மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கணையாழிகளும் அமெரிக்கத் திருமணங்களும்

தேமொழி

Jun 10, 2017

Siraguu kanayaali1

திருமணச் சடங்கில் இந்திய மணமக்கள் பெரும்பாலும் மாலை மாற்றிக் கொள்வார்கள். பிறகு இந்திய வட்டாரங்களில் வாழும் பல்வேறு சமயங்களின், இனங்களின், குலங்களின் வழக்கப்படி தாலி கட்டுவது, மோதிரம் அணிவிப்பது, பதிவுத் திருமணங்களில் திருமணப் பதிவேட்டில் கையெழுத்திடுவது எனப் பற்பலவகைச் சடங்குகள் வழியாக மணமக்களின் திருமணம் சட்டப்படி அங்கீகாரம் செய்யப்படுகிறது.

மோதிரம் அல்லது கணையாழி அணிவிப்பது மாலை மாற்றுவதற்கு இணையான பண்டைய வழக்கங்களில் ஒன்று. பாரத நாட்டுக்கு அப்பெயர் வழங்கக் காரணம் எனக் கூறப்படும் கதைகளில் ஒன்று பரதன் என்னும் மன்னவன் பெயரால் பாரதம் அல்லது பரதவர்ஷம் எனப் பெயர் ஏற்பட்டது என்பது. இந்தப் பரதனின் தாய் தந்தையர் ஹஸ்தினாபுரத்தின் மன்னன் துஷ்யந்தனும், தாய் சகுந்தலையும் என்பது ஒரு தொன்மக் கதை (மற்றொன்று, சமண சமய ரிஷபதேவரின் மகனான பேரரசன் பரதன் என்பவனால் பாரதம் எனப் பெயர் பெற்றது என்ற கதை). அந்த துஷ்யந்தன்-சகுந்தலையின் கதையில் அவர்களது காந்தர்வ திருமணத்திற்கு அடையாளமாக மோதிரம் காட்டப்பட்டுள்ளது.

மகாபாரதத்தில் இடம்பெறும் அத்தொன்மக் கதையின்படி, கடுந்தவம் செய்து கொண்டிருந்த விசுவாமித்திர முனிவரை மயக்கி தவத்தைக் கலைக்கிறாள் தேவலோக ஆடலரசி மேனகை. இருவருக்கும் பிறக்கும் மகளை விசுவாமித்திரர் ஏற்றுக் கொள்ள மறுக்க, குழந்தையைக் காட்டிலேயே விட்டு விட்டு மேனகை தேவலோகம் திரும்பிவிடுகிறாள். கன்வ முனிவர் குழந்தையைக் கண்டெடுத்து சகுந்தலா எனப் பெயரிட்டு தனது ஆசிரமத்தில் வளர்த்து வருகிறார். வேட்டையாடக் காட்டிற்கு வரும் மன்னன் துஷ்யந்தன் அவளைக் காண இருவரும் காதல் கொண்டு காந்தர்வ மணம் புரிகிறார்கள். அவளை விட்டுவிட்டு மீண்டும் நாட்டிற்குத் திரும்பும் மன்னன் தனது அரசமுத்திரை மோதிரத்தை அவளுக்கு அடையாளமாகக் கொடுத்துச் செல்கிறான். மன்னனின் பிரிவுத் துயரத்தில் இருக்கும் சகுந்தலை விருந்தினராக வந்த துருவாச முனிவருக்குப் பணிவிடை செய்வதில் தவறுகிறாள். கோபமுற்ற துருவாசர் அவளது கவனச்சிதறலுக்குக் காரணமான மன்னன் அவளை மறப்பான் எனச் சாபமிடுகிறார். பிறகு இரக்கம் கொண்டு அவன் தந்த மோதிரத்தை அடையாளம் கண்டுகொண்டு மன்னன் அவளை வந்தடைவான் எனச் சாபவிமோசனமும் கொடுக்கிறார்.

