மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்தியஅரசின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் தமிழகம்

சுசிலா

Apr 6, 2018

கடந்த ஓராண்டு காலத்தில், தமிழ்நாடே தொடர்ந்து போராட்ட களமாக மாறிக்கொண்டிருக்கும் நிலைமையை மத்திய பாசக அரசு ஏற்படுத்தியிருக்கிறது என்பது  நாம் அனைவரும்  அறிந்த ஒன்று. ஆனால், சமீப காலமாக, மிக அதிக அளவில், இந்தத் தாக்குதல் தீவிரமடைந்திருக்கிறது என்பது மிகவும் வேதனையான ஒன்றாகத்தான் தமிழக மக்களுக்கு இருக்கிறது.

Siragu-state-govt3முதலில், நீட் என்ற நுழைவுத் தேர்வு மூலம் கல்வியில் கைவைத்தது மத்திய மதவாத மோடி அரசு. இதன்முலம் நம் தமிழக ஏழை, கிராமப்புற  மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்க்கப்பட்டது. தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று, சட்டமன்றத்தில், அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஏற்று, தீர்மானம் போட்டு சட்டமியற்றியத்தை, குடியரசு தலைவரின் கையொப்பத்திற்காக அனுப்பியதை, மத்திய மோடி அரசாங்கம் கிடப்பில் போட்டு,  காலம் தாழ்த்தி மத்திய கல்வி பாடத்  திட்டத்தின் அடிப்படையில், வினாக்கள் கேட்கப்பட்டு, நீட் தேர்வை நடத்தியே விட்டது. நம் மாநில மாணவர்கள் நம் மாநிலத்து திட்டத்தின் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மருத்துவம் சேர முடியாத நிலையை ஏற்படுத்தி, அதனால், நம் அறிவு செல்வம் அனிதாவை பறிகொடுத்தோமே, மறக்கத்தான் இயலுமா.!

Siragu-neduvasal2

அடுத்து பார்த்தோமானால், தஞ்சை டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ  கார்பன் எடுப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு உரிமம் கொடுத்ததாகக் கூறி, அதிலும் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு அனுமதி கொடுத்ததாக ஒரு தகவலும் வந்தது. இந்தச் செயல் திட்டத்திற்காக விளைநிலங்களை கையகப்படுத்தி பாலைவனமாக்க முயற்சி செய்கிறது. இன்னமும், அப்பகுதி மக்கள் போராடிக்கொண்டு தானே இருக்கிறார்கள். மேலும், கடந்த சில ஆண்டுகளாக  மழை பொய்த்ததாலும், காவேரியில் நீர் வராத காரணத்தாலும் விவசாயம் சரிவர செய்ய முடியாமையாலும், பெரும் சுமைகளுக்கு ஆளாகிய  நம் விவசாய பெருமக்கள் டெல்லி வரை சென்று, தங்களுடைய கடனை  தள்ளுபடி செய்யுமாறு பல வழிகளிலும் போராடிப் பார்த்தனர். எதற்கும் செவிசாய்க்கவில்லை, இந்த மத்திய அரசு.

siragu poraattam1

அடுத்து, ஸ்டெர்லைட் போராட்டம். தூத்துக்குடி மாவட்டத்தில், அமைக்கப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையினால், அப்பகுதி மக்கள் பலவித நோய்களினால் பாதிக்கப்படுகிறார்கள். தோல் வியாதி, கண் எரிச்சல், கேன்சர் வரை பாதிக்கப்படுவதாக ஆய்வும் கூறுகிறது. தமிழகத்திலேயே, அதிக அளவு கேன்சர் பாதிப்பு அந்த மாவட்டத்தில் இருக்கிறது என்று மருத்துவ ஆய்வு கூறுகிறது. இந்த நிலையில், அந்த ஆலையை மூடுமாறு மக்கள் போராடி வருகின்றனர். இதில் என்ன மிகவும் கொடுமையென்றால், இந்த ஆலையை மேலும் விரிவாக்க அனுமதி கொடுத்திருக்கிறது மத்திய அரசு என்பது தான்.
பள்ளிச்சிறுவன் ஒருவன்,
‘காப்பர் உங்களுக்கு, கேன்சர் எங்களுக்கா ..’
என்று முழங்குவதைப்  பார்த்தும் கூட இந்த மத்திய அரசிற்கு மனம் இரங்கவில்லை என்றால், என்ன சொல்வதென்றே தெரியவில்லை. போராட்டம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.!

