மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இணையவழி அறிவிப்புகள் உருவாக்குவோருக்கு எளிய குறிப்புதவிகள்

தேமொழி

Sep 5, 2020

siragu WEBINAR RULES

முதற்பொருள் – நிலமும், பொழுதும்; (இவை முதன்மையும் அடிப்படையுமான பொருள்)

கருப்பொருள் – அந்த இடத்தைச் சார்ந்துள்ளவை

உரிப்பொருள் – அங்கு நிகழும் செயல்பாடுகள்

என்று தமிழ் இலக்கணம் வரையறுக்கிறது.

ஆனால், இது தமிழ் இலக்கியங்களுக்கான இலக்கண விதிகள் மட்டும் என்று எண்ணுவதுதான் நாம் செய்யும் ஒரு பிழை. எந்த ஒரு நிகழ்வு குறித்து விவரிக்கவும், செய்தி சொல்வதற்கும் இதுதான் அடிப்படை இலக்கணம் என்பது சற்றே வியப்பு தருவதாக இருக்கலாம், ஆனால் அதுதான் உண்மை.

ஆகவே, இலக்கணம் கூறும் இந்த விதிகள் இணையத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் என்பதால் நிகழ்ச்சிகளுக்கான தகவல்களை ஒரே பார்வையில் தெரிந்து கொள்ளும் வகையில் அவற்றுக்கான அறிவிப்புகள் இருக்க வேண்டும். இத்தேவையை விளக்கும் நோக்கில் கீழ்க்காணுமாறு பிரித்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

1. முதற்பொருள்:

இடம் – ஜூம் செயலி, கூகுள் மீட், ஃபேஸ்புக் நேரலை, யூடியூப் நேரலை (இவற்றில் இணையும் முறை பற்றிய செய்தி)

சிறு பொழுது – நிகழ்ச்சி நடக்கவிரும் மணி நேரம் (காலை, நண்பகல், மாலை, இரவு பற்றிய குறிப்பு)

பெரும் பொழுது – நாள் (இந்த ஆண்டில், இந்த மாதத்தில், இந்த நாளில் பற்றிய குறிப்பு)

2. கருப்பொருள்:

நிகழ்ச்சியின் பொருண்மை – தொன்மை, மரபு, பண்பாடு, கலைச்செல்வங்கள், கல்வெட்டுகள், அரசியல், ஆன்மீகம், அறிவியல், வரலாறு .. இன்ன பிற பொருள் குறித்த ஒரு நிகழ்ச்சி;

இந்த நிகழ்ச்சி யாரால் வழங்கப்படுகிறது – அதாவது பங்குபெறுவோரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் யார் யார் என்ற தகவல்.

3. உரிப் பொருள்/செயல்பாடு:

என்னவகை செயல்பாடு – சொற்பொழிவு, கலந்துரையாடல், விவாதம், பட்டிமன்றம், ஆடல் பாடல் போன்ற கலை நிகழ்ச்சி, நூலாய்வு, பயிலரங்கம் .. இன்ன பிற செயல்பாடுகள் நிமித்தமாக ஒன்றுகூடல்

இந்த அடிப்படைச் செய்திகள் எவையும் தேடும் வகையில் ஒரு அறிவிப்பு அமையக் கூடாது. ஒரே பார்வையில் தெரியும் வகையில் அமைய வேண்டும்.

அறிவிப்புகள் உருவாக்கம்:

இணையக் கூடல்கள் பல்கிப் பெருகிவிட்ட காலம் இது. ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று நான்கு அறிவிப்புகளாவது நமது கவனத்திற்கு வருகின்றன. இணையவழி நிகழ்வுக்கான அறிவிப்புகளும் அதே இணையம் வழியாகத்தான் நம்மை வந்து அடைகின்றன. ஆனால் அவை காலத்திற்கேற்ப மாறுதல்களைக் கண்டுள்ளதாகத் தெரியவில்லை. அறிவிப்புகள் தயாரிப்பதில் காலத்திற்கேற்ற மாற்றம் தேவை. பழங்கால திருமண அழைப்பு, குடமுழுக்கு அறிவிப்பு, கவியரங்க அழைப்புகள் போன்றவற்றைக் கடந்து வருவது காலத்தின் கட்டாயம். அதே போன்று வடிவமைக்கப்படுவது இக்காலத்திற்குப் பொருந்தாது.

