மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிவரஞ்சனியும் இன்னும் சிலப் பெண்களும்

ப. ஸ்ரீராம்

Jan 29, 2022

siragu sivaranjiniyum-innum-sila-pengalum

இயக்குனர் வசந்த் அவர்களின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சிவரஞ்சனியும் இன்னும்சிலப் பெண்களும்’ என்னும் திரைப்படம் ஆகும். இவர் ‘கேளடி கண்மணி’ எனும் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார்.சமீபத்தில் சில குறும்படங்களைத் தொகுத்து ஒரு பெரிய படமாக வழங்கும் வழக்கம் தோன்றி வளர்ந்து வருகிறது. இப்படி தொகுக்கும் போது ஒரு கதைவோட்டம் அல்லது ஒன்றைப் பற்றியோ அல்லது ஒரு கருத்தை மையமாக வைத்தோ அவற்றைத் தொகுக்கும் வழக்கம் உள்ளது. இதனையே ஆங்கிலத்தில் ‘Anthology films’ என்று அழைக்கின்றனர். உதாரணங்களாக, ‘புத்தம் புது காலை’‘நவரசா’‘பாவக் கதைகள்’ போன்ற திரைப்படத்தை எடுத்துக்காட்டாக நம்மால் கூற முடியும். இந்த வரிசையில் சமீபத்தில் வெளியானது இந்தத் திரைப்படம் சிவரஞ்சனியும் இன்னும் சிலப் பெண்களும் எனும் திரைப்படம். இந்தத் திரைப்படம்.

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளக் கதைகள் மூன்று, அசோகமித்திரனின் ‘விமோசனம’, ஆதவனின் ‘ஓட்டம’ மற்றும் ஜெயமோகனின் ‘தேவகி சித்தியின் டைரி’ எனும் சிறுகதைகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பயணிக்கும் கதாபாத்திரங்களாக சரஸ்வதி, தேவகி மற்றும் சிவரஞ்சனி. காளீஸ்வரி ஸ்ரீனிவாசன்,பார்வதி மற்றும் லட்சுமி பிரியா சந்திரமௌலி ஆகியோர் முறையே பாத்திரம் ஏற்றி நடித்துள்ளனர்

