மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்திய பாராளுமன்றம் – 2019

வெங்கட் நடராஜன்

Apr 6, 2019

siragu election-commission3

இன்றைய கமல்ஹாசன், நேற்றைய விஜயகாந்த் என போட்டி போட, தேசிய கட்சிகள் மாநில கட்சிகளுடன் கூட்டணியமைக்க, மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை நெருங்குகிறது. ஏழு தேசிய கட்சிகள் உட்பட மொத்தம் 2000 கட்சிகள் போட்டியிடுகின்றன. 90 கோடி வாக்காளர்களைக் கொண்ட உலகின் மாபெரும் சனநாயகத்தின் 543 தொகுதிகளுக்கு சுமார் 8000 வேட்பாளர்கள் களமிறங்குகிறார். இதில் 272 என்ற மாயாஜால எண்ணை அடையும் கட்சிக்கே அடுத்த ஐந்து ஆண்டுகள் பாரத துணைக்கண்டத்தை கட்டியாளும் அரிய வாய்ப்பு வழங்கப்படும்.

இதில் எந்த ஒரு தனிக் கட்சியும் அறுதிப்  பெரும்பான்மை பெறுவதாகத் தெரியவில்லை. எனவே, மீண்டும் ஒரு கூட்டாட்சியயை நோக்கியே 2019 தேர்தல் செல்வது உறுதியாகிறது. குறைந்தபட்ச அரசாங்கத்தில் சில குழப்பங்கள் இருந்தாலும் அதில் பல நன்மைகளும் இருக்கின்றன.

siragu election1கூட்டணி அரசின் நன்மைகள்:

1)பல்வேறு மொழி, மதம், இனம் கொண்ட துணைக்கண்டத்தை கூட்டணி அரசே பிரதிபலிக்க முடியும்.

2)தேசிய மற்றும் மாநில கட்சிகள் இணைந்து செயல்படுவதால் வேற்றுமை என்ற பலவீனத்தை ஒற்றுமை எனும் பலமாக மற்ற முடியும்.

3)கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒருமுகமாக முடிவெடுத்தால் மட்டுமே மசோதா சட்டமாக்கப்படும். இதனால் அனைவருக்கும் பொருந்தும்படியான தேவையான சட்டங்கள் மட்டுமே இயற்றப்படும்.

4)அரசாங்கம் திறம்பட செயல்பட கூட்டணி ஒரு உந்து சக்தியாக இருக்கிறது.

கூட்டணியில் பல நன்மைகள் இருந்தாலும் சில பலவீனங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

கூட்டணி அரசின் பலவீனங்கள்:

1) குறுகிய நோக்கம் கொண்ட சிறு கட்சிகள் கூட அரசின் ஸ்திரத்தை ஆட்டம் காண செய்யமுடியும்.

2) அனைத்து கட்சிகளுக்கும் ஆட்சி அதிகார பகிர்வில் ஏற்படும் கட்சி பூசல்கள்.

3) சில சமயங்களில், அனைவரையும் திருப்திபடுத்தி தேசிய அளவில் சட்டம் கொண்டு வருவது மிகக் கடினம். இதனால் தேசிய வளர்ச்சித் திட்டங்கள் முடங்குகிறது.

siragu election2

கூட்டணி உடைந்த (குறுகிய)வரலாறு:

விபிசிங் 1989 – பா.ச.க தலைவர் அத்வானி கைதினால் தன் ஆதரவை விலக்கியது.

சந்திரசேகர் 1990 – காங்கிரசு தலைவர் ராஜிவ்காந்தி விசாரணையில் அதிருப்தியடைந்து தன் ஆதரவை விலக்கியது. பட்ஜட் கூட நிறைவேற்றாமல் அரசு கவிழ்ந்தது. இந்திய சர்வதேச மதிப்பீடு தரமிறங்கியது.

கௌடா 1996 – காங்கிரசு தலைவர் கேசரி வழக்கில் அதிருப்தியடைந்து தன் ஆதரவை விலக்கியது.

