தொழில் முனைவோருக்கான வழிகாட்டி பா.சீனிவாசு அவர்களின் நேர்காணல்
சித்திர சேனன்Dec 27, 2014
கேள்வி: தங்களைப் பற்றிக் கூறுங்கள்?
பதில்: என் பெயர் பா.சீனிவாசு, வணிகவியல் பட்டதாரி, பதினான்கு வயதிலிருந்தே தொழில் முனைவோராகவும், பலருக்கும் தொழில் பற்றிய ஆலோசனை வழங்குபவராகவும் இருக்கிறேன். என் தந்தையார் ஒரு மூத்த வழக்கறிஞர் அவருடன் இணைந்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் தொழில் முனைவோருக்கான ஆலோசகர் மற்றும் வழிகாட்டியாக என்னுடைய பணியைத் தொடர்ந்து செய்து வருகிறேன். அதுமட்டுமல்லாமல் பாரதிய யுவசக்தி டிரஸ்ட் என்ற ஒரு தன்னார்வ நிறுவனம் உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் அவர்களின் மகள் லட்சுமி வெங்கடேசன் என்ற பெண்மணியால் தொடங்கப்பட்டு இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா முழுவதும், அது மட்டுமல்லாது ஆசியநாடுகளிலும் கிளைகள் உண்டாக்கி இளைஞர்களை வழிநடத்தும் ஒரு தன்னார்வ நிறுவனமாக, பல பெரும் தொழில்முனைவோர்களின் துணையோடு இயங்கிக்கொண்டு வருகிறது. பத்தாண்டுகளாக அந்நிறுவனத்தில் தொழல்முனைவோருக்கான வழிகாட்டி என்ற முறையில் நான் ஒரு தன்னார்வ நிலையில் பணியாற்றி வருகிறேன்.
இளைய தலைமுறைகள் இன்று வேலையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக கல்லூரியில் Campus Interview என்ற பெயரில் பலருக்கும் வெளிநாடு பயணம் செய்யவேண்டும் என்ற ஒரு ஆர்வம் இருக்கிறது. ஆனால் சில ஆண்டுகளாக இந்தப் பொருளாதார மந்தத்தினால் வேலைவாய்ப்பு என்ற சிந்தனை குறைந்து எல்லோரும் தொழில் முனைவோராக வரவேண்டும் என்ற ஒரு ஆர்வத்தைக் காட்டிக்கொண்டு வருகிறார்கள். அப்படி இருக்கிற சூழலில் இளைய தலைமுறைகள் நேரடியாக தொழில் தொடங்குவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.
முந்தைய காலத்தில் ஒரு சமுதாயம் இதனை வழிநடத்தும். எடுத்துக்காட்டாக ஒரு முதலியார் அமைப்போ அல்லது ஒரு நாடார் அமைப்போ அல்லது சேட்டு என்று சொல்லக்கூடிய மார்வாடி அமைப்புகளோ தங்கள் குடும்பத்தில் ஒருவர் தொழில் முனைவோராக வரவேண்டும் என்றால் அந்த சமுதாயம் அந்த இளைஞனுக்கு வழிகாட்டுதல் மட்டுமல்லாமல் நிதி உதவியும் செய்து தரும் குடும்பத்தில் ஒருவரை தொழில் முனைவோராகவும் அவர்களுடைய குடும்பத்தொழிலைத் தொடர்ச்சியாக நடத்துவதற்கு உதவி செய்தது ஒருகாலம். ஆனால் இன்றைய புதிய தலைமுறை, பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்கவேண்டும் என்ற மோகத்தினால் இந்தத் தொழில் முனைதல் என்ற சிந்தனையே இளைஞர்களிடையே தேய்ந்த நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. இதை மாற்றுவதற்காகத்தான் இந்த பாரதிய யுவசக்தி டிரஸ்ட் செயல்படுகிறது.
18 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்கும் ஒரு இளைஞரை அவர் கல்விச்சாலையில் படித்துமுடித்தவனாகவும் இருக்கலாம் அல்லது கல்விச்சாலையில் பழக்காமல் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வேறு ஒரு ஆற்றல் அவரிடம் இருக்கலாம், ஒரு தச்சனாக இருக்கலாம் அல்லது கருவிகளை பழுதுபார்த்து செய்யக்கூடிய ஒரு Mechanic என்று சொல்லக்கூடிய பழுது பார்ப்பவராகவும் இருக்கலாம் அல்லது பொறியாளராகவும் இருக்கலாம், அவர்கள் எந்தத் துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் மத்திய மாநில அரசுகளால் வரையறுக்கப்பட்ட MSME (சிறு மற்றும் குறுந்தொழில்) என்ற வரையறைக்குள் வந்தால் மதி மற்றும் நிதியுதவி செய்வதுதான் இந்த பாரதிய யுவசக்தி டிரஸ்ட் அறக்கட்டளையின் முதன்மை நோக்கம்.