முதல் கதாபாத்திரமாக அறிமுகம் செய்யப்படுபவள் சரஸ்வதி. இவள் ஒரு வறுமைக் கோட்டிற்கு கீழ் நிலையில் வசிக்கும் குடும்பத்தில் வாழும் பெண். இவள் கணவன் ஒரு கூலித் தொழிலாளி. இவன் ஒரு சுயநலமான மனிதன் என்பதை நிகழ்வு வழியே வெளிப்படுத்தியுள்ளார். ஒரு குழந்தை அழுகின்ற நிலையில் அதன் அழுகையை நிறுத்த முயற்சிக்கும் இடத்தில் தந்தை மற்றும் உடன் உள்ள உறவுகள் என எல்லோரும் முயற்சி செய்வார்கள். அந்த அடிப்படை உணர்வை விடுத்து அது தனது கடமை அல்ல அது தன் மனைவிக்காக ஒதுக்கப்பட்ட ஒரு செயலாக அவன் நடத்துவது அவனுடைய ஆண் ஆதிக்க நிலையையும் மூடதனத்தையும் உணர்த்துகிறது. இவ்வாறு இருந்த ஒரு சூழ்நிலையில் அவன் மனைவி ‘குழந்தைனா அழாதா’ எனக் கூறிவிடுவாள். இந்த வார்த்தைக்காக “என்னை எதிர்த்து பேசுகிறாயா?” என அடிக்கும்படியாக அந்தக் காட்சிகள் அமையும். இன்றும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துக்கொண்டிருப்பதை இந்நிகழ்வு நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எதிர்த்து கேள்வி கேட்கும் பெண்களை அடித்து வீட்டை விட்டு துரத்துவது ஆண்களின் செயலாகிறது. சரஸ்வதியும் ‘என்னை அடிக்காதிங்க’ என்று ஒரு வார்த்தை கூறி விடுவாள். அத்தோடு அவன் பேசுவதை நிறுத்திவிடுவான்இரு தினங்களில் அவன் சரஸ்வதியையும் அந்தக் குழந்தையையும் விட்டு ஓடி விடுவான். இவள் காவல் துறையில் புகார் அளிப்பாள், தேடுவார்கள். அவன் கிடைக்கமாட்டான். இப்படி சரஸ்வதி காதாபாத்திரம் வரும் கதையில் நிறைய குறீயிடுகள் உள்ளன. அவர்கள் வசிக்கும் வீடு ஒரு சிறு இடுக்கிற்குள் இருக்கும். அதன் வலதுபுறமாக ஒரு துணி தைக்கும் கடை இருக்கும். அவர்கள் அந்த வீட்டிற்குள் செல்லும் போது இருவர் அமர்ந்து துணி தைத்துக் கொண்டு இருப்பார்கள். இறுதியில் அந்த கடையில் ஒருவர் மட்டும் அமர்ந்து துணி தைத்துக் கொண்டு இருப்பார். இது ஒருவர் இல்லை என்றால் கூட வேலை நடக்கும் என்பதை குறிப்பால் நமக்கு உணர்த்தும். இதை கொண்டு நீ இல்லை என்றாலும் கூட இங்கு வாழ்க்கை போகும் என்பதை சரஸ்வதி உணர்ந்து விட்டதாக காண்பித்து இருப்பார். அவர்கள் வீட்டில் ஒரே ஒரு நாற்காலி இருக்கும்அது அங்கு உள்ள ஆண் உட்காருவதற்காக இல்லை என்றாலும் அது அவ்வாறே கட்டமைக்கப்பட்டு இருக்கும். அதில் அமர்ந்து தேனீர் அருந்தியவாரே இருப்பாள் சரஸ்வதி. பின் அந்த தேனீர் பருகிய கிளாஸை கீழே வைத்தவாறே புன்னகைப்பாள். இவ்வாறு இந்த சரஸ்வதி கதாபாத்திரம் முடிவிற்கு வரும். இதையே அசோகமித்திரன் தனது கதையில் விமோசனம் என்று குறிப்பிட்டிருப்பார்.

