மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மொழிப்போர் !!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jun 22, 2019

siragu mozhippor1

அண்மையில் நாடாளுமன்றத்தில் தமிழ் வாழ்க! பெரியார் வாழ்க! திராவிடம் வெல்க! உலக தொழிலாளர்களே ஒன்று படுங்கள்! மார்க்சியம் வாழ்க! போன்ற முழக்கங்கள் இந்திய துணைக்கண்டத்தையே தமிழ் நாட்டை நோக்கி திருப்பியுள்ளது. குறிப்பாக தாய் மொழியான தமிழில் உறுப்பினர்கள் பதவி ஏற்றது பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது. சனாதனம் முழு பலத்தோடு நாடாளுமன்றத்தில் இருக்கின்ற நிலையிலும் எந்த தத்துவம் தமிழர்களுக்கு இந்த துணிவை தந்திருக்கின்றது என்று வரலாறு அறிந்தவர்கள் அறிவர். 100 ஆண்டுகள் இந்த மண்ணில் பெரியார் என்ற தத்துவப் பேரரசன் போட்டுத்தந்த கருத்தியல் பலம் நமக்கு துணிவை தந்து கொண்டே இருக்கும் என்று வரலாறு மீண்டும் பொறித்துள்ளது. இதில் சில சில்வண்டுகள் ஏதோ ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் 2009 க்குப் பின் தொடங்கிய முழக்கமது என்று சிறுபிள்ளைத்தனமாக உளறிக்கொட்டிக் கொண்டு இருக்கின்றனர். திராவிடர் இயக்கத்தின் மறுக்க முடியாத வெற்றியை தங்கள் பெயரின் கீழ் போட்டுக்கொள்ளும் கீழ்த்தரமான செப்படி வித்தைகளை நொறுக்க மொழிப்போர் குறித்த வரலாற்று நிகழ்வுகளை போராட்டங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

1938 ஏப்ரல் 21 அப்போது முதலமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரி முதல் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு முடிய பயிலும் மாணவர்கள் இந்தியைக் கட்டயமாகப் படிக்க வேண்டும் என்று ஆணைப் பிறப்பித்தார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, சோமசுந்தர பாரதி ஆகியோர் இந்தித் திணிப்பை எதிர்த்து தொடர் பரப்புரை செய்தனர். “புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல் கிளம்புகிறார்களே! இந்தச் சனியன் இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால், இந்தியைக் கட்டாயமாக்கி இருக்க மாட்டேன்! என்று சட்டமன்றத்தில் கூறிய ராஜகோபாலச்சாரி இறுதியில் 1940 பிப்ரவரி 21 இந்தித் திணிப்பு திட்டத்தை நீக்கி ஆணை பிறப்பித்தார்.

முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போர் வெற்றி நமக்கே. ஆனாலும் இந்தியம் மீண்டும் 1948 ஜூன் 20 இந்தியைத் திணித்தது. 1948 ஜூலை 17 ஆம் நாள், சென்னை செயின்ட் மேரி மண்டபத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பெரியார், அண்ணா, திருவிக ஆகியோர் கலந்து கொண்டு இந்தித் திணிப்பை எதிர்த்து மக்களை திரட்டினர். 1948 செப்டம்பர் இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ் நாடெங்கும் மறியல் நடைபெற்றது. அன்றைய தினத்தில் தான் கலைஞர் அவர்களுக்கும் தயாளு அம்மையாருக்கும் திருமணம் ஏற்பாடாகி இருந்தது. மணப்பந்தலில் இருந்த கலைஞர், இந்தித் திணிப்பு மறியல் முழக்கம் கேட்டதும், அதில் கலந்து கொள்ள சென்று விட்டார். பின் ஒருவாறு திருமண வீட்டார், மறியல் நடைபெற்ற இடத்திற்குச் சென்று கலைஞரை அழைத்து வந்து திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தை விட இந்தித் திணிப்பை எதிர்ப்பது தான் முதல் கடமை என்ற எண்ணம் கொண்ட தலைவர்களை வளர்த்தெடுத்தது திராவிடர் இயக்கம். 1950 ஜூலை 18 கட்டாய இந்தியை ஒழித்து அரசு ஆணை பிறப்பித்தது.

siragu mozhippor3

மீண்டும் 1952 இந்தியை திணித்தபோது, திருச்சி புகைவண்டி நிலையத்தில் இருந்த இந்தி எழுத்துக்களை தந்தை பெரியாரும், ஈரோடு புகைவண்டி நிலையத்தின் பெயர்ப்பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை அறிஞர் அண்ணாவும் அழித்தனர். அதே நாளில் திருச்சி தலைமை அஞ்சலகத்தில் இந்தி எழுத்துக்களை கலைஞர் அழித்தார்.