குஜரால் 1997 – திமுக அரசை நீக்க வேண்டும் என்ற காங்கிரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், தன் ஆதரவை விலக்கிக் கொண்டது.

வாஜ்பாய் 1998 – திமுக அரசை நீக்க வேண்டும் என்ற அ.தி.மு.க கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், தன் ஆதரவை விலக்கிக் கொண்டது.

மேற்காட்டிய கூட்டணிகள் வீழ்ந்தாலும், அடுத்து வந்த வாஜ்பாய் (1999 – 2004) மற்றும் மன்மோகன் (2004 – 2014) கூட்டணி ஆட்சிகள் வெற்றிகரமாக செயல்பட்டதை நாம் மறுக்க முடியாது. இந்த காலகட்டங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் துரிதமானது. ராவ் (1991 – 1996) ஐந்து ஆண்டுகள் பூர்த்தியானாலும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடிக்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கிய ஊழலில் சிக்கியது.

அண்மைய வரலாற்றை ஆய்வு செய்யும்போது, எதிர்கால கூட்டணி திறம்பட செயல்பட 50 சதவீத வாய்ப்பு மட்டுமே உள்ளது.

கூட்டணி அரசு எவ்வாறு செயல்பட வேண்டும்?

1)தங்கள் அரசியல் வேறுபாடுகளை கலைத்துவிட்டு ஒருங்கிணைந்து ஒரு கட்சிபோல் செயல்பட வேண்டும்.

2) தங்கள் சுயநலத்தை விடுத்து மக்களின் பொது நலனைக் கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும்.

3) மக்களவை உறுப்பினர், தமக்குள் இருக்கும் அரசியல் வாதியை மறந்துவிட்டு, தம்மை தேர்ந்தெடுத்த மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும்.

4) தேர்ந்தெடுத்த தொகுத்து மக்களின் நோக்கத்தைப் புரிந்து அவர்களது குறைநீக்க அயராது பாடுபடவேண்டும்.

இவ்வாறு செயல்பட்டால் நிச்சயம் ஒரு வெற்றிகரமான அரசாங்கத்தை மத்தியில் உருவாக்க முடியும்.

நிலையானஅரசு:

இந்திய போன்ற மாபெரும் சனநாயகத்திற்கு நிலையான அரசாங்கம் இன்றியமையாதது. பொருளாதாரம்,அந்நிய முதலீடு, தொழில்வளர்ச்சி, நாட்டின் பாதுகாப்பு போன்றவை இதைச் சார்ந்தே அமையும். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் மக்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்கிறார்கள்.

ஆனால் சில நேரங்களில், கட்சித்தாவல், நம்பிக்கை இல்லாதத் தீர்மானம், சுயநலம் போன்ற காரணிகளால், துரதிருஷ்டவசமாக, கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்படுகிறது. இதனால் மீண்டும் வரும் இடைத்தேர்தல், பணவிரயம், நேரவிரயம் மற்றும் குழப்பத்தையும் உருவாக்குகிறது. சட்டம் சீர்குலைவதோடு நாட்டின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால் இடைத் தேர்தலை யாரும் விரும்புவதில்லை.

இதைத் தடுக்க, கூட்டணி அமைத்தால் ஐந்து ஆண்டுகள் தொடரவேண்டும் என்ற ஒப்பந்தம் வேண்டும். கூட்டணியில் இருந்து விலகினால், தேர்ந்தெடுத்த மக்களும் தங்களது வாக்குகளைத் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை வரவேண்டும். அதுபோன்ற ஒரு நிலை வந்தால்தான் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். அதுவே உண்மையான சனநாயகம்.

மீண்டும் 1996/97 போல் பல வீனமான கூட்டணி அமைந்தால், மக்கள் பொறுமையிழந்து, தேசிய கட்சிகளுக்கே மட்டுமே வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதுபோல் அல்லாமல், 2019 இந்திய கூட்டணி அனைத்து தரப்பு மக்களும் மெச்சும் அரசாங்கமாக அமையும் என்று நம்புவோமாக.


வெங்கட் நடராஜன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்திய பாராளுமன்றம் – 2019”

அதிகம் படித்தது