மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

2014 – உலக மக்களின் நல்வாழ்வு நிலைமை: காலப் – கருத்தாய்வு அறிக்கை

தேமொழி

Jul 4, 2015

ulaga makkalin 4உலகநாடுகள் தங்கள் குடிமக்களின் நலத்தையும், நாட்டின் உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தை உயர்த்துவதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. ஆட்சியைப் பிடிக்க விரும்பும் தலைவர்களும், மக்கள் எப்பொழுதும் கேட்கவிரும்பும் “உடல்நலம், பொருளாதாரம், மகிழ்ச்சி” (Health, Wealth, and Happiness) ஆகியவற்றை தங்கள் மக்களுக்கு அளிப்பதே தாங்கள் பிறவி எடுத்ததன் நோக்கம் என்பது போன்றுதான் தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசி பதவிக்கு வருகிறார்கள். அவ்வாறு பதவிக்கு வந்தவர்கள் மக்களின் வாழ்வில், நாட்டின் முன்னேற்றத்தில் தங்கள் அக்கறையைக் காட்டுகிறார்களா என்பதைப் பற்றி மக்களின் கருத்துகள் வேறுபடும். உலக மக்களின் நல்வாழ்வு நிலைமையை ஒப்பிட்டு ஆய்வு செய்வதை “காலப் ஆய்வுகுழு”(The Gallup World Poll) பல ஆண்டுகளாக செய்து வருகிறது. சென்ற ஆண்டு முதல் “உலக மக்களின் நல்வாழ்வு நிலைமைக் குறியீடு”(Global Well-Being Index) பற்றிய ஆய்வுக்குழுவும், காலப் ஆய்வு குழுவும் இணைந்து “உலக மக்களின் நல்வாழ்வு நிலைமை: காலப் – கருத்தாய்வு அறிக்கை” (The Gallup-Healthways Global Well-Being Index – The State of Global Well-Being Report) என்ற ஆண்டறிக்கைகளை வெளியிடத் துவங்கின. இந்த ஆண்டும் இந்த ஆய்வுக் குழுக்கள் தயாரித்த, “2014 ஆம் ஆண்டில் உலக மக்களின் நல்வாழ்வு நிலைமை” என்ற ஆய்வறிக்கை இந்த வாரம் (ஜூன் 23, 2015‎) வெளிவந்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற இருபெரும் ஆய்வுக் குழுக்கள் இணைந்து அளிக்கும் உலகமக்களின் நலவாழ்வு அறிக்கை என்பதால் பெரும்பான்மையான மக்களையும், நாட்டுத் தலைவர்களையும், ஊடகங்களையும் இந்த ஆய்வறிக்கை வெளியீடு ஆர்வத்துடன் எதிர்பார்க்க வைத்துள்ளது. சென்ற ஆண்டு வெளியான “உலக மக்களின் நல்வாழ்வு நிலைமை: காலப் – கருத்தாய்வு அறிக்கை” பற்றி சிறகு மின்னிதழில் வெளிவந்த கட்டுரையை இங்கு காணலாம் – http://siragu.com/?p=15120.

