மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சீன மக்கட் தொகையும் அப்போல்லோ மருத்துவமனை வாகன நிறுத்தமும்.

இராமியா

Sep 4, 2021

siragu naam iruvar namakku iruvar2

தலைப்பைப் பார்த்த உடன் “மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டாலும் போட்டு விடலாம், ஆனால் சீன மக்கட் தொகைக்கும் அப்போல்லோ மருத்துவமனையின் வாகன நிறுத்தத்துக்கும் தொடர்பு ஏற்படுத்த முடியாதே?” என்று யாருக்குமே தோன்றும். உண்மையில் இரண்டுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை தான். ஆனால் இரண்டுக்குமான கொள்கை முடிவில் முதலாளித்துவ உற்பத்தி முறை ஒரு தவறான போக்கை வற்புறுத்துவதைக் காணலாம்.

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சீனா, சோஷலிசப் பாதையில் சென்று கொண்டு இருந்த போது, அதைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் “நாம் இருவர்; நமக்கு இருவர்” என்ற கொள்கையை, பெருநகரங்களைத் தவிர நாட்டின் மற்ற பகுதிகளுக்கும், பெரு நகரங்களில் “நாம் இருவர்; நமக்கு ஒருவர்” என்ற கொள்கையையும் உறுதியாகக் கடைப்பிடித்தது. ஆனால் சோஷலிசப் பாதையை விட்டு முதலாளித்துவப் பாதையில் சறுக்கி விழுந்த பின் அங்கு இருந்த / இருக்கும் முதலாளித்துவ அறிஞர்கள் “நாம் இருவர்; நமக்கு இருவர் கொள்கை நல்ல கொள்கை தான்; ஆனால் அதைக் கட்டாயம் ஆக்கித் தனி  மனித சுதந்திரத்தை நசுக்கக் கூடாது” என்று பேசத் தொடங்கினார்கள். இதன் தொடர்ச்சியாக ஒரு இணையர் மூன்றாவது குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று சீன அரசு அண்மையில் கொள்கை முடிவு எடுத்து உள்ளது.

என்னது? “தனி மனித சுதந்திரத்தை நசுக்கக் கூடாது” என்று முதலாளித்துவ அறிஞர்கள் சொன்ன  ஒற்றை வாக்கியத்தை ஏற்றுக் கொண்டு, சீன அரசு இவ்வாறு முடிவு எடுத்து விட்டதா? நிச்சயமாக இல்லை. “நாம் இருவர்; நமக்கு இருவர்” மற்றும் “நாம் இருவர் நமக்கு ஒருவர்” என்ற கொள்கையின் படியே சென்று கொண்டு இருந்தால், சில பத்தாண்டுகளுக்குப் பின் மூத்த குடிமக்களின் (அதாவது உழைக்க முடியாதவர்களின்) எண்ணிக்கை ஒப்பீட்டு அளவில் மிகவும் அதிகமாக ஆகி விடும் என்றும், உழைக்கும் வயது உள்ள இஞைர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டு அளவில் குறைத்து விடும் என்றும் அவர்கள் கூறினர். இதனால் மூத்த குடிமக்களைப் பராமரிக்கும் பொறுப்பின் அளவை இளைஞர்கள் ஒப்பீட்டு அளவில் மிகுதியாகச் சுமக்க நேரிடும் என்றும் அவர்கள் கூறினர். இதைத் தவிர்த்து, சமூக இயக்கம் “சீராக” இயங்க வேண்டும் என்றால் அதிக குழந்தைகளைப் பெறுவதைத் தடுக்கக் கூடாது என்றும் அவர்கள் அறிவுரை கூறினர்.

அது சரி! சீனா சோஷலிசப் பாதையில் சென்று இருந்தாலும், இதே நிலைமை தானே இருந்திருக்கும்? அப்பொழுது ஏன் இத்தகைய சிந்தனை தோன்றவில்லை? சோஷலிச முறை மக்களை “அடக்கி” ஆள்வதால் இவ்வாறு சிந்திக்க முடியாமல் போய்விட்டதா? பிரச்சினை ஏற்பட்ட பின் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்று இருப்பார்களா?

நிச்சயமாக இல்லை. சோஷலிச உற்பத்தி முறைக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் தான் இரண்டு கொள்கை முடிவுகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் புரிந்து கொள்ள முடியும்.

