இந்த ஆண்டின் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 66% குறைவு
Dec 9, 2016
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் வடகிழக்கு பருவ மழை காலமாகும். இந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தாமதமாக துவங்கியது. நவம்பர் மாதமும் மழை பெய்யாத நிலையில், இடையில் உருவான நாடா புயலும் வலுவிழந்தது. இந்த வருடம் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை.
இதன் காரணமாக இயல்பை விட இந்த வருட வடகிழக்குப் பருவ மழை 66% குறைந்துள்ளது என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 45 ஆண்டுகளில் 1974, 1995 இந்த இரண்டு ஆண்டுகளில்தான் இயல்பை விட குறைவாக மழை பெய்துள்ளது. 1974ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சி போன்று இந்த ஆண்டு ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள வர்தா புயல் டிசம்பர் 12ம் தேதி வலுவிழந்த நிலையில் நெல்லூர்- காக்கிநாடா இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மீனவர்கள் ஆந்திரப் பகுதியோரம் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். சென்னையைப் பொறுத்த வரை மழைக்கு வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்த ஆண்டின் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 66% குறைவு”