சகுந்தலையை துஷ்யந்தனிடம் ஒப்படைக்க கன்வ முனிவர் அவளை அழைத்துச் செல்லும்பொழுது, வழியில் சகுந்தலை மோதிரத்தை ஆற்றில் தொலைத்து விடுகிறாள். சகுந்தலையை மறந்துவிட்ட மன்னன் அவளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். பிறகு மீனவன் ஒருவன் தான் பிடித்த மீனின் வயிற்றில் கிடைத்த அரசமுத்திரை மோதிரத்தை அரசனிடம் சேர்ப்பிக்க, சகுந்தலையின் நினைவைப் பெற்ற துஷ்யந்தன் அவர்களுக்குப் பிறந்த மகன் பரதனுடன் மனைவி சகுந்தலையை ஏற்றுக் கொள்கிறான். இந்தக் கதையை அறியாத இந்தியர் இருக்க வழியில்லை. அக்கால காளிதாசரின் சாகுந்தலம் முதலான இலக்கியங்கள் முதல், இக்கால ரவிவர்மா போன்றவர் வரைந்த ஓவியங்கள், நாடகங்கள், தெருக்கூத்துகள், திரைப்படங்களில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்துப் புகழ்பெற்ற திரைப்படம் வரையிலும் பல வகையில் மக்களைச் சென்று சேர்ந்த கதையிது. இதனால் திருமணத்தின் அடையாளங்களுள் ஒன்று மோதிரம் என்பது ஆழப் பதிந்து போன கருத்தாக மக்களிடம் உருவாகியுள்ளது. இந்தியத் திருமணங்களில் ‘கணையாழி எடுத்தல்’ என்ற திருமண சடங்கில் பானைக்குள் மோதிரத்தைப் போட்டு அதை மணமக்கள் எடுக்கும் சடங்கும் உண்டு.

கு. மா. பாலசுப்ரமணியம் இயற்றிய திரைப்படப் பாடலொன்றில் துஷ்யந்தனையும் கணையாழியையும் குறிப்பிட்டு, காதலனும் காதலியும் தங்களை துஷ்யந்தன்-சகுந்தலையுடன் ஒப்பிட்டு கற்பனையில் திளைத்துப் பாடுவதாக ஒரு காட்சியும் இடம்பெற்றுள்ளது.

பெண்:
கணையாழி கையில் தந்து துஷ்யந்தனாக வந்து
காதல் மணம் புரிந்த காலத்திலே

ஆண்:
மானோடு நீ வளர்ந்து சகுந்தலையாயிருந்து
மாறாத அன்புகொண்டு மாலையிட்டாய்

பெண்:
குளிர்நிலவும் மலர்மணமும்
குலாவிடும் சோலையிலே

ஆண்:
அன்பில் மிதந்து தன்னை மறந்து
அகம் மகிழ்ந்தாடியதே

இருவரும்:
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே

Siraguu kanayaali2

பலநாடுகளிலும் திருமண உறவின் அடையாளமாக மோதிரம் இருக்கிறது. அவ்வாறு பலகாலமாக இருந்ததற்கும் வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன. இவ்வாறு மோதிரம் அணிவிக்கும் முறைக்கு 6,000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்திய நாகரீகத்தில் இருந்த சான்றுகள் காட்டப்படுகிறது. நாரிலும், நாணலிலும் செய்யப்பட்ட மோதிரங்கள் குறித்தும், இடது கை மோதிர விரலில் மோதிரம் அணிவிக்கப்பட்டது குறித்தும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. மோதிரவிரலின் நரம்பு இதயத்துடன் தொடர்புள்ளது என்றும் (“Vena amoris” என இலத்தீன் மொழி இதனைக் குறிப்பிடுகிறது), அதனால் காதலுக்கும் இதயத்திற்கும் உள்ளதொடர்பிற்கு அறிகுறியாக மோதிர விரலில் இது அணிவிக்கப்பட்டதாம். மேலும் கிறித்துவ சமய திருமணத்தின் அடையாளமாக மோதிரம் அணிவிக்கும் பழக்கம் ஐரோப்பிய நாடுகளில் இருப்பதன் தொடக்கத்தை ரோம, கிரேக்க நாகரிகத்திலும் காட்டுகிறார்கள்.