சோஷலிச முறையில் மக்களின் தேவைகளைக் கணக்கிட்டு அவை உற்பத்தி செய்யப்படும். மக்கள் திரளில் குழந்தைகளின் எண்ணிக்கை, பதின்மர்களின் (teen agers) எண்ணிக்கை, இளைஞர்களின் எண்ணிக்கை, நடு வயதினரின் எண்ணிக்கை, மூத்த குடிமக்களின் எண்ணிக்கை, முது மூத்த குடிமக்களின் (super senior senior citzens) எண்ணிக்கை ஆகியவற்றையும், அவர்கள் குடியிருக்கும் நிலப் பகுதியில் உள்ள பழக்க வழக்கங்கள், அவர்களின் உணவுப் பழக்கம், உடைப் பழக்கம் போன்று வெவ்வேறு பழக்க வழக்கங்களைக் கொண்டு, மொத்தத் தேவைகள் கணக்கிடப்படும். அந்தத் தேவைகளை உற்பத்தி செய்யவும் விநியோகம் செய்யவும் தேவையான மனித வளம் கணக்கிடப்படும். அதன் பின் இருப்பில் உள்ள உழைக்கும் ஆற்றல் கொண்ட அனைத்து மக்களுக்கும் அவ்வேலைகள் அவரவர் திறமைக்கு ஏற்ப, பிரித்து அளிக்கப்படும். உழைக்கும் ஆற்றல் உள்ளவர்கள் உழைக்கும் நிலைக்கு வளராத தங்கள் குழந்தைகளின் தேவைகளையும், ஏற்கனவே தங்களுக்காக உழைத்துக் களைத்து ஓய்வில் இருக்கும் தந்தைமார், பாட்டன்மார்களின் தேவைகளையும் உற்பத்தி செய்வார்கள், விநியோகம் செய்வார்கள். இந்த உற்பத்தி முறையில் யாருக்கு எவ்வளவு ஆதாயம் (இலாபம்) என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. அவரவர் உழைத்த அளவுக்குக் கூலி கிடைக்கும். தேவைகளைக் கணக்கிட்டு உற்பத்தி செய்வதால் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் விற்பனை ஆகுமா அல்லது வீணாகி இழப்பு (நஷ்டம்) ஏற்பட்டு விடுமா என்ற அச்சத்திற்கு இடம் இல்லை. தொடக்கத்தில் தேவைகளைக் கணக்கிடுவதில் பிழை ஏற்படலாம். ஆனால் பட்டறிவு (அனுபவம்) காலப் போக்கில் அதைப் பெருமளவு குறைத்து விடும்.

தொழில் புரட்சி தந்த அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு பார்க்கும் பொழுது, உழைக்கும் மக்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் எந்த விகிதத்தில் இருந்தாலும் அனைத்து மக்களின் தேவைகளையும் எளிதாக உற்பத்தி, விநியோகம் செய்ய முடியும்.

ஆகவே, சீனா சோஷலிசப் பாதையில் நடைபோடும் வரை மக்கள் தொகையில் எந்த வயதினரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்; எந்த வயதினரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதைப் பற்றிக் கவலைப் படவில்லை. அதிக மக்கள் தொகை அதிகமான அளவில் பூமியைப் பிழிந்து எடுக்கும்; அதைத் தவிர்க்க மக்கள் தொகையைக் குறைப்பதே சரி என்ற வழியில் கொள்கையை வகுத்தது.

ஆனால் சீனா முதலாளித்துவப் பாதையில் சறுக்கி விழுந்த பின் நிலைமை என்ன? அதற்கு முதலாளித்துவப் பொருளாதார முறையைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலாளித்துவப் பொருளாதார முறையில் மக்களுக்கு என்ன தேவைப்படும் என்பதைப் பற்றி அதிகார வர்க்கம் கவலையே படாது. எந்தெந்தப் பண்டங்களை இலாபகமாக, அதிக இலாபகரமாக, இன்னும் அதிக இலாபகரமாக விற்க முடியுமோ அவை மட்டுமே உற்பத்தி செய்யப்படும். பல சமயங்களில் மக்களுக்கு எந்த விதத்திலும் பயன் தராத பண்டங்கள் அதிக இலாபம் தரும் என்ற ஒரே காரணத்திற்காக அவை சந்தையில் திணிக்கப்படும். எடுத்துக்காட்டாக, போர் ஆயுதங்களால் மக்களுக்கு எந்த விதமான நன்மையும் இல்லை என்பது மட்டும் அல்ல; அவை மக்களுக்குப் பெரும் தீங்கு விளைவிப்பவை. மக்கள் அவற்றை மிகவும் வெறுக்கின்றனர். ஆனால் மிகுந்த இலாபம் தரும் என்பதற்காக அவை வலுவில் உற்பத்தி செய்யப்படும்; சந்தையில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும்.siragu naam iruvar namakku iruvar3