தேவகி என்னும் கதாபாத்திரம் அடுத்த கதையாக திரையில் வரும். 1995 ல் இந்தக் கதையோட்டம் இருப்பதாகச் சொல்லப்பட்டு இருக்கும். தொடக்கமாக அலுவலகப் பணி முடிஞ்சதும் வீட்டிற்குச் செல்வார்கள். உடன் தேவகியின் கணவனது அண்ணன் மகனும் இருப்பான். இந்தக் குழந்தை இந்தக் கதைவோட்டத்திற்கு ஒரு காரணமாக அமைகின்றது. வீட்டிற்குத் திரும்பும் வழியில் ஒரு இரயில்வே கேட் உள்ளது. அங்கு ஸ்கூட்டரில் வந்து இவர்கள் நிற்க பெரும் இரைச்சலோடு இரயில் போயிக்கொண்டு இருந்தது. அப்போது அந்த குழந்தை ஒரு முறை திரும்பி நின்றுக்கொண்டு அங்குள்ளவர்களை பார்க்கும் அப்போது அங்கு இருப்பவர்களில் ஆண்கள் வண்டியை இயக்குபவர்களாகவும் பெண்கள் பின் அமர்ந்து இருப்பவர்களாகவும் இருப்பார்கள். இதைப் பார்த்து விட்டு திரும்பி தான் அமர்ந்து இருக்கும் வண்டியைப் பார்க்கும்போது சித்தி வண்டியை இயக்கிக் கொண்டு இருப்பாள். அப்போது அந்தக் குழந்தை முகத்தில் ஒரு பெருமிதம் போல ஒரு உணர்வு தோன்றும். வீட்டில் தாத்தா,பாட்டி,அப்பா, அம்மா மற்றும் சித்தப்பா,சித்தி என ஒரு கூட்டுக்குடும்பமாக இருக்கும்அந்தக் குழந்தையின் தாய் படித்து இருப்பாள் ஆனால்,வீட்டு வேலையைப் பார்த்துக் கொள்பவளாக இருப்பாள். இப்படிபட்ட ஒரு கதைவோட்டத்தைக் கொண்டதாக அந்த கதை நகரும். இவர்கள் வீட்டில் பேசும் போது அங்கு ஆண் குழந்தை வந்து அங்கு அமரும்அதை பார்த்த தாய் பெரியவர்கள் பேசும் இடத்தில் உனக்கென்ன வேலை என்று கேட்பாள். அப்போது குழந்தையும் ஒரு பெரிய மனிதனைப் போல தன் இருப்பை அந்த இடத்தில் நிலைநிறுத்திக் கொள்ள தனக்குத் தெரிந்த அவர்களுக்குக் தெரியாத ஒரு விசயத்தை அங்கு சொல்லும். குடும்பத்தில் உள்ள மற்ற நபர்களுக்கு அவள் டைரி எழுதுகிறாள் என்பது தெரிய வரும். அப்போதும் அவன் கணவன் நேர்மையாக அது அவள் தனிப்பட்ட விசயம். அதில் நம்மால் தலையிட முடியாது என கூறுவான். குடும்பத்தில் உள்ள நபர்களின் வற்புறுத்தலின் காரணமாக அவன் அந்த டைரியைக் கேட்பான். அந்தப் பெண் தன் உரிமையை நிலைநாட்ட அது எனது சொந்த உரிமை அதைப் படிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று கூற,அதை எப்படியாவது படித்தே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தால் இந்தக் குடும்பத்தைப் பற்றி நீ எதாவது தவறாக எழுதி வைத்திருந்தால்?,என்ன ஆகும் குடும்ப மானம் எனக் கூறி, அந்த டைரியைக் கொணர்ந்து அவள் கணவனிடம் கொடுத்து படிக்கச் சொல்கிறார்கள். யாரும் என்னுடைய டைரியைப் படிப்பது முறையாக இருக்காது என்று அவள் அவர்களுக்குப் புரிய வைக்க முயற்சி செய்கிறாள். ஆனால் அதை அவர்கள் கேட்பதாகவே இல்லை. கடைசியில் அவளுடைய கணவன் நான் படித்து விட்டு அவர்கள் சந்தேகத்தைத் தீர்த்து விடுகிறேன் எனக் கூற,நீயும் படிக்கக் கூடாது என்கிறாள். அப்போது அதை பிடுங்கி,அவன் வாசிக்கத் தொடங்குகிறான். ‘இன்று பெண்கள் சாலையில் ஜீன்ஸ் அணிந்து செல்வதைப் பார்த்தேன் அழகாக இருந்தது அழகே ஒரு வித கான்ஃபிடன்ஸ் தானே the way you think yourself’ என அவன் படிக்க,அதைப் பிடுங்கி அவள் எரித்து விடுகிறாள். இருவரும் பிரிந்து வாழத் தொடங்குகிறார்கள். ஒரு நாள் அவர்கள் வண்டியில் செல்லும் போது அந்தக் குழந்தை தனது சித்தியைப் பார்க்கிறான். ஒரு விதமான வருத்தம் அவனது கண்ணில் தெரிகின்றது. அத்துடன் தேவகியின் கதை முடிவடைகிறது. குடும்பத்தில் ஒரு பெண் சந்திக்கும் சிக்கல்களைப் பற்றி இந்தப் பாத்திரம் பேசிச் செல்கிறது. குடும்பப் பெண்ணிற்கு என்ன இரகசியம் வேண்டி இருக்கிறது போன்ற வார்த்தைகள் குறிப்பிடத் தகுந்தவை. ஒரு பெண்ணாகப் பிறந்து விட்டால் திருமணம் ஆகி விட்டால் எல்லாம் கணவன் தான். அவர் சொல்வதைத் தான் நாம் செய்ய வேண்டும் என்ற நிலை இன்னும் இருப்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. அதை உடைத்து வாழும் ஒரு பெண்ணாக தேவகி இருக்கிறாள். தனக்கான ஒரு சுயத்தை விடுத்து வாழ்வது ஆகாது என்பதை அவள் கதாபாத்திரம் உணர்த்துகிறது. அதே சமயம் அவளின் மாமியார் வீடானது தனக்கான சுயத்தை விடுத்து வாழ வேண்டும்எல்லாம் கணவன் தான்குடும்ப கௌரவம் தான் முக்கியம். குடும்பத்திற்காகத் தன் சுயத்தை இழப்பது தவறில்லை என்பதை வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளது.

