத்துக் கடல்நீரின் குளிரைத் தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் சிறைக்கே ஓடிவந்துவிட்டார்.

மீண்டும் கைதிகள் நால்வர் தொழிற்கூடத்தில் காவலாளிகள் இருவரை பிணைக்கைதிகளாகக் கொண்டு தப்பியோடி கடல் பகுதியை அடைந்தனர். அவர்களில் இருவர் பிடிபட்டனர். ஒருவர் சுடப்பட்டு கடலில் மூழ்கி இறந்தார், உடல் கிடைக்கவில்லை. மற்றொருவரும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால் அவர் கடற்கரையில் இருந்த பாறைக்குகையில் இருநாள் ஒளிந்திருந்து, குளிர் தாங்க முடியாமல் (ஏப்ரல் மாதம்) சிறைப்பகுதிக்கே திரும்பி வரவும் அவரைப் பிடித்து மீண்டும் அடைத்து வைத்துவிட்டார்கள்.

சலவை செய்யும் அறையில் இருந்து தப்பியோடியவர் கடற்கரையை எட்டும்முன் பிடிபட்டது.படகுத்துறையில் இருந்து தப்பியோடி பெரும் பாறைகளுக்கு இடையில் மறைந்திருந்தவரைக் காவலர்கள் பிடித்துக் கொண்டு வந்தது.காவலாளியைத் தாக்கிவிட்டு தப்பி ஓடி நீந்த முயன்ற இருவரில் ஒருவர் பிடிபட்டது, மற்றவர் உடல் இருவாரங்களுக்குப் பிறகு கடலில் மிதந்த பொழுது அவர் நீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.

உணவறையில் வேலை செய்தவர்களில் இருவர் சன்னல் கம்பிகளை அறுத்து வளைத்து வெளியேறி நீரில் குதித்து நீந்தித் தப்ப முயன்ற பொழுது, கடல் நீரோட்டத்தில் சிக்கிப் பாறையில் ஒதுங்கிய ஒருவரையும், குளிரில் விறைத்துப்போய் கரையொதுங்கிய மற்றவரையும் சிகிச்சை அளித்துக் காப்பாற்றி சிறைக்குக் கொண்டுவந்தது.சலவைக்கு வந்த இராணுவ சீருடையை அணிந்து கொண்டு, ஒன்றும் தெரியாத அப்பாவி போல இராணுவப் படகில் ஏறி சான் பிரான்சிஸ்கோ போக நினைத்த கைதி ஒருவர் விதி வசத்தால் படகு இராணுவம் முகாம் உள்ள வடக்கே இருக்கும் ஏஞ்சல் தீவுக்குச் சென்றுவிட, அல்கட்ராஸ் சிறைக்காவல் அதிகாரி கரையிறங்கிய அவரை வரவேற்று கைவிலங்கிட்டு மீண்டும் சிறைக்கே அழைத்து வந்துவிட்டது எனச் சுவராசியமான பல தப்பும் முயற்சிகளிலும் தனித்து நின்றவையும் உள்ளன.

Siragu Alcatraz2

தப்பிக்கும் முயற்சிகளில் அதிக கவனத்தைக் கவர்ந்தவை இரண்டு நிகழ்வுகள். இவற்றில் ஒன்று,   1946 ஆம் ஆண்டில் ‘அல்கட்ராஸ் போர்’ (“Battle of Alcatraz”) என்றே குறிப்பிடும் நிலையை அடைந்தது. இந்த நிகழ்வில், சிறையின் நடவடிக்கைகள் இரண்டு நாட்களுக்குக் குற்றவாளிகள் கையில் மாறி சிறை அல்லோலப்பட்டது. ஆறு கைதிகள் சிறைக்காவலாளிகளைத் தாக்கி ஆயுதங்களையும் துப்பாக்கிகளைக் கைப்பற்றியதும், மற்ற சிறைக்கைதிகளை விடுவித்ததும், சிறைக்காவலர்களே கைதிகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டதும், வெளியில் இருந்து அமெரிக்க மரைன் இராணுவப் பிரிவினர் (U.S. Marines) உதவிக்கு வரவழைக்கப்பட்டதும், சிறைக்காவலாளி இருவர் கொல்லப்பட்டதும், 18 பேர் காயப்பட்டதும், தப்பிக்க நினைத்த அறுவரில் மூவர் கொல்லப்பட்டதும், பிடிபட்ட மூவரில் இருவருக்கு மரணதண்டனை என்று தப்பிக்கும் முயற்சி படுதோல்வியில் முடிந்தது.

Siragu Alcatraz3

மற்றொன்று, ஹாலிவுட் திரைப்படம் எடுப்பதில் துவங்கி, இன்றுவரை பேசப்படும் தப்பிக்கும் முயற்சிகளில் மிகவும் பிரபலமடைந்த மோரிஸ் மற்றும் ஆங்க்லின் சகோதரர்கள் முயற்சி. இன்றுவரை உயிரோடோ இறந்தோ கிடைக்காதவர்களாகக் கருதப்படுபவர்கள் மோரிஸ் மற்றும் ஆங்க்லின் சகோதரர்கள் இருவர். இவர்கள் எப்படித்தான் திட்டம் போட்டார்கள், என்ன செய்தார்கள், எப்படித் தப்பினார்கள், அவர்களுக்கு என்ன நிகழ்ந்திருக்கலாம் என்பதும், இவர்கள் தப்பியதைக் குறித்து துப்பறியும் அதிகாரிகளும், பிறரும் என்ன நினைக்கிறார்கள் என்பதெல்லாம் விரிவாகப் பார்க்க வேண்டிய மற்றொரு கதை.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அல்கட்ராஸ் தீவில் . . .(பகுதி-3)”

அதிகம் படித்தது