மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கூடங்குளம் 2014

ஆச்சாரி

May 1, 2012

ஐந்தாயிரத்திற்கும் அதிகமான காவல் படையினரால் கிராமங்களை சுற்றி வளைத்து, 144 தடை உத்தரவை நடைமுறைப்படுத்தி, ஊருக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் அடைத்து,  ஊடகத்துறையினரை வெளியேற்றி தமிழக அரசும் நடுவண் அரசும் கூடங்குளம் அணு உலையைத் திறந்திருக்கின்றன. அணு உலைக்கெதிராக போராடியவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது பல பிரிவுகளிலும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கூடங்குளம்  சுற்றுப் பகுதிகளுக்கு ஐநூறு கோடி ரூபாய் திட்டங்களை அரசு வாரி வழங்கியிருக்கின்றது. ஊடகங்கள் அணு உலைக்கெதிரான மிகப் பெரிய போராட்டம் முடிவிற்கு வந்துவிட்டதாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அணு உலையின் பேரிரைச்சலிலும், அணு உலை ஆதரவாளர்களின் ஆர்ப்பரிப்பிலும் இடிந்தகரை  மக்களின் குரல் வெளி உலகை எட்டவில்லை.

200 நாட்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான மக்கள் தினம் கூடி போராடியும் அணு உலை திறப்பதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.  பொருள், ஊடகம், அரசியல், அதிகாரம் ஏதுமற்ற கூடங்குள மக்கள் நடுவண் அரசு மற்றும் மாநில அரசை எதிர்த்து வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமானதல்ல. ஒரு நபர் கட்சி முதல் நூற்றாண்டு கட்சிகள் வரை பல அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளையும் இம்மக்கள் சமாளிக்க வேண்டியிருக்கின்றது. ஊடகங்களும் இம்மக்களை தேசத் துரோகிகளாக சித்திரித்தன. 24 மணி நேர மின்சார ஆசையில்  பெரும்பாலான தமிழக மக்களுமே இடிந்தகரை மக்களின் போராட்டத்திற்கு கைகொடுக்க வில்லை. இந்நிலையில் இவர்களால் அணு உலை திறப்பதை தடுத்து நிறுத்த முடியாததில் வியப்பொன்றுமில்லை. சிறைச்சாலைகளுக்கும், நீதிமன்றத்திற்கும் அலைந்து கொண்டே இன்றும் எங்கள் போராட்டத்தை தொடர்கிறோம் என்று கூறும் இம் மக்களின் மன உறுதி தான் வியப்பாக இருக்கின்றது.

அணு உலை திறப்பதற்கு முன் இருந்த போராட்ட வீரியத்துடன்  தற்போதும் போராட்டத்தைத் தொடர்வது எளிதானதல்ல. முன்னர் அணு உலை திறக்காமல் தடுப்பதே இலக்காக இருந்தது. ஒவ்வொரு முறை அரசு அணு உலை திறப்பு நாள் செய்தியை  வெளியிடும் போதும் அந்நாளை நெருக்கடியாகக் கொண்டு மக்களின் போராட்டம் வீரியமடைந்தது. தற்போது அணு உலை திறக்கப்பட்ட பின்னர் மூட வைப்பதற்கான இலக்கு நாள் நெருக்கடி இல்லாதது போராட்டத்தின் வீரியத்திற்கு சிறிது பின்னடைவாகும். அதே போன்று அரசின் நலத்திட்டங்கள் அறிவிப்பில் மயங்கி உள்ளூர் மக்கள் சிலரும் குறிப்பாக பஞ்சாயத்து தலைவர்கள் போன்றவர்கள் எதிராக செயல்படத் தொடங்கியிருப்பதும் இப்போராட்டத்திற்கு புதிய சிக்கல்.