அது ஒரு புறம் இருக்கட்டும். மூன்றாவது குழந்தை பெறலாம் என்ற கொள்கை முடிவுக்கு முதலாளித்துவ உற்பத்தி முறை துரத்தியது எப்படி என்று பார்ப்போம். ஒரு இணையர் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொண்டால், சில பத்தாண்டுகளுக்குப் பின் மூத்த குடி மக்கள் மற்றும் முது மூத்த குடி மக்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று கணக்கிட்ட முதலாளித்துவ அறிஞர்கள் அந்த நேரத்தில் முதியவர்களின் தேவைக்கான பண்டங்களை மிக அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டி இருக்கும் என்றும், தவறினால் சமூக அமைதியின்மை ஏற்படும் என்பதையும் புரிந்து கொண்டார்கள். அதற்காக மனித வளத்தின் பெரும் பகுதியை அப்பண்டங்களை உற்பத்தி செய்யும் பணிக்குத் திருப்பி விட வேண்டி இருக்கும். அப்பண்டங்களின் மூலம் அதிகமான இலாபத்தை எதிர்பார்க்க முடியாது. பெரும் எண்ணிக்கையிலான உழைக்கும் மக்களை முதியவர்களின் தேவைக்கான பண்ட உற்பத்தியில் ஈடுபடுத்தினால், அதிக இலாபம் தரும் பண்டங்களை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபடக் கூடிய தொழிலாளர்களின் எண்ணிக்கை போதுமான அளவில் கிடைக்காமல் போய் விடும். இது அப் பண்டங்களின் உற்பத்திக் குறைவிலும், தொழிலாளர்களின் கூலி உயர்விலும், இறுதியாக இலாப விகிதம் குறைவதிலும் முடியும்.

முதலாளிகளும், முதலாளித்துவ அறிஞர்களும் இந்த உலகில் எதை ஒப்புக் கொண்டாலும் (இந்த உலகமே அழிந்து போக ஒப்புக் கொண்டாலும்) இலாபமும் இலாப விகிதமும் குறைவதை ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இந்த நிலையில் தான் சீனாவின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் மாற்றம் செய்து விட்டால், தங்கள் மூலதனத்தின் இலாப வெறிப் பயணத்திற்கு உராய்வு ஏற்படாது என்று “கண்டு” கொண்டார்கள். சோஷலிசப் பாதையில் இருந்து முதலாளித்துவப் பாதைக்குச் சறுக்கி விழுந்த சீனா, முதலாளிகளின், முதலாளித்துவ அறிஞர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டது.

 சரி! அப்போல்லோ மருத்துவமனையின் வாகன நிறுத்தத்தைப் பற்றிப்  பார்ப்போம். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை பெருகப் பெருக, நிரம்பி வழிந்த வாகனங்களை சாலைகளில் நிறுத்தினார்கள். குறுகிய காலத்திலேயே சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்களும் நிரம்பி வழிய, அது மருத்துவமனைக்கு வரும் வழியையே மறைக்கத் தொடங்கியது. உடனே ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. இதற்குத் தீர்வு காண விரும்பிய அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள, மாநகராட்சிக்குச் சொந்தமான, இடத்தில் வாகன நிறுத்தத் தளங்களை அமைக்கலாம் என்றும் முடிவு செய்தது. ஆனால் அதற்கு ஆகும் செலவுக்கு என்ன செய்வது என்ற பிரச்சினை வந்தது. உடனே அதைத் தனியாரிடம் கொடுத்து விடலாம் என்றும், அங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிப்பதன் மூலம் அந்தத் தனியார் நிறுவனம், தான் முதலீடு செய்த பணத்தை மீட்டுக் கொள்ளட்டும் என்றும், அதற்கான இலாபத்தையும் ஈட்டிக் கொள்ளட்டும் என்றும் முடிவு செய்து, அப்பணிக்காகத் தனியார் நிறுவனங்களை அழைத்தது.