மதிப்புக்கூட்டி அந்தப் பொருளை விற்க வேண்டும், ஒரு துணியை 50 ரூபாய்க்கு 1 மீட்டர் வாங்கி 60 ரூபாய் அல்லது 70 ரூபாய்க்கு விற்றீர்கள் என்றால் அது வியாபாரம், அதுவே 50 ரூபாய்க்கு துணியை வாங்கி ஆடையாக்கி 200 ரூபாய்க்கு அந்தத் துணியை விற்றீர்கள் என்றால் அந்தத் துணி ஆடையாக மாறுகிறது, மதிப்புக்கூட்டுதல் ஏற்படுகிறது, விலையும் 50 ரூபாய்க்கு இருந்த துணி 200 ரூபாய்க்கு சட்டையாக மாறும் பொழுது உற்பத்தி என்ற செயல்பாடு ஏற்படுகிற பொழுது பலருக்கும் வேலைவாய்ப்பு தானாகவே உண்டாகிறது. பாரதிய யுவசக்தி டிரஸ்ட், வியாபாரம் செய்பவர்களுக்கு எந்த விதஊக்கமும் அளிப்பதில்லை. ஆனால் தொழில் முனைவோர் என்றால் இந்த மதிப்புக் கூட்டுதலும் உற்பத்தித் திறனும் அல்லது சேவைத் திறனும் இருப்பவர்களுக்கு அவர்களை வழிநடத்தி நிதி உதவி மட்டுமன்றி அவர்களது பொருட்களை சந்தைப் படுத்துவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கி உலக அளவில் நடக்கின்ற கண்காட்சியகங்களுக்கு அவர்களது பொருளை எடுத்துச் செல்வதுடன் அந்த வங்கியில் வாங்கப்படும் நிதி இரண்டு ஆண்டுகளுக்கு hand holding என்று சொல்வார்கள், அதாவது தொழில் முனைவோர் நிதி வாங்கியவுடன் அந்த நிதியை முறையான விதத்தில் அந்தத் தொழிலுக்கு பயன்படுத்துகிறார்களா அவர்களுக்கு அந்தத் தொழிலில் அவர்கள் கண்ட அந்த கனவு நிறைவேறாமல் இருப்பதற்கு ஏதேனும் தடைகள் இருக்கிறதா, அப்படியிருந்தால் என்னைப் போன்ற வழிகாட்டிகளின் மூலம் அதை சரிசெய்து அந்தத் தொழில் முனைவோரை வெற்றிபெற்ற தொழில்முனைவோராக ஆக்குவதுதான் இந்த பாரதிய யுவசக்தி நிறுவனத்தின் நோக்கம்.
சிறிதளவில் இதனுடைய அளவுகோலை சொல்லவேண்டும் என்றால் சென்னையில் இயங்கிவரும் பாரதிய யுவசக்தி டிரஸ்ட் CII( Confederation of Indian Industry – என்ற தன்னார்வ நிறுவனம் அதாவது பெருநிறுவனங்களின் கூட்டமைப்பு) இந்த கூட்டமைப்பின் அலுவலத்திலேயே இயங்கி வருகிறது. பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களைத் நம்பித்தான் இருக்கின்றன. சிறிய நிறுவனங்களும் பெரிய நிறுவனங்களின் சேவையை நம்பிதான் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் காலகட்டத்தில் இந்த பாரதிய யுவசக்தி டிரஸ்ட் என்ன செய்கிறார்கள் என்றால் புதன் மற்றும் வெள்ளி 3 மணியிலிருந்து 5 மணிவரை எங்களைப் போன்ற வழிகாட்டிகளின் மூலமாக முதல்கட்டமாக ஒரு நேர்காணல் என்ற சேவையை இலவசமாக செய்து அடிப்படையிலேயே அந்த இளைஞனுக்கு தொழில் முனைவதற்கான பண்பு இருக்கிறதா என்பதைப் பார்த்துவிட்டு அதற்கான பயிற்சியையும் அவர்களுக்குக் கொடுத்துவருகிறோம்.
என்றைக்கு நேர்காணலில் கலந்துகொள்கிறார்களோ அதற்கு அடுத்த கட்டமாக ஒன்றரை நாள் அல்லது மூன்று நாள் பயிற்சியும் இலவசமாகக் கொடுத்து அந்தப் பயிற்சி முடிந்தவுடன் தேவையான திட்ட அறிக்கையை தயார் செய்து, அந்தத் தொழிலுக்கான திட்ட அறிக்கையை வங்கியிடம் (இந்த வங்கிகள் அனைத்தும் தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகள்) எடுத்துச்சென்று இதனுடைய வட்டி விகிதாச்சாரம் சிறு மற்றும் குறுந்தொழிலுக்கு, மத்திய மாநில அரசுகளும் ரிசர்வ் வங்கியிலும் அவ்வப்போது சொல்லப்படும் அந்த வட்டி விகிதாச்சாரம் 11லிருந்து 13 சதவீதம் வரை மாறுபடும். ஏனென்றால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு ஒரு வட்டி விகிதமும், பெண் தொழில் முனைவோராக இருந்தால் அவர்களுக்கு ஒரு வட்டி விகிதமும், சிலவிதமான தொழில்களுக்காகவும், பின்தங்கிய இடங்களில் அது தொடங்கப்படுவது என்றால் அவர்களுக்கு ஒரு வட்டி விகிதமும் இந்த அரசு சார்ந்த வட்டி விகிதாச்சாரந்தான் இவர்கள் வாங்கும் கடனுக்கு வட்டியாக ஒவ்வொரு தொழில் முனைவோருக்கும் கொடுக்கப்படுகிறது. அவர்களுடைய காலகட்டம் அதாவது ஒரு தொழில் முனைவோர் நிதியை வங்கிக்கு எப்பொழுது திருப்பி செலுத்தவேண்டும் என்று பார்த்தீர்கள் என்றால் 4 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகள் வரை தொழிலைப் பொறுத்து இருக்கிறது, அவர்களது நிதியைப் பொறுத்து இருக்கிறது.
பொதுவாக நேரடியாக ஒரு இளைஞன் வங்கிக்குச் சென்றார் என்றால் அவர்களிடம் இன்றைய mechanism அவனுக்கு தொழில் முனைதல் ஆற்றல் இருக்கிறதா, போதுமான பயிற்சி இருக்கிறதா, அவனால் அந்தத் தொழிலை செய்ய முடியுமா, என்ற ஒரு Screening Process அதாவது அவனை நேர்காணல் செய்யக்கூடிய முறை இன்றைக்கு வங்கிகளிடம் இல்லை. ஆதலால் பாரதிய யுவசக்தி டிரஸ்ட் இந்த வங்கிகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மூலமாக, பத்துக்கும் மேற்பட்ட தேசிய வங்கிகளின் மூலமாக இந்த கலந்தாய்வு மூலமாகவும், பயிற்சி மூலமாகவும் எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த இளைஞனுக்கு எவ்வித Guarantee மற்றும் சொத்து அடமானமோ அல்லது தங்க நகைகளோ எவ்வித அடமானமும் இல்லாமல் ஐம்பது லட்சம் ரூபாய் வரையிலும் தொழிலுக்காக கடனை நாங்கள் பெற்றுத் தருகிறோம். ஒரு ஆசிரியர் ஒரு மாணவன் என்ற உறவு எப்படி இருக்குமோ அந்த உறவுதான் இந்தத் தொழில் முனைவோருக்கும் தொழில் வழிகாட்டிக்கும் இருக்கின்ற இந்த உறவு. இந்த உறவுப் பாலத்தை அமைத்துக்கொடுப்பதுதான் இந்த பாரதிய யுவசக்தியுடைய நோக்கம். இந்த நோக்கம் எந்த அளவிற்கு வெற்றி பெற்று வருகிறது என்றால் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சென்னையில் இயங்கும் இந்த பாரதிய யுவசக்தி டிரஸ்ட் ஒரு ஆண்டுக்கு நூறுக்கும் மேற்பட்ட புதிய தலைமுறை தொழில்முனைவோரை உருவாக்கி வருகிறது.