இக்காலத்தில் திருமண மோதிரங்கள் தங்கம், பிளாட்டினம் போன்ற விலையுயர்ந்த உலோகங்களில் செய்யப்படுகின்றன. விலையுயர்ந்த மதிப்பு மிக்க கற்கள், வைரங்கள் பதித்த மோதிரம் அணிவிக்கும் வழக்கமும் உள்ளது. தன்னைத் திருமணம் செய்ய ஏற்றுக் கொள்ளும்படி பெண்ணிடம் வேண்டுகோள் விடுக்கும் ஆணும் மோதிரத்தைக் கொடுத்து தான் காதலிக்கும் பெண்ணிடம் விருப்பத்தைத் தெரிவிக்கும் வழக்கம் உள்ளது. நிச்சயதார்த்தம் நடக்கும் முறை போல இவ்வகை அணிவிக்கப்படும் மோதிரங்கள் (engagement rings) கருதப்படுகின்றன. பெரும்பாலும் நிச்சயதார்த்த மோதிரமும் திருமண மோதிரமும் (wedding ring) ஆண் பெண்ணுக்கு அளிப்பதாகவே இருந்து வந்தது வழக்கம். நம் ஊரில் மணமகன் பெண்ணுக்குப் பரிசம் போடுவது போல சீதனம் கொடுக்கப்பட்டோ, திருமண நாளில் தாலி கட்டுவது போலவோ திருமண உறவு ஒப்பந்தத்திற்கு அச்சாரமாக அளிக்கப்படுகிறது.

Siraguu kanayaali4

கிறிஸ்துவ திருமணங்களில் மோதிரம் அணிவிப்பது ஒரு முக்கியமான சடங்கு. திருமணமான அமெரிக்க ஆண்களும் பெண்களும் தங்கள் உறவின் அடையாளமாக மோதிரத்தை அணிந்திருப்பது வழக்கமாக உள்ளது. மணமகனின் பெயரை “நம்பி” என்றும், மணமகளின் பெயரை “நங்கை” என்றும் நாம் ஒரு புரிதலுக்காக எடுத்துக் கொண்டு, அமெரிக்காவில் நடக்கும் பெரும்பாலான கிறித்துவ திருமண விழாக்களில் “இரட்டை மோதிரம் மாற்றிக் கொள்ளும் சடங்கை” கீழ்வருமாறு விவரிக்கலாம்.

திருமணத்தை நடத்தி வைக்கும் கிறித்துவ தேவாலயத்தின் பாதிரியார் மாப்பிள்ளையின் தோழனிடமும் (Best man), மணமகளின் தோழியிடமும் (Bridesmaid or maid of honor) மணமக்களின் மோதிரங்களை வைத்திருக்கிறீர்களா என்று கேட்டதும், அவர்கள் வைத்திருக்கிறோம் என ஆமோதித்து தங்களிடம் உள்ள மோதிரங்களைப் பாதிரியாரிடம் வழங்குவார்கள்.

அடுத்து அவர் மணமகனிடம், “நம்பி, நான் சொல்வதை அதே போன்று திருப்பிச் சொல்லி, இந்த மோதிரத்தை நங்கையின் விரலில் அணிவிக்கவும்” என்று கூறி மோதிரத்தை மணமகனின் கையில் கொடுத்து கீழ்வரும் உறுதிமொழியைச் சிறு சிறு வாக்கியங்களாகக் கூற, மணமகன் அதனை அப்படியே கிளிப்பிள்ளை போல மணமகளிடம் திருப்பிச் சொல்லுவார்.

“என் அன்பின் அடையாளமாக, நான் உன்னை மணந்து கொள்கிறேன், நம்பியாகிய நான், என் உண்மையான மற்றும் சட்டப்பூர்வமான திருமணமான மனைவியாய் உன்னை ஏற்றுக் கொண்டு, இந்த அன்பு எப்போதும் மாறாமல், உண்மையாகவே வைத்திருக்க நான் உனக்கு உறுதியளிக்கிறேன்.”

இந்த உறுதிமொழிக்குப் பிறகு மணமகன் தனது மணமகளின் விரலில் மோதிரத்தை அணிவிப்பார்.

அடுத்து பாதிரியார் மணமகளிடம், “நங்கையே, நான் சொல்வதை அதே போன்று திருப்பிச் சொல்லி, இந்த மோதிரத்தை நம்பியின் விரலில் அணிவிக்கவும்” என்று கூறி மோதிரத்தை மணமகளின் கையில் கொடுத்து உறுதிமொழியைச் சிறு சிறு வாக்கியங்களாகக் கூற, மணமகளும் அதனை அப்படியே மாறாமல் மணமகனிடம் திருப்பிச் சொல்லுவார்.