மூன்றாவதாகஇருக்கும் கதை ‘சிவரஞ்சனி’ கதை. இவள் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கிறாள் இவள் ஒரு சிறந்த ஓட்டப்பந்தய வீராங்கனையாக விளங்குகிறாள். கல்லூரியின் சார்பில் இவள் டில்லியில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்துக் கொள்ள தேர்வாகிறாள். இந்தச் சூழ்நிலையில் இவளுக்குத் திருமணம் நடக்க பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது. இவளுக்குத் திருமணம் முடிகின்றது. ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு முதல் இரவு வைத்துக் கொள்ளுங்கள் என ஆலோசனை கூறுகிறார்கள். அதற்கும் அவன் கணவன் சமதம் தெரிவிக்கவில்லை. இவள் அந்தப் போட்டியில் கலந்துக் கொள்ள முடியாமல் போகிறது. இவள் ஒரு சராசரி குடும்ப வாழ்க்கையை வாழ தொடங்குகிறாள். பொருட்களை எடுத்துக் கொடுப்பது சமைத்தல்,பிள்ளையைப் பேணுதல், மற்ற வீட்டு வேலையைச் செய்தல் வரையறுக்கப்பட்ட குடும்பப் பெண்ணின் லட்சணத்திற்கு ஏற்ப அவள் செயல்படுகிறாள். அவளுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.

இந்தக் கதையில் அவள் ஓட்டப்பந்தையத்தின் மீது மிகுந்த பிரியம் வைத்து இருக்கிறாள் என்பது குறியீடாக பல இடங்களில் வந்துள்ளன. ஒரு பெண்ணை முடக்கிப்போட ஆண் மட்டும் இல்லை ஒரு பெண்ணும் செயல்படுகிறாள் அவளுடைய மாமியார் இவளை நோக்கி அவன் எப்படி இந்த மாதிரி கேவலமானதை எல்லாம் படிக்க சம்மதிக்கிறான் என்று நாவலை காண்பித்து கேட்பாள். இதை நோக்கும் போதே நமக்கு தெரிய வரும் ஒன்று திருமணத்திற்கு பிறகு பெண் எதற்கு படிக்க வேண்டும் என்று மறைமுகமாக கேட்பது போல் தோன்றுகிறது. அவளுடைய குழந்தை தொலைக்காட்சியில் படம் பார்க்கும் போது பின்னணியில் ஒரு வசனம் ஓடிக்கொண்டு இருக்கும் அதை கூர்ந்து கவனித்தோமானால் ஒரு புறம் சிவரஞ்சனி வீட்டு வேலைகளைச் செய்துக் கொண்டு இருப்பாள் மறு புறம் அந்த வசனத்தில் ‘பரவாயில்லையே அதற்குள் எல்லா வேலையையும் கத்துக்கிட்டியே’ என்ற வசனம் ஓடிக்கொண்டு இருக்கும். சிவரஞ்சனியின் கணவரின் தோழர் அவரின் மனைவியுடன் வீட்டிற்கு வருவார்.

