மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உலக மகளிர் தினத்தில் அறிந்து கொள்வோம் – இராவண லீலாவின் புரட்சித்தலைவியை !!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Mar 10, 2018

siragu maniammai1
பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு, மக்கள்மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று.

ஆயினும், காற்றிறங்கிப் பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறியினின்று முன்னறிவிப்பு இன்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலன் ஏந்திக் காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந்தொண்டால் முடியாது. அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது. பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?

பெரியார் மேடைமேல் வீற்றிருப்பார். ஓர் இயக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் அழகு பெறக்கூடிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள். அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார் ஏதுங்கெட்ட வேலைக்காரிபோல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கால் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள்.

ஒரே ஒரு மாலையை எந் துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்னதில்லை. எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டை கட்டுவதன்றி – அம்மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தம் தலையில் வைத்தார் என்பதுமில்லை.

10.4.1960 குயில் இதழில் புரட்சிக் கவிஞர் அவர்கள் எழுதிய கட்டுரை

இன்றைக்கும் தந்தை பெரியார் பற்றி அவதூறு பரப்புவோர், அவர் அன்னை மணியம்மையாரை இளம் வயதில் மணந்து கொண்டார் என்பார்கள். தந்தை பெரியாருக்கும் -அன்னை மணியம்மையாருக்கும் திருமணம் நடந்த ஆண்டு 1949. அன்று தந்தை பெரியாருக்கு வயது 70, அன்னை மணியம்மையாருக்கு வயது 30. 1940 களில் பெண்களின் திருமண வயது 15 அல்லது 16, அந்தக் காலகட்டத்தில் 30 வயதில் ஒரு பெண் தன் விருப்பப்படி ஒருவரை திருமணம் செய்ய என்ன சிக்கல்? அந்த ஒற்றை முடிவுக்காக அன்னை மணியம்மையார் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் இன்று வரை வசவுகளை இறந்தும் எதிர்கொண்டு வருகின்றனர். இன்னும் ஒன்றையும் சொல்ல வேண்டும், அன்றைய காலக்கட்டங்களில் மகளுக்கு சொத்துரிமை இல்லாத காரணத்தால், இயக்கத்தில் யாரையும் நம்பிட முடியாத சூழ்நிலை இருந்த காரணத்தினால் (திராவிடர் கழகத்தில் இருந்து திராவிடர் முனேற்றக் கழகம் உடைந்த காலக் கட்டம்) இந்த ஏற்பாடிற்குத் தந்தை பெரியாரும் மணியம்மையாரும் இணைந்து முடிவெடுத்தார்கள். அவர்களின் தனிப்பட்ட முடிவில் தலையிட அறிவார்ந்த பண்பட்ட சமூகம் விரும்பாது. ஆனால் பெரியாரை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தூற்றுகின்றவர்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்வை கொச்சைப்படுத்துபவர்கள் அறிவார்ந்த சமூகம் தானா? என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டி உள்ளது.

இந்தப் பிரச்னையை காரணம் காட்டி தந்தை பெரியாரிடம் இருந்து பிரிந்த அறிஞர் அண்ணா அவர்கள் பின்னாளில் அன்னை மணியம்மையாரைப் பற்றி இப்படித்தான் கூறுகின்றார்.

siragu maniammai2

“அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது, இப்போது எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த அய்யாவை, கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சேரும்.’’

இப்படி தன் வாழ்நாள் முழுவதும் வசவுகளை சந்தித்து வந்த அன்னை மணியம்மையார் அதைக் கண்டு துவளவில்லை. கிஞ்சித்தும் தளர்ந்து மூலையில் முடங்கிடவில்லை. துணிச்சலோடு தந்தை பெரியாரின் கருத்துகளோடு பயணித்தார். தந்தை பெரியாரின் மறைவிற்குப்பின் ஐந்து ஆண்டுகள் திராவிடர் கழகத்தினை தலைமை ஏற்று நடத்தியவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.