அறிவிப்புகளை பிடிஎஃப்(PDF) ஆவணங்களாக உருவாக்கிப் பகிர்வது மிகப் பழைய முறை. பிடிஎஃப் அறிவிப்பு ஒரு அழகான அச்சுப் பிரதி அழைப்பிதழ் போல இருக்கும்தான், ஐயமில்லை. அதில் மேலும் தகவலுக்கு, கூட்டத்தில் இணையும் முறை ஆகியவற்றைச் சொடுக்கக்கூடிய சுட்டிகளை இணைக்கும் வாய்ப்பும் உள்ளது, அதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் அதைக் கூட பயன்படுத்தாமல் அறிவிப்புகள் உருவாக்கப்படுகின்றன என்ற நிலை தொழில் நுட்ப வளர்ச்சியின் உதவியை முழுப் பயனுக்கும் கொண்டு வராத செயல்.

இக்காலத்தில் அறிவிப்புகள் மின்னஞ்சலில் கூட அனுப்பப்படுவதில்லை. மின்னஞ்சல் முறை என்பதே சென்ற நூற்றாண்டின் தொடர்புக் கருவி என்ற கருத்துதான் இளையதலைமுறையிடம் நிலவுகிறது. தங்களுக்குத் தேவையான சமூகவலைத்தள கணக்கு உருவாக்கத்தான் மின்னஞ்சல் பயன்பாட்டில் இருந்து வருகிறது, அதுவும் விரைவில் மாறிவிடக் கூடும். அறிவிப்புகள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக, ஃபேஸ்புக், வாட்சப், டிவிட்டர் போன்றவற்றில்தான் பகிரப்படுகின்றன. இவற்றுக்கு ஏற்றவாறு அறிவிப்புகள் உருவாக்கும் தேவை நிகழ்ச்சி நடத்துவோருக்கு உள்ளது.

இனி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அறிவிப்புகள் படங்களாக இருப்பதே உதவும். பிடிஎஃப் இணைப்பாக மின்னஞ்சல் வழியோ அல்லது சமூக வலைத்தளங்கள் வழியோ பகிரப்பட்டால் அதைச் சொடுக்கித் திறந்து செய்தியைப் படிக்க பயனாளர் ஆர்வத்துடன் இருப்பார்கள் என நினைப்பது உண்மை அறியாதவர் எண்ணம். நாமே அவ்வாறு ஒரு அறிவிப்பு வந்தால் எவ்வளவு ஆர்வமுடன் எதிர்கொள்கிறோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

16:9 – அகலம்:உயரம் அளவு விகிதம் என்பது ‘அகலத்திரை உருவ விகிதம்’ (Widescreen aspect ratio) என அழைக்கப்படுகிறது. இது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உலக அளவில் தரப்படுத்தப்பட்ட ஒரு அளவாகவும், தொலைக்காட்சி மட்டும் கணினித் திரைகளுக்கான அளவாகவும் மாறிவிட்டது. 16:9 விகித அளவில் உருவாக்கப்படும் அறிவிப்புகள் சமூக வலைத்தளங்களில் அறிவிப்பின் செய்தி வெட்டுப்படாமல் கச்சிதமாகத் தெரியும் வகையில் அமையும். இது மிகவும் முக்கியம். இந்த அளவு பட அறிவிப்புகளால் மேலும் ஒரு பயன் என்னவெனில், யூடியூப் காணொளியாக வெளியிடுகையில் முகப்புப் படமான ‘தம்ப்நெயில்’ சிறுபடமாக (Thumbnail) இதையே பயன்படுத்தவும் முடியும், விளிம்புகளில் கறுப்புப் பட்டை இன்றி பார்ப்பதற்கு நேர்த்தியாகவும் அமைந்துவிடும்.

மேலும் இந்த 16:9 அளவில் எப்படித் தெரிவு செய்வது என்றெலாம் குழம்ப வேண்டாம். மைக்ரோசாஃப்ட் பவர்பாயிண்ட் பயனாளர்கள் அறிவிப்பை ஒரு ஒரு ஸ்லைடு ஒன்றில் தயாரித்து அதைப் படமாக மாற்றிவிட்டாலே போதும். அதன் ஸ்லைட் அளவான “1280 × 720 p×” அளவு என்பது 16:9 என்ற அளவுதான்.

