மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

497 – சட்டப்பிரிவு நீக்கமும் அதன் சமுதாய தாக்கமும்

வெங்கட் நடராஜன்

Nov 3, 2018

siragu-section-497

சுமார் 150 ஆண்டுகள் பழமையான 497 சட்டப்பிரிவை நீக்கி சமீபத்தில் உத்தரவிட்டது இந்திய உச்ச நீதிமன்றம். இந்த சட்டத்தின் பயன்பாடு மற்றும் இதன் நீக்கத்தின் விளைப்பாடு பற்றி ஓர் அலசல்..

497 – சட்டப்பிரிவு

இந்த பிரிவின்படி திருமணமான ஒரு ஆண் வேறொருவர் மனைவியுடன் உறவில் ஈடுபட்டால் குற்றம். இதில் ஆண் மட்டுமே குற்றவாளி. அந்தப் பெண்ணின் கணவர் சம்மதத்துடன் நடந்தால் அது குற்றம் இல்லை. இந்த சூழலில் பெண் ஒரு போக பொருளாக பாவிக்கப்படுகிறாள். அதேபோல் திருமணமாகாத பெண்ணுடன் நடந்தால் அதுவும் குற்றம் இல்லை. எந்த சூழலிலும் பெண் குற்றவாளியாக கருத்தப்படமாட்டாள்,  அவளுக்கு எந்த தண்டனையும் கிடையாது. அதேநேரத்தில் அவள் கணவனை எதிர்த்து வழக்கு தொடுக்கவும் முடியாது. இந்த காலகட்டத்தில் இது நிச்சயம் குறைபாடுள்ள ஒரு சட்டப்பிரிவு என்பதில் சந்தேகம் இல்லை.

திருமண உறவைக் காத்ததா?

இந்த சட்டம் திருமண உறவைக் கட்டிக்காக்க உதவியதாக சிலர் வாதிடுகிறார்கள். ஆண் ஆதிக்கம் கொண்ட அந்த காலங்களில் உதவியாக இருந்திருக்கலாம். ஆனால் ஆணுக்கு பெண் நிகர் என்று சொல்லும் இக்காலத்தில் அவ்வளவு உபயோகமாக இருப்பதாகத் தெரியவில்லை. அதுமட்டும் இல்லாமல் பெண் குற்றவாளியாகவே சேர்க்கப்படாததால், ஒருசிலப் பெண்கள் இதைத் தவறாகப் பயன்படுத்தி ஆண்களையும் அவர்கள் திருமணத்தையும் பாதிப்புக்குள்ளாக்க முடியும் என்ற வாதத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

இந்த சட்டம் நடைமுறையில் இருந்தபோதும், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் திருமண முறிவு சுமார் 30 விழுக்காடு அதிகரித்துள்ளதே அது ஏன்?

அதிகரிக்கும் விவாகரத்து

மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு போன்ற மாநகரங்களில் 2 அல்லது 3 மடங்கு விவாகரத்து அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் பெண்களின் கல்வியறிவு, பொருளீட்டும் திறன், ஆணுக்கு நிகர் என்ற நிலைப்பாடு போன்றவைகளே. இக்காரணிகள் பெண்ணை தன் சொந்த காலில் நிற்க வைத்தன. இதோடு சேர்ந்து தான் எனும் ஈகோ அதிகரிக்கும்போது மணமுறிவு வாய்ப்பு அதிகமாகிறது. அது மட்டுமல்லாமல் அதிகரித்துவரும் மேலைநாட்டு கலாச்சார மோகமும் இதற்கு உறுதுணையாக அமைகிறது. இப்படி வேகமாக வளரும் இந்திய பொருளாதாரமும் மோகமாக ஈர்க்கும் மேற்கத்திய கலாச்சாரமும் ஏற்படுத்தும் திருமண பாதிப்பை 497 என்கிற சட்டப்பிரிவினால் தடுக்க இயலாமல் போனது என்பதே உண்மை.

497 – நீக்கத்தின் பலன்கள்

இத்தீர்ப்பின் மூலம் பெண் ஆணுக்கு சொந்தமான ஒரு சொத்து அல்ல, அவளும் ஆணுக்கு சமமாக மதிக்கப்படவேண்டியவள் என்ற சமூக அந்தஸ்துநிலை நாட்டப்பட்டுள்ளது. ஒரு கணவன் தன் மனைவியை விபச்சாரம் போல் தள்ளிவிட முடியாதுஎன்றும் உறுதிப்படுத்தியுள்ளது.

அதேசமயம் திருமணத்தை மீறிய உறவு யாருக்காவது பாதிப்பை ஏற்படுத்தினால், அதைக் காரணம் காட்டி விவாகரத்து பெறலாம். தற்கொலை வரை சென்றால் அது குற்றமாகவும் கருதப்படும்.

சட்டம் என்றால் என்ன?