உலக வரலாற்றில் நாத்திக அமைப்பின் தலைவியாக இருந்து செயல்பட்ட முதல் பெண் அன்னை மணியம்மையார் அவர்கள் தான்.

1973 டிசம்பர் 8, 9-இல் சென்னையில் நடைபெற்ற தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் சாதியை ஒழிக்கப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டார் தந்தை பெரியார். அதற்காக பல திட்டங்களைத் தனது கைக்குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தார்கள். அந்தக் குறிப்பேட்டின் பக்கத்தில் எழுதிய திட்டங்களில் ஒன்றுதான் இராவண லீலா எரிப்புப் போராட்டம். அதை நடத்துவதற்கு முன்பே தந்தை பெரியார் அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டார்கள். தந்தை பெரியாரின் அந்த போராட்டக் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒற்றை வேட்கையோடு, அன்னை மணியம்மையார் அவர்கள் குடியரசு தலைவருக்கும், பிரதமருக்கும் தந்தி அனுப்புகின்றார்கள்.

அந்த தந்தியின் வாசகங்கள் கீழே

“Your participation in Ramlila burning the effigy of the great Dravidian hero Ravana, is against all cannons of secularism and highly provoking and insulting to millions of Dravidians hence requesting you to desist from this dastardly. Act otherwise we Dravidians, would be burning the effigies of Rama and you, on mass level throughout the length and breath of Tamilnadu.”

‘You’ என்ற வார்த்தை குடியரசு தலைவரையும், பிரதமரையும் குறிப்பிட்டு அவர்களது உருவத்திற்கும் தீ வைக்கப்படும் என்று பொருள்படுவதால், தபால் தந்தித் துறையின் சட்டதிட்ட விதிகளுக்கு அது முரணானது என்று கூறி, தபால் துறையினரால் மறுக்கப்பட்டது. இன்றைக்கு மாலைக்குள் இந்தத் தந்தி குடியரசு தலைவருக்கும், பிரதமருக்கும், போய்ச் சேரவேண்டிய அவசியம் இருப்பதால் ‘You’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு அவசரத்தந்தி உடன் கொடுக்கப்பட்டது. ஆனால் மறுக்கப்பட்ட ‘You’ என்ற வார்த்தையும் சேர்ந்த தந்தியின் முழு வாசகமும் அப்படியே குடியரசு தலைவருக்கும், பிரதமருக்கும் பதிவுத் தபால் மூலம் அனுப்பப்பட்டது.

நேரு சிறையிலிருந்து இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களில், இராமாயணம் என்பது ஆரியத் திராவிடப் போரே என்ற மேற்கோளையும் இணைத்து கடிதம் அனுப்பப்பட்டபோதும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் இருந்து இந்தப் பதிலும் இல்லை.

1974ஆம் ஆண்டு தந்தை பெரியார் முதலாமாண்டு நினைவு நாளை வடநாட்டு எதிர்ப்பு மற்றும் பார்ப்பன எதிர்ப்பு போராட்ட நாளாக அறிவித்து அதில் இராமன் உருவம் கொளுத்தப்படும் என அன்னை மணியம்மையார் அறிவித்தார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் ஆரிய சனாதனிகளிடம் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது.

பார்ப்பன அமைப்புகள் நீதிமன்றம் மூலம் இராவண லீலா நடத்த தடை வாங்கின. அன்னை மணியம்மையார் ஒரு அரிமா போன்றே செயல்பட்டார். இந்த தடையைக் கண்டு அவர் அஞ்சவில்லை.

பெரியார் திடலில் கருஞ்சட்டை தோழர்கள் ‘இராவண லீலா’வுக்கு திட்டமிட்டு செயல்பட்டனர். ‘இராமன், இலட்சுமணன், சீதை’யின் மிகப் பெரிய உருவங்கள், இரகசியமாகத் தயாரிக்கப்பட்டன. இந்த ‘உருவங்களை’ பறிமுதல் செய்ய காவல்துறை வந்தபோது அவர்களிடம் சிக்கவில்லை.