“என் அன்பின் அடையாளமாக, நான் உன்னை மணந்து கொள்கிறேன், நங்கையாகிய நான், என் உண்மையான மற்றும் சட்டப்பூர்வமான திருமணமான கணவனாக உன்னை ஏற்றுக் கொண்டு, இந்த அன்பு எப்போதும் மாறாமல், உண்மையாகவே வைத்திருக்க நான் உனக்கு உறுதியளிக்கிறேன்.”

இந்த உறுதிமொழிக்குப் பிறகு மணமகள் தனது மணமகனின் விரலில் மோதிரத்தை அணிவிப்பார்.

இதைத் தொடர்ந்து பாதிரியார், “இப்பொழுது இந்தத் தேவாலயத்தின் பெயராலும், இந்த அரசு எனக்கு அளித்த அதிகாரத்தின்படியும் நான், நம்பியாகிய உன்னையும், நங்கையாகிய உன்னையும், உண்மையான மற்றும் சட்டப்பூர்வமாக, கணவன் மற்றும் மனைவி என அறிவிக்கிறேன். மணமக்கள் முத்தமிட்டு இந்த திருமணச் சடங்கை நிறைவு செய்யுங்கள்” என அறிவிப்பார். அதைத்தொடர்ந்து மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் முத்தமிட நண்பர்களும் உறவினர்களும் மகிழ்ச்சியுடன் ஆராவாரம் செய்து வாழ்த்துவார்கள்.

இந்நாட்களில் பெரும்பாலும் நடக்கும் அமெரிக்க திருமணச் சடங்கில் மணமகனும் மணமகளும் மோதிரம் மாற்றிக் கொள்வார்கள். மோதிரத்தைத் தேர்வு செய்வதில் இருந்து, நகரமன்றத்தில் திருமண விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து திருமணத்திற்கான அனுமதி பெறுவது (marriage license),விழா நடக்கும் இடத்தைத் தேர்வு செய்வது, விழா நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, திருமண அழைப்பிதழைத் தேர்வு செய்வது, படம் காணொளி பதிவுகளுக்கான ஏற்பாடு, திருமண உடை அலங்காரம், விருந்தில் அளிக்கப்போகும் உணவு, தோழர் தோழியர் உறவினர்களை அழைப்பது, கேளிக்கை நிகழ்ச்சிகளின் ஏற்பாடு, கேக் வெட்டுவது எனத் திருமண நிகழ்ச்சியின் அனைத்துக் கூறுகளையும் மணமக்கள் இருவரும் இணைந்தே திட்டமிட்டு செய்வார்கள். செலவும் அவர்களுடையதுதான்(https://bdn-data.s3.amazonaws.com/uploads/2013/06/20060807_Wedding_serenity-600×501.jpg).

Siraguu kanayaali5

நம்மூரில் மாலை மாற்றிக் கொள்ளும் திருமணச் சடங்கு போல, இவ்வாறு மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்ளும் ‘இரட்டை மோதிர திருமணச் சடங்கு முறை’ (Double-ring ceremony) சென்ற நூற்றாண்டில், குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே அமெரிக்காவில் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஐரோப்பாவில் இதற்கும் முன்னரே 19 ஆம் நூற்றாண்டில் இரட்டை மோதிரம் அணிவிக்கும் திருமணங்கள் வழக்கத்தில் இருந்துள்ளன. ஆனால் அமெரிக்காவில் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆண் மட்டுமே பெண்ணுக்கு மோதிரம் அணிவிப்பதாகவே இருந்துள்ளது. அக்காலத்தில்தான் (1920 களின் மத்தியில்) பெருவணிக நிறுவனங்களின் வியாபார முறை அமெரிக்காவில் துவங்கியது. குறைந்த விலையில் மோதிரம் விற்கும் பெரு வணிக நிறுவனங்களுடன் போட்டி போட இயலாத சிறு நகர வணிகர்கள் ஏதேனும் புதுமையைப் புகுத்தி தங்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் மோதிரம் விற்று நுகர்வோரைத் தக்க வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இவர்கள் கலந்தாலோசித்து புதிய முறையாக ‘ஆண் அணியும் நிச்சயதார்த்த மோதிரத்தை’ (mangagement ring) பெண் ஆணுக்கும் வழங்கும் ஒரு முறையை உருவாக்கி விளம்பரப்படுத்தி, சிறப்பாக அதற்கென வடிவமைக்கப்பட்ட மோதிரங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால் இம்முயற்சி ஆண்களைக் கவரவில்லை. பெண்கள் தங்களுக்கு மோதிரம் அணிவிக்கும் முறை வழக்கத்திற்கு மாறானதாக அவர்கள் கருதியதால் அந்த வியாபார உத்தி பலனளிக்காமல் போயிற்று. இதற்கிடையில் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவில் (The Great Depression) நாடும் மிகப் பெரிய பஞ்சத்தில் வீழ்ந்தது, பங்குச் சந்தை வீழ்ந்தது. எங்கும் பணப் பற்றாக்குறை, சராசரி இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. அதனால் நிச்சயதார்த்தத்திற்கு என்றோ திருமணத்திற்கு என்றோ அதிகப்படியாக இன்னொரு மோதிரம் வாங்குவது என்பதும் அக்கால விலைவாசியில் கட்டுப்படியாகாத ஒரு நிலை. திருமணங்களின் எண்ணிக்கையுமே குறைந்து போனது. எனவே இரட்டை மோதிர நிச்சயதார்த்த முறைக்கு வரவேற்பின்றி போனது.

