438 நாட்கள்: கடலில் தனித்துவிடப்பட்ட திரைமீளரின் கதை : 3
தேமொழிDec 7, 2015
காற்றைக்கிழித்துக் கொண்டு கடல் நீரோட்டத்துடன் மென்மையாக அவர் படகு மிதந்துகொண்டிருந்தபொழுது, திடீரென வானில் கடலோரத்தில் வாழும் பறவைகள் கூட்டம் தென்பட்டது. ஆல்வரெங்கா உற்றுப்பார்த்தார். அவரது கழுத்துத் தசைகள் இறுகின. வெப்பமண்டலத் தீவு ஒன்று மூடுபனியில் இருந்து வெளிப்பட்டது. பசிபிக் கடலின் பவளப்பாறைத் திட்டுகள், சிறிய மலையைச் சூழ்ந்த பசுமையான நிலம், அதைச் சுற்றி நீலநிற நீர் சூழ்ந்து பலவண்ணக் காட்சியாகத் தோன்றியது.
பிரமை இவ்வளவு நேரம் நீடிக்காதே, எனது வேண்டுதல்களுக்குப் பதில் கிடைத்துவிட்டதா? என்று எண்ணிய ஆல்வரெங்காவின் மனதில் வேகமாகப் பல மோசமான கற்பனைகளும் விரிந்தன. அவர் கரையில் இருந்து விலகிச் சென்றுவிடக்கூடும், கடலை நோக்கிப் பின்னோக்கி போய்விடவும் கூடும்… முன்னர் அவ்வாறுதானே நடந்தது, கரை ஒதுங்கும் நேரத்தில் மீண்டும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். அந்தத் தீவையே கூர்ந்து கவனித்து கடற்கரை ஓரம் தோன்றுவதை வைத்து மேலும் அதைப்பற்றிய விவரங்கள் அறிய முயன்றார். அது ஒரு குட்டித்தீவு. அவர் கணிப்பின்படி ஒரு கால்பந்தாட்ட மைதானத்தைவிடப் பெரிதானது அல்ல. அது இயற்கையுடன் ஒன்றி சாலைகளோ, ஊர்திகளோ, வீடுகளோ இல்லாமல் இருந்தது.
கத்தியைக்கொண்டு படகுடன் இணைத்திருந்த மிதவையின் நைந்து போனக் கயிற்றைத் துண்டித்துவிட்டார். அது மிகவும் துணிச்சலான ஒரு முடிவு. பரந்து விரிந்த கடலில், தேவைக்கு நங்கூரம் இல்லாத பொழுது ஒரு சாதாரண புயல் கூட அவரது படகை உடனேக் கவிழ்த்துவிடக்கூடும். ஆனால் ஆல்வரெங்காவினால் கரையைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அதனால் படகை நிலைப்படுத்துவதைவிட வேகம் மிக முக்கியமானது என்ற முடிவின் மீது பந்தயம் கட்டினார்.
ஒரு மணி நேரத்தில் தீவின் கரையோரத்திற்கு படகு ஒதுங்கியது. கரையில் இருந்து முப்பது அடி தொலைவில் இருக்கும் பொழுது நீரில் குதித்து கரையை நோக்கி ஆமை போல வேகமாக நீந்தினார். பெரிய அலை ஒன்று அவரை உயரத் தூக்கி மிதக்கும் கட்டையை கரையில் வீசுவது போல வீசியது. அலை பின்வாங்கிய பொழுது ஆல்வரெங்கா மணலில் முகம் புதைத்து குப்புறக் கிடந்தார். புதையலை அள்ளுவது போல கைநிறைய மணலை அள்ளிக் கொண்டார்.