எண்ணில்லா எதிரணியினர் இருந்தாலும், பலவீனங்கள் பல இருந்தாலும் இடிந்தகரை மக்களிடம் மிகப் பெரிய பலம் ஒன்று இருக்கத்தான் செய்கின்றது. இன்றைய சூழ்நிலைகளில் தேசிய கட்சிகளாலேயே காலை முதல் மாலை வரை போராட்டங்கள் நடத்த முடியவில்லை. போக்குவரத்து ஏற்பாடு செய்து, பிரியாணி பொட்டலங்களும், மதுபானங்களும் விநியோகித்து, தினப்படி செலவிற்கும் பணம் கொடுத்து ஒரு நாளைய போராட்டத்தை நடத்தி முடிப்பதற்குள் பெரிய கட்சிகளே களைப்படைந்து விடுகின்றன. அணு உலை போராட்டக்காரர்கள் தினம் ஓரிடத்தில் கூடி 200 நாட்களுக்கு மேலாக போராடி வந்தது மிகப் பெரிய சாதனை. அரைமணி நேரத்தில் எந்த போராட்டங்களையும் ஒடுக்கிப் பழகிய அரசிற்கு இப்போராட்டம் ஒரு புதிய அனுபவமே. வழக்கமான போராட்டங்களை வட்டாட்சியர் கூட கண்டு கொள்ளாத போது, இடிந்தகரை போராட்டத்தை நேரடியாக பிரதமரே இறங்கி பதில் கூறவைத்ததில் இடிந்தகரை மக்களின் பலத்தை அறிய முடிகிறது. தம் பலத்தையும் பலவீனத்தையும் கவனத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை வெற்றியை நோக்கி நகர்த்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர் இடிந்தகரை சுற்றுப்புற மக்கள்.

அரசியல்வாதிகள் குறிப்பாக ஆளும் அரசியல்வாதிகள் இசைந்தாலன்றி அணு உலையை மூட இயலாது. அரசியல்வாதிகளை பணியவைக்க கூடிய ஒரே நேரம் தேர்தல் காலம் மட்டுமே. எவ்வளவு பெரிய கட்சியாக இருந்தாலும், பெரிய தலைவர்களாக இருந்தாலும் தேர்தலுக்கு அஞ்சாத அரசியல்வாதிகளில்லை. கூடங்குளம் அணு உலை நடுவண் அரசு தொடர்பானது. நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் கூடங்குள அணுஉலையை  மூடுவதற்கான அரசியலை செய்யவேண்டும் இடிந்தகரை மக்கள். நாடாளுமன்ற தேர்தல் தேதியை அணு உலை மூடுவதற்கான தேதியாக அறிவித்துவிட்டு நாள் நெருக்கடியை உருவாக்கினால் போராட்டம் மீண்டும் வீரியமடைய ஒரு இலக்காக அமையும். வரும் 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சரியாக இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. அணு உலை எதிர்ப்பாளர்கள் இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் மக்கள் சக்தியையும் அரசியல் சக்திகளையும் பெருக்க கடுமையாக உழைக்க வேண்டும்.

கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழுணர்வுள்ள சிறிய அரசியல் கட்சிகள் மட்டுமே துணை நின்றன. ஆதரவு கட்சிகளின் பங்களிப்பும் என்றாவது ஒருநாள் போராட்டத்தில் கலந்துகொள்வது, அறிக்கைகள் விடுவது என்ற சிறிய அளவிலே நின்றுவிட்டன. போராட்டத்தின் உச்சகட்டத்தின் போது ஆதரவு அரசியல்  தலைவர்கள் கலந்துகொண்டு சில நூறு பேரோடு கைதாகி விடுதலை என்ற சம்பிரதாய முறையை கடைப்பிடித்தனர்.