பொதுவாக சட்டம் என்பது சமூகம் இயல்பாக இயங்க நீதிமன்றம் மற்றும் அரசினால் இயற்றப்படும் ஒரு விதிமுறை. இது முடிந்தவரை தனிமனித உரிமை மற்றும் சுதந்திரத்தை பாதிக்காத வகையில் இருக்கவேண்டும். சில சமயங்களில் அது எளிமையான காரியம் அன்று. ஏனெனில் ஒரு சட்டத்தினால் அனைவரையும் திருப்திப்படுத்துவதென்பது கடினம். எனவே அது ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சியை கருத்தில் கொண்டு இயற்றப்படவேண்டும்.

மேலும் சட்டம் என்பது மனிதனால் வகுக்கப்படும் விதிமுறைகள். அது மனிதனின் வாழ்க்கை முறை மாறும்போது காலத்திற்கேற்ப மாற்றியமைக்கப்படுமென்பது இன்றியமையாததாகிறது.

கலாச்சாரம்

சட்டம் ஊரைச் சுற்றி அமைக்கப்படும் ஒரு வேலி போல், அதை மீறினால் குற்றம். கலாச்சாரம் நம் வீட்டைச் சுற்றி அமைக்கப்படும் வேலி போல், அதை மீறினால் தீங்கு. எனவே சட்டம் என்ற வரையறைக்குள் அவரவர் கலாச்சாரம் மற்றும் குடும்ப வழக்கத்திற்கேற்ப நல்வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும்.

கலாச்சாரம் என்ற வேலி உடையும்போது சட்டம் அதை வேடிக்கை மட்டும் பார்க்குமே தவிர வேறுஒன்றும் செய்யாது என்பதை நாம் உணரவேண்டும். பன்னாட்டு மயமாக்கல், ஊடகங்களின் தாக்குதல், சமூக வலைத்தளங்களின் பாதிப்பு போன்றவைகள் ஏற்படுத்தும் கலாச்சார சீரழிவே திருமண முறிவை அதிகரித்ததே தவிர, 497 பிரிவை நீக்குவதால் அதிகரிக்கப்போவது இல்லை.

மேலும் 497 விதியின் படி, ஒரு பெண் தவறு செய்தால் அது குற்றமே இல்லை. நம் இந்திய பெண்கள் கலாச்சாரம் மிக்கவர்கள் எனவே அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்று வாதிடலாம். அதே கலாச்சாரத்தை ஆண்களும் கேடயமாகப் பயன்படுத்தி ஒரு சிறப்பான திருமண வாழ்க்கையை ஏன் வாழக்கூடாது? பெண்களை மட்டுமே வைத்து நம் கலாச்சாரத்தை காப்பதென்பது அத்துணை பெருமையன்று.

நெறிமுறை

சட்டம் ஒரு செயல் குற்றமா இல்லையா என்பதை மட்டுமே முடிவு செய்யும். ஆனால் அது நன்மையை தீமையா என்பதை முடிவு செய்வது சமூக நெறிமுறை. உதாரணமாக புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் விபச்சாரம் கூட சட்டத்தின்முன் குற்றம் இல்லை தான். ஆனால் அது தீமை பயக்கும் செயல் அதைத் தவிர்க்கவேண்டும் என்பது நம் முன்னோர்கள் வகுத்த நெறி. சட்டம் என்பது ஒரு எல்லைக்கோடு,நெறிமுறை என்பது ஒரு சமூக கோட்பாடு. இரண்டையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. இது தெளிந்தால் நாம் நமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ளலாம்.

சிந்தித்து செயல்படுங்கள்

மது அருந்துவது சட்டப்படி குற்றம் இல்லை. ஆனால் அதனால் நன்மையா தீமையா என்பதை தனிமனித சிந்தனைக்கே விட்டுவிடுகிறது சட்டம். புகைப்பிடித்தல் குற்றம் இல்லை, அதற்காக புகைப்பிடித்தே ஆகவேண்டும் என்று சட்டம் நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை. இதுதான் சட்டம் நமக்களித்துள்ள சுதந்திரம்.எனவே சிந்தித்து செயல்படுங்கள்.

அதேபோல தான் 497 பிரிவு நீக்கமும், கணவன் மனைவி அறநெறியோடு சேர்ந்து வாழ்வதை எந்த சட்டமும் எதிர்க்கவில்லை என்பதை இங்கு ஆழமாக பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன்.

சட்டம் போட்டுத்தான் நம் மண வாழ்க்கை காக்கப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் நாம் நமது கலாச்சாரம் மற்றும் அறநெறியை இழந்து விட்டோம் என்று தானே அர்த்தம். மேலும் சட்டத்தின் உந்துதலால் மட்டுமே பயணிக்கும் திருமணங்கள் அவ்வளவு சிறப்பாக அமையாது.

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது”


வெங்கட் நடராஜன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “497 – சட்டப்பிரிவு நீக்கமும் அதன் சமுதாய தாக்கமும்”

அதிகம் படித்தது