மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது எக்காலத்திற்கும் ஏற்கக்கூடியதல்ல!

சுசிலா

Feb 23, 2019

siragu 5 and 8 class1
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, திடீரென்று தமிழக பள்ளிக் கல்வித்துறையிடமிருந்து சுற்றறிக்கை ஒன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டது. அதிலுள்ள அதிர்ச்சியான செய்தி என்னவென்றால், 5 மற்றும் 8 ஆகிய இரு வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்தொகை கட்ட தேவையில்லை என்றும், அது மட்டுமல்லாமல் வரும் இந்த 2018-2019 ஆம் ஆண்டே செயல்படுத்தப்படுமென்றும் கூறப்பட்டிருந்தது.

இதனை கேள்விப்பட்ட ஆசிரியர்களும், பெற்றோர்களும், பொது மக்களும் மிகவும் வியப்புற்று பதட்டத்தில் இருந்தனர். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களே இதை ஏற்கவில்லை. பெற்றோர்கள் கலக்கத்தில் இருந்தனர். பொதுமக்களும் சமூகஊடகங்களில் தங்கள் எதிர்கருத்துகளை பரவலாக பதிவு செய்து வந்தனர். அதன்பிறகு, நேற்று மாலை, தமிழக அரசின் கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள், இந்த கல்வி ஆண்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடக்காது என்று தற்காலிமாக சொல்லியிருக்கிறார்.

இரண்டாவதாக இந்தத் தேர்வு நடக்கும் என்ற அறிவிப்பு கூட, சட்டப்பேரவையிலோ, அமைச்சரோ அறிவிக்காமல், எதிர்கட்சிகளை ஆலோசிக்காமல், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சார்பில் அனுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதெல்லாம் எப்படி ஒரு அரசாங்கத்தால் அலட்சியப்படுத்தப்படுகிறது? மக்களுக்கு, இந்த அரசின் மீது அய்யம் ஏற்படாதா? இப்படிப்பட்ட ஒரு அபாயகரமான அறிவிப்பை, சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் கவனத்திற்கு வராமல் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதுவும், அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது என்றால், இந்த அரசின் பொறுப்பற்றத் தன்மையைத்தான் இந்த செயல் நிரூபிக்கிறது!.

கடந்த பத்து ஆண்டுகளாக இந்த ‘இடைநிற்றல் இல்லை’ என்ற ஒரு நிலையை, தமிழக அரசின் கொள்கை முடிவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் குழந்தைகள் சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக சரிசமமாக இல்லாத ஒரு நிலை இங்கே நிலவுவதால், விளிம்புநிலை மக்கள் தங்கள் குழந்தைகளை படிக்கவைக்க வேண்டும் என்பதாலும், தேர்வின் தோல்வி பயம் அறியாமல், அதனால் தாழ்வுமனப்பான்மையை வளர்க்கும் போக்கைத் தடுக்கும் விதமாகத்தான் இதனை கடைபிடித்து வருகிறது அரசு. இதற்கு மக்களின் அமோக ஆதரவு என்றைக்கும் இருக்கிறது. இந்நிலை தொடரவேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் என்ற நிலையில், மத்திய அரசின் வலியுறுத்தலின் பேரில், திடீரென்று இம்மாதிரி ஒரு அறிவிப்பை செய்து அனைவரையும் கொந்தளிக்க வைத்துவிட்டது தமிழக அரசு.

இதற்கு காரணமாக அவர்கள் சொல்லுவது என்னவென்றால், கல்வித்தரம் உயர்த்தப்படுகிறது என்பதுதான். தற்போது எவ்வகையில் தரம் தாழ்ந்து விட்டது நம் கல்வித்திட்டம்? இப்படித்தான், மத்திய மோடி அரசு, தரம் என்று சொல்லிக்கொண்டு, ‘நீட் தேர்வு’ கொண்டுவந்தது. அதன்பிறகு நம் பிள்ளைகள் மருத்துவம் படிப்பது என்பது வெறும் கனவாக அல்லவா போய்க்கொண்டிருக்கிறது. அதையே நாம் நீக்கவேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கும் போது, 10 மற்றும் 13 வயது குழந்தைகளை தரம் பிரிக்கிறோம் என்று இறங்கியிருக்கிறார்கள். என்னே ஒரு கொடுமை!.

இவர்கள் தரம் என்று சொல்வதெல்லாம் வடிகட்டும் செயல் தான். அனைத்து நிலையிலும் உள்ள மக்கள் படித்து முன்னேறிவிடக்கூடாது என்ற ஒரு பாசிசப்போக்கு தானே முதன்மை காரணம்!.

இந்த ‘இடைநிற்றல் இல்லை’ என்ற கொள்கை முடிவால், தமிழ்நாட்டின் கல்வித்தரம் தரம் தாழ்ந்து போய்விட்டதா.. என்ன? தேர்ச்சி விகிதங்கள் மிகச்சிறந்த நிலையில் இருக்கின்றன என்பதை புள்ளிவிவரங்கள் தெளிவாக சொல்லுகின்றனவே!