மணலில் கம்பளமாக விரித்துக் கிடந்த ஊறிய தென்னை மட்டைகளிலும், கூரிய தேங்காய் ஓட்டுகளின் மேலும், சுவையான பூக்களின் மேலும் கொலைப்பட்டினியாக, ஆடையின்றி இருந்த ஆல்வரெங்கா தவழ்ந்து சென்றார். அவரால் ஓரிரு வினாடிகளுக்கு மேல் நிற்க முடியவில்லை. அவரது உடல் முழுவதும் உருக்குலைந்து ஒல்லியாக ஒரு மெல்லிய மரப்பலகை போல மாறியிருந்தது. அவர் உடலில் மிச்சமிருந்தது வயிறும் குடலும், எலும்பும் அதன் மேல் போர்த்திய தோலும் மட்டுமே. கைகளில் தசையில்லை, கால்கள் சுருங்கிப் போய் எலும்பும் தோலுமாக பார்க்க அசிங்கமாக இருந்தது.
ஆல்வரெங்காவிற்கு தான் கரை ஒதுங்கிய இடம் எதுவென்று தெரியாவிட்டாலும், அவர் கரையேறிய இடம் ‘ஏபான் ஆட்டல்’ (Ebon Atoll) தீவுக்கூட்டத்தின் ஒரு குட்டித்தீவான ‘டைல் ஐலெட்’ (Tile Islet) என்பதாகும். இது ‘ரிபப்ளிக் ஆஃப் தி மார்ஷல் ஐலண்ட்ஸ்’ (Republic of the Marshall Islands) க்கு உரிய 1,156 தீவுக்கூட்டத்தின் தென் முனையில் உலகின் பிற இடங்களுடன் தொடர்பற்ற தொலைவில் இருந்தது. ஏபான் தீவில் இருந்து ஒரு படகில் நிலத்தைத்தேடிச் செல்பவர்கள் 4,000 மைல்கள் வடகிழக்கில் பயணம் செய்து அலாஸ்க்காவையோ, அல்லது 2,500 தென்மேற்காகப் பயணம் செய்து பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா (Brisbane, Australia)வையோ அடைய வேண்டியிருக்கும். ஆல்வரெங்கா ஏபான் தீவை தவறவிட்டிருந்தால் ஆஸ்திரேலியாவின் வடபகுதி நோக்கி மிதந்து சென்று ‘பப்புவா நியூ கினி’ (Papua New Guinea)யை அடைந்திருப்பார். ஆனால் மேலும் 3,000 மைல்கள் பயணித்து ‘பிலிப்பைன்ஸ்’ (Philippines)ன் கிழக்குக் கடற்கரையையும் அடைய வாய்ப்பிருந்திருக்கும்.
அவர் புதர்களின் ஊடே தடுமாறி நடந்த பொழுது, திடீரென ஒரு சிறுவாய்க்கால் தோன்றியது. அக்கரையில் ‘எமி லிபாக்மேட்டோ’ (Emi Libokmeto)வும் அவரது கணவர் ‘ரஸ்ஸல் லெய்கிட்டிரிக்’ (Russel Laikidrik)கும் வசிக்கும் கடற்கரை வீடு இருந்தது. எமி அத்தீவில் காய்ந்த தேங்காய்களின் மட்டைகளை உறிக்கும் தொழில் செய்பவர். எமி ஏறிட்டுப் பார்த்த பொழுது புதியவர் ஒருவர் அங்கு நிற்பதைக் கண்டார். பார்ப்பதற்கு சக்தியற்றவராக தோன்றும், பசியுடன் கூக்குரலிடும் ஆல்வரெங்காவை அவர் பார்த்த பொழுது, இந்த மனிதர் இங்கு நீந்தி வந்திருந்தால், நிச்சயம் ஏதேனும் ஒரு கப்பலில் இருந்து தவறி விழுந்திருப்பார் என்றுதான் முதலில் நினைத்தார்.