கேள்வி: மத்திய அரசின் MSME ல் என்னென்ன சிறப்புப் பயிற்சிகள் தாங்கள் அளித்துள்ளீர்கள்?
பதில்: தொழில் முனைவோருக்கு இரண்டுவிதமான பயிற்சி தேவைப்படுகிறது. ஒன்று அந்தத் தொழில் சார்ந்த பயிற்சி, மற்றொன்று தன்னுள் இருக்கும் அந்த ஆற்றலை வெளிக்கொண்டுவருவதற்கு உற்சாகப்படுத்த motivation தேவைப்படுகிறது. தொழில் முனைவோருக்கான பயிற்சியை ஒரு சில நிறுவனங்கள்தான் அளித்துவருகின்றன. அதில் MSME போன்ற நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சிகளை வழங்குகிறார்கள். தொழில் நுட்பப் பயிற்சி வேறு, தொழில் முனைவோருக்கான பயிற்சி வேறு. தொழில் நுட்பப்பயிற்சி என்றால் உதாரணமாக ஒரு டெய்லரிங்காக இருக்கலாம், எம்ப்ராய்டிங் தொடர்பாக இருக்கலாம் அல்லது Artificial jewellery போன்றவையாக இருக்கலாம் அல்லது தோல் தொடர்பான லெதர் garments தொடர்பான பயிற்சியாக இருக்கலாம் அல்லது ஆடை தயாரித்தலுக்கான பயிற்சியாக இருக்கலாம்.
இதைப்போன்ற பயிற்சிகள் எல்லாம் மத்திய நிறுவனமான MSME அளித்துவருகிறது. எங்களுடைய பயிற்சி எப்படி இருக்கும் என்று கேட்டீர்கள் என்றால் அவர்கள் அளிக்கும் அந்தப் பயிற்சி நேரத்தில் எங்களுக்கென்று ஒரு மணி நேரமோ அல்லது அரைமணிநேரமோ MSME எங்களுக்காக ஒதுக்கித் தருவார்கள். அந்த ஒரு மணிநேரத்தில் தொழில் நுட்பப் பயிற்சி நடக்கும் அந்த காலகட்டத்தில் தொழில் முனைவோருக்கான பயிற்சியையும், அவர்களுடைய மனதளவில் இருக்கிற உற்சாகத்தை எழுப்புவதற்காகவும், வங்கிகளினுடைய கட்டமைப்பு நமக்கு ஒரு தொழில்முனைவோருக்கு உதவியாக இருக்கும் என்ற ஒரு ஆலோசனை வழங்குவதாகவும் அந்தப் பயிற்சி இருக்கும். அந்தப் பயிற்சி எங்களைப் போன்ற வழிகாட்டிகள் மட்டுமல்லாமல் இடையே இருக்கும் அந்த வங்கிகளும், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகளும் இனைந்து அந்தப் பயிற்சியை மாணவர்களுக்கு நாங்கள் வழங்கி வருகிறோம்.
கேள்வி: பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு எந்த மாதிரியான தொழில் வாய்ப்புகளை இதன் மூலம் உருவாக்கித் தருவீர்கள்?
பதில்: கல்வி என்பது தொழில் முனைவோருக்கு ஒரு விதத்தில் முக்கியம் என்று சொல்லலாம், மற்றொன்று நாங்கள் கல்வியை முதன்மைப்படுத்துவதை விட Skill development – அவர்களிடையே இருக்கும் ஆற்றல் என்ன என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு சமோசா செய்துகொண்டிருப்பவர் அவர் தன்னால் பெரிய அளவில் வளரமுடியுமா? அவருடைய படிப்பு குறைவாக இருக்கலாம். சாலை ஓரத்தில் சமோசாவோ செய்துகொண்டிருப்பார். ஆனால் அவரை உற்சாகப்படுத்தி பயிற்சி கொடுத்து இன்று எப்படி இருக்கிறார் என்று கேட்டீர்கள் என்றால் பெரிய catering நிறுவனம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு இந்த திண்பண்டங்களை ஏற்றுமதி செய்கிறார். எப்படி ஏற்றுமதி செய்கிறார் என்று கேட்டீர்கள் என்றால் பொதுவாக இந்தப் பொருட்கள் எண்ணெயில் பொறிக்கப்படுகின்றன, ஆனால் அவர் கண்டுபிடித்தது என்னவென்றால் எண்ணெயில் பொறிக்கப்படாமல் அதை குளிர்சாதன நிலையில் வைத்துவிட்டால் 3லிருந்து 6 மாதம் வரை கெடாமல் இருக்கும். எந்த இடத்தில் பரிமாறப்படுகிறதோ அங்கே அது பொறித்துத் தரப்படும். இந்த ஒரு சிறிய தொழில் நுட்பத்தை அந்த நபர் செய்ததால் அவரால் முன்னேற முடிந்தது.
இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் படிப்பு அங்கே முக்கியமல்ல, தன் தொழிலில் தன்னால் என்னசெய்ய முடியும் என்ற நிலைதான் முக்கியம். அதற்குத்தான் எங்களைப் போன்ற வழிகாட்டி அவரை நேர்காணல் செய்யும் பொழுது அவரிடம் ஒளிந்துகொண்டிருக்கின்ற அந்த ஆற்றலை வெளிக்கொண்டுவருவதுதான் முக்கியமே தவிர அவர் பத்தாவது படித்தவராகவும் இருக்கலாம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போன்ற இடத்தில் பொறியாளராகவும் இருக்கலாம் அவர்களுடைய ஆற்றலை வெளிக்கொண்டுவருவதுதான் இந்த பாரதிய யுவசக்தி அறக்கட்டளையின் முதன்மை நோக்கம்.
கேள்வி: B.E, M.E படித்த பட்டதாரிகளுக்கு எந்த மாதிரியான தொழில் வாய்ப்புகளை உருவாக்கமுடியும்? பொறியியல் படித்தவர்களுக்கு புதிதாக ஒரு தொழில் தொடங்கவேண்டும் என்றால் நீங்கள் அவர்களுக்கு எந்தமாதிரியான வழியைக் காட்டுவீர்கள்?
பதில்: பொதுவாக தொழில் முனைதலில் இருக்கும் சிந்தனை என்னவென்றால் இன்னென்ன தொழில் செய்யுங்கள் என்று நாங்கள் சொல்வதல்ல, அப்படி சொன்னால் அது திணிப்பாக இருக்கும். நாளை அந்தத் தொழிலில் அவர்கள் நொடிந்து போய்விட்டார்கள் என்றால் நீங்கள் சொல்லிதான் ஆரம்பித்தோம் என்ற ஒரு பழியைக் கொண்டுவருவார்கள். ஆனால் நான் என்ன செய்யவேண்டும் என்ற கரு அவரிடம் தான் உருவாகவேண்டும். அந்தக் கருவை உருவாக்குவதுதான் எங்களுடைய வேலையே தவிர இந்தக் கருவையே நாங்கள் தான் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால், தொழில் முனைவோருக்கான பண்பு அவர்களிடம் இல்லை என்று நாங்கள் முடிவுக்கு வந்துவிடுவோம். இது வரையிலும் சில நிறுவனங்கள் 500க்கும் மேற்பட்ட திட்ட அறிக்கைகளை வைத்துக்கொண்டு அதனை 50 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரையிலும் விலைக்குக் கூட விற்கிறார்கள். ஆனால் பாரதிய யுவசக்தி டிரஸ்ட் அப்படி செய்வதில்லை. அவர்கள் ஏதேனும் 5 அல்லது 6 தொழில் முனைதலுக்கான கருவுடன் அவர்கள் வரலாம். அதில் எதை செய்தால் அவர்களுக்கு வெற்றிகரமாக தொழில்முனைவோர் ஆகலாம் என்பதற்கான பயிற்சி கொடுப்பதுதான் எங்களுடைய வேலையே தவிர அந்தக் கருவை உருவாக்குவது எங்களுடைய வேலை கிடையாது.
கேள்வி: இதுவரை நீங்கள் நிறுவனத்தில் எத்தனை பேருக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறீர்கள்? என்னென்ன தொழிலை ஏற்பாடு செய்துள்ளீர்கள்?
பதில்: இன்றைக்கு சென்னை ஒரு Auto mobile industry உடைய ஒரு பெரிய hub என்று சொல்லக்கூடிய நிலையில் இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது CNC Machine வைத்துக்கொண்டு உதிரிபாகங்கள் தயாரிக்கும் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்களை உருவாக்கியிருக்கிறோம். அதே மாதிரி பன்னாட்டு நிறுவனங்களின் மூலமாக வீட்டில் இருந்துகொண்டே 10 தையல் எந்திரம் முதல் 50 தையல் எந்திரம் வரை இயங்கக்கூடிய சிறு மற்றும் குறுந்தொழில் ஆடை உற்பத்தியையும் உருவாக்கியிருக்கிறோம். அதே மாதிரி அழகுசாதனம் என்று சொல்லக்கூடிய Beauty parlour என்ற ஒன்றை இன்றைக்கு பெண்கள் நிறைய பேர் படித்துமுடித்து வந்திருக்கிறார்கள். சமீபத்தில் நோக்கியா நிறுவனங்களில் வேலை இல்லாமல் போனதினால் அவர்களுக்கெல்லாம் அந்தப் பயிற்சி கொடுத்து அந்த மாதிரி Beauty parlour வைப்பதற்கும் எங்கள் அறக்கட்டளை உதவி செய்திருக்கிறது. எந்தத் துறையை எடுத்தாலும் உணவு விடுதி, ஆட்டோ மொபைல், தையல் பயிற்சி, உடற்பயிற்சிக்கான gym அல்லது spa என்று சொல்கிறோமே அது போன்ற நிறுவனங்கள் அதுமட்டுமல்லாமல் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் பெருநிறுவனங்கள் மூலமாக பல நிறுவனங்களுக்கு நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். ஏற்கனவே அவர்கள் உற்பத்தி செய்திருப்பார்கள் சந்தை மட்டும் படுத்திக்கொடுங்கள் என்று கேட்டிருப்பவர்களுக்கும் உதவி செய்திருக்கிறோம்.
கேள்வி: தங்கள் நிறுவனத்தில் தொழில் வாய்ப்புகளைத் தவிர்த்து பிற சேவைகள் என்ன?