ஆதரவுக் கட்சித் தலைவர்களை தீவிரமாக கூடங்குள மக்களுக்காக செயல்படும்படி அழைக்க வேண்டும். கட்சித் தலைவர்கள் மட்டும் அதரவு கரம் நீட்டாமல் தங்கள் கட்சித் தொண்டர்கள் அனைவரையும் கூடங்குள போராட்டத்திற்கு ஆதரவாக களமிறக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஒரு வாரம் இக்கட்சியினர் அனைவரும் போராட்டத்தில் இறங்கியிருந்தால் இந்நேரம் அணு உலை திறந்திருக்க முடிந்திருக்காது. இக்கட்சியினர் அனைவரும் பல்வேறு இடங்களில் இருந்து கலந்துகொள்ளும்படி கூடங்குளத்திலிருந்து கல்பாக்கம் வரை  ஒரு மாபெரும் நடைபயணம் திட்டமிட வேண்டும். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆதரவு அரசியல் கட்சியினரும், பொது மக்களும் நடைபயணத்தில் சேரும்படி அழைக்க வேண்டும். நடைபயணத்தின் வழியில் ஓவ்வொரு ஊரிலும் கட்சித் தலைவர்கள் உரையாற்றி ஆதரவை பெருக்கிக் கொண்டே வரவேண்டும். நடைபயணத்தின் முடிவில் இலட்சக்கணக்கான மக்களுக்கு முன்னிலையில் ஆதரவு அரசியல் கட்சி தலைவர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையாக கூடங்குளம் அணுஉலை மூடுதலை அறிவிக்க வேண்டும். மேலும் அணு உலை ஆதரவு கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என்றும் அவர்கள் அறிவிக்கவேண்டும். நாடாளுமன்ற தேர்தல் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் அடுத்தாண்டு இறுதிக்குள் இம்மாபெரும் நடைபயண  நிகழ்வை அணு உலை எதிர்ப்பாளர்கள் நடத்தினால் மிகப் பெரிய பலமாக அமையும். போராட்டத்திற்கு ஆதரவு தரும் கட்சி தலைமைகளை இதற்கு சம்மதிக்க வைப்பதற்கான  நடவடிக்கைகளில் போராட்டக் குழுவினர் முழு மூச்சாக ஈடுபடவேண்டும்.

இந்த இரு வருட காலத்திற்குள் தமிழகம் முழுவதும் அணு உலைக்கு எதிராக பெருமளவில்  மக்களைத் திரட்ட வேண்டும். பெரும்பாலான மக்கள் அணு உலைக்கு எதிர்ப்பு நிலை எடுத்தது  ஊழல் அரசியல்வாதிகளின் அறிக்கைகளை நம்பி அல்ல. கடும் மின்வெட்டு அவதியில் எதார்த்தமாகவே அணு உலைக்கு ஆதரவு நிலை எடுத்தனர். வரும் மாதங்களில் மின் வெட்டிற்கும் கூடங்குள அணு உலைக்கும் தொடர்பில்லை என்பதை உணர்ந்து அணு  உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் குறைந்தது நூறு பேரைக் கொண்ட அணு உலை எதிர்ப்புக் குழு அமைக்க வேண்டும். அக்குழுவினர் தொடர்ச்சியாக திண்ணைப் பேச்சுகளின் மூலமும், தெருமுனைக் கூட்டங்கள் மூலமும் மக்களிடம் அணு உலை ஆபத்துக்களை எடுத்துரைக்க வேண்டும். உதயகுமார் அவர்களின் எளிமையான விளக்கங்களால் எவ்வாறு இடிந்தகரை  மக்கள் கதிர்வீச்சு அறிவியல் உண்மைகளை அறிந்துகொண்டார்களோ அவ்வாறு தமிழகமெங்கும் மக்களுக்கு கதீர்வீச்சின்  தீமைகளை எளிமையாக விளக்கவேண்டும். மின்வெட்டிற்கும் கூடங்குள அணு உலைக்கும் பெரிய தொடர்பில்லை என்பதை ஆதாரபூர்வமாக விவரிக்க வேண்டும். தெருக்கூத்துக்களை நடத்தி அணுக்கதிர்களின் பாதிப்புகளை மக்கள் மனதில் காட்சிகளாக பதிய வைக்க வேண்டும். 1988 ஆம் ஆண்டிலிருந்து கூடங்குள அணு உலைக்கு எதிராக போராடி வருவதை ஆவணங்களுடன் மக்களுக்கு புரியவைக்க வேண்டும்.

