மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தேர்தல் ஆணையம் நேர்மையுடன் செயல்படட்டும்!

சுசிலா

Apr 6, 2019

siragu election-commission1

உலகிலேயே மக்கள்தொகையின் அடிப்படையில், மிகப்பெரிய சனநாயக நாடு, நம்முடைய நாடு இந்தியா என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்ளல் வேண்டும். இந்த 2019 – ஆம் ஆண்டு, 17 – வது மக்களவை பொதுத் தேர்தல் நடைபெறப்போகிறது. அத்தகைய சிறப்புமிக்க இத்தேர்தலை நாம் பெருமையுடன் சந்திக்க இருக்கிறோம். இந்தியா விடுதலைப்பெற்று முதல் தேர்தலின் போது, உலகத்தின் பார்வை நம்மீது பரவலாகக் காணப்பட்டது. அப்போதே, எவ்வித கட்டமைப்பும் இன்றி, ஊடக வசதிகளின்றி நாம் வெற்றிகரமாக தேர்தலை நடத்தி, மக்களவை உருவாக்கி மிகச்சிறந்த சனநாயக நாடு என்பதை மெய்ப்பித்திருக்கிறோம். இதற்காக நாம் ஒவ்வொருவரும் இந்தியன் என்ற வகையில் பெருமைகொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.

நடந்து முடிந்திருக்கும் 16 மக்களவைத் தேர்தல்களும், சில குறைகள் இருந்தாலும், பல நிறைகளோடு மிக நன்றாகவே நடந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இம்முறை 2019 மக்களவைத் தேர்தல், மக்களின் மனதில், சிறிது ஐயத்தை கொடுத்திருக்கிறது என்பது வருந்தத்தக்க உண்மை. ஏனென்றால், இந்திய தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி பெற்ற ஒரு அமைப்பு. இதில் மத்திய அரசோ, மாநில அரசுகளோ எந்த விதத்திலும் குறுக்கீடு செய்ய முடியாது என்பது தான் அதனுடைய முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பாகும். ஆனால் 2014 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, பா.ச.க மோடியின் ஆட்சியில், பல குற்றசாட்டுகள் எழுகின்றன. தமிழ்நாட்டில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இடைத்தேர்தலில், பல குற்றசாட்டுகள் வைக்கப்பட்டன. பணப்பட்டுவாடா நடக்கிறது என்று தேர்தல் தேதியையே தள்ளிவைக்கக் கூடியளவிற்கு புகார்கள் குவிந்தன. வருமானவரி சோதனைகள், அ.தி.மு.க அமைச்சர் வீட்டிலேயே நடந்தது. இன்னும் பல இடங்களில் சோதனைகள் நடந்தன. மூன்று கண்டெய்னர் லாரிகளில் 560 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அது யாருடைய பணம் என்றே தெரியாத நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு பாரத வங்கி தங்களுடையது என்று கூறியது. அ.தி.மு.க அமைச்சர்களின், எம்.எல்.ஏ-க்களின் வீடுகளிலும், அவர்களின் பினாமி வீடுகளிலும் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது. இருப்பினும் அவைகள் பற்றி எந்த தகவலும் அதன்பிறகு வரவில்லை. விசாரிக்கப்படவுமில்லை. அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாகவும் தெரியவில்லை!

தமிழகத்தில் இப்போதைய தேர்தலின் போதும், இன்னும் அதிக அளவில் பணபட்டுவாடா நடக்கிறது என்று சொல்லப்படுகிறது. வெளிப்படையாகவே அதிமுகவினர், இரட்டைஇலை போடப்பட்ட புடவைகளை விநியோகம் செய்கின்றனர் என்பதை ஊடகங்கள் காட்டுகின்றன. வாக்கிற்கு மக்களிடம் பணம் கொடுக்கப்படுகிறது என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் வருமானவரி சோதனைகளோ, எதிர்கட்சியினரின் வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் திட்டமிட்டு நடக்கின்றன என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை வைக்கின்றன. ஆளும் கட்சியினரின் வீடுகளில் சோதனை நடைபெறுவதில்லை. எதிர்க்கட்சி மற்றும் அவர்களின் கூட்டணிகட்சினரின் இடங்களில், அலுவலங்கங்களில் சோதனை என்ற பெயரில் ரொக்கங்கள் கைப்பற்றப்படுகின்றன. ஆனால், அவை எங்களின் பணம் அல்ல, மேலும் தேர்தல் நேரத்தில், இம்மாதிரி செய்வதன் மூலம் தேர்தல் பணிகள் செய்யமுடியாமல் போகிறது என்ற குற்றச்சாட்டும் எதிர்க்கட்சிகள் மத்தியில் எழுகிறது. மேலும், காவல்துறை உதவியுடன், காவல்துறை வாகனங்களிலேயே பணம் எடுத்து செல்லப்படுகின்றன, அந்த வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். இதைப்பற்றிய விசாரணை ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை. இதனை தேர்தல் ஆணையம், பாரபட்சம் இல்லாமல் உடனடியாக விசாரிக்க வேண்டும், என்ற குரல்கள் பரவலாக தமிழகம் எங்கும் ஒலிக்கின்றன.