பதில்: Chennai trade center என்றாலே கண்காட்சி நடத்தக்கூடிய வளாகமாக திகழ்ந்து வருகிறது. CII நடத்தும் கண்காட்சிகளில் எங்களுக்கென்று கடையைத் தருகிறார்கள். எங்கள் மூலம் பயன் பெற்றவர்களுக்கு மட்டும் அவர்களுடைய பொருட்களை அந்த கண்காட்சியில் சந்தைப்படுத்துவதற்கு இலவசமான சேவையை எவ்வித கண்காட்சியாக இருந்தாலும் அந்தத் தொழில் சார்ந்த தொழில் முனைவோரை நாங்களாகவே வரவழைத்து உங்களது பொருட்களை இந்தக் கண்காட்சியில் வையுங்கள் என்ற ஒரு சேவையை செய்துவருகிறோம். வழிகாட்டுதல், தொழில் முனைவோருக்கு என்று assign பண்ணிவிட்டார்களோ அதன்பின் அந்த வழிகாட்டி என்ன செய்வார் என்று கேட்டீர்கள் என்றால் மாதம்தோறும் ஒரு report form வைத்திருக்கிறோம். அந்தப் படிவத்தில் குறிப்பிட்ட நபரின் தொழில் எவ்வாறு நடந்துகொண்டிருக்கிறது அதில் ஏதேனும் தொய்வு நிலை இருக்கிறதா, இருந்தால் உடனே அவரை அழைத்து கலந்தாய்வு செய்து எதில் அவருக்கு சிக்கல் வருகிறது என்று கண்டுபிடித்து அதைத் தீர்ப்பதையும் இலவச சேவையாக செய்துவருகிறோம்.
கேள்வி: புதிதாக படித்தவர்களும் சரி, படிக்காதவர்களும் சரி வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் புதிதாக வேலை தேடும் இளைஞர்களுக்கும் தாங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: முதலில் தொழில் முனைவோருக்கான வரலாற்றை அவர்கள் படிக்க வேண்டும். எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்றால் வேலை தேடி வேலைக்குப் போகவேண்டும் என்று ஒரு சிலர் இருக்கலாம் தவறில்லை. ஆனால் இன்றைய காலகட்டம் எப்படி வந்திருக்கிறது என்றால் சற்று வரலாற்றை எடுத்துப் பாருங்கள். கப்பலோட்டிய தமிழனை ஒரு விடுதலைப்போராட்ட வீரராக மட்டும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் 22 வயதில் வெள்ளைக்காரனுக்கு எதிராக பொதுமக்களிடமிருந்து பணத்தைத் திரட்டி இரண்டு கப்பல்களை விட்டார் என்றால் அந்த இளைஞன் எங்கே, நாம் எங்கே. அவர்தான் தொழில் முனைவோர். இந்த வரலாற்றை நான் ஏன் சொல்லவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறேன் என்றால் ஒரு வரலாறு தெரியாமல் ஒரு வரலாறு படைக்கமுடியாது. வரலாறு தெரிந்துகொள்வதுதான் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பாடம். இதைத்தான் வள்ளுவன் பொருள் கருவி விடை இடம் காலம் இவை ஐந்தும் இருள்நீங்க எண்ணி செயல் என்றார். தொழில்முனைவோர்க்கு BYST மட்டும் ஒரு வழிகாட்டி அல்ல வள்ளுவனும் ஒரு வழிகாட்டிதான்.
கேள்வி: நிர்வாகத்துறையில் போதிய அனுபவசாலியாகவும் பயிற்சியாளராகவும் இருந்திருக்கிறீர்கள். நிர்வாகம் என்பது இந்த மனித வாழ்க்கையில் எந்த அளவிற்குத் தேவையான பண்பு?
பதில்: இன்றைக்கு ஆளுமை, மேலாண்மை இவைகள் மனிதப் பண்புகளில் மிக மிக அடிப்படையானது. இதை நான் சொல்லவில்லை வள்ளுவரே சொல்லியிருக்கிறார்.
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி
ஐம்பொறிகளில் ஒரு சில பொறிகள் இயங்காமல் இருந்தால் கூட பழியல்ல ஆனால் ஆள்வின்மை இல்லையென்றால் அதுதான் பழி. அந்தப் பண்பு எப்பொழுது ஊட்டப்படவேண்டும் என்றால் இன்றைக்கு இளைஞர்களால் மட்டும் ஊட்டப்படக்கூடாது சிறு வயதிலிருந்தே பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஆள்வின்மையைக் கொண்டுவருவதற்கான முயற்சியிலே இறங்கவேண்டும். இதற்காகத்தான் கல்விசாலையிலும் சரி, கல்லூரிகளிலும் சரி, பல்கலைக்கழகங்களிலும் சரி எப்படி ஒரு Campus Interview க்கு முக்கியத்துவம் தருகிறார்களோ கல்விச்சாலைகளிலும் ஒருஒரு பல்கலைக்கழகங்களிலும் இந்த பாரதிய யுவசக்தி டிரஸ்ட் அந்த இளைஞனிடம் நீங்களும் தொழில் முனைவோர் ஆகலாம் அப்பொழுது அதற்குத் தேவை ஆளுமை அல்லது மேலாண்மைதான் என்ற கருத்தை அவர்களிடம் விதைத்துவிட்டு வருகிறோம். ஒரு சில பயிலகங்கள் மூலமாக கல்லூரிகளுக்குச் சென்று அந்த மாணவர்களுக்கு இந்த மேலாண்மை மற்றும் ஆளுமைக்கான ஒரு விதையை விதைத்துவிட்டு வரக்கூடிய ஒரு சேவையையும் இலவசமாக பாரதிய யுவசக்தி டிரஸ்ட் இளைஞர்களுக்கு செய்துவருகிறது.
கேள்வி: பாரதிய யுவசக்தி டிரஸ்ட்டில் இதுவரை செய்த சாதனைகள் என்ன? எதை பெரிய சாதனையாக எண்ணி இந்த டிரஸ்ட் மூலமாக வியக்கிறீர்கள்?
