மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உற்பத்தித்திறன்

இராமியா

May 4, 2019

siragu urpaththi thiran2

கச்சாப் பொருள்களை மனித உழைப்பினால் இயந்திரங்களில் ஈடுபடுத்தி மாற்றங்கள் செய்வதன் மூலம் பண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கச்சாப் பொருள்களையும், இயந்திரங்களையும் அப்படியே வைத்துக்கொண்டு மனித உழைப்பில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதிக அளவு பண்டங்களை உற்பத்தி செய்ய முடிந்தால் அதை உற்பத்தித்திறன் அதிகரிப்பு என்று சொல்கிறோம். கச்சாப்பொருள்கள், இயந்திரங்கள், மனித உழைப்பு மூன்றிலும் மாற்றம் கொண்டுவந்து, குறிப்பிட்ட உற்பத்திச் செலவுக்கும் உற்பத்தி ஆகும் பண்டங்களின் அளவுக்கும் உள்ள விகிதம் குறையுமானால், அதாவது ஒரு குறிப்பிட்ட உற்பத்திச் செலவில் அதிக அளவிலான பண்டங்களை உற்பத்தி செய்ய முடியுமானால் அதுவும் உற்பத்தித்திறன் அதிகரிப்பே.

இவ்வாறு உற்பத்தித்திறன் அதிகரிப்பதால் முதலாளிக்கு இலாபம் அதிகரிக்கும். ஆனால் இதை முன்னிட்டு எந்த ஒரு முதலாளியும் தொழிலாளர்களுக்குக் கூலியை உயர்த்துவது இல்லை. இந்த உற்பத்தித்திறன் அதிகரிப்பு நிகழ்வுகள் தொழில்கள் அனைத்திலும் நிகழ்கையில் முதலாளிகளுக்கு இலாப உயர்வு கிடைத்த விகிதத்தில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்காததால் ஏற்றத்தாழ்வு அதிகமாகிறது.

இந்த ஏற்றத்தாழ்வு தொழிலாளர்களின் வாழ்க்கையை நெருக்கி அழுத்தும்போது அவர்கள் கூலி உயர்வு கேட்டுப் போராடுகின்றனர்.

siragu ida odhikeedu4

உற்பத்தித்திறன் உயர்வு என்பது புறக்கண்களுக்குத் தென்படாத நுண்ணிய (சூட்சுமப்) பொருளாக இருப்பதால், அதே வேலைக்கு அதிகக்கூலி கேட்கிறார்கள் என்ற முதலாளிகளின், முதலாளித்துவ அறிஞர்களின் ஓலத்தை நடுத்தர வகுப்பு மக்கள் நியாயம் என்று “புரிந்து” கொண்டு, தொழிலாளி வர்க்கத்தை “இவர்கள் எப்போதுமே இப்படித்தான்” என்று கூறித்தங்கள் “மேதாவித்தனத்தை” நிலைநிறுத்திக் கொள்கின்றனர். ஆனால் தொழிலாளர்களின் உண்மையான (பிரத்யட்ச) வாழ்நிலை அவர்களைக் கடுமையாகப் போராட வைக்கிறது. இதில் முதலாளிகளின் வலிமை, தொழிலாளர்களின் வலிமை எப்படி இருக்கிறதோ அதைப்பொறுத்து, கூலி உயர்வு உரிய அளவோ அல்லது குறைவாகவோ கிடைக்கிறது. ஆனால் இந்நிகழ்வு முடிவற்ற தொடராகவே நீடிக்கிறது. ஆனால் இதுபோன்ற உற்பத்தித்திறன் அதிகரிப்பு ஒரு சோஷலிச சமூகத்தில் எவ்வாறு கையாளப்படும்? ஒரு உண்மை நிகழ்வை வைத்தே இதை ஆராய்ந்து பார்ப்போம்.

சிலி நாட்டில் 1970இல் சால்வடார் அல்லண்டே (Salvador Alende)எனும் கம்யூனிஸ்ட் தலைவர் அந்நாட்டின் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு 4.11.1970 அன்று அதிபராகப் பதவி ஏற்றார். அதன்பின் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முரணாகவும், தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்காகவும் நடவடிக்கைகளை எடுத்தார்.

siragu urpaththi thiran3

இதனால் வெகுண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் அவரை வீழ்த்துவதற்கு பல வழிகளில் முயன்றது. அது முடியாத நிலையில் பொறுமை இழந்து, சிலியின் உள்நாட்டு எதிரிகளுடன் இணைந்து 11.9.1973 அன்று கொன்று போட்டது. அதன்பின் கம்யூனிஸ்டுகள் யாராய் இருந்தாலும் கேள்விமுறையே இல்லாமல் சுட்டுக்கொல்லும்படி ஆணை இட்டது. இந்த ஆபத்தில் இருந்து சிலர் தப்பிவந்து வேறுநாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுந்தனர். அவர்களில் ஒருவர் அல்லண்டேயின் கூட்டாளியான ரொனால்டோ ரேமிரெஸ்(Ronaldo Remirez) என்ற ஓர் அறிஞர். அவர் பிரிட்டனில் அடைக்கலம் பெற்றார். பின் இலண்டன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக வேலை கிடைத்துப் பணிபுரிந்தார். இப்பொழுது ஓய்வு பெற்று இருந்தாலும், சிறப்புக் கருத்தரங்குகள் முதலியவற்றில் பங்குகொண்டு சிறப்பாகவே தன் பணியைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறார். இவரிடம் நான் மாணவனாக இருக்கும் பேறு பெற்றவன். ஒரு சோஷலிச நாட்டில் உற்பத்தித்திறன் கையாளப்படும் விதத்தைப் பற்றி இவர் கூறிய விவரம்தான் இக்கட்டுரையில் விளக்கப்பட்டு உள்ளது.