எச்சரிக்கையுடன் உத்தேசமாக ஒருவரை ஒருவர் எதிர் கொண்ட பிறகு எமியும் ரஸ்ஸலும் அவரை தங்கள் வீட்டிற்கு வரவேற்றனர். ஆல்வரெங்கா ஒரு படகையும், ஒரு மனிதனையும் ஒரு கடற்கரையையும் வரைந்து காட்டினார். பிறகு அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டார். எப்படி அவரால் 7,000 மைல்கள் கடலில் மிதந்து வந்ததைக் குச்சி மனிதர்கள் படம் வரைந்து விளக்க முடியும்? அவரது பொறுமை குறைந்தது, அவர்களிடம் மருந்து கேட்டார், மருத்துவரிடம் போக வேண்டும் என்றார். எல்லாவற்றுக்கும் எமியும் ரஸ்ஸலும் புன்னகையுடனும் அன்புடனும் தலையசைத்தார்கள். ஒருவருக்கொருவர் அடுத்தவர் பேசும் மொழி புரியாவிட்டாலும் ஆல்வரெங்கா பேசிக்கொண்டே இருந்தார். அவர் அதிகம் பேசப் பேச எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். எமியும் ரஸ்ஸலும் ஏன் சிரித்தார்கள் என்பது தெரியாவிட்டாலும், ஆல்வரெங்கா தான் உயிர் பிழைத்ததற்காக சிரித்தார்.
கடலில் இருந்து பிழைத்து வந்தவரை நன்கு உபசரித்த பிறகு, மறுநாள் காலை ரஸ்ஸல் தனது படகில் அந்தக் காயலைக் கடந்து துறைமுகமும் பெரிய நகருமான ஏபான் நகரின் நகராட்சி தலைவரைச் சந்தித்து உதவிக் கேட்கச் சென்றார். சிலமணி நேரங்களில் காவல் துறை, மருத்துவத் தாதியர் என ஒரு குழு சேர்ந்து ஆல்வரெங்காவை மீட்க வந்தார்கள். ஆல்வரெங்காவை படகில் ஏற்றி தங்களுடன் ஏபானுக்கு அழைத்துப் போக அவரை சம்மதிக்க வைக்க வேண்டியிருந்தது. காட்டுமிராண்டி தோற்றத்துடன் இருந்த ஆல்வரெங்காவிற்கு சிகிச்சை அளித்தபடி அவரிடம் மேலும் அவர் பயணம் பற்றிய தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்த பொழுது, நார்வேயில் இருந்து அங்கு வந்திருந்த பயணியான மானிடவியலாளர் ஒருவர் ‘மார்ஷல் ஐலண்ட்ஸ் ஜர்னல்’ பத்திரிக்கைக்குச் செய்தி கொடுத்தார்.
ஏ எஃப் பி (Agence France-Presse – AFP) செய்தி நிறுவனத்தின் ‘கிஃப் ஜான்சன்’ (Giff Johnson) என்பவர் எழுதிய ஆல்வரெங்கா தப்பிப்பிழைத்த விவரங்களைக் கொண்ட முதல் சிறப்புச்செய்தி ஜனவரி 31 அன்று வெளியானது. ஹவாய், லாஸ் ஏஞ்சலஸ், ஆஸ்திரேலியாவில் இருந்து பல பத்திரிக்கை நிருபர்கள் அந்தத் தீவிற்கு வந்து, தப்பிப்பிழைத்ததாகக் கூறப்படும் ஆல்வரெங்காவை பேட்டி எடுக்கக் குழுமினர். பத்திரிக்கையாளர்கள் பலரும் ஆல்வரெங்காவைப் பற்றிய சுவையான தகவல்களைச் சேகரிக்க முயன்ற பொழுது, ஒரே ஒரு தொலைபேசி இணைப்பு மட்டுமே இருந்த அந்தக் குட்டித்தீவின் தொலைபேசி ஒரு போர்க்களமானது. ஆல்வரெங்கா கூறியவை யாவும்; தொடக்கத்தில் அவர் தொலைந்ததாகக் கூறப்பட்ட அறிக்கை, கடலில் நடத்திய மீட்புப் பணி தேடல் அறிக்கை, கடல்நீரோட்டத்தின் திசையில் அவர் பயணித்திருப்பது, அவர் மிகவும் சக்தியற்ற நிலையில் இருப்பது போன்ற உறுதியான சான்றுகளின் காரணமாக அவர் கூறிய கதை நம்பக்கூடியதாகவே இருந்தது.