siragu car parking

அந்த இடத்தில் வாகன நிறுத்தக் கட்டடத்தை மட்டும் கட்டினால் போட்ட முதலுக்குப் போதிய இலாபம் கிடைக்காது என்றும், கூடவே மூன்று தளங்கள் வணிக வளாகம் கட்டினால், அவற்றில் இருந்து கிடைக்கும் வாடகை மற்றும் வாகன நிறுத்தக் கட்டணமும் சேர்ந்து, திட்டத்தை இழப்பு ஏற்படாமல் நடைமுறைப்படுத்த முடியும் என்றும் வாகன நிறுத்தத் திட்டத்தை ஆய்வு செய்து பார்த்த நிறுவனங்கள் தெரிவித்தன. இப்பகுதியில் வணிக வளாகம் கட்டினால் அதனாலும் வாகன வரத்து அதிகமாகும் அல்லவா என்று வினவப்பட்ட பொழுது, அப்படி அதிகரிக்கும் வாகனங்களுக்கும் சேர்த்து வாகன நிறுத்தப்பரப்பை அதிகரித்து வாகன நிறுத்தத் தளங்களைக் கட்ட முடியும் என்று தனியார் நிறுவனங்கள் கூறின. அரசும் தனியார் நிறுவனங்களின் யோசனையை ஏற்றுக் கொண்டது.

சற்று யோசித்துப் பாருங்கள். மருத்துவமனைக்கு வரும் வாகனங்களினால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து உள்ள நிலைக்குத் தீர்வு காணச் சொன்னால், போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகரித்துத் தீர்வு கண்டால், அது சுற்றுப் புறத்தில் போக்குவரத்து நெரிசலை அதிகரிக்கும் அல்லவா? ஒவ்வொரு பிரச்சினைக்கும் இதைப் போலவே தீர்வு கண்டால் அது மாநகரப்  போக்குவரத்தை அளவுக்கு மீறி அதிகரித்து வாகனங்களின் / மக்களின் நகர்தலை வெகுவாக மந்தமாக்கி விடுமே? இது நகரத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு இடையூறாக அமையுமே? அது மட்டும் அல்லாமல் மக்களின் மன நலத்தையும் வெகுவாகப் பாதிக்குமே?

மூலதனத்தின் இலாப வேட்டைப் பயணத்தில் உராய்வு கூடாது என்பதற்காக முதலாளிகளின் / முதலாளித்துவ அறிஞர்களின் வழிகாட்டுதலில் புவி வளங்களை அளவுக்கு மீறிப் பிழிந்து, எதிர்காலத் தலைமுறையினரின் உரிமைகளைக் கொள்ளை அடிக்கும் வண்ணம் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று சீனா முடிவு எடுக்கிறது.

அப்போல்லோ மருத்துவமனை வாகன நிறுத்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முற்படும் போதும், முதலீட்டுக்கு அதிகமான இலாபம் வராமல் இருந்து விடக் கூடாது என்பதற்காக ஒட்டு மொத்த நகரப் போக்குவரத்தையே பாழாக்கி, பயணிகளின் பயண நேரத்தைச் சூறையடித்து, நகர வாழ்க்கையை நரக வாழ்க்கையாக்குவதற்கும், முதலாளித்துவ உற்பத்தி முறையின் சிந்தனைப் போக்கே அடிப்படைக் காரணமாக அமைகிறது.

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட முடியாது தான். ஆனால், உலகின் எந்த ஒரு மூலையிலும், மக்கள் நலனுக்காக எதிராக நடக்கும் எந்த நிகழ்வையும் கூர்ந்து கவனித்துப் பார்த்தல், அதற்கு முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறை தான் அடிப்படைக் காரணமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு மக்கள் நலனுக்கு எதிராக இருக்கும் முதலாளித்துவ முறையை அப்படியே தொடர விடப் போகிறோமா அல்லது எதிர்த்துப் போராடி அழித்து ஒழிக்கப் போகிறோமா?


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சீன மக்கட் தொகையும் அப்போல்லோ மருத்துவமனை வாகன நிறுத்தமும்.”

அதிகம் படித்தது