மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எத்துணை மகள்களை இழப்பது ?

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jun 16, 2018

Siragu-eththunai1

எத்துணை மகள்களை தமிழ்நாடு இழந்து விட்டது? எந்த மண்ணில் பெண்ணடிமையை எதிர்த்து ஒரு பெரும் போர் நிகழ்த்தி தந்தை பெரியார் வெற்றி பெற்றாரோ, அந்த மண்ணில் கனவுகளைச் சுமந்த பறவைகளை நாம் ஈவு இரக்கமின்றி கொன்று போட்டிருக்கின்றோம். ஒவ்வொரு பறவையும் குறிபார்த்து அம்பெய்து கொல்லப்பட்ட பறவைகளே. வறுமையில் உழன்றாலும், அந்த வறுமையை ஒழித்து விடலாம் என்று கண் துஞ்சாது படித்து, கனவுகளை நெஞ்சிற்குள் அதன் நெருப்பின் தகிக்கும் தன்மை மாறாது காத்து வைத்து, உணவின்றி இளைத்தாலும், உணர்வுகளை இளைக்கவிடாது, உறுதியோடு படித்து வெற்றி பெற்ற அனிதாவை, தூக்கு கயிற்றுக்கு தூக்கிக் கொடுத்தோம். குடும்ப சூழ்நிலை ஒருபோதும் ஒரு குழந்தையை முன்னேற தடுத்திடக் கூடாது, பள்ளிக் கல்வி படித்து வந்து விட்டால் போதும், மதிப்பெண் அடிப்படையில் எப்படியேனும் மருத்துவமோ, பொறியியலோ படித்து கனவினை மெய்ப்பித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று இருந்த கட்டமைப்பை, ஒரு நூற்றாண்டாய் தலைவர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய உரிமைத் தளங்களை எல்லாம் ஓர் நொடியில் இழந்து நிற்கின்றது தமிழ்நாடு. இவனும் சரியில்ல அவனும் சரியில்ல என்ற புரியாத எலைட் குரல்கள் நடுத்தர மக்களை, அடித்தட்டு மக்களை குழப்பி, இருந்த ஓட்டைக் கோட்டையையும் இடித்துத் தள்ளி அரசியல் அனாதைகளை நிற்கின்றோம். ஈழத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் தேர்தலுக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று எடுத்த முடிவே ராஜபக்க்ஷே எனும் இன அழிப்பாளனை அதிபராக்கியது. இந்த புரிந்துணர்வு இல்லாமல் தமிழ்நாட்டையும் இந்திய பார்ப்பனிய பனியா அரசு உள்நுழைந்து அழித்திட நாமே வழிவகை செய்தாகி விட்டது. மருத்துவ கட்டமைப்பில் நீட் கொண்டு வந்து பொது சுகாதார கட்டமைப்பை அவர்கள் சிதைத்ததை உணர இன்னும் சில நாட்களே இருக்கின்றன. அனிதாவை தொடர்ந்து மீண்டும் இந்த ஆண்டும் நீட்டின் தோல்வி தாங்க முடியாமல் பிரதிபா எனும் மாணவியை இழந்தோம். இவர்கள் அனைவருமே மருத்துவர் ஆகக் கூடிய வாய்ப்பு தமிழ் நாட்டில் ஏற்படுத்தி வைத்திருந்தது சமூக நீதி அரசியல் களங்கள். இந்த இழப்புகளுக்கு நம்மை ஆற்றுப்படுத்த இயலாமல் விழி மூடி வலிகளை கடக்கின்றோம்.

Siragu-eththunai2

நீட்டின் சோகம் ஒரு புறம் எனின், தூத்துக்குடியில் திட்டமிடப்பட்டு அமைதியான வழியில் போராடிய மக்கள் கொல்லப்பட்டதால் எழுந்த வேதனை மறுபுறம். இதிலும் இரு பெண் குழந்தைகளை நாம் இழந்து இருக்கின்றோம். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கூட தெரியாமல் சுடப்பட்டு இறந்த வெனிஸ்டா (17 வயது குழந்தை), அதே போன்று 100 நாட்கள் போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட போராட்ட மேடைகளில் முழங்கிய ஸ்நோலின். வாயில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார் இந்தப் பெண். இப்படியான பாசிசத்தை சொந்த அரசே நிகழ்த்துவது இது புதிதல்ல என்ற போதும், வடக்கில் நடக்கும் இத்துணை அட்டூழியங்களையும் தமிழ் மண்ணின் சமூக நீதியை வலியுறுத்தும் சிந்தனைகள் காத்துக் கொண்டு நின்றது. ஆனால் இன்று இன்னொரு காஷ்மீராக தமிழ் நாடு உண்மையில் மாற்றப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு சில நகர்வுகள் செய்தால் முழுமையாக தமிழத்தில் எந்த எதிர்க்குரலும் எழும்பாமல், மக்களை அச்சத்தில் ஆழ்த்தி சர்வாதிகார அரசினை நடத்த பாசிச சக்திகள் தயாராகவே உள்ளனர். அரசை எதிர்த்து அமைதி வழியில் போராடிய மக்களுக்கே நாம் மரணத்தை, அதுவும் கொடூர மரணத்தை பரிசாகக் கொடுத்திருக்கின்றோம். புரட்சியாளர்கள் விதைக்கப்படுகின்றனர் என்றாலும், புரட்சி வெடிக்க அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு இன்னும் எத்துணை நூற்றாண்டுகள் ஆகுமோ?

இந்த போக்கினை கண்டிக்க ஓர் அணியில் ஒன்று திரள வேண்டிய கட்டாயம், முற்போக்கு, மத சார்பற்ற இயக்கங்களுக்கும், அமைப்புகளுக்கும் இருக்கின்றது என்பதை நினைவில் நிறுத்தி செயல்படுவோம். கோயிலுக்குள் வைத்து பெண் குழந்தையை வன்புணர்ந்தவர்களை தமிழ் மண் மிதிக்க விட்டீர்கள் அவர்கள் கொலைகளை நம் பெண் குழந்தைகளிடம் இருந்தே தொடங்கி உள்ளனர். சிந்தித்து செயல்படுவோம் !


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எத்துணை மகள்களை இழப்பது ?”

அதிகம் படித்தது