மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெண்களுக்கும், பெண்குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லா ஆட்சி, தற்போதைய பா.ச.க ஆட்சி.!

சுசிலா

May 5, 2018

siragu baby3

கடந்த காலங்களில், நாம் சொல்லிக்கொண்டிருந்தது என்னவென்றால், பெண்களுக்கு பாதுகாப்பில்லை, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்திக்கொண்டும் இருந்தோம். ஆனால், தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக அல்லவா சென்று கொண்டிருக்கிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்பது போக, இந்த பா.ச.க ஆட்சி, பெண்குழந்தைகளை பாதுகாப்பது என்பதை கேள்விக்குறியாக்கி வைத்திருக்கிறது என்பதுதானே நிதர்சனமான உண்மை.

கடந்த மாதத்தில், உத்திர பிரதேச மாநிலத்தில், ஒரு 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறாள், அதற்கு காரணமானவர், அந்த மாநில அமைச்சரவையில் அமர்ந்திருக்கும் ஒரு எம்.எல்.ஏ என்பது நம் எல்லோருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அதிலும், தங்களுக்கு நியாயம் வேண்டி போராடிய அந்த குடும்பத்தைத் தாக்கி, அந்தப் பெண்ணின் தந்தையை விசாரணை என்ற பெயரில் கொன்றிருக்கிறார்கள் என்ற செய்தி நம்மை அதிக வேதனைக்கு உள்ளாகியது. அதில் இருந்து மீண்டு வருவதற்குள், காசுமீரில், ஆசிபா என்ற 8 வயது இசுலாமிய ஆடு, மாடு மேய்த்து பிழைக்கும் நாடோடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி, கோவிலுக்குள் அடைத்து வைத்து, 8 நாட்கள் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டிருக்கிறாள் என்ற செய்தியை நம் எல்லோரையும் உலுக்கி எடுத்துவிட்டது. அது மட்டுமல்ல, இந்த வெறி செயலுக்கு பின்னாலும், பா.ச.க பிரமுகர்கள் இருக்கின்றனர். அங்கு குடியிருக்கும் இசுலாமிய குடும்பங்களை வெளியிருவதற்காக, செய்யப்பட்டசெயல் என்று சொல்லப்படுகிறது. மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, உணவின்றி, நீரின்றி, 8 நாட்கள் 8 பேர்களால், (தேட வந்த காவல்துறையைச் சேர்ந்த நபர் உட்பட) பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, காலை வளைத்து, உடைத்து, விலா எலும்பை உடைத்து, தலையில் கல்லால் அடித்து கொன்றிருக்கிறார்கள்.

siragu baby2

எப்படிப்பட்ட வெறிச்செயல் இது. விவரிக்க முடியாத ஒன்றல்லவா.! எழுதும் போது கூட நம் கண்ணில் கண்ணீர் வருவதைத் தடுக்க முடியவில்லை. அந்தளவிற்கு மனிதநேயமற்ற மிருகங்கள் வாழும் நாட்டில் நாமும் வாழ்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. மிருகங்கள் என்று சொல்வது கூட சரியாக இருக்க முடியாது. ஐந்தறிவு உள்ள மிருகங்கள் கூட, தங்கள் இனக்குட்டியை இப்படி சித்தரவதை செய்ததாக கேள்விப்பட்டதில்லை. இந்த ஆண்டு, சனவரியில் நடந்த இந்த கொடுமை, ஏப்ரல் மாதத்தில் தான் வெளிஉலகிற்கு தெரிய வந்திருக்கிறது. அந்தளவிற்கு, இந்த செய்தி மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது இவர்களின் ஆட்சி, அதிகாரம் கையில் இருக்கிறது என்ற ஒரு ஆணவப்போக்கு தான் மிகவும் காரணமாக இருந்திருக்கிறது. இதில் மிகவும் கொடுமை என்னவென்றால், அந்த மாநில பா.ச.க அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் சேர்ந்து, குற்றவாளிகளை தண்டிக்கக் கூடாது என்ற பேரணி நடத்தியது தான். இந்த விசயத்தில், உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், காசுமீரத்தில் நடந்த இந்த கொடுமைக்கு, கேரளத்தில் இருக்கும் ஒரு பா.ச.க நபர், அந்த சிறுமியை கொன்றது சரி தான், இல்லையென்றால், அவள் வளர்ந்து வந்து, குண்டு போட்டு நம்மை தாக்குவாள் என்று பதிவு செய்திருக்கிறார். மேலும், பா.ச.க ஆட்கள் இந்த நிகழ்வை ஆதரித்தும் வருகிறார்கள்.

இந்த செய்தி, நம்முடைய இயல்பு வாழ்க்கையை மிகவும் புரட்டிப்போட்டது, சிந்தனை முழுக்க அந்த சிறுமி ஆசிபா ஆக்கிரமித்திருந்தாள் என்று இருக்கும்போதே, பிரதமர் மாநிலமான குஜராத்தில், 11 வயது சிறுமி பாலியல் வனகொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறாள் என்ற ஒரு செய்தி. அதிலிருந்து மீள்வதற்குள், அரியானா மாநிலத்தில், 10 வயது சிறுமி இதே முறையில் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள் என்ற மற்றுமொரு செய்தி.

