மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மாமனிதனின் சிறப்புகள்

முனைவர் மு.பழனியப்பன்

Dec 17, 2022

siragu narpanbugal1
மனிதர்கள் புலனறிவும், அதனால் மன அறிவும் பெற்றவர்கள். புலன்கள் வழி மனிதன் அனுபவ அறிவினைப் பெறுகிறான். அவ்வனுபவத்தைச் சேமித்து வைத்து உள அறிவினைப் பெறுகிறான். இந்த அறிவு ஒருவரில் இருந்து ஒருவருக்கு பகிரப்படுகிறது. அறிவின் பகிர்வு அனுபவங்களை எளிமையாக்குகிறது.

நாம் செல்லும் பயணம் முதலாவது அல்ல. அதற்கு முன்பே பலர் அந்த வழியில் சென்றிருக்கிறார்கள். வந்திருக்கிறார்கள். அந்தப் பாதையை முதலில் ஏற்படுத்தியவர் யார். அவர் எவ்வகையில் இதனை ஏற்படுத்தியிருப்பார். அவருக்கு எவ்வளவு அனுபவங்கள் கிடைத்திருக்கும். அவர் செல்லாமல் இருந்திருந்தால் இந்தப் பாதை உருவாகி இருக்காது. அந்தப் பாதையை முதன் முதலாகக் கண்டுபிடித்த மனிதரின் பாதங்களுக்கு நன்றி சொல்வோம். அவர் எவ்வளவு வேகமாக இந்தப் பாதையில் சென்றிருக்க இயலும். நாம் அவரை விட பல மடங்கு வேகத்தில் அந்தப் பாதையில் பயணத்தைத் தொடர்கிறோம். எனவே பாதைகள் நமக்கு முன்னே தோற்றுவிக்கப்பட்டன. பாதை தரும் அனுபவங்கள் இன்பமும் துன்பமும் கலந்தவை.

இந்த அனுபவத்தை அவர் கண்டும், கேட்டும், நடந்தும், இளைப்பாறியும், ஓடியும், உணர்ந்தும், நினைவு கொண்டும், தாகத்தோடும், பசியோடும் பெற்றிருக்க வேண்டும். இன்று நாம் அந்தப் பாதையில் எவ்வித சிரமமும் இல்லாமல் மிக எளிதாக பயணிக்கிறோம். பாதையைக் கண்டறிந்த முதல் மனிதனை மறந்தே போனோம். அவனுக்குப் பெயரில்லை. அடையாளம் இல்லை. அவன் அனுபவம் இன்று சுகமாகிறது.

புலன்களால் புலன்களின் ஒருங்கிணைப்பால் அனுபவங்கள் பெறப்படுகின்றன. இது நச்சுமரம் என்பது நமக்கு அறிவிக்கப்படுகிறது. இந்த மரத்தை இதன் இலையை இதன் காயை, இதன் பழத்தை யாரோ ருசி பார்த்து அதன்பின்பு அது நச்சு என்று கண்டுபிடித்திருக்க முடியும். இந்த நச்சு அந்த முதல் மனிதனின் உயிரைக்கூட தியாகமாகக் கேட்டிருக்கமுடியும்.

எனவே அனுபவங்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். இந்த அனுபவங்களை மனதிற்கு, மூளைக்கு வழங்குவன நமது ஐம்புலன்கள். கண்கள், காதுகள், உடல், மூக்கு, வாய் போன்றனதான். இவை எத்தனை பெரிய செல்வங்கள். இவற்றினால் உணர்கிறோம். உண்மை பெறுகிறோம்.

