மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நடந்து முடிந்திருக்கும் 17 – வது, இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள்!

சுசிலா

Jun 1, 2019

siragu lok sabha election1
அகில இந்திய அளவில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த 17வது மக்களவைத்தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளிவந்தன. தேசிய சனநாயகக்கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. நாடெங்கிலும் உள்ள 542 தொகுதிகளில், 350- க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதன்மூலம் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பலத்தை பா.ச.க பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட காங்கிரசு கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்திருக்கிறது. ஐந்து மாதங்களுக்கு முன், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த காங்கிரசு அரசால், இந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற முடியாமல் போயிருக்கிறது என்பது வியப்புக்குரிய ஒன்றாகத்தானிருக்கிறது!

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பொருளாதார வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை, பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பின்மை, சாதி, மத கலவரங்கள் என, கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் மக்கள் பா.ச.க ஆட்சியின் மீது மிகவும் அதிருப்தி கொண்டவர்களாக இருந்தபோது இப்படிப்பட்ட அமோக வெற்றி எப்படி சாத்தியமாயிற்று என்ற ஒரு கேள்விக்கு, பலவிதமான பதில்கள் நம்முள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த வெற்றிக்குப் பின்னால், பா.ச.க தலைவர் அமித்ஷா- பிரதமர் மோடி வகுத்த வியூகம், அவர்களுக்கு நினைத்ததை விட, அதிகமாக, வடக்கு, கிழக்கு, மேற்கு மாநிலங்களில் வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறது எனலாம். ஆனால் தெற்கில், அவர்களால் அந்தளவிற்கு வெற்றிபெற முடியவில்லை. அதிலும், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம் முழுவதுமாக பா.ச.க-வை புறந்தள்ளியிருக்கிறது.

siragu lok sabha election3

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளில், 38 தொகுதிகள் அதிக வாக்கு வித்தியாசத்தில், திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. ஒரேயொரு தொகுதி தேனி மட்டும் அதிமுக வென்றிருக்கிறது. அதுவும் கூட, பல முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், ஆய்வுக்குட்படுத்தபட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. மேலும், தமிழ்நாட்டு இடைத்தேர்தலிலும் கூட, 22 தொகுதிகளில், 13 இடங்களை திமுக பெற்றுள்ளது என்பது மிகச் சிறப்பான ஒன்று. தென்னிந்தியாவில், அதிலும் தமிழ்நாட்டில் மக்கள் பா.ச.க-வை முற்றிலுமாக புறக்கணித்திருக்கிறார்கள். இதற்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தின் மீது பா.ச.க காட்டிய விரோதப் போக்கும், வெறுப்பரசியலும்தான் மிகமுக்கிய காரணம். மேலும், தமிழ்நாடு பெரியார் கண்ட சமூகநீதி மண், சமத்துவ மண், பகுத்தறிவு மண். இவற்றால், நன்கு பண்படுத்தப்பட்ட மண். இங்கே மதவெறி காரணமாக, மத கலவரங்கள் நடக்க சிறிதும் வாய்ப்பில்லை. தமிழ்நாடு மக்கள், அரசியலையும், மதத்தையும் வேறு வேறாக பார்க்கத் தெரிந்தவர்கள்.

அது மட்டுமல்லாமல், திமுகவின் மிகத் தெளிவான, தீர்க்கமான, ஒற்றுமையான கூட்டணி மற்றும் கேட்ட தொகுதிகள், இடங்கள் ஒதுக்கிய உடன்பாடு மற்றும், தமிழ்நாட்டிற்கு பா.ச.க அளித்த இடையூறுகளை எதிர்த்து, பல போராட்டங்களில் ஒன்றாக சேர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே, குரல்கொடுத்த தோழமைக்கட்சிகள் அடங்கிய ஒரு கொள்கைக் கூட்டணி. அகில இந்திய காங்கிரசு சார்பாக, திரு. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே. இந்த மாதிரி ஒரு வலுவான அறிவிப்பை காங்கிரஸ் கட்சி கூட, முன் வைக்கவில்லை என்பது ஒரு குறைபாடு. பா.ச.க சார்பில் திரு மோடியை முன்மொழிந்ததைப் போல, காங்கிரசு பிரதமர் வேட்பாளராக திரு ராகுல் காந்தியை முன் மொழிந்திருக்க வேண்டும். மேலும், வடஇந்தியாவில், மேற்கு வங்கம், உத்திரபிரதேசம், ஆகிய மாநிலங்களில் காங்கிரசுடன் சேர்ந்து ஒரே கூட்டணியாக தேர்தலைச் சந்தித்திருந்தால், ஓரளவிற்கு வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கும். அல்லது இந்தளவிற்கு, பா.ச.க-வின் அமோக வெற்றி வாய்ப்பாவது குறைந்திருக்க முடியும் என்பது நிதர்சனம்.