இவர் பிரிட்டனில் அடைக்கலம் பெற்றதுபோல, இவருடைய தோழர் ஒருவர் சோஷலிச நாடாக இருந்த கிழக்கு ஜெர்மனியில் அடைக்கலம் பெற்றார்.

இவரைப்போல அவருக்கு ஆசிரியர் போன்ற கல்வித்துறை வேலை கிடைக்கவில்லை. மாறாக ஒரு நிழற்படக்கருவி உற்பத்தித் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. அவர் குறுகிய காலத்திலேயே அத்தொழிலைக் கற்றுக்கொண்டார். அதுமட்டும் அல்ல, அவ்வேலையை இன்னும் எளிதாகவும், இன்னும் விரைவாகவும் செய்யும் முறைகளைக் கண்டறிந்தார். அதைச் செயல்படுத்திய பொழுது தொழிற்சாலை முழுவதிலும் ஒரு குலுங்கல் ஏற்பட்டது. மற்ற தொழிலாளர்கள் அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினர். தொழிலாளர்களிடம் இருந்து  “பணிச்சூழல் முன்புபோல இல்லை” என்று புகார்கள் எழுந்தன. கிட்டத்தட்ட வேலை நிறுத்த நிலைமைக்கு அது இட்டுச் சென்றது. உடனே நிர்வாகம் என்ன பிரச்சினை என்று ஆராய்ந்ததில் சிலியில் இருந்துவந்த தொழிலாளியின் உற்பத்தித்திறன் மேம்பாடுதான் எனத் தெரிந்து கொண்டனர். உடனே நிர்வாகமும் தொழிலாளர்களும் பேசி, சிலி அறிஞரின் உற்பத்தித்திறன் அதிகரிப்பால், உற்பத்தி முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும், அந்த அறிஞருக்கு அளிக்க வேண்டிய பரிசு மற்றும் பாராட்டு குறித்தும், அந்த அடிப்படையில் ஊதிய விகிதத்தில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்தும் முடிவு எடுத்தனர்.

மேலும் நாட்டில் உள்ள பிற நிழற்படக் கருவித் தொழிற்சாலைகளிலும் புது உத்திகளைக் கற்றுக்கொடுக்க அவருடைய வழி காட்டலில் ஏற்பாடுகளைச் செய்தனர். அத்தொழிற்சாலையில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் சிலி அறிஞரைப் புகழ்ந்து கொண்டாடினர்.

ஒரு சோஷலிச நாட்டில் மக்களுக்குப் பயன்படும் ஒரு புதுமை நிகழ்ந்தால், அது எப்படிக் கையாளப்படும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு. ஒரு புதுமை நிகழ்ந்த உடனேயே அதில் தொடர்பான அனைவருக்கும் அது தெரியப்படுத்தப்படுகிறது. அதனால் விளையும் பயன்கள் அனைவருக்கும் கிடைக்கும் படியாக வழி செய்யப்படுகிறது. அந்தக் கண்டுபிடிப்பாளர் தகுந்தபடி கவுரவிக்கப்படுவதும், அனைவராலும் போற்றப்படுவதும் மட்டும் அல்லாமல் இன்னும் அதிகமான மக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறார்.

siragu urpaththi thiran5

ஆனால் முதலாளித்துவ சமூகத்தில் என்ன நடக்கிறது? ஒரு புதிய கண்டுபிடிப்பு நிகழ்ந்தால் முதலில் அது இரகசியம் ஆக்கப்படுகிறது. அந்த அறிஞரைப் புகழ்வதாகவும், பாராட்டுவதாகவும் சாக்கிட்டுக் கொண்டு அவரைத் தனிமைப்படுத்தி விடுகின்றனர். ஒரு முதலாளி அக்கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை(Patent right) வாங்கிவிடுகிறார். அந்தக் கண்டுபிடிப்பினால் மூலதனப் பயணத்திற்கு ஊறு நேராத வழி கிடைத்த பிறகே அப்புதிய கண்டுபிடிப்பைப் பயன்படுத்த அந்த முதலாளி அனுமதிப்பார். அந்த வழியில் தொழிலாளர்களுக்குப் பல இடர்கள் ஏற்படும். தொழில் அமைதி கெடும். அவற்றுக்கும் அந்த முதலாளி, தொழிலாளிகள் மீதே பழிபோடுவார். எவ்வித வளர்ச்சியும் முதலாளித்துவ சமூகத்தில் மூலதனப் பயணத்தின் வசதிக்காகவே முன்னெடுக்கப்படுமே அல்லாமல், மக்களின் நலன்களுக்காக முன்னெடுக்கப்படாது.

siragu urpaththi thiran4

சோஷலிச சமூகம் எனிலோ, அங்கு மக்களின் நலனுக்காகவே ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்படும். வர்க்க எதிரிகள் முழுமையாக மறையும் வரையில் சமூகத்தில் மோதல்கள் இருக்குமே ஒழிய, அதன்பின் அமைதியான சூழலில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ அனைத்துச் சூழல்களும் ஒத்திசைந்ததாகவே இருக்கும்.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உற்பத்தித்திறன்”

அதிகம் படித்தது