ஆனால் குறித்த தேதியில் 24-டிசம்பர் 1974 அன்று, திட்டமிட்டபடி இராவண லீலா நடை பெற்றது. உள்ளிருந்து உருவ பொம்மைகள் எடுத்து வரப்பட்டு கொளுத்தப்பட்டன, உணர்ச்சி முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. அன்னை மணியம்மை அவர்கள் எழுச்சி உரையாற்றினார்.

அதற்காக மணியம்மையார் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் 6 மாதம் தண்டனை விதித்தது.

siragu maniammai3

இனமானப் போராட்டம் சட்டப்போராட்டமாக மாறியது. 6 மாதச் சிறைத் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. 7 மாத விசாரணைக்குப் பின் அன்னை அவர்கள் விடுவிக்கப்பட்டார்.

தீர்ப்பிலிருந்து சில முக்கியப் பகுதிகள்.

இந்திய தலைநகர் டில்லி மாநகரில் ஆண்டுதோறும் இராமலீலா மைதானத்தில் கொண்டாடப்படும் இராமலீலா என்ற விழாவில் இராமாயண கதாபாத்திரங்களான இராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் ஆகியோருடைய உருவங்கள் தீயிட்டுக் கொளுத்தப்படுவதாயும், அது ஆண்டுதோறும் நடந்து வருவதாயும் அதேபோல் செய்வது தென்னிந்திய மக்களின் மனதைப் புண்படுத்துகிறது என்று தெரிவிக்கும் பொருட்டு சென்னை பெரியார் திடலில் இராவண லீலா என்ற விழா கொண்டாடப்பட்டது என்றும் கூறியிருக்கிறார்கள். இராமலீலா விசயமாக தாங்கள் இந்திய அரசுக்கு பல கடிதங்கள் எழுதியும்கூட அரசு தக்க நடவடிக்கை எடுக்காததால் தங்களுடைய கொள்கைகளை வலியுறுத்துவதற்காக, தாங்கள் போற்றி வந்த இராவணன், கும்பகர்ணன், இந்திரஜித்து ஆகியவர்களுக்கு விழா எடுக்க இராவண லீலா என்ற விழா கொண்டாடி அதில் தாங்களே செய்த இராமன், சீதை, லட்சுமணன் ஆகியோருடைய பொம்மைகளுக்கு தங்களுடைய இடமான பெரியார் திடலிலேயே தீயிட்டு விழா கொண்டாடியதாக சொல்லியிருக்கிறார்கள். ஆகவே, தாங்கள் எந்த வகுப்பாரையும் புண்படுத்த வேண்டும் என்ற உட்கருத்துடன் இதனைச் செய்யவில்லை என்று கூறுகிறார்கள்.

இந்த வழக்கில் உள்ள சாட்சியங்களை பரிசீலித்துப் பார்க்கும்போது எதிரிகள் எந்த சட்ட விரோதமான கும்பலிலும் இருந்து கொண்டு எந்த ஒரு வகுப்பினரின் மத உணர்வுகளையும் திடுக்கிடும் வகையில் புண்படுத்தும் பொருட்டு வேண்டுமென்றே குரோதமான உட்கருத்துடன் அந்த வகுப்பாரின் மதநம்பிக்கைகளை நிந்திக்கிற வகையில் நடந்துகொள்ளவில்லை என்பது நன்கு புலனாகிறது.

“இந்த சம்பவம் அரசாங்க அனுமதியுடன் திராவிடர் கழகத்திற்குச் சொந்த இடமான பெரியார் திடலில் முன்னறிவிப்புடன் குறிப்பிட்ட நேரத்தில் நடந்திருக்கிறது. ஆனால், அந்த சம்பவம் யாருடைய மனத்தையாவது புண்படுத்தியதாக சாட்சியங்கள் இல்லை, இந்த விழாவானது, டில்லியில் நடந்த இராம லீலா என்ற விழாவிற்குப் போட்டியாக ஒரு விழாவாக நடந்திருக்கிறது.

