மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

படேல் சிலையின் பின்னணியில், பொதுத்துறை நிறுவனங்கள்!

சுசிலா

Nov 10, 2018

siragu patel1

கடந்தவாரம் குஜராத் மாநிலத்தில், உலகிலேயே மிக உயரமான சிலை, அதாவது 183 மீட்டர் உயரமுள்ள சிலையை, பிரதமர் மோடி திறந்து வைத்தது, நம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதற்கான செலவு 3000 கோடி ரூபாய் என்றும் சொல்லப்பட்டது. மேலும் இந்த சிலை சீனாவில் செய்து கொண்டுவரப்பட்டுள்ளது என்ற செய்தியும் நாம் அறிந்ததே. இப்போது நாடு இருக்கும் நிலையில், எதற்கு இவ்வளவு செலவில் ஒரு சிலை என்று மக்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல்வாதிகளும் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றனர். வழக்கம் போல் மத்திய அரசின் தரப்பிலிருந்து எவ்வித பதிலும் வரவில்லை…. வரப்போவதுமில்லை.!

தற்போது வெளிவந்திருக்கும் செய்தி என்னவென்றால், இந்த சிலைக்கான நிதி என்பது பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்பதுதான் புதிய தகவல். அது பின் வருமாறு,

1, இந்தியன் எண்ணெய்க் கழகம் – ரூ.900 கோடி
2. ஓஎன்ஜிசி – ரூ. 500 கோடி
3, பாரத் பெட்ரோலியம் – ரூ. 250 கோடி
4. கெயில் நிறுவனம் – ரூ. 250 கோடி
5, பவர் கிரிட் – ரூ. 125 கோடி
6. குஜராத் மினிரல்ஸ்
வளர்ச்சிக்கு கழகம் – ரூ. 100 கோடி
7. என்ஜினியர்ஸ் இந்தியா – ரூ. 50 கோடி
8. பெட்ரோனெட் இந்தியா – ரூ. 50 கோடி
9. பால்மேர் லாரே – ரூ. 50 கோடி

இந்த நிதிக்கு, சமூக பொறுப்புக்கான நிதி என்று பெயரிட்டு நிதி பெற்றிருக்கிறார்கள். கவனிக்கப்பட வேண்டிய ஒரு விசயம் என்னவென்றால், இந்த பட்டியலில், மோடி அரசிற்கு மிகவும் நெருக்கமான மற்றும் அதிகளவில் ஆதாயம் பெறும் நிறுவனங்களான, தனிப்பட்ட முறையிலும் நெருங்கிய நண்பர்களான, முகேஷ் அம்பானியோ, அணில் அம்பானியோ, கௌதம் அதானியோ, ராம்தேவோ நிதி அளிக்காதது வியப்பாகத்தான் இருக்கிறது. ஏன் அவர்களிடம் நிதி கேட்கவில்லை என்ற கேள்வியும் எழத்தானே செய்கிறது.!

மேலும், இந்த நிதியை அளித்திருக்கும் தொகையில், மிகப்பெரிய தொகை எல்லாமே, எண்ணெய் நிறுவனங்களாகவே இருக்கின்றன. நாட்டில் பெட்ரோல் விலையும், டீசல் விலையும் வரலாறு காணாத அளவிற்கு லிட்டர் ரூ. 87, மற்றும் ரூ. 82 என்ற அளவில் ஏற்றியிருக்கிறது என்பது கொடுமையிலும் கொடுமை. அதனை குறைக்க முடியவில்லை. சாமானிய மக்களின் தேவைகளை எல்லாம் வாங்கமுடியாத அளவிற்கு ஏற்றிவிட்டு, இந்த எண்ணெய் நிறுவனங்கள், ஒன்றுக்கும் உதவாத ஒரு சிலைக்கு பணத்தை கொட்டியிருக்கிறார்கள் என்றால், மக்களின் வரிப்பணம் எந்தளவிற்கு விரயமாயிருக்கிறது என்பது தெரிய வருகிறது. எல்லா வகையிலும், மக்களை வருத்திக்கொண்டிருக்கும் இந்த அரசு, இது போன்ற செயல்களின் மூலம், மென்மேலும் அவர்களை வாட்டி வதைக்கிறது.!

இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை என்றும் சொல்லப்படுகிறது. ஒற்றுமை சிலை என்று கூறிக்கொண்டு, பல மொழிகளில் செதுக்கப்பட்ட கல்வெட்டு பெயர் பலகையில், தமிழ் மொழியிலுள்ள மொழியாக்கத்தை கேலிக்குள்ளாக்கியிருந்தனர். சமூக ஊடகங்களில் அன்று முழுதும் அது தான் பேசுபொருளாக இருந்தது. பலருக்கு அந்த மொழியாக்கம் சொல்ல முடியாதளவிற்கு வேதனையும் தந்தது. Statue of Unity என்பதை “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” என்று பொருளற்ற சொற்களால் எழுதி வைத்திருந்தனர். சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டவுடன், உடனே அதனை அழித்திருந்தார்கள். இந்த செயல், தமிழையும், தமிழரையும் அவமதித்ததாக, தமிழ்நாட்டு மக்கள் எண்ணுமளவிற்கு, மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறது. இந்தளவிற்கு ஒரு பொறுப்பற்ற நிர்வாகம் அங்கே இருக்கிறது, தவறை திருத்த கூட அங்கே ஆட்கள் இல்லை என்பது தான் வேதனைக்குரிய ஒன்று.!