அவள் கூறும் வசனங்கள் முக்கியமான சில பார்வைமுறையை சாதாரணமாக சொல்லிச் செல்லும் ‘மெத்தீவ் புத்திசாலி நான் முட்டாள், அவர் பார்க்கும் கிரிக்கெட் முக்கியம். நான் படிக்கும் நாவல் அனாவசியம்’ என அவள் பேசிச்செல்வாள் சிவரஞ்சனி தன்னால் பேசமுடியாதவற்றை அந்தப் பெண்ணின் வழியாக இயக்குனர் சொல்லியிருப்பார். நான் தாமதமாக வீட்டிற்கு வரக்கூடாது ஆனால் அவர் வரலாம் என்பது போன்ற வசனங்கள் இன்றளவும் இருக்கும் பெண்களுக்கான சிக்கல்களை எடுத்துக் காட்டுகின்றது. ஊருக்குப் போவதற்காகக் கணவனிடம் அனுமதிப் பெற்றுக் கொண்டு அங்கு உள்ள தனது கல்லூரிக்குச் சென்று தனது பரிசுக் கோப்பையைப் பார்க்க ஆசைப்படுவாள். அவர்கள் தங்களது கூடோன்களில் தேடிப் பார்ப்பார்கள். கோப்பைக் கிடைக்காது. காசுக்குத் தான் அதை விற்று விடுவீர்கள் என்றால் அதை நானே விலைக் கொடுத்து வாங்கியிருப்பேன் என்று சொல்லி அங்கு இருந்து புறப்படுவாள் இரவு வீடு வந்து சேர்ந்துவிடுவாள். இவளுடைய மகள் விட்டுச் சென்ற சாப்பாட்டை எடுத்துக் கொண்டு பள்ளி வாகனத்துக்கு ஈடாக ஓடி அவள் அதைக் கொடுக்க அங்கு உள்ள மாணவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்வார்கள். அப்போது அவளையும் அறியாமல் அவள் ஒரு நிமிடம் மகிழ்ச்சி அடைவாள். இதோடு இவளின் கதை முடியுமாறு படம் முடிவுப்பெறும். இன்னொரு ஆய்விற்கு உரிய விசயமாக நாம் பார்க்க வேண்டியது இந்தப் படத்தின் பெயராகும். இந்தப் படத்திற்கு சிவரஞ்சனியும் இன்னும் சிலப் பெண்களும் எனப் பெயரிடப்பட்டு இருக்கும்.

இந்தப் படத்தைப் பார்க்கும்போது சிவரஞ்சனி தான் இந்த சமுதாயம் திணிக்கும் அடக்குமுறைகளை ஏற்றுக்கொண்டு நடக்கும் ஒரு பெண்ணாக இருப்பாள். இறுதியில் தன்னிடம் இருந்து பறிப்போன கனவுகளைத் திரும்பிப் பார்த்து வருந்தும் ஒரு பெண்ணாக அவள் இருப்பாள். சரஸ்வதியும் தேவகியும் அதை உடைத்து எரிந்து தங்கள் விருப்பம் போல் வாழ்க்கையை வாழ முயற்சிக்கும் இரு வேறுபட்ட கதாபாத்திரங்களாக இருப்பார்கள். அப்படி இருக்கும் போது இந்தப் பெயர் ஒரு நெருடலாக அமைகின்றது. மேலும் இந்த மூன்று கதைகளின் காலகட்டங்கள் மிக முக்கியமானது ஆகும். பெண்கள் அடக்குமுறை எதிராக இருப்பவர்களை அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் உடைத்துள்ளார்கள். 2009 காலகட்டத்திற்கு பின் இருக்கும் பெண்ணான சிவரஞ்சனி அதனை உடைக்காமல் ஏற்றுக் கொண்டு வாழ்வதுமாக கொண்டு செல்லப்பட்டு இருக்கும் இந்தப் படம் இது பெண்கள் எந்தக் காலக்கட்டம் என்பது முக்கியம் இல்லை அவர்கள் தங்களுக்காக குறள் கொடுத்தால் தான் அது வெளியே கேட்கும் என்பதை புலப்படுத்துகிறது. இல்லை இந்த அடக்குமுறை வர்க்கம் அவளை அடுக்குவதிலே தான் கவனம் செலுத்தும். இதையே அந்த சிவரஞ்சனி கதை வழியாக கொண்டுவர முயன்றிருப்பார் எனலாம்.

