மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நவம்பர் 26

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Nov 18, 2017

Siragu nov 26-1

நவம்பர் 26 1957 தமிழ்நாடு மறக்க முடியாத நாள்!!. ஆம் அன்று தான் தந்தை பெரியார் அவர்கள் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவுகளை எரிக்க வேண்டும் எனும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

அந்தப் போராட்டத்தில் தந்தை பெரியாரின் தொண்டர்கள் 10000 பேர் பெருந்திரளாக அரசியல் சட்டத்தின் சாதியைப் பாதுகாக்கும் பக்கங்களைக் கொளுத்தினர். தமிழக காவல்துறை செய்வதறியாது 3000 பேரை கைது செய்தனர். அதில் பெண்களும், சிறுவர்களும் அடங்குவர்.

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் ஒரு ஊரில் ஒரு இடத்தில் என்ற அளவில் நடைபெறவில்லை.

‘விடுதலை’ நாளேட்டில் வந்த தகவல்படி, சென்னையில் – 35 இடங்கள், வடார்க்காடு மாவட்டம் – 30 இடங்கள், தென்னார்க்காடு மாவட்டம் – 26 இடங்கள், சேலம் மாவட்டம் – 41 இடங்கள், கோவை மாவட்டம் – 14 இடங்கள், இராமநாதபுரம் மாவட்டம் – 4 இடங்கள், மதுரை மாவட்டம் – 13 இடங்கள், நெல்லை மாவட்டம் – 8 இடங்கள், தர்மபுரி – 18 இடங்கள், செங்கல்பட்டு – 9 இடங்கள், கன்னியாகுமாரி – 5 இடங்கள், திருச்சிராப்பள்ளி – 107 இடங்கள், தஞ்சாவூர் – 161 இடங்கள், புதுச்சேரி – 6 இடங்கள், பெங்களூர் மற்றும் ஆந்திரா – 1 இடம்.

Siragu nov 26-3

அரசியல் சட்டத்தை எரிப்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை என்று தமிழ்நாட்டில் பெரியார் போராட்ட அறிவிப்புக்குப் பிறகு அவசரமாக சட்டம் கொண்டு வரப்பட்டது.
சிறையில் மிகக் கொடிய அடக்குமுறை அவர்கள் மீது கையாளப்பட்ட போதும் அவர்கள் யாரும் பிணையில் வரவில்லை, எதிர்வழக்காடவில்லை. 3 மாதங்களிலிருந்து 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை நம் தோழர்களுக்கு வழங்கப்பட்டது!!

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், 16 வயதே நிரம்பிய திருச்சி வாளாடியைச் சார்ந்த சிறுவன் பெரியசாமி, பெரியார் கூட்டங்களுக்குத் தவறாமல் சென்றுவரும் கருஞ்சட்டைத் தொண்டன் சட்டத்தை எரித்தான். நீதிமன்றம் அந்த சிறுவனுக்கு விதித்த தண்டனை இரண்டு ஆண்டுகள். தூத்துக்குடி தட்டப்பாறை சிறுவர் சிறையில் அடைக்கப்பட்டான். ஏழைத் தாய்க்கு ஒரே மகன், பொருள் வசதி இல்லாமையால் மகனை ஒருமுறைகூட சென்று அவரது தாயால் பார்க்க முடியவில்லை.

அப்போது தமிழக ஆளுநராக இருந்த ஆளுநர் விஷ்ணுராம் மேதி, சிறையைப் பார்வையிட வந்தவர், சிறுவனின் போராட்டம் பற்றி அறிந்து வியந்து, மொழி பெயர்ப்பாளர் வழியாகக் கேட்டார். “உன்னை மன்னித்து விடுதலை செய்கிறேன், இனிமேலாவது இதேபோல் சட்டத்தை எரிக்காமல் இருப்பாயா?”

சிறுவன் கூறினான்:
“என் தலைவர் பெரியார் இந்தப் போராட்டத்தை அறிவித்தபோது நான் மட்டும் தான் சட்டத்தை எரித்தேன், வெளியே அனுப்பினால் என் தோழர்களைக் கூட்டி மீண்டும் எரிப்பேன்.” என்றான்.

ஆளுநர், “கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்” என்று கூறி நகர்ந்தார்.

ஆனால் சிறையின் மோசமான உணவு காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அந்தக் குழந்தை சிறையினுள் மாண்டான். மோசமான உடல் நிலை இருந்தபோதும் உறுதியாகப் பிணைக்கோர மறுத்து சிறையிலேயே மாண்டான். சிறையில் மட்டுமல்லாமல் வெளிவந்ததும் 18 தோழர்கள் உடல் நிலைக் குறைவு காரணமாக மாண்டார்கள்.

அந்தக் காலத்து சிறை என்பது கொடுமையானது. கருஞ்சட்டைத் தோழர்கள் அனைவரும், மோசமான குற்றங்களை இழைத்த கிரிமினல்கள் போலவே நடத்தப்பட்டனர். ஆனால் துவண்டுவிடாது போராடினர்!!.

இவ்வாறு சுயமரியாதை தோழர்கள் பலர் தங்கள் இன்னுயிரை ஈன்று இந்தப்போரட்டத்தை முன்னெடுத்தபோதும், இன்றும் சாதியத்தின் கோர முகங்கள் தமிழ்நாட்டில் வெளிவரத் தொடங்கியிருக்கின்றது. ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றது, மக்களின் ஒற்றுமை சீர்குலைந்துள்ளது. அந்த நிலையை மாற்றிட சாதி ஒழிப்பு வரலாற்றை மீண்டும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியத் தேவை உள்ளது.

நவம்பர் 26 சுயமரியாதை தொண்டர்களின் தியாகத்தை எடுத்துக்கூறி சாதி ஒழிப்புப் போராட்டத்தை மீண்டும் முன்னெடுப்போம்..


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நவம்பர் 26”

அதிகம் படித்தது