மேலும் இந்த நிலையில்லாது மாறிக் கொண்டிருக்கும் உலகத்தில் மனித சமுதாயமும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. அவ்வாறு ஒரு காலத்தில் ஏற்பட்ட கருத்துகள் பிற்காலத்தில் ஒப்புக்கொள்ள முடியாததாக இருக்கலாம். மனித சமுதாயத்தில் பல்வேறு மக்கள் பல்வேறு சிந்தனைகள் உள்ளவர்களாக இருக்கலாம். இவைகளைப் பற்றி ஒரு மனிதன் சிந்திப்பதற்கும், பேசுவதற்கும், எழுதுவதற்கும் உரிமை உள்ள இந்த அமைப்பில் எதிரிகளுடைய இயக்கமானது தங்களுடைய கருத்துகளை வெளியிடும் பொருட்டு இராவண லீலா என்ற விழாவினை ஏற்பாடு செய்து அதை அவர்களுக்கு உகந்த முறையில் கொண்டாடி இருக்கிறார்கள். உண்மையிலேயே மேற்படி சம்பவத்தால் இந்து மதத்தில் ஒரு சார்பாருக்கு மனம் புண்பட்டு இருக்குமானால் அங்கு கலவரங்களும், எதிர்ப்புகளும் இருந்திருக்கும். அப்படி ஒன்றும் அங்கு கலவரங்களோ, எதிர்ப்புகளோ இருந்ததாக யாதொரு சாட்சியங்களும் இல்லை. இரண்டாவது சாட்சி இந்த விழாவிற்கு போலீசார் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் சம்பவம் நடந்தது 25.12.1974. ஆனால், இந்த வழக்குத் தொடர அரசாங்கம் உத்தரவிட்ட தேதி 26.3.1976. சுமார் 15 மாதங்களுக்குப் பிறகுதான் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த கால தாமதம் விளக்கப்படவில்லை” என்றார் நீதிபதி.

தந்தை பெரியாரோடு ஒழிந்தது திராவிடர்களின் போர் என நினைத்துக் கொண்டிருந்த கூட்டத்திற்கு அன்னை மணியம்மையார் அவர்கள் நடத்திக்காட்டிய இந்த இராவண லீலா மிகுந்த அச்சத்தை கொடுத்தது.

அதே போன்று அவசர நிலை இந்தியாவில் இந்திரா காந்தி கொண்டுவந்த போதும், பல கெடுபிடிகளை பெரியார் திடலும், விடுதலை இதழும் சந்திக்க நேர்ந்தது. அந்தச் சூழ்நிலைகளில் எல்லாம் அஞ்சாமல் தந்தை பெரியார் இருந்திருந்தால் எப்படி செயல்பட்டிருப்பார்களோ அதே வேகத்தோடும், சிந்தனை வளத்தோடும் செயல்பட்டு இயக்கத்தை காத்தார்கள் அன்னை மணியம்மையார் அவர்கள்.

மகளிர் தினக் கொண்டாட்டங்கள் வெறும் கடமைக்காக பலர் கொண்டாடும் இந்தக் காலக் கட்டங்களில் அன்னை மணியம்மையார் பற்றி அறிந்து கொள்வது என்பது ஒரு பெண் எப்படி அவதூறுகளையும், தன் மீது சுமத்தப்படும் தேவையற்ற குற்றச்சாட்டுகளையும் புறந்தள்ளி விட்டு அறிவுச் செருக்குடன் செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உலக மகளிர் தினத்தில் அறிந்து கொள்வோம் – இராவண லீலாவின் புரட்சித்தலைவியை !!”

அதிகம் படித்தது