இவற்றையெல்லாம், சகித்துக்கொள்ள முடியாமல், நாடே பதற்றத்தில் இருக்கும்போது, கடைசியில் தமிழ்நாட்டிலேயே, நம் மாணவிகளிடம் கை வைத்திருக்கிறது, பா.ச.க மகளிர் அணியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி என்ற பெண்மணி மூலம். எவ்வளவு அநியாயமான, அக்கிரம, அயோக்கிய செயல்கள் இவைகள் எல்லாம்.! படிக்கும் மாணவிகளிடம், பணம், பதவி, வேலை, மேல்படிப்பு ஆசை காட்டி, பாலியல் ரீதியாக அவர்களை உடன்படும்படி, நாவில் தேனொழுக பேசி மனதை மாற்ற முயற்சி செய்திருக்கிறார் அந்த பேராசிரியை என்றால், இது என்ன சாதாரணமான விடயமா…? மன்னிக்க முடியாத குற்றமல்லவா… மேலும், அந்த உரையாடலில், தமிழக ஆளுநர் குறிப்பிடப்பட்டிருக்கிறார் என்பதை, இணையத்தில் பரப்பப்பட்ட காணொலி மூலம் நாம் எல்லோரும் அறிவோம்.

எம்மின பெண்கள் தற்போது தான், கல்வி, சுய சம்பாத்தியம் என பொருளாதார ரீதியில், தங்களை நிலைநிறுத்திக்கொள்ள ஆயத்தமாகி வருகிறார்கள். இந்த நிலையில், இப்படிப்பட்ட அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால், பெண்களின் இந்த முன்னேற்றம் பாதிக்கப்படும் அல்லவா. சுதந்திரமாக வெளியில் வருவதற்கு மட்டுமல்லமால், கல்வி பெற முடியாமல், அறிவு மறுக்கப்பட்ட நிலையில், ஆண்களை சார்ந்து வாழும் பழைய வாழ்க்கைமுறைக்கு, மீண்டும் அடிமைத்தன்மையை பெறவேண்டிய நிர்பந்தத்திற்கு பெண்கள் ஆளாக்கப்படுவார்கள் என்ற பேராபத்து வந்துவிடுமே.!

மேலும், ஊடகவியலாளர்கள் பணியில் இருக்கும் பெண்களை, மிகவும் தரம் தாழ்ந்த, தரக்குறைவாக சொற்களால், தன்னுடைய பக்கத்தில் பதிவு செய்த நடிகர், பா.ச.க உறுப்பினருமான எஸ்.வி.சேகர் என்பவரை, கைது செய்ய தயங்குகிறது இந்த அதிமுக ஆளும் அரசு. உயர்நீதிமன்றமே, அவருக்கு முன் ஜாமின் வழங்க மறுத்திருக்கும்போது, தலைமறைவாகி உள்ளார் அந்த மனிதர். ஆனால், தமிழக காவல்துறை, அவரை கைது செய்யவில்லை என்றால், இந்த அரசு, மத்திய அரசின் பிடியில் இருக்கும் ஒரு பொம்மை அரசு என்பது உறுதியாகிறது தானே.!

ஆக, இந்த மத்திய அரசு ஆட்சிக்கு வந்தவுடன், பெண்களுக்கும், மிக முக்கியமாக, பெண்குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பது தான். குற்றவாளிகள் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களாகவே இருப்பதால், தண்டனையும் கிடைப்பதில்லை. அரசும் அவர்களை பாதுகாக்கிறது என்பது தான் வேதனையிலும் வேதனை. இனி வரும்காலங்களில், பெண் முன்னேற்றம், பெண் விடுதலை என்பது பற்றியெல்லாம் பெண்கள் சிந்திப்பதை விட்டுவிட்டு, பெண் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது என்றும், தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பதைப்பற்றியும் சிந்திப்பதே, முக்கிய வேலையாகவும், சவாலாக இருக்கும் போலிருக்கிறது. அந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது இந்த மத்திய பா.ச.க. மோடி அரசு.!

இந்த ஆட்சியில், பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள் பற்றிய உண்மைகளை விளக்கி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். பெண் குழந்தைகளுக்கு கட்டாய தற்காப்புக்கலை ஒன்றை கற்றுக்கொடுக்க வேண்டிய காலகட்டத்திலும் இருக்கிறோம். கடைசியாக ஒருசெய்தி, பெண்கள் முன்னேற்றம் இல்லையென்றால், எந்த ஒரு சமூகமும், நாடும் முன்னேற்றமடையாது என்பதும் உறுதி. இதனை உணர்ந்து, மத்திய பா.ச.க அரசு, அதற்கு தங்களை ஆயுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், மக்கள் இந்த ஆட்சியை தூக்கி எறிவார்கள் என்பது உறுதியான ஒன்று.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெண்களுக்கும், பெண்குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லா ஆட்சி, தற்போதைய பா.ச.க ஆட்சி.!”

அதிகம் படித்தது