பதில்: இது முதன் முதலில் தொடங்கப்பட்ட பொழுது சிறிதளவில் அறக்கட்டளையின் நிதியை வைத்துத்தான் தொடங்கிவந்தது. ஆனால் வருங்காலங்களில் எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்று கேட்டீர்கள் என்றால் இன்றைக்கு அஸ்ஸாம் மாநில அரசு பெருமளவு நிதி கொடுத்து ஒரு தீவிரவாதியைக்கூட ஒரு தொழில் முனைவராக ஆக்கியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இன்றைக்கு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலேயும் இளைஞர்கள் திசை தெரியாமல் எங்கே செல்வது, யாரை அணுகுவது, வணிகமயமாக்கப்பட்ட இந்த உலகத்தில் எதைத் தொட்டாலும் அதாவது ஒரு ஆடிட்டரிடம் போனாலும் பத்தாயிரம் செலவாகிறது, ஒரு வழக்கறிஞரிடம் போனாலும் ஐந்தாயிரம் செலவாகிறது. இப்படி திசை தெரியாத இளைஞருக்கு ஒரு வழிகாட்டுதல் என்ற support எப்படி கிடைக்கிறது என்று கேட்டீர்கள் என்றால் வழிகாட்டுதல் என்ற கருத்து எப்படி உருவாகியிருக்கிறது என்று கேட்டீர்கள் என்றால் 125 ஆண்டுகளுக்கு மேல் உள்ள YBI(Youth Business International) என்பது கியூட் எலிசெபத் குடும்பத்தைச் சார்ந்த தற்பொழுது பிரிட்சால்ஸ் அவர்களுடைய தலைமையில் இயங்கி வருகிற தன்னார்வ நிறுவனம். இந்த நிறுவனம் BYST-யுடைய பங்களிப்பைப் பாராட்டி வருகிறது.
அப்படி பல சேவைகளை செய்துவரும் காலகட்டத்தில் நான் சில இந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த BYST ஒரு தன்னார்வ நிலையில் செய்துகொண்டிருக்கும் பொழுது, நான் எதை பெருமையாக நினைக்கிறேன் என்றால் தமிழகத்தில் 35க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் முகாம் இருக்கின்றன. அந்த இலங்கை அகதிகள் முகாமிலிருந்து யாராரெல்லாம் தொழில் முனைவோர் ஆகவேண்டும் என்ற ஒரு கணக்கீடு செய்து 200க்கும் மேற்பட்டவர்களுக்கு சென்னையில் ஒரு பயிற்சி முகாம் ஏற்படுத்தி அந்த இலங்கை அகதிகளை தொழில் முனைவோர்களாக இந்த பாரதிய யுவசக்தி டிரஸ்ட் மாற்றியிருக்கிறது.
கேள்வி: ஆங்கில மோகம் அதிகரித்துவரும் இக்காலச்சூழலில் தமிழ் மொழியை மீட்டெடுக்க தாங்கள் கூறும் அறிவுரை யாது? அதற்கான வழிமுறை யாது?
பதில்: தமிழ் என்ற ஒரு இனம் இன்றைக்கு ஏன் இந்த அடிமைத்துறையில் சிக்கிக்கொண்டிருக்கிறது என்றால் அதை மொழி என்ற சிப்பிக்குள் அடக்கிவிட்டதினால்தான். தமிழை மொழி என்று சிப்பிக்குள் அடக்கிவிட்டீர்கள் என்றால் மௌனம் கூட ஒரு மொழிதான், அப்பொழுது இந்த மொழியில் என்ன சிறப்பு இருக்கிறது என்ற வாதத்திற்குப் போய்விடுவார்கள். தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல அது வாழ்வியல் நெறி. அது எப்படி வாழ்வியல் நெறி, அது எப்படி அறிவியல், அது எப்படி கணிதம், அந்த மொழியின் இலக்கணத்திலேயே வாழ்வியல், மெய்யியல், அறிவியல் என்று உலகத்தில் எதெல்லாம் சொல்லப்படுகிறதோ அது எல்லாமே இதனுடைய இலக்கணத்திலேயும், இலக்கியங்களிலும் இருக்கிறது என்ற சிந்தனையை இளைஞர்களிடம் எடுத்துக்கொண்டுசென்றால் பல்லாயிரம் நூல்கள் இன்றைக்கு எழுதினாலும் பத்தாது. இதனை இளைஞரிடம் நீங்கள் சொல்ல வேண்டாம், அவர்கள் கைபேசியிலும் அலைபேசியிலும் இந்தக் கருத்துக்களை பதிவு செய்யும் வண்ணம் அதாவது மொபைல் புத்தகமாகவோ மொபைல் ஆப்ஸாகவோ அதை எடுத்துச்சென்றீர்கள் என்றால் இன்றைய இளைஞன் தமிழின் வாழ்வியல் நெறியை பின்பற்றி பயனடைவான். ஏனென்றால் இன்றைக்கு தமிழ் வழியில் கணிதம் பயின்றான் என்று நாம் சொல்கிறோம் ஆனால் அவனுக்குச் சொல்லப்படுகின்ற பயிற்சியளிக்கப்படுகிற அந்தத் தமிழ் எண்கள் அவனிடம் இல்லை. ஆனால் தமிழ் எண்கள் உண்டு என்று தமிழ் மக்களுக்குத் தெரியாது. அதற்காகத்தான் தமிழ் எண்களான கடிகாரம் மற்றும் நாட்காட்டி www.tamizhclock.com என்ற இணையதளம் மூலம் android, app இவையெல்லாம் கொண்டுவந்திருக்கிறோம் என்றால் இந்த மொழியைப் பற்றிய பரப்புரை அல்ல தமிழ் மொழியினுடைய வாழ்வியல் நெறியை அவன் தேடுவான் என்பதற்கான ஒரு முதல் படி.
