மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தூண்டிவிடப்படும் மதவெறியும், துண்டாடப்படும் மக்களும்!

சுசிலா

Feb 29, 2020

siragu caa1
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கடந்த இரண்டு மாதங்களாக அறவழியில் அமைதியாகப் போராடிவந்த தலைநகர் தில்லி மக்கள், இன்று திடீரென்று தாக்குதலுக்கு உட்பட்டிருக்கிறார்கள் என்பதில்,  உலக அரங்கில் நாம் எல்லோரும் இந்தியர்கள் என்ற வகையில் மிகவும் வெட்கப்படவேண்டியவர்களாக, தலைகுனிந்து நிற்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பது வருந்தத்தக்க ஒரு நிகழ்வாக நடந்திருக்கிறது. வடகிழக்கு தில்லியில், கடந்த மூன்று தினங்களாக நடந்த வெறித்தனமான வன்முறையில் இதுவரை ஒரு தலைமை காவலர் உட்பட 38 பேர்கள் உயிரிழந்துள்ளனர். 300 பேர்களுக்கும் மேலாக காயமடைந்துள்ளனர் என்ற செய்தி நம்மை மிகவும் வேதனைக்குள்ளாக்க வைக்கிறது.

siragu caa2

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்துகிறோம் என்ற பெயரில் சில இந்துத்துவ அமைப்புகள், வடகிழக்கு தில்லியிலுள்ள மாஜ்பூர், ஜபராபாத், சீலம்பூர், சந்த்பாக் ஆகிய இடங்களில் தங்களின் போராட்டத்தை நடத்தின. அதில், இச்சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் போராடிய இரு தரப்பினர்கிடையே வன்முறை வெடித்தது. அதில், ஆதரவாக போராடியதாக கூறப்படுவோர், கண்ணில் பட்டவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினர். தீ வைத்து கொளுத்தினர். கடைகள், வீடுகள், கார்கள் என அனைத்தும் நாசமாக்கப்பட்டன. இவையனைத்தும் மத சிறுபான்மையினரான இசுலாம் மக்களை குறிவைத்தே தாக்கப்பட்டன. அதிகப்படியான அராஜகங்கள் நடந்தேறியது. தாக்கப்பட்டவர்களை அழைத்துச்செல்லும் ஆம்புலன்ஸ் கூட மருத்துவமனைக்குச் செல்ல முடியாதபடி அடித்து வழிமறிக்கபட்டன. வீடு புகுந்து உள்ளே இருக்கும் இசுலாமிய மக்களைத் தாக்கியிருக்கிறார்கள். இது எல்லாம் முன்னரே திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டிருக்கிறது. முன்கூட்டியே இசுலாம் வீடுகள் அடையாளம் கண்டு வைத்துக் கொண்டு, கலவரம் போது, மிகச்சரியாக அவர்களின் இல்லங்கள் மட்டும் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. தீக்கிரையாக்கப் பட்டிருக்கின்றன. மசூதிகளும் இதற்குத் தப்பவில்லை. தீவைக்கப்பட்டு, உள்ளே புனித நூல்கள் உட்பட அனைத்தும் எரிக்கப் பட்டிருக்கின்றன. சிசிடிவி கேமராக்கள் உட்பட உடைத்து ஒரு கொடூர வன்முறையை இசுலாம் மக்கள் மீது ஏவிவிடப்பட்டிருக்கிறது.

இந்த தில்லி வன்முறையாளர்களிடம், செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள் உட்பட சிக்கி, அடிபட்டு, தாங்கள் பதிவு செய்த பதிவுகளை அழித்துவிடும்படி, மிரட்டப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு தப்பி வந்துள்ளனர் என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியார் ஒருவரே கூறுயிருக்கிறார். மேலும் அப்பகுதியில் வசிக்கும் இசுலாம் இளைஞர்களை சரமாரியாக இரும்பு கம்பிகளாலும், தடிகளாலும் தாக்கியுள்ளனர். இன்னும் சிலர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். கண்முடித்தனமாக கையெறி குண்டுகளை வீசியிருக்கிறார்கள். இவையனைத்தையும் காவல்துறை தடுக்கவில்லை என்பது தான் கொடூரத்தின் உச்சம், வன்முறையாளர்களுக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டிருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது. ஜெய்ஸ்ரீராம் என்று முழங்கிக்கொண்டே, இவ்வளவு வெறித்தனத்தையும் செய்து முடித்திருக்கிறார்கள். நிலைமை மிகவும் மோசமடைவதைக் கண்ட மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், அதன் பிறகே, துணை ராணுவப்படையை அனுப்பி நிலைமையை சரி செய்திருக்கிறது. சில இடங்களில் 144 ஊரடங்கு உத்தரவும் போட்டு, கலவரத்தைத் தடுத்து கட்டுக்குள் தற்போது கொண்டு வந்திருக்கிறது, ஆனால், மூன்று நாட்கள் எதையும் கண்டுகொள்ளாமல், இத்தனை உயிரிழப்புகளுக்கும், உடைமை சேதப்படுத்தியதற்கும் உள்துறை அமைச்சகம் பதில் சொல்லி ஆகவேண்டும் என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது. எதிர்க்கட்சியான காங்கிரசு, மத்திய உள்துறை அமைச்சகம் தோல்வி அடைந்திருக்கிறது, மக்களைப் பாதுகாக்க தவறியிருக்கிறது, ஆதலால் அதற்குப் பொறுப்பேற்று திரு அமித்ஷா அவர்கள் பதவி விலக வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அவர்களிடம் மனு கொடுத்துள்ளது.

