மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பொன்னியின் செல்வன் – 1 விமர்சனம்

வெங்கட் நடராஜன்

Oct 15, 2022

siragu ponniyin selvan

தமிழர் வரலாறு, பெருமை, தேற்காசியாவையே கட்டியாண்டசோழ சாம்ராஜ்யம் இதையெல்லாம் சற்று மறந்துவிட்டு…ஆங் பொன்னியின் செல்வன் புத்தகத்தை கண்ணில் கூட பார்க்காமல் சினிமா பார்க்க சென்ற பாமரன் பார்வையிலிருந்து….

கமல்ஹாசன் குரலில் கதை முன்னோட்டத்தை தொடர்ந்து ஆதித்ய கரிகாலனின் போருடன் தொடங்குகிறது படம். ஆனால் போர் காட்சிகள்எதுவும் புரிந்துக்கொள்ளா வண்ணம் ‘பாஸ்ட் பார்வேர்ட்’ செய்துள்ளார்கள்.

பிரம்மிக்க வைக்கும் மாளிகை தோற்றங்கள், சுரங்க பாதை, கடல், கப்பல், குதிரை மற்றும் கதாபாத்திரங்களுக்கு உருக்கொடுக்கும் சிறப்பான உடையலங்காரங்கள் என நம்மை 1000 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்று ஆச்சர்யப்பட வைக்கிறது.நிஜ காட்சிகள் எது வரைகலை எது என்று வேறுபடுத்த முடியா அளவிற்கு வெகு நேர்த்தியாக தொழில் நுட்பத்தைக் கையாண்டிருக்கிறார்கள்..

நம்பி ஒருவர் மட்டுமே இந்த ‘செட்’ களில் நம்பிக்கையோடு காலப்பயணம் செய்திருக்கிறார். இவரது உச்சரிப்பு, உடல் மொழி அனைத்தும் அக்கால அக்கால மனிதர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்று நம்பவைக்கிறது. விக்ரம், ஐஸ்வர்யா போன்றோர் ஓரிரு நூறாண்டுகள் பயணம் செய்திருக்கிறார்கள். மற்றவர் எல்லோரும் உடையலங்காரம் செய்துகொண்டு ‘செட்’ களை பார்வையிட மட்டுமே சென்ற கூட்டம். கார்த்தி, ரவி போன்றோர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ‘செட்’ க்கு வெளியே ‘ஹாயா’ நின்று ‘கமெண்ட்’ அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எழில் கொஞ்சும் இலங்கை, கடற்கரை, கண் குளிரும் இயற்கை காட்சிகள் என நம் ஊரை வெளிநாட்டினரும் மெச்சும் வகையில் அற்புதமான ஒளிப்பதிவு அதற்க்கு உயிரூட்டும் அளவான பின்னணி இசை. ‘அலைகடல்’ தவிர அனைத்து பாடல்களும் ராவண் மற்றும் அலைபாயுதே படப் பாடல்களை நினைவூட்டுவதை எனோ தேவிர்க்க முடியவில்லை.

நிறைய கதாபாத்திர அறிமுகங்கள், இடையிடையே பாடல்கள் என இடைவிடாமல் இடைவேளை வரை திணறடிக்கிறது. பெரும்பாலான கதாபாத்திரத்திற்கு அழுத்தமான காட்சியமைப்புகள் இல்லை. ஒருவழியாக இவற்றை புரிந்து கொண்டு படம் பார்க்க ஆரம்பித்தால் அதற்குள் இடைவேளை வந்துவிடுகிறது.