siragu election-commission2

நாடு முழுவதிலும், இதுவரை ரூ.175 கோடி வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், தங்கம், சாராயப்பாட்டில்கள் மற்றும் போதைப்பொருட்கள் முதலிவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதில், என்ன ஒரு கொடுமையென்றால், வாக்குக்கு பணம் கொடுப்பது, வாக்குச்சாவடி கைப்பற்றுவது மெய்ப்பிக்கப்பட்டால் , தேர்தலை தள்ளிவைக்கவோ, ரத்துசெய்யவோ தங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்ததை, மத்திய மோடி அரசாங்கம் நிராகரித்திருக்கிறது என்பது தான். இது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது!

மேலும், தமிழ்நாட்டில் 18 இடங்களுடன் சேர்த்து மற்ற 3 இடங்களுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிய எதிர்கட்சியினரின் மனுவிற்கு, இப்போது இல்லை, விரைவில் இடைத்தேர்தல் நடத்துவோம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. ஆனால், கோவாவில் மட்டும், முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மரணடைந்த நிலையில், உடனே இடைத்தேர்தலை அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். அதேபோல், குஜராத்திலும், கட்சித்தாவல் காரணமாக காலியாக இருக்கும் இடங்களுக்கு உடனே மூன்று இடைத்தேர்தல்களை அறிவிக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் 21 தொகுதிகள் இருக்கும் நிலையில், 18 இடங்களுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடப்பதாக அறிவிக்கிறது. இங்கு மட்டுமல்ல, ஆந்திரமாநிலத்திலும் இதேபோல், பணப்பட்டுவாடா நடப்பதாகவும், வருமானவரி சோதனைகள் நடத்துவதும், அதனால், தேர்தல் பணிகள் முடக்கப்படுகின்றன என்றும் அம்மாநில முதல்வர் குற்றஞ்சாட்டுகிறார்.

அனைத்திற்கும் மேலாக, மிகப்பெரிய அச்சுறுத்தல் என்னவெனில், நாடு முழுவதும், 8 கோடி பெண் வாக்காளர்கள், வாக்களிக்கும் பட்டியலில் தங்கள் பெயர்கள் இடம் பெறவில்லை என்று முறையிட்டு இருக்கிறார்கள் என்ற செய்தி குறிப்பிடத்தக்கது. அவர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன என்று அதிர்ச்சிமிக்க தகவலை மார்க்சிஸ்ட் கட்சி கூறுகிறது. மேலும், நாடு முழுவதும், 13 கோடி வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் சொல்லப்படுகிறது. அதில், சிறுபான்மை மதத்தினர், தலித் மக்கள் அடங்கியிருப்பதாக செய்திகள் வருகின்றன. ஆளும் பா.ச.க கட்சிக்கு யாரெல்லாம் வாக்கு அளிக்கமாட்டார்கள் என்பதை கணக்கில்கொண்டு அவர்களின் வாக்கு நீக்கப்படுகிறது என்றால், இது சனநாயகத்திற்கு எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கப்போகிறது என்பதை நாம் உணரவேண்டும். மேலும், எதிர்கட்சிகளை, தங்களின் அதிகாரம் மூலமாக அடக்கிவிடலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. மக்களின் மனதில் ஒரு அச்சத்தை உண்டாக்கி, அதன்முலம் தங்கள் லாபம் அடையலாம் என எத்தனிக்கிறது. தன்னாட்சி பெற்ற அனைத்து அமைப்புகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மோடி அரசு, இந்திய தேர்தல் ஆணையத்தையும், தங்கள் வசம் கொண்டுவருவதில் வியப்பேதுமில்லை!

ஆதலால், உடனே இதனை இந்திய தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்க தவறினால், மக்களிடம் தங்களின் நம்பகத்தன்மையை இழக்க நேரிடும். சனநாயகம் காப்பற்றப்பட வேண்டுமென்றால், இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையுடன், பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். இதனை சரிவர செய்ய தவறினால், அடுத்த தேர்தல் நடக்க வாய்ப்பில்லாமல் போய்விடும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளும், கல்வியாளர்களும், அறிவியலார்களும், முதுபெரும் அரசியல்வாதிகளும் எச்சரித்த கூற்று மெய்ப்பிக்கபட்டுவிடும் அவலம் நடந்தேறிவிடும் பேராபத்து இருக்கிறது. இதனை உணாந்து, இந்திய தேர்தல் ஆணையம் தன்னாட்சியுடன், நேர்மையாக, எவ்வித பாரபட்சமுமின்றி திறம்பட செயல்படட்டும் என மக்களாகிய நாம் வலியுறுத்துவோம்!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தேர்தல் ஆணையம் நேர்மையுடன் செயல்படட்டும்!”

அதிகம் படித்தது