பொதுவாக 3840 × 2160 அல்லது, 2560 × 1440 அல்லது, 1920 × 1080 அல்லது, 1280 × 720 என்று பலவேறு அளவுகள் அகலத்திரை உருவ விகிதம் என்று கொடுக்கப்பட்டாலும் அவை யாவும் 16:9 உருவ விகிதம்தான். ஆகவே மைக்ரோசாஃப்ட் பவர்பாயிண்ட்டில் உருவாக்கப்படும் அறிவிப்புதான் எந்த தளத்திலும் பகிரக் கூடிய அறிவிப்பு தயாரிக்க எவருக்கும் எளியதொரு வழி. பள்ளி மாணவரிடம் சொன்னாலும் அருமையாகச் செய்து கொடுத்து விடக் கூடிய ஒருமுறை என்பதால் இந்த முறைக்கே எனது பரிந்துரை.

பல அறிவிப்புகள் உருவாக்குவோர் தங்கள் வேலையை மேலும் எளிமைப்படுத்தியும் கொள்ளலாம். ஒரு டெம்ப்ளேட் போல அறிவிப்புகளை உருவாக்கிக் கொள்வது நேரத்தை மிச்சப்படுத்தும் வழி. ஆகவே, கொடுக்கப்படும் தகவல்களை மாறுபவை, மாறாதவை என இரு பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.

மேலே கொடுக்கப்பட்ட படத்தில் இதற்கான பிரிவுகள் காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு நிறுவனத்தின் பெயரும், அடையாள முத்திரையும் (Logo) மாறாதவை. இதனை எப்பொழுதும் தலைப்புப் பட்டையாக (படத்தில் – 1) நிரந்தரமாக அமைக்கலாம்.

அடுத்து, தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண், மின்னஞ்சல், நிறுவனத்தில் நேரலை அலைவரிசை, சமூக வலைத்தளம், இணைய தளம் போன்றவையும் மாறாதவை. இவற்றை அறிவிப்பின் அடிப்பட்டையாக அமைத்துவிடலாம் (படத்தில் – 4).

நடுவில் இருக்கும் பகுதியை இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஒரு பக்கம் படமும், மற்றொரு பக்கம் நிகழ்ச்சி, தலைப்பு, காலம், பங்களிப்போர் போன்றவற்றை அமைத்துக் கொள்ளலாம் (படத்தில் – 2 & 3). இந்தப் பகுதிகளை அறிவிப்பு உருவாக்குபவர் தனது கற்பனையையும், கைவண்ணத்தையும் காட்டும் வகையில் எப்படியும் மாற்றலாம்.

மற்றபடி ஒவ்வொரு முறையும் மாறாத செய்திகளை அப்படியே விட்டு விடலாம். இது அறிவிப்பு உருவாக்குபவருக்கு மட்டும் வேலையை எளிதாக்கும் என்பதைவிட, அந்த நிறுவனத்தின் பயனாளர்களுக்கும் செய்தியைப் புரிந்து கொள்வதில் ஒவ்வொருமுறையும் புதிதாகப் பார்வையிடத் தேவையின்றி இருக்கும். இந்த முறைதான் நாடு முழுவதும் தொடர்ச்சங்கிலியாக அங்காடிகள் வைத்திருக்கும் நிறுவனங்கள் கடைப்பிடிப்பதையும் நாம் அறிவோம். எந்த ஊரிலும் அவர்களுடைய எந்த ஒரு புதிய கடையில் நாம் நுழைந்தாலும் விரைவில் தேவையானவற்றைத் தேடி எடுத்துக் கொள்ளும் வகையில், பயனாளர்களைக் கருத்தில் கொண்டு (Customer-Centric Design/Customer-Oriented Design) பின்பற்றப்படும் வடிவமைப்பு வழிமுறை இது.

இணையவழி கருத்தரங்கில் இன்று பலர் இவ்வாறு உருவாக்கும் அறிவிப்புகளையேபங்கேற்பாளர், நாள், தலைப்பு ஆகியவை தெளிவாகக் காட்டும் இத்தகைய அறிவிப்புகளையே ‘விர்ச்சுவல் பின்திரையாக’ அமைத்துக் கொள்வதும் வழக்கமாக உள்ளது. காணொளி காண்பவருக்கு மட்டும் இது நிகழ்வு குறித்த முழுத் தகவலும் அறியத் தருவதில்லை, இது ஒரு ‘வாட்டர்மார்க்’ போலவே அமைந்து விடுகிறது. இதனால் காணொளி திருட்டுகளையும் தவிர்க்கலாம். இதற்கு எடுத்துக்காட்டாக, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வழங்கி வரும், ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. அவர்களின் (பார்க்க: https://www.youtube.com/playlist?list=PL-2LGdu8vvFv98qoMA2TL_FRbJCqqmItI) “பாலாவின் சங்கச்சுரங்கம்” யூடியூப் காணொளிகளைக் கூறலாம். காணொளியின் பின்புலத்தில் அவர் வழங்கும் உரையின் செய்திகள் தெளிவாகக் காணக் கிடைக்கும்.