இதற்கடுத்து 1940 களில் பொருளாதார நிலை சீரடைந்தது, திருமண வயதில் இருந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கையும் அவர்களின் திருமணங்களும் அதிகரித்தது. ஆண் நிச்சயதார்த்த மோதிர விற்பனையில் தோல்வியுற்றிருந்த நகை விற்பனையாளர்கள் இக்காலத்தில் ஆணுக்கான திருமண மோதிரத்தை அறிமுகப்படுத்தி ஒரு புதிய வணிக முயற்சியில் இறங்கினர். தொடர்ந்து வந்த இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த காலகட்டத்தில் போர்முனைக்குச் சென்ற வீரர்கள் இரட்டை மோதிரம் அணிவதை விரும்பினர், தனது குடும்பத்துடன் உள்ள உணர்வுப்பூர்வமான தொடர்பை மோதிரம் அவர்களுக்குக் கொடுத்ததாக எண்ணினார்கள். முன்னர் 1930 களில், வசதியுள்ள மேல்மட்ட சமூகத்தில் ஒருசிலரிடம் மட்டும் 15% என்ற அளவில் வழக்கத்தில் இருந்த இரட்டை மோதிர திருமணம், தொடர்ந்து வந்த பத்தாண்டுகளிலேயே, 1940 களில் 80% என்ற அளவில் அதிகரித்துவிட்டது. அக்கால மணமக்களும் இரட்டை மோதிரங்கள் முறையைக் கடைப்பிடித்து தங்கள் பெற்றோரின் திருமணத்தை விட தங்கள் திருமணம் நவீன முறையில் நடக்கிறது என்று காட்டிக் கொள்ளத் தலைப்பட்டனர். ஹாலிவுட் நடிகர்களில் தாக்கமும் இதில் உண்டு. நடிகர் ‘ஹம்ஃப்ரி போகார்ட்’ நடிகை ‘லாரன் பகல்’ என்பாரை 1945 இல் மணந்த பொழுது அவர் மனைவி அணிவித்த மோதிரத்தை அணிந்து கொண்டார் (Humphrey Bogart and Lauren Bacall). ஒருவகையில் இது இன்று நம் ஊரில் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கு எனக் கிளப்பிவிடப்பட்ட புதிய வழக்கத்தை நினைவுபடுத்துகிறது என்றே கூறலாம்.

இந்த 21 ஆம் நூற்றாண்டில் திருமண வயதில் இருக்கும் இளைஞர்கள் தங்களது தாத்தா-பாட்டி திருமணமே இரட்டை மோதிரச் சடங்கு திருமணம் என்றுதான் அறிந்திருப்பதால் ஒரு காலத்தில் அமெரிக்காவில் ஆண் மட்டும் அணிவிக்கும் ஒற்றை மோதிர திருமணங்களும் நடந்தன என்பதைக் கூட அறியாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இக்காலத்தில் இரட்டை மோதிரச் சடங்கு உள்ள திருமணங்களே வழக்கத்தில் உள்ளன.