வாசியுங்கள்:
அணு உலை ஒளிர்ந்தால் மின்வெட்டு ஒழியுமா?
செர்நோபில் பேரழிவு
அணுக்கழிவாலை
கூடங்குளம் – இறுதி ஆட்டம் ஆரம்பம்!
கேரளத்துக்குச் சென்ற இடியை கூடங்குளத்தில் இறக்கியது ஏன்?
கூடங்குளம் – திரு.உதயகுமார் உரை

கேரள அரசியல்வாதிகள், அவர்கள் மாநிலத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததாலே இந்த அணு உலை கூடங்குளத்தில்- நம் மீது திணிக்கப்பட்டது என்பதை எடுத்துக்  கூற வேண்டும். இது அரசிற்கெதிரான பரப்புரை அல்ல, ஊழல் அரசியல்வாதிகளின் தவறான திட்டத்திற்கெதிரான போராட்டம் என்பதை மக்கள் உணரும்படி  விவரிக்கவேண்டும்.  செர்நோபில் அணு உலை விபத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படங்களை அச்சிட்டு வீடு வீடாக விநியோகிக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட அளவில் பேரணி நடத்தி அணு உலை எதிர்ப்பிற்கான ஆதரவைப் பெருக்க வேண்டும்.

கூடங்குளம் அணு உலை திறக்கப்பட்டு விட்டதால் இனி அதை மட்டும் மூடுவதற்கு போராடுவது வலுவாக இருக்காது. அணு உலை எதிர்ப்பு போராட்டம் இனி கல்பாக்கத்தையும் சரி பங்காக பார்ப்பது அவசியம். கூடங்குள போராட்டக் குழு கல்பாக்கத்தில் வலுவான போராட்டக் குழு உருவாக்குவதற்கு கவனம் செலுத்தவேண்டும். அணு உலையிலிருந்து வரும் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை கல்பாக்கத்தில் ஒருங்கிணைக்க வேண்டும். அவர்களை முன்னிறுத்தி கல்பாக்க மக்களை அணு உலை எதிர்ப்பிற்கு அழைத்து வரவேண்டும். வடமாவட்டங்களில் அமையும் அணு உலை எதிர்ப்புக் குழுக்களுக்கு கல்பாக்கம் தலைமை இடமாக அமைய வேண்டும்.

மாநில மற்றும் நடுவண் அரசுகளின் தீவிர கண்காணிப்பிற்கிடையே இவற்றை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினமே. அணு உலை எதிர்ப்பாளர்களின் ஒவ்வொரு அசைவையும் உளவுத்துறையினர் பின்பற்றிக்கொண்டிருக்கின்றனர். அரசின் அடக்குமுறைகளை சமாளிக்க வலுவான வழக்கறிஞர்கள் குழுக்களை உருவாக்க வேண்டும். இக்கட்டான இந்நிலையில் கவனமாக செயல்பட்டு ஓரளவிற்கு பொது மக்கள் ஆதரவைப் பெற்று விட்டால் போதும். மக்கள் ஆதரவு அலை அடிக்கத் தொடங்கிவிட்டால் தேர்தல் காலத்தில் அணு உலையை பூட்ட முதல் ஆளாய் வருவார்கள் நம் அரசியல்வாதிகள். 2014 நாடாளுமன்ற தேர்தலை அணு உலை எதிர்ப்பாளர்கள் அரிய வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Even passive parents can benefit by using software, because it will always phonetrackingapps.com be there when a situation develops

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “கூடங்குளம் 2014”
  1. தியாகு says:

    ஆசிரியரின் கருத்துக்கள் சரியாக உள்ளது , ஆனால் மேல் சொன்ன காரியங்களை முன்னின்று நடத்துவது யார் என்பதே மிக பெரிய கேள்வி ?

    அணு உலையால் ஏற்படும் ஆபத்துகளை, செய்தி ஊடகங்கள் பரப்புரை செய்ய வேண்டிய முக்கிய கட்டத்தில் உள்ளோம்

  2. கி.பிரபா says:

    மோதுகிறது அரசு. முட்டித் தள்ளுகிறது மக்கள் கூட்டம். மக்களுக்காக அரசா? அரசின் ஊழலுக்காக மக்களா? உள்ளூர் மக்களின் உணர்வுகளை மதிக்காத அரசுக்குக் கூடியவிரைவில் ஓர் மாற்றம் வரும். சிந்திக்கத் தொடங்கிவிட்டனர் மக்கள். சந்திக்கத் தயாராக இல்லை அரசு என்பதே உண்மை.

அதிகம் படித்தது