அனைத்துலக நாடுகளிலும் …

(1) வாழ்க்கையில் குறிக்கோள்

(2) ஆதரவான சமுக உறவுகள்

(3) பொருளாதார நிலை

(4) சமுதாயத்தில் நிறைவுள்ள வாழ்க்கை அமைப்பு

(5) உடல் நலம்

ஆகிய காரணிகளின் (factors include having purpose in life, having supportive social relationships, being financially secure, being satisfied with the community and being physically healthy) அடிப்படையில் கேள்விகளை முன்வைத்து ஆய்வுக்குழுக்கள் மதிப்பீடு செய்தது. ஒரு நாட்டின் நிலைமையை அளக்கும் மற்ற பிற ஆய்வு அலகுகளைப் போலன்றி இந்த அறிக்கை ஒரு கருத்தாய்வு (well-being survey) அறிக்கை. இந்தக் காரணிகள் மக்களின் கருத்தினைக் கொண்டு நாட்டின் நிலையை அளவிடுகிறது. பொதுவாக ஒரு நாட்டின் முன்னேறிய நிலையைப் பற்றி அந்த நாட்டின் உற்பத்தி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் போன்ற தரவுகளின் அடிப்படையில்தான் மதிப்பிடப்படும். அதற்கு மாறாக இந்த ஆய்வு, மக்கள் இந்தக் காரணிகளைப் பற்றி என்ன கருத்துகள் கொண்டுள்ளார்கள் என்ற கோணத்தில் அவர்கள் மனநிலையை அறிந்து கொள்ள முயன்றுள்ளது. ஒரு நாட்டின் குடிமக்களின் வாழ்க்கைநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிய அவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அதன் மூலம் நாட்டின் நிலைமை பற்றி கணிக்கப்படுகிறது (கருத்தாய்வின் அலகுகள் பற்றியும், அதற்கான கேள்விகள் பற்றியும் விரிவான விளக்கத்தை கட்டுரையின் இறுதியில் காணலாம்). இந்த ஆண்டு 145 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது, ஒரு நாட்டிற்கு குறைந்தது 1,000 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன, உலக அளவில் ஆய்வில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 146,000.

மேற்குறிப்பிட்ட ஐந்து காரணிகளில் மூன்றோ அல்லது அதற்கும் அதிகமான காரணிகளில் மக்கள் மனநிறைவுடன் இருக்கும் நாடுகளை தரவரிசைப் படுத்தியதில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் நாடுகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை மேம்பட்ட நிலையில் இருப்பது தெரிய வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் தொடர்ந்து மோசமான நிலையில் இருப்பதை சென்ற ஆண்டு மற்றும் இந்த ஆண்டின் ஆய்வறிக்கைகளும் உறுதி செய்கிறது.

# உலக நல்வாழ்வின் குறியீடு ஆய்வு மேற்கொண்ட கருத்துக்கணிப்புத் தரவுகளின் படி “பனாமா நாடு” சென்ற ஆண்டும், இந்த ஆண்டும் அதிக மதிப்பெண் பெற்று தரவரிசைப்படி நல்வாழ்வில் முதலிடம் வகிக்கிறது.

# தொடர்ந்து போர்களும் கலவரங்களும் நிறைந்துள்ள ஆப்கானிஸ்தான் சென்ற ஆண்டின் அறிக்கை குறிப்பிட்டது போலவே இந்த ஆண்டும் தரவரிசையில் இறுதி இடத்திலேயே உள்ளது.

# இந்தியாவின் நிலை, நாடுகளின் தரவரிசையில் சற்றொப்ப நடுவில் உள்ளது, 145 நாடுகளின் வரிசையில் 70 வது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா. ஏறத்தாழ சரி பாதி நாடுகள் இந்தியாவை விட மேலான நிலையிலும், அடுத்த பாதி இந்தியாவை விட மோசமான நிலையிலும் உள்ளன. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டும் இந்தியாவின் நிலை இதுவே.

ulaga makkalin 1

2014 – உலக மக்களின் நல்வாழ்வு நிலைமை: காலப் – கருத்தாய்வு அறிக்கை முடிவுகள்:

____________________________________________________

முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகள்:

1. பனாமா — 53.0%

2. காஸ்ட்டா ரீக்கா — 47.6%

3. புரூட்டோ ரீக்கோ — 45.8% *

4. சுவிட்செர்லாந்து — 39.4% *

5. பெலீஸ் — 38.9% *

6. சிலி — 38.7%

7. டென்மார்க் — 37.0%

8. கட்டமேலா — 36.3%

9. ஆஸ்திரியா — 35.6%

9. மெக்சிகோ — 35.6%

____________________________________________________

கடைசி 10 இடங்களைப் பிடித்த நாடுகள்:

136. கானா — 5.6%

137. ஹையிட்டி — 5.3%

138. பெனின் — 4.8%

139. ஐவரி கோஸ்ட் — 4.5%

140. காங்கோ கின்ஷசா — 4.1%

141. துனிசியா — 4.0%

142. டோகோ — 3.9% *

143. காமெரூன் — 3.1%

144. பூட்டான் — 3.0%

145. ஆப்கானிஸ்தான் — 0.0%

* சென்ற ஆண்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படாத நாடுகள்

____________________________________________________

ஆய்வறிக்கை கொடுக்கும் தகவல் உலக நாடுகளை பல பிராந்தியங்களாக, பொதுவாக நாடுகள் அமைந்துள்ள கண்டங்களின் அடிப்படையில் பிரித்து ஒப்பிடுகிறது. சென்ற ஆண்டின் அறிக்கைக்கும், இந்த ஆண்டின் அறிக்கைக்கும் முடிவுகளில் பெரிய மாறுதல்கள் இருக்கிறது என்று சொல்ல வழியில்லை, சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள மேலும் சில நாடுகளின் தாக்கம் தரவரிசைப்படுதுவதில் சிறிது இருந்தாலும் பெரிய மாறுதல்கள் இல்லை என்பதை பனாமா தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதும், ஆப்கானிஸ்தான் தொடர்ந்து இறுதி நிலையில் இருப்பதும் இதை உறுதிப்படுத்துகிறது.

ulaga makkalin 2

# பொதுவான மனநிறைவு அடிப்படையில்:

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணிகளில் மனநிறைவுடன் இருக்கும் நாடுகள் அமெரிக்க கண்டத்திலும் (31%), குறிப்பாக மத்திய அமெரிக்கப் பகுதியிலும் உள்ளன. அடுத்த நிலையில் ஐரோப்பிய நாடுகள் இடம் பிடிக்கின்றன (22%).   ஆப்பிரிக்க நாடுகள் இறுதி இடங்களில் (10%) இருக்கின்றன.

# வாழ்க்கையின் குறிக்கோள் தரும் மனநிறைவு அடிப்படையில்:

அமெரிக்க நாடுகளும், ஐரோப்பிய நாடுகளுமே முதல் இரு இடங்களையும் முறையே பிடிக்கின்றன (36%, 23%). மத்தியக் கிழக்காசிய நாடுகள் (12%) இறுதி நிலையில் உள்ளன.

# ஆதரவான உறவுகள் தரும் மனநிறைவு அடிப்படையில்:

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முன்னணியிலும் (முறையே 42%, 28%), ஆப்பிரிக்க நாடுகள் கடை நிலையிலும் (17%) இடம் பிடிக்கின்றன.

# பொருளாதார நிலை தரும் மனநிறைவின் அடிப்படையில்:

ஐரோப்பிய நாடுகள் (40%) முதன்மை இடங்களையும், தொடர்ந்து அமெரிக்க நாடுகளும் (30%), வழக்கம் போல ஆப்பிரிக்க நாடுகள் (9%) இறுதி நிலையிலும் உள்ளன.

# சமூகக் கட்டமைப்பு தரும் பாதுகாப்பின் மனநிறைவின் அடிப்படையில்:

அமெரிக்க நாடுகள் (35%) முன்னணியிலும், அடுத்து ஐரோப்பிய நாடுகளும் (29%), இறுதியில் ஆப்பிரிக்க நாடுகளும் (20%) இடம் பிடிக்கின்றன.

# உடல்நலம் தரும் மனநிறைவின் அடிப்படையில்:

அமெரிக்க நாடுகள் (33%) முதன்மை நிலையில் இடம் பெற, முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் இறுதி இடத்தையும் (18%) பெறுகின்றன.