அந்தக் காலகட்டத்திலும் இன்னொரு பெண்ணாக வரும் மெத்தீவின் மனைவியும் முக்கியமான காதாபாத்திரமாகவே கொள்ள வேண்டிய தேவையை உணர்த்துகிறது. அது நமக்கு கல்வி எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதையும் கேள்விக்குட்படுத்துகிறது. நல்ல படித்தப் பெண்ணாக இருப்பவள் சிவரஞ்சனி ஆனால் படிக்காத பெண்ணாக இருப்பவள் சரஸ்வதி. இருவருக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் சரஸ்வதி ஆதிக்க வர்கத்தை எதிர்த்துக் குறள் கொடுக்கிறாள். அதனால் கணவனை இழக்கிறாள் அதனால் அவள் வாழ்க்கை முடியவில்லை வாழ்க்கை நகர்ந்துக் கொண்டேதான் இருக்கும் என்ற உண்மையை உணர்த்துகிறது. இதையே தான் படித்த உத்தியோகம் பார்க்கும் பெண்ணாக இருக்கும் தேவகியும் செய்கிறாள். ஆனால் அதே செயலை செய்ய படித்தப் பெண்ணாக இருக்கும் சிவரஞ்சனி மறுக்கிறாள். அவள் கணவுகளுக்கு தடையாக அவள் பெற்றோர் கணவர் என எல்லோரும் எதிராக செயல்படுகிறார்கள் முக்கியத்துவம் முதன்மைபடுத்தப்படுவதாக இருக்கிறது அந்த முக்கியத்துவம் அவளாள் தேர்ந்து எடுக்கப்படவில்லை அவள் பெற்றோர்களால் திருமணத்திற்கு முன் தீர்மாணிக்கப்படுகிறது பின்னால் அது கணவனால் தீர்மாணிக்கப்படுகிறது.

இது போன்ற சிக்கல்கள் காலத்தால் நவீனத்துவம் அடைகிறது என்பதில் ஐயமில்லை அதை பெண்கள் எவ்வாறு எதிர்க்கொள்கிறார்கள் என்பதை இந்த படம் ஒரு சிறு துண்டாக நமக்கு காண்பித்துச் செல்கிறது. இது போன்று நாம் பார்க்காத பல செயல்கள் இருக்கின்றன. இதில் இடம் பெறும் சிவரஞ்சனி கதாபாத்திரத்தை இறுதியில் வைத்து நமக்கு கூற வரும் செய்தியாக நாம் குடும்ப கட்டமைப்பிற்காக நம் கனவுகளைத் தவிர்த்தல் தவறில்லை என்பது போல் தோற்றம் பெறுகிறது. எனினும் நடப்பு வாழ்க்கையில் வாழும் பெண்களின் உலகம் மோசமானதாக இருக்கிறது என்பதை காண்பித்துப் போகும் சாதனமாக பார்க்கலாம் அடக்கு முறையை ஏற்காது வாழ்பவர்களுக்கு வாழ்வில்லை என்பதை உணர்த்துகிறது. பெண்களுக்கான பிரச்சனைகளைப் பேசுகின்ற திரைப்பட வரிசையில் ‘பெண் காலம் காலமாக ஒடுக்கப்படுகிறாள்’ என்று பத்தாம்பசலித்தனம் செய்யும் திரைப்படமாகவே இதனைப் பார்க்கமுடிகிறது. பெண்கள்,பெண்சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றியும் பேசவில்லை. அப்பிரச்சனைகளுக்கான தீர்வு காணக்கூடிய செயல்களை முன்னெடுப்களைப் பின்னுக்கு இழுப்பதாக இத்திரைப்படம் இருக்கிறது. பிற்போக்குத்தனமான சிந்தனைகளை முன்னோக்கி நகர்த்தக்கூடிய செயல்கள் எடுக்கப்பட்டிருக்கிறதோ என்றும் என்னத் தோன்றுகிறது.


ப. ஸ்ரீராம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிவரஞ்சனியும் இன்னும் சிலப் பெண்களும்”

அதிகம் படித்தது