siragu lok sabha election2

இது தவிர, வட மாநிலங்களில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக பலவிதமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு புறம்பாக, பல இடங்களில், குடோன்களில், செங்கல்சூளைகளில், கடைகளில், உணவகங்களில் என பல்வேறு இடங்களிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டன என்ற புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. மேலும், மக்களை மிரட்டி வாக்குகளை போடவைப்பது போலவும், அக்கட்சியினரே, நேராக சென்று, மக்களை போடவிடாமல், அவர்களே வாக்குகளை பதிவு செய்வது போலவும் பல காணொளிகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அது எப்படியாகிலும், சரியான ஆதாரங்கள் நமக்கு கிடைக்கும் வரை எந்த நடவடிக்கையும் எடுப்பது என்பது முடியாத ஒன்று. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக செயல்பட்டது என்பது இந்திய சனநாயகத்திற்கு எதிரானது. அதாவது பா.ச.க-விற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அளித்த புகார்களில், ஒன்றில் கூட நேர்மையான நடவடிக்கை எடுக்காமல், பாஜகவிற்கு ஆதரவாகவே நடந்துகொண்டது என்பது மிகவும் வருத்தத்துக்குரிய ஒன்று!

siragu lok sabha election 4

இந்த 17-வது நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் பற்றி, பல காரணங்கள் நாம் சொல்லிக்கொண்டிருந்தாலும், மீண்டும் பா.ச.க ஆட்சியமைக்கிறது, திரு மோடி அவர்கள் பிரதமாக மீண்டும் பதவியேற்கிறார் என்பதுவும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஏற்கனவே, தமிழகம் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இனி வரும் பா.ச.க ஆட்சியில், தமிழகம் எப்படி இருக்கப்போகிறதோ, எத்தனை இன்னல்களை சந்திக்கப் போகிறதோ என்ற அச்சம் எல்லோர் மனதிலும் எழுவதை தடுக்க முடியவில்லை. எப்படியிருந்தாலும் தமிழக மக்கள் போராட்டங்களுக்கு தயங்கியதில்லை. எதிர்த்துப் போராடி வென்று காட்டுவோம் என்ற வரலாறு நம்மை நம்பிக்கையுடன் செயல்பட வைக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை.

இங்கிலாந்தின், ‘ கார்ட்டியன்’ ‘ என்ற பிரபல பத்திரிக்கை ஒன்று,

‘மோடி மீண்டும் பிரதமராவது இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே கெட்ட செய்தி’

என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், அமெரிக்காவின், பிரபல பத்திரிகையான, ‘நியூயார்க் டைம்ஸ்’ என்ற பத்திரிக்கையும்,

‘பொய் பிரசாரம் மற்றும் வெறுப்பு அரசியல் மூலம் இந்தியாவை மோடி அரசு மயக்கி விட்டது ‘

என விமர்சித்திருக்கிறது.

மற்றும், நோபல் அறிஞர், அமர்த்தியா சென் அவர்கள்,

‘ஹிந்து தேசியவாதம் ஆட்சி அதிகார அடிப்படையில் வென்றுள்ளதே தவிர, கருத்தியல் போரில் அல்ல’

என்றும் கூறியிருக்கிறார்.