இந்த முடிவுகளை பொதுவான பறவைப் பார்வை முறையில் காணும் பொழுது, சென்ற ஆண்டிலும், இந்த ஆண்டின் முடிவுகளிலும் மாற்றம் ஏதும் இல்லை என்பதை இரு ஆண்டுகளின் தரவுகளின் அட்டவணையை ஒப்பிடும் பொழுது காண முடிகிறது.

ulaga makkalin 3

சுருக்கமாக …

# பொதுவாக நல்வாழ்வு நிலை மனநிறைவில் அமெரிக்க நாடுகள் முதன்மையிடம் பெறுகின்றன.

# பொருளாதார மனநிறைவில் மட்டும் ஐரோப்பிய நாடுகள் முதன்மை இடத்தில் இருக்கின்றன.

# பொதுவாக நல்வாழ்வு நிலை மனநிறைவில் மத்தியக் கிழக்காசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் இறுதி இடத்திலேயே இருக்கின்றன.

# உடல்நலம் தரும் மனநிறைவில் முன்னாள் சோவியத் அல்லது கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து இறுதி நிலையில் இருக்கின்றன.

இந்த ஆய்வறிக்கை தெற்காசியப் பிராந்தியம் என தனியாக முடிவுகளைக் கொடுக்கவில்லை என்றாலும், இந்தியாவின் அண்டை நாடுகளில் நிலை என்ன என்று பார்ப்பது இந்தியர்களுக்கு உதவும். தனது அண்டை நாடுகளுடன் ஒப்பிடுவது பிற தெற்காசிய நாடுகளுக்கும் உதவும். எனவே அறிக்கையில் இருந்து மாலத்தீவைத் தவிர்த்த பிறநாடுகளின் நிலைமை அறிய தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் (South Asian Association for Regional Cooperation, SAARC) நாடுகளின் தரவுகள் பிரித்தெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது(மாலத்தீவு இவ்வாண்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை).

சார்க் கூட்டமைப்பு நாடுகளில், ஸ்ரீலங்கா முதன்மை இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. பூட்டானும், ஆப்கானிஸ்தானும் உலக அளவிலான ஒப்பீட்டிலேயே இறுதி இடங்களில்தான் உள்ளன என்பதால் இந்த ஒப்பீட்டிலும் இறுதி நிலையிலேயே இருக்கின்றன.

“US Slips In World Well-Being Rankings; Panama Is No. 1 – News by NPR” என்று பெரிய ஊடகங்களே கூட செய்திகள் வெளியிடுவது சற்று வேடிக்கையாகவும், கொஞ்சம் யோசிக்க வைப்பதாகவும் இருக்கிறது. சென்ற ஆண்டின் ஆய்வறிக்கையின் முக்கியக் கருத்துகளை எடுத்துக் கொள்ளலாமே ஒழிய; அந்த நாட்டிற்குரிய சென்ற ஆண்டின் ஆய்வு முடிவுகளை இந்த ஆண்டு ஆய்வு முடிவுகளுடன் ஒப்பிட்டு தங்கள் நாட்டின் நிலைமை எப்படி இருக்கிறது? மக்களின் நிலை முன்னேறி உள்ளதாகக் கருதுகிறார்களா? அல்லது நிலைமை வீழ்ச்சியடைந்துள்ளதா என்று ஆராயலாமே ஒழிய; பிற ஆண்டுகளின் தர வரிசையுடன் ஒரு நாட்டின் நிலை என்ன என்று ஒப்பிடும் முன், ஒவ்வொரு ஆண்டும் ஆய்வறிக்கையில் ஆய்வு நடத்தப்பட்ட முறையை ஆராயவேண்டியத் தேவை இருக்கிறது.