மேலும், இந்த குஜராத் மாநிலத்தை, சொந்த மாநிலமாகக் கொண்ட காந்தியடிகள் அறவழியில் போராடி, மக்களின் கவனத்தை ஈர்த்து, அதன் மூலம் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர். இந்த இந்திய தேசத்தின் தந்தையாக மதிக்கப்படுபவர். விடுதலை பெறுவதற்கு முன்பே, இந்திய முழுமைக்கும் சுற்றுப்பயணம் செய்து, பல மொழி பேசும் மக்களை ஒருங்கிணைத்து, விடுதலை வேட்கையை உருவாக்கியவர். அவரை சிறப்பு செய்யும் வகையில், எதுவும் செய்யவில்லை இந்த மத்திய அரசு. விடுதலைக்குப்பிறகு, கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை தந்து, ஆட்சியமைத்த நேரு அவர்களுக்கும் சிறப்பு செய்ய, இந்த அரசிற்கு மனம் வரவில்லை. பல சமஸ்தானங்களை இணைக்கிறேன் என்ற பெயரில், மிரட்டியும், ராணுவம் கொண்டு அச்சுறுத்தியும், ஹைதராபாத் நிஜாம் அரசை, இந்திய ராணுவம் கொண்டு, அடக்கி, பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளுக்கு, காரணமாய் இருந்து, அனைத்தையும் இந்திய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அதன் மூலம், ஒன்றிணைத்த, அப்போதைய உள்துறை அமைச்சர் படேல் அவர்களுக்கு சிறப்புமிக்க சிலை நிறுவுகிறது இந்த மத்திய பா.ச.க அரசு!

இந்த பா.ச.க அரசிற்கும், ஆர்.எஸ்.எஸ்.சிற்கும், காங்கிரசு தலைவர்களில் ஒருவரான படேல் மீது, பற்றுதலோ, கரிசனமோ சிறிதும் கிடையாது என்பது தான் முற்றிலும் உண்மை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தன்னுடைய கோட்டையாக திகழும் குஜராத்தில், வெற்றிபெறும் வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளது என கருத்துக்கணிப்பு மற்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுவதை கண்டு அஞ்சுகிறது பா.ச.க அரசு. அந்த மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கும், படேல் சமூகத்தினரின் வாக்கை பெறுவதற்கான ஒரு அரசியல் யுத்தியாக இந்த சிலை திறக்கப்பட்டிருக்கிறது. மேலும் தங்களின் இந்த நான்கரை ஆண்டுகள் ஆட்சிப்பொறுப்பில், பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, நீட் தேர்வு, மாநில உரிமைகளை பறித்தல், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பெண்களுக்கு பாதுகாப்பின்மை ரபேல் ஊழல், தற்போது சிபிஐ, ஆர்பிஐ தன்னுடைய கட்டுக்குள் கொண்டுவருதல், என பல மாபெரும் தவறுகளையும், ஊழல்களையும், மதக்கலவரங்களையும், அவைகளை மறைப்பதற்கான ஒரு முயற்சியாக இந்த உயரமான சிலையை நிறுவியிருக்கிறது மத்திய பா.ச.க அரசு.!

இந்த சிலை நிறுவியிருக்கும் பகுதியில், பல ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப் பட்டிருக்கிறது என்பது நிதர்சனம். இயற்கைவளங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன, தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிக்கப்பட்டிருப்பதாக, அப்பகுதி மக்களே, மிகவும், வேதனையுடன், போராட்டத்தில் குதித்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த, கன்செர்வேட்டிவ் கட்சியின், திரு. பீட்டர்போன், எம்.பி. அவர்கள், இந்த சிலை திறப்பிற்கு கடுமைக்காக சாடியிருக்கிறார். “மகளிர் மேம்பாடு, எரிசக்தி, வளர்ச்சித்திட்டங்கள் என இந்தியாவிற்கு, எங்கள் மக்களின் வரிப்பணத்தில், 10,000 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. அதனை நல்ல முறையில் பயன்படுத்தாமல், இந்த சிலைதிறப்பு என்பது தேவையில்லாத ஒன்று” என கூறியிருக்கிறார்.

உலகிலேயே உயரமான சிலை அமைப்பதல்ல பெருமைக்குரிய விசயம். உலகிலேயே மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா, பொருளாதாரத்தில் மேன்மையடைந்திருக்கிறார்களா, பாலினபேதமில்லாமல், வர்ணபேதமில்லாமல், வர்க்கபேதமில்லாமல், எல்லோரும் கல்வியில் சிறந்து விளங்குகிறார்களா, பெண்கள் பாதுகாப்பாக, அச்சமில்லாமல் வாழ்கிறார்களா, சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளின்றி எல்லோரும் சமமாக வாழ்கின்றார்களா, குழந்தைகள் போதிய ஊட்டச்சத்துடன் வளர்கிறார்களா, மருத்துவ வசதி எல்லோருக்கும் சமமாக கிடைக்கிறதா, தொழில்நுட்பத்தில், விஞ்ஞானத்தில் உச்சத்தை அடைந்திருக்கிறோமா,

சுருங்கக்கூறின்,

“அனைத்தும், அனைவருக்கும் “

என்ற நிலையை எட்டிவிட்டோமா என்பதில் இருக்கிறது ஒரு நாட்டின் பெருமை என மத்திய பா.ச.க மோடி அரசு, இனியாவது, உணர்ந்து, தெளிந்து, செயல்படட்டும்!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “படேல் சிலையின் பின்னணியில், பொதுத்துறை நிறுவனங்கள்!”

அதிகம் படித்தது