வசீகர அழகு, கம்பீர நடை, விஷம் கலந்த கண்கள், பலி வாங்கத் துடிக்கும் பார்வை, நந்தினியாக ஐஸ்வர்யா ராய். இதைவிட பொருத்தம் யாரும் இருக்க முடியாது. இளவரசியாக வரும் குந்தவையின் தோற்றம் சற்று முதிர்ச்சியாகவே தோன்றுகிறது. நந்தினி போல் இவருக்கும் கொஞ்சம் மாயாஜாலம் செஞ்சி இன்னும் இளமையாகக் காட்டியிருக்கலாம். இவரின் நடிப்பு இயல்பாக இருந்தாலும், காட்சிகள் எதுவும் மனதில் பதியும்படி இல்லை. இவரின் பின்னால் ஒளிந்து நிற்கும் பணிப்பெண் போல வந்து போகிறார். பொன்னியின் செல்வனின் காதலி வானதி. படகோட்டியாக வரும் பூங்குழலி சற்று மாநிறமாக காட்டியிருக்கிறார்கள், தமிழ் சினிமாவிற்கு நன்றி. இவர் பாடும் அலைக்கடல் பாடல் இனிமை….ஓரிரு வரிகளோடு நின்று விடுகிறது…முழு நிலவாக்கியிருக்கலாம்….

ஆதித்த கரிகாலனாக வரும் விக்ரம், சற்று முதிர்ந்த இளவரசனாக இருந்தாலும் இவருக்கான நடிப்பில் முத்திரை பதித்து செல்கிறார். நிகழ்காலமும் கடந்த காலமும் சந்திக்கும் வந்தியத்தேவன்- நம்பி கூட்டணி ‘காமெடி’…. நம்பியாக வரும் நடிகர் (ஜெயராம்) அடையாளமே தெரியவில்லை – சிறப்பு. அமைதியாக இருக்கும் வரையில் அருண்மொழி வர்மனாகவும், வாய் திறந்தால் ஜெயம் ரவியாகவும் ‘டபுள் ரோல்’ செய்து அசத்தி இருக்கிறார் ‘கோமாளி’ நடிகர். இதற்கு வேறு நடிகரே கிடைக்காதது தமிழ் சினிமாவின் பலவீனம்???

பெரிய பழுவேட்டரையர் சரத்குமார் மிகப் பொருத்தம், சின்ன பழு வேட்டரையர் ஏனோ கொள்ளை கும்பல் தலைவன் போல இருக்கிறார். பெரிய வேளாராக பிரபு. ஏனோ வந்து போகிறார். இவர் குதிரையிலிருந்து எப்படி இறங்கியிருப்பார்? ஆதித்ய கரிகாலனின் நண்பன் பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு. குடும்ப ‘கோட்டா’ அடிப்படையில் தந்தை மகன் இருவருக்கும் சேர்த்தே கொஞ்ச காட்சியைத் தான் வழங்கிருக்கிறார்கள். மணி முடியின் சுமை தாங்க முடியாமல் படுத்து கிடக்கும் மன்னராக பிரகாஷ் ராஜ்… மரணத் தருவாயிலும் மன்னன் என்றால் ஒரு கம்பீரம் வேண்டாமா?…

நந்தினி, நம்பி கதாபாத்திரங்கள் அட்டகாசம். ஆதித்ய கரிகாலன், வந்திய தேவன், பெரிய பழுவேட்டரையர், பூங்குழலி, குந்தவை, மன்னர் கதாபாத்திரங்கள் சிறப்பு.

மெய்சிலிர்க்கும் நடிப்பு காட்சிகளோ… மயிர் கூச்செரியும் போர் காட்சிகளோ இல்லை…’வாவ்’ என வியந்து போக வைக்கும் வசனங்கள் ஏதும் இல்லை என்றாலும் பாத்திரத்துடன் ஒன்றி ஆர்வத்துடன் நாமும் பயணிக்கும் போது பாகம்-2 என்று போட்டுவிடுகிறார்கள்… தொலைக்காட்சி ‘சீரியல்’ போல அடுத்த பாகத்திற்கு காத்திருக்க வேண்டும்…

எது எப்படி இருந்தாலும் 3 மணிநேரம் போனதே தெரியவில்லை. அதற்காக இயக்குநரையும் தயாரிப்பாளரையும் பாராட்டியே ஆக வேண்டும். சிறந்த பொழுது போக்கு படம்,மணிக்கு ரத்தினக்கல்.


வெங்கட் நடராஜன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பொன்னியின் செல்வன் – 1 விமர்சனம்”

அதிகம் படித்தது