இந்தக் கொடிய வன்முறைக்குக் காரணம், தில்லி பா.ச.க-வின் முக்கியத் தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் மற்றும் பர்வேஸ் வர்மா ஆகியோருடைய வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறையைத் தூண்டும் பேச்சுகள்தான் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அப்போதே அவர்கள் பேச்சைக் கண்டிக்காமல் கட்சித் தலைமை மேம்போக்காக இருந்ததின் விளைவு தான் இந்த கோர தாண்டவம் என்பது மக்களின் கருத்தாகவும் இருக்கிறது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் கூட, ” இவர்களின் பேச்சு கண்டிக்கத்தக்கது, வன்முறையைத் தூண்டக்கூடியது மற்றும் காவல்துறையின் மெத்தனமே இவ்வளவு உயிரிழப்புகள் மற்றும் பொருள் சேதத்திற்கும் காரணம் என்று கூறியிருக்கிறது. மேலும் உடனே வன்முறையாளர்கள், வன்முறையைத் தூண்டியவர்கள் மீது எப்.ஐ.ஆர் போடுங்கள்.” எனவும் கண்டித்துள்ளது. இதில், தில்லி முதல்வர் அவர்களையும் உடனே பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து, அவர்களுக்கு ஆதரவு அளிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு முன்னரே, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும், ஜாமியா பல்கலைக்கழகத்திலும் உள்ளே புகுந்து, மாணவர்களை கடுமையாகத் தாக்கிய வன்முறை கும்பல் மீது இதுவரை அரசு எவ்வித நடவடிக்கையும், எடுத்ததாகத் தெரியவில்லை. மாணவர்கள் பேரணியில், போனபோதும் கூட துப்பாக்கிச்சூடு நடந்தது. மாணவிகளிடம் தவறாக நடந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றே. எதற்கும் உரிய நடவடிக்கை எடுக்காத அரசு, தற்போது மிகப்பெரிய வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கைப் பார்த்திருக்கிறது என்பது தான் வருந்தத்தக்க உண்மையாக இருக்கிறது.

siragu caa3

இந்த தில்லி கலவரம் பற்றி, இன்று உலகம் முழுவதும் பேசிக்கொண்டிருக்கின்றன. பிபிசி இந்த வெறியாட்டத்தை சுட்டிக் காட்டியிருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், வன்முறையின் மூலவேர் பா.ச.க-வின் கபில் மிஸ்ரா என்றும், அமைதியான அறப்போராட்டத்தை, கலவரமாக மாற்றியது, அவருடைய பேச்சு தான் என்று கூறியிருக்கிறது. மேலும் அமெரிக்காவின், சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமைப்பு (USCIRF), தில்லி வன்முறையை முஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதல் என்றும், இந்திய அரசு தன் கடமையிலிருந்து தவறிவிட்டது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. ஐ.நா. சபை தலைமை செயலர் கூட, இந்த வன்முறை கலவரத்தை இசுலாம் மக்களுக்கு எதிரான ஒரு மிகப் பெரிய வன்முறை தாக்குதல் என கண்டித்துள்ளார்.

உலகநாடுகள் மத்தியில், இந்தியாவின் பெருமையை சீர்குலைத்திருக்கிறது பா.ச.க அரசு. குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு வேண்டாம், இதனால் பெரும்பாலான இந்தியர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்படுவர் என்று அமைதியான முறையில், அறவழியில் போராடும் உரிமை மக்களுக்கு இருக்கிறது. இந்தியா ஒரு மிகப்பெரிய சனநாயக நாடு. மதசார்பற்ற நாடு என்பது தான் இந்தியாவின் பெருமை. ஆனால், பா.ச.க பதவியேற்றது முதல், சனநாயகமும், மதச்சார்பின்மையும் நாள்தோறும் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகின்றன. மத ரீதியாக, மக்களைத் துண்டாட, மதவெறியைத தூண்டிவிட்டு, அதன் மூலமாக பல மொழிகள், பல பண்பாடுகள், பல இனங்கள் கொண்ட இந்த இந்திய துணைக்கண்டத்தில், ‘வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் மக்களிடையே, ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவான ஒற்றை இந்துராஜ்ஜியத்தை ஏற்படுத்திவிடலாமென்று முயற்சி செய்கிறது பா.ச.க அரசு. அது என்றைக்கும் பலிக்காது, மக்கள் ஒற்றுமை ஒன்றே பலம் என்பதை மக்கள் நன்கு தெரிந்துகொண்டிருக்கிறார்கள்.

இதனை புரிந்துகொண்டு, பா.ச.க அரசு, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை உடனே திரும்பப் பெற வேண்டும். மக்களுக்கான ஒரு நல்லாட்சியைத் தருவதற்கு முன்வர வேண்டும். வீழ்ந்துவரும் பொருளாதாரத்தை, சரிசெய்து வளர்ச்சிப் பாதையில் கொண்டுபோவதற்கு முயற்சி செய்ய வேண்டும். செய்வதற்கு நிறைய பணிகள் இருக்கும்போது, தேவையில்லாதவற்றைத் தவிர்த்து, முன்னேற்றப்பாதையில் கொண்டுபோக, இனிமேலாவது பா.ச.க அரசு சிந்தித்து செயல்படட்டும்!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தூண்டிவிடப்படும் மதவெறியும், துண்டாடப்படும் மக்களும்!”

அதிகம் படித்தது