சென்ற ஆண்டறிக்கையின் தரவரிசை நிலையை அப்படியே இந்த ஆண்டு அறிக்கையுடன் ஒப்பிட்டு ஒரு நாட்டின் நிலையை அது முன்னேறியுள்ளது அல்லது வீழ்ச்சி அடைந்துள்ளது என முடிவெடுப்பது தவறான அணுகுமுறை. ஏனெனில் இதுவரை உலக நாடுகள் அனைத்துமே ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. இது போன்ற கருத்தாய்வை காலப் ஆய்வுக்குழு 2005 ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ160 நாடுகளில் நடத்தி வருகிறது. சென்ற ஆண்டு முதன்முதலாக கருத்தாய்வு அறிக்கை வெளியிட்டபொழுது 135 நாடுகளை மட்டுமே தரவரிசைப் படுத்தியது. இந்த நிலைமைக்கு, கிடைத்த தரவுகளின் நிலையோ அல்லது ஆய்வு நடத்தப்படாத சூழ்நிலையோ கூட காரணமாக இருக்கக் கூடும்.   இந்த ஆண்டு ஆய்வறிக்கையில் இடம் பெற்ற நாடுகள் 145.

இந்த ஆண்டின் அறிக்கையில் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ள புருட்டோ ரிக்கோ, சுவிட்சர்லாந்து, பெலீஸ் ஆகிய நாடுகள் சென்ற ஆண்டு நடத்தப்பட்ட ஆய்விலும் ஆய்வறிக்கையிலும் இடம் பெறவில்லை. இந்த நாடுகளும் இந்த ஆண்டு பட்டியலில் சேர்க்கப்பட்டவுடன், இவற்றின் முடிவுகள் முதல் பத்தில் இருந்த மற்ற சில நாடுகளை வரிசையில் பின் தள்ளிவிட்டன. இதுவரை உலக நாடுகள் அனைத்துமே ஆய்வறிக்கைகளில் இடம் பெறவில்லை என்பதால், ஒவ்வொரு ஆண்டின் தவரிசையுடன் ஒப்பிடும்பொழுது ஆய்வு நடத்தப்பட்ட முறையையும் கவனம் கொள்ளத் தேவை ஏற்படுகிறது.

உலக அளவில், நல்வாழ்வு நிலை தர வரிசையில் முதன்மை இடங்களில், உயர் நிலையில் இருப்பது ஒரு நாட்டின் அமைதியான நிலையான வாழ்க்கை முறைக்கு அறிகுறி. பொதுவாக, சுகாதார வசதிகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு அமைவது, புலம்பெயரத் தேவையில்லாத வாழ்க்கைமுறை, நாட்டின் அரசியல் அமைப்பில் தேர்தல்களில் மக்களுக்கு நம்பகத்தன்மை இருப்பது, அதிக நெருக்கடி மனஅழுத்தம் ஏற்படாத தினசரி வாழ்க்கைமுறை, உணவு மற்றும் வாழுமிடம் பற்றியத் தேவைக்கு அல்லல் படாதிருப்பது, தொண்டு செய்யும் மனப்பான்மை உள்ள மக்களும் சேவை செய்யத் தயாரான நிலையிலும் நிறுவனங்கள் நாட்டில் இருப்பது ஆகியவை மக்களது வாழ்க்கையை வளப்படுத்தும்.

உலக மக்களின் நல்வாழ்வு நிலைமை பற்றிய காலப் கருத்தாய்வு அறிக்கையை வெளியிட்ட ஆய்வுக்குழுவினர், நாடுகள் தங்கள் குடிமக்களின் மனநிலைமையையும், பிற உலகநாடுகளின் மக்கள் அவர்களது வாழ்க்கை நிலையைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள் என்று ஒப்பிட்டு அறிய இந்த ஆய்வறிக்கை உதவும். இந்த அறிக்கையின் முடிவுகளை நாட்டின் தலைவர்களும் மக்களுக்கு உதவும் நிறுவனங்களும் கருத்தில் எடுத்துக்கொண்டு தங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தக்க நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளது. __________________________________________________________________________________

பின்னிணைப்பு:

