மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ்நாட்டை பாலைவனமாக ஒருபோதும் அனுமதியோம்!

சுசிலா

May 18, 2019

iragu hydro carbon2

ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு, தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கும் செய்தி நாம் எல்லோரும் அறிந்ததே. இதற்கு மக்களின் போராட்டங்கள் வலுக்கும் இந்நிலையிலும் கூட, அதற்கான பணியை தொடங்கி விட்டன அந்நிறுவனங்கள். விழுப்புரம் தொடங்கி நாகை மாவட்டம் வரை ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான கிணறுகளை வெட்டும் பணி, மத்திய அரசின் அனுமதியோடு மிக துரிதமாக நடைபெற ஆயுத்தமாகி வருகின்றன. நாடு முழுவதும் 22 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. டெல்டா மாவட்டங்களில், மட்டும் 274 இடங்களில் கிணறுகள் தோண்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை, 1794 சதுரகிலோ மிட்டர் தூரம் வரை தோண்டுவதற்கான பணி தொடங்கப்படவுள்ளன.

இதன்படி, நாகை மாவட்டத்தின், மயிலாடுதுறை செம்பனார் கோவில் மற்றும் வேதாரண்யம் கரியாப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான முயற்சிகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறது. அப்பகுதிகளில் விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டங்களை நடந்த துவங்கியுள்ளனர். மக்களின் இந்த கடும் எதிர்ப்பை மீறியும் அந்நிறுவனம் தங்களுடைய பணியை தொடர்வதற்கான பொக்லைன் இயந்திரங்களை விவசாய நிலங்களில் கொண்டுவந்து இறக்கியுள்ளனர்.

இப்படி ஏன் மக்கள் எதிர்ப்பை மீறியும் மத்திய அரசு இந்த கொடூர செயலில் ஈடுபடுகிறது, இதனால் என்ன லாபம் என்பதை இக்கட்டுரையின் வாயிலாக சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

இந்தியாவில் பூமிக்கு அடியில் அதிகப்படியான எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயுவும் உள்ள பகுதிகளில் காவிரிப் படுகையும் ஒன்றாகும். புதுச்சேரி முதல் மன்னார் வளைகுடா வரையுள்ள நிலப்பரப்பில், 25 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், கடலில் சுமார் 30 ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பளவும் காவிரிப் படுகையாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதியை குறிவைத்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் தீட்டப்பட்டது. அதன் நீட்சியாக தான், 2006-ல் நெடுவாசலில் பூமிக்கடியில் துளையிடப்பட்டது. இதனால் பல ஏக்கர் நிலம் உபரிநிலமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது என்ற உண்மை தெரிந்ததால், அப்பகுதி மக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி, இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தினர். இருப்பினும், சில காவிரி டெல்டா பகுதிகளில் மட்டும் எண்ணையும், இயற்கை எரிவாயுவும் ஏற்கனவே எடுக்கப்பட்டு கொண்டுதானிருக்கிறது. இந்நிலையில் தான், டெல்டா முழுவதும் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு செய்து, தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டு, அதற்கான வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஹைட்ரோகார்பன் என்றால் என்ன ?

iragu hydro carbon1

ஹைட்ரஜன் வாயு மற்றும் கார்பன் வாயுக்களின் கூட்டுப் பொருள் தான் இந்த ஹைட்ரோகார்பன். இந்த வாயுடன் ஆக்சிசன் சேர்த்து, எரிபொருளாக மாற்றப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரவுள்ளது. இந்த ஹைட்ரோ கார்பன்கள் மூலம் தான், பெட்ரோல், டீசல், நிலக்கரி,எரிவாயு, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, ஷெல் எரிவாயு முதலியவை பிரிக்கப்படுகின்றன. ஆகையால் தான், நாட்டின் எரிபொருள் தேவைக்கென, காவிரி படுகையில் சிறிய அளவில், இந்த வாயு எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால், தற்போது தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 274 கிணறுகள் அமைக்க அனுமதியளித்திருப்பது என்பது மிகவும் கொடுமையான ஒரு செயலாகும். மிகவும் கணடனத்துக்குரியதும் கூட. கடந்த 2017-ஆம் ஆண்டில், மத்திய பெட்ரோலிய அமைச்சகம் இந்த பணியை ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமையான வேதாந்தா நிறுவனத்திற்கு அளித்துவிட்டது.

இதன்முலம், இந்த 274 கிணறுகளும் பூமியின் கீழ் உள்பகுதிக்கு ஏற்ப 3,500 மீட்டர் முதல் 4,500 மீட்டர் ஆழம் வரை தோண்டப்படும். மேலும், காவிரிப் படுகையில் கடல் பகுதியில் சுமார் 4 ஆயிரம் கி.மீ. பரப்பளவுக்கு இந்த கிணறுகளில் பல இடங்களிலும், நிலப்பகுதிகளைப் பொருத்த வரை நாகை, காரைக்கால், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் கிணறுகள் அதிகம் அமையவிருக்கின்றன. அது மட்டுமல்ல, சுற்றுசூழலுக்கு எதிராக, பிச்சாவரம் பாம்குரோவ் காட்டுப் பகுதியில் இருந்தும், அரை கிலோ மீட்டர் தொலைவில், எண்ணெய் கிணறுகள் தோண்டப்படஉள்ளன. இதில், என்னவொரு கொடுமையென்றால், 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகளை ஏற்கனவே வேதாந்தா நிறுவனம் முடித்து விட்டதாக கூறப்படுகிறது. அடுத்த 15 ஆண்டுகளுக்குள் காவிரிப் படுகையில் உள்ள பெரும்பாலான இயற்கை எரிவாயுவை எடுக்கும் வகையில் இந்த திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.