இரட்டை நிச்சயதார்த்த மோதிரங்கள் என்ற கருத்தாக்கம் சென்ற நூற்றாண்டில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றாலும், பாலின சமத்துவ கருத்துகள் கொண்ட இக்கால இளைய தலைமுறையை இது மீண்டும் கவரத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. திருமணம் குறித்த தளமான ‘தி நாட்’ (wedding Web site The Knot) நடத்திய சமீபத்திய ஆய்வில், திருமணத்திற்கு முன்னரே 5% நிச்சயிக்கப்பட்ட ஆண்கள் மேன்கேஜ்மென்ட் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்துள்ளதாகக் கண்டறிந்துள்ளது.

அவ்வாறே மூன்றில் இரு ஆண்கள் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்து கொள்வதில் விருப்பமும் தெரிவித்துள்ளார்கள். ஆனால், “நீ என்னைத் திருமணம் செய்துகொள்வாயா?” (Will you marry me?) என்று ஆண்களே கேட்கும் பண்பாட்டுப் பின்னணியில் வளர்ந்துவிட்ட மகளிர் அவ்வாறு மோதிரம் கொடுத்து ஆணிடம் சம்மதம் கேட்டு தனது விருப்பத்தை வெளிப்படுத்தத் தயங்கும் நிலைதான் இன்றும் தொடர்கிறது. பெண்கள் நிச்சயதார்த்த மோதிரம் கொடுக்கும் முறை மிக மெதுவாகவே வளர்கிறது. ஜென்னிஃபர் ஹட்சன் (Jennifer Hudson ) என்ற புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகி தனக்கு மோதிரம் வழங்கி நிச்சயித்த தனது காதலருக்குத் தானும் ஒரு மோதிரம் வழங்கி தங்கள் தங்கள் திருமண உறவு ஒப்பந்தத்தை உறுதிப் படுத்தினார். மேலும், ஆண் மணமக்கள் மணந்துகொள்ளும் ஓரினச் சேர்க்கை திருமணங்களுக்காகவும் ஆண்களுக்காகவே நிச்சயதார்த்த, திருமண மோதிரங்கள் சிறப்பாக வடிவமைக்கப்படும் நிலையும் உருவாகி வருகிறது.

இரட்டை மோதிர திருமணங்கள் அமெரிக்காவில் நடைமுறையாகவே மாறிவிட்ட இக்காலத்திலும் கூட, யூத சமயத்தினர் திருமணங்களில் இரட்டை மோதிர திருமணம் என்ற வழக்கம் இன்றும் இல்லாமல் இருக்கிறது. மணமகன் தனது மணமகளுக்கு மோதிரம் அணிவிப்பதை மட்டுமே சமயத் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். அது இக்கால யூத சமய இளம்பெண்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கிறது. திருமணத்தை நடத்தி வைக்கும் சில சமயத் தலைவர்கள் மோதிரத்தைத் திருமண விழாவில் பிற்பாடு அணிவித்துக் கொள்ளவோ, திருமணம் முடிந்த பின்னர் பெண் அணிவிக்க ஆண் அணிந்து கொள்ளவோ தடையில்லை என்று கூறினாலும், திருமணவிழாவில் உடனுக்குடன் மோதிரம் மாற்றிக் கொள்வதை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. இது யூத சமய இளம்பெண்களின் சுயமரியாதையை கேள்விக்குள்ளாக்குவதால் அவர்கள் இந்த ஏற்பாட்டில் மகிழ்ச்சியடைவதில்லை என்பது தெரிகிறது. இக்காலத் திருமணங்களில் ஆண் பெண் இருவரும் சமம் என்ற கொள்கை இரட்டை மோதிரம் அணிவிக்கும் முறையால் அறிவுறுத்தப்படும் பொழுது, அதைத் தவிர்க்கும் யூத சமயத் திருமண சடங்குகளில் மாற்றம் கொண்டுவர விரும்புகிறார்கள் இக்கால யூத இளைஞர்கள்.

மேலும் தகவலுக்கு:

[1] Vicki Howard (2006), Brides, Inc., American Weddings and the Business of Tradition, University of Pennsylvania Press, . 306 pp., ISBN: 0-8122-3945-4.

[2] Howard, V. (2003). A “Real Man’s Ring”: Gender and the Invention of Tradition. Journal of Social History, 36(4), 837-856. Retrieved from http://www.jstor.org/stable/3790353

Double-ring ceremony.txt
Displaying Double-ring ceremony.txt.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கணையாழிகளும் அமெரிக்கத் திருமணங்களும்”

அதிகம் படித்தது