ஆனாலும் இணையத்திலும், உலகம் முழுவதும் உள்ள பத்திரிக்கை அலுவலகங்களிலும் விவாதங்கள் வெடித்தன. ‘எர்னஸ்ட் ஷாக்கெல்டன்’ (Ernest Shackleton) என்ற கடலில் தப்பிப் பிழைத்த கடலோடியின் தீரச் செயலுக்குப் பிறகு ஆல்வரெங்காவின் பயணம்தான் குறிப்பிடத்தக்கதா, அல்லது ‘ஹிட்லர் டைரி” என்ற மோசடியைப் போல உலக மகா மோசடியா என்ற கேள்விகள் தொடங்கின. அதிகாரிகள் ஆல்வரெங்காவின் முதலாளியை விசாரித்ததில், நவம்பர் 17, 2012 அன்று துறைமுகத்தில் இருந்து பயணத்தைத் துவக்கி தொலைந்து போன படகின் பதிவு எண்ணும், ஆல்வரெங்கா கரையொதுங்கிய படகின் பதிவு எண்ணும் ஒன்றே என்று உறுதி செய்தார். கார்டியன் பத்திரிக்கையின் செய்தியாளர் ‘ஜோ டக்மேன்’ (Jo Tuckman) மெக்சிகோவின் கடலோர மீட்புப் பணிக் குழுவினரிடம் விசாரித்த பொழுது, அதன் தலைமை அதிகாரி ‘ஹெய்மி மார்க்குவின்’ (Jaime Marroquín) ஆல்வரெங்காவையும் கோர்டபாவையும் காப்பாற்ற எடுத்த முயற்சியையும், பலனற்றுப் போன மீட்புப்பணிதேடலையும் பற்றி விவரமாக எடுத்துரைத்தார். காற்று மிகப் பலமாக இருந்தது, இருநாட்களுக்குப் பிறகு தெளிவாகக் காணமுடியாத அளவிற்கு ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் தேடும் விமானங்களையும் நிறுத்த வேண்டியதாயிற்று என்று விவரித்தார்.
மெக்சிகோவின் கடலோரப் பகுதி மக்கள் விசாரிக்கப்பட்டார்கள், மருத்துவ அறிக்கைகளும், கடலின் வரைபடங்களும் ஆராயப்பட்டன. கடலில் இருந்து மீண்டவர்களிடமும், அமெரிக்கக் கடலோரக் காவற்படையினரிடமும், கடற்படை வீரர்களிடமும் (US Coast Guard and The Navy Seals), பசிபிக் கடலின் குறுக்காகப் பயணம் மேற்கொண்டு தீரச்செயல் செய்த ‘ஐவான் மெக்ஃபெடியன்’ மற்றும் ‘ஜேசன் லூயிஸ்’ (Ivan MacFadyen and Jason Lewis) ஆகியோரிடமும் கடல்பயணம் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அப்பகுதியை நன்கறிந்த கடல் ஆய்வாளர்களிடமும், வணிகமீனவர்களிடமும் இருந்து செய்திகள் திரட்டப்பட்டன. அனைவரும் ஆல்வரெங்கா தனது கடல் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் விவரங்களில் இருந்து அவர் கூறுவது உண்மையாக இருக்கவே வாய்ப்புள்ளது என்றும், அவரது கடல் அனுபவம் அவர்கள் எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுடன் ஒத்திருப்பதாகவும் உறுதி செய்தார்கள். ஆல்வரெங்கா மார்ஷல் தீவுகளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபொழுது அவரைச் சந்தித்து பேசிய அமெரிக்க தூதரக அதிகாரி அவரது காயங்களையும் அவரது நிலையையும் பார்த்தார். அவரது நைந்து போன உடலில் இருந்த பல காயங்களின் வடுக்கள் அவர் கடலில் வெகுநாட்கள் தத்தளித்ததைக் காட்டுவதாகவே கூறினார்.
இதற்கிடையில், அங்கே மார்ஷல் தீவுகளில் ஆல்வரெங்காவின் உடல்நிலை தொடர்ந்து மிகவும் மோசமடைந்தது. அவரது கால்களும் பாதங்களும் வீங்கிப் போயின. அவரது திசுக்கள் நீரின்றி பலநாட்களாக வறண்டு போயிருந்ததால், கிடைக்கும் நீரை எல்லாம் அவை இப்பொழுது அப்படியே உறிஞ்சுவதால் இவ்வாறு வீங்கலாம் என அவர்கள் சந்தேகித்தனர். ஆனால் 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு ஆல்வரெங்காவின் உடல்நிலை தேவையான அளவு தேறி நிலையாகிவிட்டது என்று முடிவு செய்து எல் சல்வடோரில் உள்ள அவரது குடும்பத்தை சந்திக்கும் பயணத்தை மேற்கொள்ள அனுமதித்தார்கள்.