கருத்தாய்வின் அலகுகளும், அதற்கான கேள்விகளும்

1] குறிக்கோள் அலகுகள்: தினசரி வாழ்வில் பிடித்தமான செயல்களில் ஈடுபடுவது, வாழ்வில் குறிக்கோளை அடைவோம் என்ற முயற்சியுடனும் நம்பிக்கையுடனும் இருப்பது

கேள்விகள்:

# தினசரி வாழ்வில் பிடித்தமான செயல்களில் ஈடுபடுகிறீர்களா

# தினமும் ஏதேனும் ஆர்வம் தருவதை கற்றுக்கொள்ளவோ செய்வோ உங்களுக்குவாய்ப்புள்ளதா

***

[2] சமூக உறவுகள் அலகுகள்: ஆதரவு தரும் உறவுகள் இருப்பது, அன்பும் பாசமுள்ளவர்களுடன் வாழ்வது

கேள்விகள்:

# உங்கள் வாழ்வில் யாரேனும் ஒருவர் நீங்கள் உடல்நலமுடன் வாழ எப்பொழுதும் உங்களுக்கு ஊக்கமளிக்கிறார்களா

# உங்கள் நண்பர்களும் குடும்பத்தினரும் தினமும் உங்கள் வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்ளச் செய்கிறார்களா

***

[3] பொருளாதார அலகுகள்: பொருளாதார நிலைமையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் செல்வம் தரும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகவும்,   இல்லாமை தரும் மன உளைச்சல் குறைவாகவும் இருப்பது

கேள்விகள்:

# நீங்கள் விரும்புவதை செய்வதற்கு தேவையான அளவு பணவசதி உள்ளதா

# கடந்த ஏழு நாட்களில் எப்பொழுதாவது பணப்பற்றாகுறையால் கவலை அடைந்தீர்களா

***

[4] சமுதாயக் கட்டமைப்பு அலகுகள்: பிடித்தமான வசிக்கும் இடமும் அங்கு பாதுகாப்பு பற்றிய அச்சுறுத்தல் இல்லாமை, தங்களுடைய சமூகம் பற்றிய பெருமித உணர்வு கொண்டிருப்பது

கேள்விகள்:

# நீங்கள் வாழுமிடம் சரியான இடமா, அது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா

# கடந்த 12 மாதங்களில் நீங்கள் வாழும் இடத்தை மேம்படுத்த முயற்சி எடுத்து அதற்காக பாராட்டு பெற்றீர்களா

***

[5] உடல்நல அலகுகள்: நல்ல உடல் நலமும், தினசரி நடவடிக்கைகளுக்குத் தேவையான ஆற்றலும் பெற்றிருப்பது

கேள்விகள்:

# கடந்த ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளும் நீங்கள் சுறுசுறுப்பாகவும், ஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ததாக உணர்ந்தீர்களா

# உங்கள் உடல்நலத்தில் எந்தக் குறையும் இல்லாததாக இருந்தீர்களா ***

__________________________________________________________________________________

மேலும் தகவலுக்கு:

The Gallup-Healthways Global Well-Being Index Reports

http://www.well-beingindex.com/

“2014 Country Well-Being Rankings Report”

http://www.well-beingindex.com/2014-global-report

Americas Lead Highs, Sub-Saharan Africa Lows in Well-Being

http://www.well-beingindex.com/americas-lead-highs-sub-saharan-africa-lows-in-well-being

Methodology: How Does the Gallup-Healthways Well-Being Index Work?

Measures Purpose, Social, Financial, Community, and Physical Well-Being Worldwide

http://www.gallup.com/175196/gallup-healthways-index-methodology.aspx

U.S. Slips In World Well-Being Rankings; Panama Is No. 1 -

http://www.npr.org/sections/thetwo-way/2015/06/24/417171484/u-s-slips-in-world-well-being-rankings-panama-is-no-1

__________________________________________________________________________________


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “2014 – உலக மக்களின் நல்வாழ்வு நிலைமை: காலப் – கருத்தாய்வு அறிக்கை”

அதிகம் படித்தது