அறிவிப்பு வெளியிடும் முன்னர்.. கீழுள்ளவற்றைக் கொடுத்துவிட்டோமா என்று ஒவ்வொருமுறையும் சரி பார்த்தலை விதியாகக் கொள்ள வேண்டும்.

யார் வழங்கும் நிகழ்ச்சி (அமைப்பு/நிறுவனம்),

என்னவகை நிகழ்ச்சி/தலைப்பு (கலை, விவாதம், பயிலரங்கம், கருத்தரங்கம், சொற்பொழிவு),

பங்கு பெறுவோர் யார் (உரையாளர்கள், கலைஞர்கள்),

எந்த நாளில் எந்த நேரத்தில் (நாளும், ‘நாட்டின்’ நேரமும்)

எந்த தளத்தில் எப்படி இணைய வேண்டும்(நேரலை செயலி: சூம், ஃபேஸ்புக், யூடியூப், கூகுள் மீட்)

போன்றவை ஒரே பார்வையில் தெரியுமாறு கொடுக்கப்பட வேண்டும்.

இத்தகவல்கள் அடர்த்தியான நிறத்தில் வெளிர் நிற எழுத்துகளிலும், அல்லது

வெளிர் நிறப் பின்னணியில் அடர்த்தியான நிற எழுத்துக்களையும் பயன்படுத்தி உருவாக்குதல் படிக்க எளிதாக இருக்கும். நிறத் தேர்வுகள் அவரவர் விருப்பப்படி நிகழ்ச்சியின் பொருண்மைக்கு ஏற்பவும், தேர்வு செய்யப்பட்ட பின்புலப் படங்களுடன் பொருந்திப் போவதாக இருக்கலாம். ஆனால் பின்புலப் படங்கள் செய்தியைப் படிக்க இடையூறாக இல்லாது மங்கலாக இருக்க வேண்டும். நிகழ்ச்சிக்கான ஓரிரு படங்களே போதும், சிறப்புப் பங்களிப்பாளர்கள் படங்கள் மட்டும் தேவையானவை. வாழ்த்துரை, நன்றியுரை, இறைவணக்கம், நாட்டுப் பண் பங்களிப்பாளர்களுக்கெல்லாம் படங்கள் தேவையில்லை.

நிறங்களின் எண்ணிக்கை அடிப்படை நிறங்களான கருப்பு வெள்ளை ‘உட்பட’ 6 நிறங்கள் மட்டுமே இருத்தல் நலம். அதற்கு மேல் கண்ணை உறுத்தும் நிலை வரும், அறிவிப்பின் அழகும் கெடும். பிற வண்ணங்கள் நிகழ்ச்சியின் படங்களுடன் இணைந்து செல்லும் வண்ணங்களாக இருக்க வேண்டும்.

பெரும்பான்மையான சமூக வலைத்தளங்களில் செய்தி வெட்டுப்படாமல், தெளிவாகத் தெரியும் இந்த 16:9 அளவு படங்களை, கைபேசி வழியே, சமூக வலைத்தளங்களில் அறிவிப்பைப் பெறுபவர்கள் கிடைமட்டமாக கைபேசி திரையைச் சுழற்றிப் பார்க்கையில் இந்த 16:9 அளவு அறிவிப்பு தெளிவாக திரைமுழுவதும் நிறைந்து படிக்கக் கூடிய வகையில் இருக்கும். அறிவிப்புடன் அதற்கு உதவக் கூடிய சுட்டிகளையும் படத்தின் கீழ் இணைத்து அனுப்புவதே நிகழ்விற்குப் பலரை அழைத்து வரும். சமூக வலைத்தளங்களில் பகிரும் நோக்கில் அறிவிப்புகள் தயாரிக்கும் எவருக்கும் இக்குறிப்புகள் உதவும்.

Remember “A picture is worth a thousand words”


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இணையவழி அறிவிப்புகள் உருவாக்குவோருக்கு எளிய குறிப்புதவிகள்”

அதிகம் படித்தது