ஆல்வரெங்காவிற்கு இரத்த சோகை அதிகமாக இருந்தது. பச்சையாக(சமைக்காத) ஆமைகளையும், பறவைகளையும் அவர் உண்டதால் அவரது ஈரல்களில் ஒட்டுண்ணிகள் தொற்றியிருப்பது இதற்குக் காரணமாக இருக்கும் என மருத்துவர்கள் எண்ணினார்கள். ஆல்வரெங்கா அந்த ஒட்டுண்ணிகள் அப்படியே மேலேறி தனது மூளையைத் தாக்கக் கூடும் என நம்பினார். ஆழ்ந்து தூங்க முடியாமல் கோர்டபா இறந்து போன நினைவுகளால் அவர் அலைக்கழிக்கப்பட்டார். தனியாக ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததை உற்சாகமாகக் கொண்டாட இயலவில்லை. உடல்நிலை தேறியதும், தான் ஒப்பந்தம் செய்து கொண்டபடி கோர்டபாவிற்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற மெக்சிகோவிற்குப் பயணமானார். கோர்டபாவின் அம்மா ‘ஆநா ரோசா’ (Ana Rosa) அவர்களிடம் கோர்டபா சொல்லச் சொன்ன செய்தியைச் சொன்னார். அந்த அம்மையாருடன் இரண்டு மணிநேரம் செலவிட்டு அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னார்.
நிலத்திற்குத் திரும்பியும் அவரது வாழ்வில் நிம்மதியில்லை. பல மாதங்களுக்கு ஆல்வரெங்கா அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. கடல்மீது மட்டுமல்ல நீரைப் பார்ப்பதற்கே அவருக்கு உள்ளூர பயம் தோன்றியது. விளக்குகளை எரியவிட்டே தூங்கினார், தனிமையைத் தவிர்க்க எப்பொழுதும் அவருக்கு ஒரு துணை தேவையாக இருந்தது. கரைக்குத் திரும்பிய உடனேயே, உலகம் முழுவதுமிலிருந்து வரும் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஒரு வழக்கறிஞரைத் தனது பிரதிநிதியாக நியமித்தார். பிறகு சிலநாட்களில் அவரை நீக்கிவிட்டு வேறொருவரைத் தேர்ந்தெடுத்தார். நீக்கப்பட்ட வழக்கறிஞர் ஆல்வரெங்கா ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகக் கூறி, மில்லியன் டாலருக்கு இழப்பீடு கேட்டு அவர் மீது வழக்கொன்றைப் பதிவு செய்தார்.
ஓராண்டுக்குப் பிறகு, அவரது குழப்பங்கள் ஓரளவு குறைந்த பிறகே வரைபடத்தில் தான் எவ்வளவு தொலைவு பசிபிக் கடலில் மிதந்து சென்றோம் என்று அவரால் பார்க்க முடிந்தது, தான் செய்த அசாதாரணக் கடல்பயணத்தைப் பற்றி வியந்து போகவும் முடிந்தது. மனநிலையைப் பாதிக்கும் விளிம்பு வாழ்க்கையில் அவர் 438 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். பசி, தாகம், தனிமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டாலும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்கு மட்டும் அவர் போகவில்லை. ஆல்வரெங்கா அனைவருக்கும் சொல்ல விரும்புவது”உங்களுக்கு வாழ்வதற்கு ஒருமுறைதான் வாய்ப்பு கிடைத்துள்ளது – அதனால் அதனைப் போற்றுங்கள்”.
(ஜானதன் ஃபிராங்க்ளின் கட்டுரையின் மொழிபெயர்ப்பு)
தேமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “438 நாட்கள்: கடலில் தனித்துவிடப்பட்ட திரைமீளரின் கதை : 3”