மருத்துவம், தொழிற்படிப்புகள், உயர்கல்வி என அனைத்திலும் தமிழகம் முன்னிலையில்தான் இருக்கிறது. கடந்தாண்டு (2018) கூட, 10 லட்சம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கின்றனர். அதன் தேர்ச்சி விகிதம் 94.5% என பதிவாகியுள்ளது. இதில், அரசு பள்ளிகள் 91.36% யும், தனியார் பள்ளிகள் மொத்தம் 98.79% எனவும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதைவிட என்ன உயர்ந்த தரம் இருக்கிறது!
8ம் வகுப்பு வரை இடைநிற்றல் கூடாது என்பதால், நம் கல்வித் தரம் குறைந்து போய் விடவில்லை என்பதைத்தானே இந்த தகவல் மெய்ப்பிக்கிறது.

பொதுத்தேர்வு என்பது எப்போது தேவைப்படுகிறது என்ற சாதாரண புரிதல் கூட இல்லாமல், நன்கு கல்வி கற்றவர்களே இதனை சரியானது என்று சொல்வதை நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் கூடாது. பத்தாம் வகுப்பிற்குப் பிறகு, எந்த பாடத்தில் அறிவியலிலா, கணிதத்திலா, வரலாற்றிலா, பொருளாதாரத்திலா, எதில் நாம் சிறப்பாக இருக்கிறோம் என்பதை உறுதி செய்வதற்கு பொதுத்தேர்வு தேவைப்படுகிறது. அதேபோல், பன்னிரெண்டாம் வகுப்பில் மருத்துவமா, பொறியியலா, பாலிடெக்னிக்கா, இல்லை கலை, அறிவியல் படிப்புகளா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாக செயல்படுகிறது என்பதால் பொதுத்தேர்வு அவசியமாகிறது. 5 மற்றும் 8 வகுப்புகளில் இதற்கு என்ன அவசியம் இப்போது வந்து விட்டது? பொதுத்தேர்வு என்றால் என்ன என்றே தெரியாத ஒரு பருவத்திலுள்ள குழந்தைகளை, அவர்களுக்கு தேர்வு அச்சத்தை உண்டாக்குவது, படிப்பில் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது என்பது எப்படி சிறந்த நடைமுறையாக, சிறந்த கல்வித்திட்டமாக இருக்க முடியும்?

அது மட்டுமல்லாமல், தரத்தை உயர்த்துகிறோம் என்ற பெயரில் ஒரு திருத்தம் கொண்டுவரமேண்டுமென்றால், கல்வித்திட்டத்தைத்தானே மேம்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்படவேண்டும். பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும். அதை விட்டுவிட்டு, குழந்தைகளை பழிவாங்குவது என்பது எந்த விதத்தில் நியாயம் என்பது கூட தெரியாமலா இந்த அரசு செயல்படுகிறது!

இன்னும் கூட, கிராமங்களில் ஏழை, எளிய மக்களில் தோல்வியுற்ற மாணவர்கள், மேற்கொண்டு படிக்காமல், குடும்பநிலை காரணமாக, ஏதாவது சிறு வேலைகளுக்கு செல்லும் நிலை இருக்கிறது. பெண் குழந்தைகளை சிறு வயதில் திருமணம் செய்து கொடுக்கும் அவலநிலையும் இருந்துகொண்டு தானிருக்கிறது. குறைந்தபட்சம் எல்லோரும் 8 ஆம் வகுப்பு வரையாவது படித்துவிட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில்தான் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இந்த ‘இடைநிற்றல் இல்லை’ என்ற அரசின் கொள்கை முடிவு தான் என்பது, நம் சமூகத்தின் அனைத்து நிலையிலும் இருக்கும் மக்களின் வாழ்வியலை முன்னேற்றுகிறது என்பது தெள்ளத் தெளிவான ஒன்று.

மேலும், இது ஒரு புதிய கல்விக்கொள்கையின், நவீன குலக்கல்வித்திட்டத்தின் ஒரு பகுதி தான். எல்லோருக்கும் அனைத்து சமூகத்தினருக்கும் கல்வி கிடைப்பது என்பது எப்போதுமே, ஆதிக்கசக்திகளின் பார்வையில் காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறது. எரிச்சலை உண்டாக்குகிறது. அதனால் தான் ஒவ்வொரு முறையும், நீட் உட்பட ஏதாவது ஒரு வகையில், தரம் உயர்த்தப்படுகிறது என்று சொல்லிக்கொண்டு நம் குழந்தைகளின் கல்வியில் கைவைக்கிறது. சமூகநீதியை குழிதோண்டி புதைக்கப்பார்கிறது. பாசிச பா.ச.க அரசின் செயல்படுகள் அனைத்தையும் பார்த்தோமானால், ஒடுக்கப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதரங்களை, வளர்ச்சியை பாதிக்கும் விதமாகத்தான் இருக்கிறது என்பது கண்கூடாக தெரியும்!

ஆதலால், மக்களே இந்த ஆண்டு நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இந்த 5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வுகள் நிரந்தரமாக நிறுத்தப்படவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துவோம். ‘இடைநிற்றல் இல்லை’ என்ற அரசின் கொள்கைமுடிவு எந்த நிலையிலும் கைவிடப்படக்கூடாது என்பதில் மிகுந்த விழிப்புடன் இருந்து போராடுவோம்!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது எக்காலத்திற்கும் ஏற்கக்கூடியதல்ல!”

அதிகம் படித்தது