முன்பை விட தற்போது பிற மதத்தினர், ஒடுக்கப்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்படுத்தப்பட்ட மக்கள், பெண்கள் என அனைத்து தரப்பிலும் பாதுகாப்பற்ற சூழல் நிலவக் கூடிய ஆபத்து இருக்கிறது. இவைகளை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்பதுதான் மிக முக்கியம். இடஒதுக்கீடு போன்ற சமூகநீதி கொள்கைகள், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சாதி, மத ரீதியிலான கலவரங்கள், மாட்டிறைச்சி மற்றும் கலாச்சார பாதுகாவலர்கள் என்ற போர்வையில் வன்முறைகள் என அனைத்தையும் நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில், இந்திய சனநாயகத்தை பாதுகாக்க, நாம் அதிக பிரயத்தனம் செய்ய வேண்டிதானிருக்கும்.

siragu lok sabha election5

அடுத்து பார்த்தோமானால், திமுக கூட்டணியில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெறும், எதுவும் பயனில்லை என்ற ஒரு கருத்தை மக்கள் மனதில் விதைக்க சில கட்சிகள் மற்றும் பத்திரிகைகள் முயல்கின்றன . இது எந்தளவிற்கு தவறானது என்பதை அவர்கள் அறிவார்கள். இருந்தும் மக்களை திசைதிருப்பும் வகையில் இவ்வேலையை செய்வதற்கு எத்தனித்துளார்கள் என்பதுதான் உண்மை. அது ஆளும் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களின் பிரதிநிதி ஒருவர், அவர்களின் சார்பாக நாடாளுமன்றம் செல்கிறார் என்றால், அம்மக்களின் தேவைகளையும், அதற்கான நிதியையும் கேட்டு பெறுவதற்கு, அவர்களுக்கு உரிமை இருக்கிறது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் என்பது, தன்னுடைய தொகுதி, தன்னுடைய மாநிலத்திற்கு குரல் கொடுப்பது மட்டுமல்லாமல், இந்திய அரசியலமைப்பின் சட்டப்படி, இந்தியாவின் அனைத்து அதிகாரங்களுக்கும் சேர்ந்தே செயல்படுகிறார்.

நாடாளுமன்றத்தில் ஒரு முன்மொழிவு ஏற்கப்பட்டு, சட்டமியற்றப்படுகிறதென்றால், அதை நிறைவேற்றக்கூடியப் பொறுப்பு, அமைச்சரவையின் நிர்வாகத்துறைக்கு இருக்கிறது. காங்கிரசு பெரும்பான்மை ஆதிக்கம் இருந்த, கடந்த காலத்தைப் பார்த்தோமானால், அறிஞர் அண்ணா, செழியன், ஈ வெ கி. சம்பத் போன்றவர்கள், இந்தி மொழித்திணிப்பை எதிர்த்தும், மொழி உரிமைக்காகவும் அறிவார்ந்த விவாதங்கள், செயல்பட்ட விதங்கள் இன்றளவிற்கும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன . ஆதலால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் ஏதோ ஆளும்கட்சிக்கு மட்டுமே உரிமையானவர்கள் என்ற ஒரு மாய பிம்பத்தை, பொய்வாதத்தை முன்வைக்க முயல்பவர்கள் நிறுத்தி கொள்ளட்டும் .

கடைசியாக, பா.ச.க-விற்கு தமிழக மக்கள் வாக்கு அளிக்கவில்லையென்பதால், நம் மாநிலம் புறக்கணிக்கப்பட்டால், மக்கள் நல திட்டங்கள் எதுவும் செய்யாமல், வஞ்சிக்கப்பட்டால், அது மிகப்பெரிய அளவில், மக்கள் போராட்டமாக வெடிக்கும். மக்கள் கிளர்ந்தெழுந்தால், உலக அரங்கில், மிகப்பெரிய சனநாயக நாடான இந்தியாவிற்கு பெருத்த அவமானம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு, புதிதாக பதவி ஏற்றிருக்கும் மோடி தலைமையிலான பா.ச.க அரசு, இம்முறையாவது, மக்களுக்கான ஒரு நல்லாட்சியை தரட்டும் என்று வலியுறுத்தி, வாழ்த்துவோம்!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நடந்து முடிந்திருக்கும் 17 – வது, இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள்!”

அதிகம் படித்தது