மீண்டும் 1965 ஜனவரி 26 இந்தியை ஆட்சி மொழியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நடுவண் அரசு எடுத்தது. 1963 ஜூன் 8,9,10 தேதிகளில் கூடிய தி.மு.க பொதுக்குழு, இந்தியை எதிர்த்துப் போராட திட்டங்கள் வகுப்பதற்காக கலைஞர் தலைமையில் போராட்டக்குழு ஒன்றை அமைத்தது. போராட்டக் குழுவின் பரிந்துரைகளுக்கிணங்க ஆகத்து 25 ஆம் நாள் தஞ்சையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலைஞர் வரவேற்புரை ஆற்றினார். அந்த மாநாட்டில் பேசும்போது தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் இப்போது இந்தித் திணிப்பை எதிர்த்து நடக்கும் போராட்டம் நான்காவது போராட்டம் என்று அறிவித்தார்.

1963 அக்டோபர் 13 ஆம் நாள், சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாடு அண்ணா தலைமையில் நடைபெற்றது, பேராசிரியர் மாநாட்டை திறந்து வைத்தார். அரசமைப்பின் 17 வது பிரிவை தீயிட்டுக் கொளுத்த, அண்ணா கட்டளையிட்டு, உரையாற்றுகையில் “உன்னிடத்தில் துப்பாக்கி இருக்கிறது. எங்களிடத்தில் உயிர் இருக்கிறது” என்றார். 1963 நவம்பர் 17 ஆம் நாள், சென்னையில் அரசியல் சட்டத்தின் 17ஆவது, பிரிவை தீயிட்டுக் கொளுத்தச் சென்ற அண்ணா கைது செய்யப்படுகின்றார். டிசம்பர் 19 கலைஞர் கைது செய்யப்படுகின்றார். 1965 ஜனவரி 25 ஆம் நாள் முதல் மார்ச் 15 ஆம் நாள் முடிய 50 நாட்களுக்கு தமிழ்நாடு எரிமலையாக குமுறியது. நடுவண் அரசின் அடக்குமுறை காரணமாகவும், தமிழுக்காக தீக்குளிப்பு போன்றவற்றிக்காகவும் 500 க்கும் மேற்பட்டோர் இறந்து மொழிப்போர் தியாகிகள் ஆகினர்.

62 நாட்கள் கலைஞர் சிறையில் இருந்து ஏப்ரல் 17 ஆம் நாள் விடுவிக்கப்பட்டார். 1968 ஜனவரி 23 ஆம் நாள், தமிழகச் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, தமிழ் நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகள் மட்டுமே கற்பிக்கப்படும், இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் நிறைவேற்றினார்.

மீண்டும் 1986 நவோதய பள்ளிகள் மூலம் இந்தியை நுழைக்க நடுவண் அரசு முயன்றது. தமிழ்நாடு எதிர்த்தது. மீண்டும் 1993 ஆம் ஆண்டு நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சி மூலம் இந்தியை திணிக்கும் முயற்சியைத் தொடங்கியது நடுவண் அரசு . ஜனவரி 25 சென்னை தொலைக்காட்சி நிலையம் முன்பு இன்றைய திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களோடு ஆர்ப்பாட்டம் செய்தார். இப்படி இந்தித் திணிப்பினை எதிர்த்து தொடர்ந்து தமிழ்நாடு போராடியதன் விளைவு தான் இன்றும் புதிய கல்விக்கொள்கை என்ற திட்டத்தின் மூலம் இந்தியை திணிக்கும் நடுவண் அரசை தமிழ்நாடு எதிர்க்கின்றது. நாடாளுமன்றத்தில் தமிழ் வாழ்க என்ற முழக்கம் ஏதோ, நேற்று பெய்த மழையில் இன்றைக்கு முளைத்தது அல்ல, இதற்கு ஒரு வரலாறு உண்டு, அதை நடத்திக் காட்டிய இயக்கம் உண்டு. இன்னும் சொல்லப்போனால் திமுக ஆட்சியில் தான் அரசு அலுவலங்களில் குறிப்பாக உள்ளாட்சி நிர்வாக அலுவலங்களில் “தமிழ் வாழ்க” என்ற வாக்கியம் கொண்ட பலகையை வைக்க உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சி தான் நாடாளுமன்றத்தில் எழுந்த முழக்கங்கள்.

தமிழ் வாழ்க எனின் ஏன் வடநாடும், சிலரும் பதறுகின்றனர் என்ற கேள்விக்கு, தந்தை பெரியார் முதல் இந்தித் திணிப்பின்போது (1938) கூறியது இன்றும் உண்மையாக உள்ளது. “பெரிய வன்முறை எல்லாம் வேண்டாம், தமிழ் வாழ்க என்று சொன்னாலே போதும், ராஜகோபாலாச்சாரி ஆட்சி கைது செய்துவிடும். அவர்களுக்கு தமிழ் வாழ்க என்பதே வன்முறையான வாக்கியம் தான்” என்று சரியாக படம் பிடித்து காட்டியிருக்கின்றார்.

ஆதார நூல்: தி.மு. க தமிழுக்குச் செய்தது என்ன? பேராசிரியர் அ. இராமசாமி


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மொழிப்போர் !!”

அதிகம் படித்தது