siragu poraattam2

அடுத்து இருப்பது, நியூட்ரினோ போராட்டம். இந்த நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதால், அருகாமையிலுள்ள குடியிருப்பு மக்களும் அதிகளவில் பாதிப்பு இருப்பதாக அறிவியலாளர்களும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இயற்கை பேரழிவுகள், நிலநடுக்கம், ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக இயற்பியல் பேராசியர்கள் கூறுகின்றனர். அங்கும் மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். சமீபத்தில், மதிமுக தொண்டர் ஒருவர்  தீக்குளித்து தன்னுயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார் என்பது வேதனையிலும் வேதனையல்லவா. இந்த நிலையில், அத்திட்டத்தை உடனே செயல் படுத்தவேண்டுமென்று, மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி வழங்க வலியுறுத்துகிறது மத்திய மோடி அரசு.!

தற்போது தமிழகத்தையே உலுக்கி கொண்டிருப்பது, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற போராட்டம் தான்.  காவேரியில் நீர் வரவில்லையென்றால், தமிழகமே பாலைவனமாக்கப்பட்டு விடும் என்ற பேரச்சம் மக்கள் மனங்களில் குடிகொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றமே, கடந்த பிப்ரவரி மாதம் 16ந்தேதி, ஆறு வாரங்களுக்குள், மத்திய அரசு  காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று விவசாயச் சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், மாநில அதிமுக அரசு மெத்தனப்போக்கை கையாண்டு வந்தது. ஆறு வாரங்கள் முடியும் தருவாயில், கடைசி நாளன்று,  வாரியம் அமைக்க சொல்லவில்லை, ஸ்கீம் என்று  தான் சொல்லப்பட்டிருப்பதாகவும், அதற்கு விளக்கம் கேட்டு மனு போட்டிருக்கிறது. அது மட்டுமலலாமல், மேலும் மூன்று மாதங்கள் கால அவகாசம் கேட்டிருக்கிறது என்றால்,  இந்த மத்திய அரசு, தமிழகத்தை பழி வாங்குவதாகத் தானே பொருள் கொள்ள முடியும். இதற்கிடையில்,  மெரினா கடற்கரையில், மாணவர்கள் ஒன்று கூடி  போராட்டம்  நடத்த முயல்கையில், அவர்களை  கைது செய்து, 144 தடையுத்தரவு போட்டிருக்கிறது இந்த மாநில ஆளும் அதிமுக அரசு.!

siragu poraattam3

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், திமுக மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து தொடர் போராட்டங்களை அறிவித்து, சிறப்பாக செய்து வரும் நிலையில், இன்றைய தினம் ஏப்ரல் 5 -ஆம் தேதியான இன்று, முழு கடையடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கில், தொண்டர்கள்  கைதாகியுள்ளனர். சென்னை காமராஜர் சாலையில் நடந்து முடிந்திருக்கும் மாபெரும் பேரணி, சாலை, ரயில், மறியல்கள், விமானநிலையம், தபால்நிலையம், மத்திய அலுவலகங்கள் முற்றுகை என பல வகைகளில் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அனைத்துத் தரப்பிலிருந்தும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.

அனைத்து வகைகளிலும், நம்மை தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறது, இந்த மத்திய பாசக மோடி அரசு. இதற்கு, கைகட்டி, வாய் மூடி அடிமை சேவகம் செய்துகொண்டிருக்கிறது அதிமுக அரசு. இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள், பொங்கி எழுந்து தமிழகமெங்கும் போராடி வருகின்றனர், தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது என்றால், அது மிகையில்லை. தமிழக மக்கள் கொதித்து போயுள்ளனர். போராட்டங்கள் இன்னும் வலுக்குமே தவிர நீர்த்துப் போக வாய்ப்பில்லை என்ற நிலையை எட்டியுள்ளது.

இதனை உணர்ந்து, மாநில அரசு, மத்திய அரசை, உடனே காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த வேண்டும். காவேரி நீர் நமது உரிமை, அதனை பெற்றாக வேண்டும். மேலும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும், நியூட்ரினோ திட்டம் கைவிடப்பட வேண்டும், நீட் தேர்வு, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை மேலும் அதி தீவீரப்படுத்த வேண்டும். நம் மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். இவைகளை பெற தவறினால், இந்த அதிமுக அரசு தூக்கியெறியப்பட வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, போராட்டங்களை முன்னெடுப்போம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்தியஅரசின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் தமிழகம்”

அதிகம் படித்தது