ஏன் இந்த மொழி இல்லை என்று பார்க்கலாம். இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள் அவர்கள் நாம் தமிழில் பேசவேண்டுமா என்பதில் தயக்கமா இருக்கிறார்கள். கல்விச் சாலையில் தமிழ் இல்லை, இறைவழிபாட்டில் தமிழ் இல்லை, இருவர் இணைந்து பேசிக்கொள்வதிலும் தமிழ் மொழி இல்லை. ஆனால் நமக்கெல்லாம் தெரியாது தமிழனுடைய வாழ்க்கையில் மட்டுமல்ல கருவறையிலிருந்து கல்லறை வரை, பிறப்பிலிருந்து இறப்பு வரை, தொடக்கம் முதல் அடக்கம் வரை நமது வாழ்க்கையில் 16 சடங்குகள் உள்ளன. இந்த 16 சடங்குகளும் தமிழனால் ஏற்கனவே நமது இலக்கியங்களிலும் சமய இலக்கியங்களிலும் அந்த சடங்குகள் எப்படி செய்யவேண்டும், எப்படி இறைவனை வழிபடவேண்டும், வாழ்வியல் சடங்குகளான புதுமனை புகுவிழா மற்றும் திருமணம் போன்ற சடங்குகள் எப்படி செய்யப்படவேண்டும் என்ற கூறுகள் அதில் இருக்கின்றன. ஆனால் காலஅளவில் நாம் அதை பின்பற்ற மறந்துவிட்டோம். இறைவழிபாட்டிலேயே தமிழ் மொழி இல்லை என்றால் தொழிலில் இந்த மொழிக்கு எப்படி ஆதாரம் கொடுக்கப்போகிறீர்கள், அந்த மொழியில் நாம் எவ்வாறு முன்னேறப்போகிறோம். அடிப்படையில் எந்த மனிதனாக இருந்தாலும் அவனுடைய வாழ்க்கையில் சடங்குகளை அவன் சந்தித்தாக வேண்டும். சடங்குகளும் இன்றைக்கு அவன் மொழியில் இல்லை, அவனுடைய கல்வியும் அவனது மொழியில் இல்லை, கோவிலுக்குச் சென்றாலும் அதுவும் அவன் மொழியில் இல்லை. படித்து ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் ஆக முடிகிறது. ஆனால் ஒரு மாணவன் நினைத்தால் அர்ச்சகராக ஆக முடியுமா? இன்றைக்கு ஆகமுடியாத ஒரு சூழல். காலையில் எழுந்தியிருக்கிறோம் பல் துலக்குகிறோம், துர்நாற்றத்தை பல பற்பசை மூலம் வெளியே கொண்டுவருகிறோம், அதே வாய் வழியாக வருகின்ற இந்த மொழியை தூய்மைப்படுத்துகிறோமா இல்லை மாசுபடுத்துகிறோமா என்ற கேள்வி இளைஞனுக்கு உள்ளளவில் இருந்தது என்றால் மொழி என்றைக்கும் நிலைத்து நிற்கும், தமிழ் என்பது என்றைக்கும் நிலைத்து நிற்கும். அதைப்பற்றி நாம் நம்மை உய்வுபெற நாம் வளர்கிறோமா என்பதுதான் கேள்விக்குறி.
கேள்வி: கணிப்பொறித்துறையில் பல முன்னேற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறீர்கள். என்னமாதிரியான முன்னேற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறீர்கள்?
பதில்: இன்றைக்கு ஒரு இளைஞன் முதலில் தமிழைப் படிக்கிறோமா என்ற கேள்விக்குறி வரும். தமிழைப் படித்தால் தமிழ் சோறு போடுமா? என்ற கேள்விக்குறி வரும். ஒரு பெரிய நூலகத்திற்கு சென்று அவன் தமிழ் நூல்களைப் படிப்பானா அல்லது java, oracle போன்ற நூல்களைப் படிப்பானா என்பதுவும் ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. அவனிடம் தமிழ் சார்ந்த நூல்களையும் கொண்டுசேர்க்கலாம் என்ற வகையில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போன்ற இம்மாதிரியான நூல்களை பன்னிரு திருமுறை என்று சொல்லக்கூடிய பதினெட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை அலைபேசியில் அந்த பதினெட்டாயிரம் பாடல்களையும் தேடும் முறை வழியாகவே அந்த தேவார திருவாசகத்தை அந்த இளைஞன் படிப்பதற்காக ஒரு Android App இன்னும் ஓரிரு மாதத்தில் வெளியிட இருக்கிறோம். இந்த பதினெட்டாயிரம் பாடல்களும் ஒரு நூலகத்தில் வைத்திருக்கவேண்டும் என்றால் கூட ஒரு பெரிய இடம் வேண்டும். அதை கையடக்க பேசியிலியோ அல்லது அலைபேசியிலோ, ஒரு tablet இலோ ஏதோ ஒரு மூலையில் இடம் இருந்தால் போதும். அந்த மாதிரி ஒரு புரட்சியை பதினெட்டாயிரம் நூல்களை குறைந்த கொள்ளளவில் பன்னிரு திருமுறையை mobile book என்ற முறையில் வெளியிட இருக்கிறோம்.
கேள்வி: தமிழ் பணி, பத்திரிகை பணிகளைத் தவிர்த்து வேறு எந்தமாதிரியான பணிகளை செய்துகொண்டிருக்கிறீர்கள்?
பதில்: இன்றைக்கு கணிணி மற்றும் இணைய துறையில் பார்த்தீர்கள் என்றால் pppindia.com என்ற இணையதளம் மூலமாக இந்தியா ஒரு மென்பொருள் நிறுவனம் அதிகம் உள்ள நாடு என்று நாம் நினைக்கிறோம் ஆனால் நாம் வெளிநாடு நிறுவனங்களை developed countries அமெரிக்காவில் உருவாக்குகிறோம், ஐரோப்பாவில் உருவாக்குகிறோம் ஆனால் நம் நாட்டில் உருவாக்குகிறோமா என்ற கேள்விக்குறி வரும்பொழுது, ஒரு கணிணி இயக்கினீர்கள் என்றால் நம் நாட்டுக்கு உரிமையான மென்பொருள் நம்மவரால் உருவாக்கப்பட்டு நமக்கே பயன்படும் மென்பொருள் இல்லை. அப்படி இருக்கிற காலகட்டத்தில் 12க்கும் மேற்பட்ட மென்பொருள்களை software products ஐ உருவாக்கி இணையதளம் வழியாக இன்றைக்கு சந்தைப்படுத்தி 1995ம் ஆண்டுகளிலிருந்து இதை நடத்தி வருகிறோம். இதில் வரலாற்று செய்தி என்ன என்று கேட்டீர்கள் என்றால் ஆகஸ்ட் 15 எல்லோருக்கும் தெரியும், ஆகஸ்ட் 15 1995 இந்தியாவிற்கு இன்டர்நெட் வந்த நாள். அந்நாள் தொட்டே கணிணி மற்றும் இணையத்தில் பல புரட்சிகளை எங்களது pppindia.com என்ற நிறுவனம் தமிழ் சார்ந்த புரட்சி மட்டுமல்லாமல் மென்பொருள் சார்ந்த புரட்சியையும் ஏற்படுத்தி வந்திருகிறோம்.