ஒன்றாகக் காண்பதே காட்சி. ஐந்து புலன்களையும் ஒன்றுபடுத்தி அனுபவிக்க அதன் வழி கிடைக்கும் ஒற்றைக் காட்சியே முழுமையாக காட்சியாகும். ஒரு பொருளைக் காண்கிறோம். ஒரு பொருளை நுகர்கிறோம். அதன் வாசனையை வாசனை அற்ற தன்மையை அறிகிறோம். ஒரு பொருளை அதன் ஒலியைக் கேட்கிறோம். அல்லது அதன் ஒலியின்மையைக் கேட்கிறோம். ஒரு பொருளின் தன்மையை உணர்கிறோம். அதன் கடுமை, மென்மை அறிகிறோம். இதன் வழி கிடைக்கும் அனுபவங்களை ஒன்று கூட்டி இது மஞ்சள் நிறம், மென்மையானது, மாம்பழ வாசம் சுவை உடையது என்று அறிந்து மாம்பழத்தை முழுமையாக ஐந்து புலன்கள் கொண்டு உணர்கிறோம். இதனால் மாம்பழம் என்ற ஒரு காட்சி கிடைக்கிறது.

ஐம்புலன்களின் உணர்வு முழுமை அனுபவ அறிவுக் களஞ்சியமாகின்றது. அந்த ஐம்புலன்களின் அனுபவங்கள் தாண்டி அவற்றின் களிப்பிற்கு மகிழ்ச்சி மனிதன் மண்டியிட்டுவிடக் கூடாது. புலன் ஐந்தும் வென்றான் வீரமே வீரம். ஐந்து புலன்களையும் ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கி வாழ்பவன் வெற்றி வீரனாகிறான். அவனின் அறிவு சேமிக்கப்படுகிறது. செலவாவதில்லை.

ஐம்புலன்களால் அனுபவத்தைப் பெறலாம். இது ஒருவகையில் நன்மையே. முழுமையே. இருந்தாலும் பெரிதும் முழுமை பெற, கல்வி அறிவும் கற்றல் அறிவும் அவசியமாகும். ஒன்றானும் சாகாமல் கற்பதே வித்தை. எக்காலத்தும் அழியாதது கல்வி. அதனைக் கற்பதே சிறப்பு. கல்வியால் எவரும் அழியாமல் அழிவில்லாமல் வாழச் செய்வதே நன்மை தரும் கல்வியாகும். அந்த நன்மை தரும் கல்வியைக் கற்று உலகம் நன்மை பெற வாழ வேண்டும். அதுவே வாழ்வின் சிறப்பு

அனுபவ அறிவும், கல்வியறிவும் பெற்றாகிவிட்டது. இனி வாழ்க்கைக்கு அவற்றைப் பயன்படுத்த வேண்டும். தனைப் பிறர் ஏவாமல் உண்பதே ஊண். தனைப் பிறர் ஏவுகின்ற நிலையில் இல்லாமல் தாமே தொழில் செய்தல் சிறப்பு. பிறர் ஏவாமல் தாமே கருத்தறிந்து செயலாற்றுவதும் சிறப்பு. அறிவு பெற்றவன் அடிமையாக இருக்க முடியாது. சுய சிந்தனை, சுய ஆற்றல் கல்வியறிவு, அனுபவ அறிவு பெற்றவனிடத்தில் இருக்கும் என்பதால் அவன் மற்றவர்களைச் சார்ந்து வாழ மாட்டான்.

இப்போது ஔவையார் சொன்ன கருத்தின் முழுப்பாடலையும் பார்ப்போம்.

ஒன்றாகக் காண்பதே காட்சி. – புலன் ஐந்தும்
வென்றாம் தன் வீரமே வீரம் – ஒன்றாலும்
சாகாமல் கற்பதே வித்தை தனைப் பிறர்
ஏவாமல் உண்பதே ஊண்.

இந்தத் தனிப்பாடலில் அனுபவ அறிவும், கல்வியறிவும், தொழிலறிவும், அடக்கி ஆளும் ஆளுமைத்திறனும் ஒருங்கு சேர அறிவுறுத்தப்பெற்றுள்ளது. இத்தனையும் பெற்ற மனிதன் அருமை மனிதனாக, குணக்குன்றாக விளங்குவான் என்பதை உலகம் உணரட்டும்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மாமனிதனின் சிறப்புகள்”

அதிகம் படித்தது