இதுவரை, இயற்கை எரிவாயுவும், கச்சா எண்ணையையும் எடுத்துவந்த நிலையில், தற்போது மிக மிக ஆழமாக ஷெல் எரிவாயுவை எடுக்கும் பணியை தொடங்கியுள்ளது மத்தியஅரசு. இந்த ஷெல் எரிவாயு என்பது, களிமண் பாறைகளில் உள்ள துளைகளில் இருக்கும் ஒரு வித வாயு. இதை எடுப்பதற்கு 78 விதமான வேதிப்பொருட்களை தண்ணீரில் கலந்து, 6 டன் வேகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சூழிலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், இதற்கு தண்ணீர் மிக அதிகளவில் தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது. நம் மாநிலத்தில், குடிப்பதற்கே நீர் இல்லாத நிலையில், இவ்வளவு நீரையும் வீணாகப்போகிறார்களா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. மேலும், இத்தனை வேதிப்பொருட்கள் பூமிக்கடியில் செலுத்துவதனால், நிலத்தடிநீரும் மாசுபட வாய்ப்பிருக்கிறது. இதனால், புற்றுநோய் வரும் அபாயமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக, இந்த நிலங்கள் இனிமேல் விளைநிலங்களாக பயன்படப்போவதில்லை. விவசாயத்திற்கு ஏற்ற நிலமாக நிச்சயம் இருக்காது என்ற நிலை உருவாகிவிடும் பேராபத்தும் இதில் இருக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த தமிழக மக்களும், நம் வருங்கால சந்ததியினரும் உணவிற்கு வேறு மாநிலத்தை எதிர்பார்க்கும், கையேந்தும் நிலை ஏற்பட்டுவிடும் ஆபத்து உருவாக்க போகிறது என்பதை நினைக்கும் மாத்திரத்திலேயே, நம் மனம் கதிகலங்குகிறது. இத்திட்டத்தை எப்படியாகினும், தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கடமை நம் எல்லோரிடமும் இருக்கிறது.

இத்திட்டத்திற்கு, புதுவை முதல்வர் திரு. நாராயணசாமி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
” எங்களுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் வந்தால், உடனே, அதனை திருப்பியனுப்பி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று பதிலளிப்பேன்” என்று உறுதியளித்துள்ளார்.

ஆனால், நம் தமிழக அரசோ, இதுவரை, எதுவுமே அறிவிக்காமல், வாய்முடி மௌனியாக இருக்கிறது. மக்கள் விருப்பமில்லாமல் எதுவும் செய்ய மாட்டோம் என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டு, மறுபுறம், மத்தியஅரசின் அனைத்து வஞ்சகச்செயல்களுக்கும் துணைபோகிறது என்பது மிகவும் வருத்தப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது.

வல்லரசு எனப்படும் அமெரிக்கா நாட்டில், மிசிசிபி மற்றும் மிசௌரி நீர் படுகைகளில், இத்திட்டம் செயல்படுத்த அரசு முனையும்போது, அப்பகுதிகளில் வசிக்கும் அமெரிக்க மக்களும், ஒட்டுமொத்த அமெரிக்கமக்களும், சுற்றுசூழல் அமைப்புகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்தபோது, அந்நாட்டின் அரசு இத்திட்டத்தை கைவிட்டது. ஆனால், இந்த மத்திய பா.ச.க அரசு, மக்களின் நலனில் அக்கறை கொள்ளாத ஒரு அரசாயிற்றே!

அதனால் தான், இதை செயல்படுத்தியே தீருவோம் என்று மக்களைப் பற்றி கவலைப்படாமல், அவர்களின் போராட்டங்களை பொருட்படுத்தாமல் வாட்டிவதைக்கிறது!

வேளாண்நிலங்களையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, ஆரோக்கிய வாழ்வையும் சீரழிக்கும் இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தை முறியடிப்போம்!

தமிழகத்தை பாலைவனமாக்க துடித்துக்கொண்டிருக்கும் மத்திய அரசையும், அதற்கு துணைபோகும் மாநில அரசையும் கண்டித்து, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடவேண்டிய கட்டாயம் தற்சமயம் ஏற்பட்டிருக்கிறது.!

“அனுமதியோம், அனுமதியோம் … தமிழ்நாட்டை பாலைவனமாக்க ஒருபோதும் அனுமதியோம்” என்ற கண்டனக்குரல்கள் தமிழகமெங்கும் ஒலிக்கட்டும்!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ்நாட்டை பாலைவனமாக ஒருபோதும் அனுமதியோம்!”

அதிகம் படித்தது