Make in india என்று இன்று பேசப்படுகிறது ஆனால் நாங்கள் Made in india என்று சொல்லி வருகிறோம். Make india க்கும் Made in india க்கும் என்ன வித்தியாசம் என்றால் Make in india என்றால் யார் வேண்டுமானாலும் இந்தியாவில் உற்பத்தி செய்யலாம். Made in india என்றால் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகிற்கு. எவ்வித பொருளாகவும் இருக்கலாம் மென்பொருளாக இருக்கலாம் அதனை உருவாக்குவார்கள். ஆனால் அதற்கான காப்புரிமை இந்தியர்களிடம் இருக்கும். The owner of the product will be an indian. Now we are employees of the company, ” To be or Not to be is a shakespeare saying” To be an employee or Not to be என்பதுதான். நான் சொல்வேன் to be an entrepreneur and not to be employee ஏனென்றால் இதுவரைக்கும் நான் எந்த நிறுவனத்திலேயும் நான் வேலைபார்க்கவில்லை. பதினான்கு வயதிலிருந்தே தொழில்முனைதலுக்கான வேலைகளைப் பார்த்ததுமட்டுமல்லாமல் பிறரும் தொழில் முனைவோராக ஆகவேண்டும் என்பதற்கான முயற்சியில் வரும்பொழுதே இந்த கணிணி மற்றும் இணைய புரட்சி 1995ல் தொடங்கும் பொழுதே நானும் எனது சகோதரர் கந்தசாமி அவர்களும் எவ்வித கணிணி பயிற்சி எடுக்காமலேயே இதற்கான முயற்சியில் இறங்கி மென்பொருள்களை உருவாக்கி CNN போன்ற ஊடகங்களும் இதை மெச்சும் அளவிற்கு இன்றைக்கு வெற்றிபெற்ற ஒரு மென்பொருள் நிறுவனமாக வளர்த்து வருகிறோம். இதில் உலகளாவிய மக்கள் பதிவிறக்கம் செய்து அதற்கான தொகையை credit card மூலம் செலுத்துகிறார்கள். இவ்வாறு ஒரு கணிணி மூலமாக இணையம் மூலமாக மென்பொருளை உருவாக்கி இணைய வழியாக சந்தைப்படுத்தலாம் என்று ஒரு இன்றைக்கு இந்த செய்தி புதிதாக இருக்கலாம், ஆனால் 1995ம் ஆண்டுகளிலிருந்தே இவ்வாறான முயற்சியை நாங்கள் எடுத்து வருகிறோம்.
கேள்வி: சமீபத்தில் தமிழகத்தைச் சார்ந்த இளைஞர்கள் படித்தவர்களானாலும் சரி, படிக்காதவர்களானாலும் சரி வெளிநாடு சென்று பணியாற்ற வேண்டும் கைநிறைய சம்பாதிக்கவேண்டும் என்ற ஒரு மனப்பக்குவம் வந்துவிட்டது. இதற்கு ஏன் அதற்கான வேலைகள் இல்லையா, இங்கே இருக்கமுடியாதா அதைப் பற்றிக் தங்களது கருத்து என்ன?
பதில்: அயல்நாட்டிற்கு செல்வது தவறல்ல, அயல்நாட்டில் சென்று வேலை வாய்ப்பு தேடுவது தவறல்ல. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் புலம் பெயர்ந்துதான் ஆகவேண்டும். ஏன் சென்னையில் வாழ்பவர்கள் கூட தங்களது கிராமங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள்தான் சென்னைக்கு வந்திருக்கிறார்கள். அதே மாதிரி சென்னை மாநகரத்தில் இருப்பவர்கள் அயல்நாட்டிற்கு செல்லக்கூடிய ஒரு சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறார்கள். தீபாவளி, பொங்கல் என்று பார்த்தீர்கள் என்றால் எப்படி கிராமங்களுக்குச் செல்கிறார்களோ அதே மாதிரி அயல்நாட்டில் வாழும் தமிழர்கள் மொழி, பண்பாடு, கலாச்சாரம் அதுமட்டுமல்லாமல் அவர்கள் கடந்து வந்த பாதையை இங்கே இருக்கும் இளைஞர்களுக்கு எப்படி இந்த பாரதிய யுவசக்தி டிரஸ்ட் தன்னார்வ நிறுவனமாக பலருக்கும் தொழில் வழிகாட்டி செய்து வருகிறதோ இந்த வெற்றி பெற்ற தமிழர்கள் உலகமெங்கும் இருக்கும் தமிழர்கள் இன்று இங்கே வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக செய்ய முடிந்தால் நிதியுதவி செய்து அவர்களையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கும் இந்த மொழியை வளர்ப்பதற்கும், பண்பாட்டை வளர்ப்பதற்கும், வாழ்வியல் ஆதாரங்களைக் கொண்டுவருவதற்கும் ஒரு நிலையைக் கொண்டுவந்தார்கள் என்றால் நம் தாய்நாட்டிற்கு செய்யும் பெரும் கடமையாகவே இருக்கும்.
பா.சீனிவாசு அவர்களைத் தொடர்பு கொள்ள:
மின்னஞ்சல் முகவரி: shri@pppindia.com
சித்திர சேனன்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொழில் முனைவோருக்கான வழிகாட்டி பா.சீனிவாசு அவர்களின் நேர்காணல்”