மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 23

கி.ஆறுமுகம்

Aug 23, 2014

subaash pagudhi7-6திரிபுரா காங்கிரசு மாநாடு முடிந்த பின் போசு, காந்திக்கு கடிதம் அனுப்பினார். அதில் நாம் முதலில் காங்கிரசு காரிய கமிட்டியை அமைக்க வேண்டும், அதற்கு உங்கள் ஆலோசனைகள் மிகவும் முக்கியமாகும். காரிய கமிட்டியில் உறுப்பினர்கள் நியமிப்பதில் காங்கிரசில் உள்ள அனைத்து குழுவினர்களுக்கும் சரியான பங்களிப்பை கொடுத்து உறுப்பினர்களைத் தேர்வு செய்ய நான் விரும்புகிறேன். அப்படி செய்யும் பொழுது காங்கிரசில் பிளவு ஏற்படாது. பண்டித பந்த்தின் தீர்மானம் சொல்லியபடி நான் காரியகமிட்டி அமைப்பதில் உங்களினால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டுமெனில் பண்டித பந்த்தின் தீர்மானம் ஒரு தவறான தீர்மானம், அது சரியான முன் அறிவிப்பின்றி எடுக்கப்பட்டது. அதை என்னால் மாநாட்டில் நிராகரித்திருக்க முடியும் அல்லது காங்கிரசின் சட்டவிதிகளைக் கூறி அதை தள்ளுபடி செய்திருக்க முடியும். எனக்கு இயற்கையாகவே பழிவாங்கும் உணர்வு எதுவும் கிடையாது.

subash 15-3என் மனம் ஒரு குத்துச்சண்டை வீரனை ஒத்தது. விளையாட்டு முடிந்தது, வெற்றி தோல்வியை மறந்து ஒருவரை ஒருவர் கைகுலுக்கி கொள்ளும் மனம் உள்ளவன் நான். எனவேதான் நான் பண்டித பந்த்தின் தீர்மானம் மாநாட்டில் நிறைவேற உதவினேன், வெற்றிபெற அனுமதித்தவனும் நான், என்ற முறையில் அதை மதித்து நடக்க விரும்புகிறேன். எனவே காரிய கமிட்டி அமைப்பதில் எங்கள் கருத்துக்கும் மதிப்பளித்து உரிய பிரதிநிதித்துவம் கொடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். ஆனால் உங்கள் கருத்தையே முழுமையாக வலியுறுத்தினார்கள் எனில் நான் காங்கிரசு தலைவர் பதவியில் கைப்பொம்மையாக இருக்க விரும்பவில்லை. தலைவர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கு சற்றும் கிடையாது. எனக்கு தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடும்படி அளவுக்கதிகமான நிர்ப்பந்தம் என்மேல் புகுத்தப்படுகிறது, அதை நான் பொறுத்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் என் ராஜினமாவினால் காங்கிரசு பிளவுபடும், புதிய சிக்கல்கள் உருவாகும், அதை தடுப்பதற்காக நான் போராடுகிறேன். பின் நடந்திருக்கும் உலக நிகழ்ச்சிகள் என் கருத்தையே உறுதிப்படுத்துகின்றன. நான் பல மாதங்களாகவே நமது நண்பர்களிடம் ஐரோப்பாவில் போராட்டம் வெடிக்கும் என்று கூறி வந்திருக்கிறேன். சர்வதேச சூழ்நிலையோடு உள்நாட்டில் உள்ள நமது நிலையும் சேர்ந்த பூரண சுதந்திரத்தை, கோரிக்கையை வற்புறுத்தி இறுதிப்போராட்டத்தை தொடங்கச் செய்ய சரியான நேரம் வந்துவிட்டது என்று எட்டு மாதங்களுக்கு முன்பே நான் கூறியிருக்கிறேன். நமக்கும் இந்த தேசத்திற்கும் பெரிய துர்பாக்கியமோ என்னவோ என்னுடைய இந்த நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ள நீங்கள் தயாராக இல்லை என்று காந்திக்கு எழுதினார். அதற்கு காந்தி ராஜ்கோட் பிரச்சினை தம்மை டெல்லியிலேயே கட்டிப்போட்டு இருக்கிறது. தற்பொழுது நாட்டில் அகிம்சைக்கு ஆதரவாக தகுந்த சூழ்நிலை இல்லை எனவே போராட்டம் தொடங்குவதைப் பற்றி நான் பின்னர் சிந்திக்கிறேன் என்றார். வங்காளத்தில் மக்கள் முன்பு இல்லாத அளவிற்கு தற்பொழுது அகிம்சைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டுள்ளார்கள். பிரிட்டிசுக்கு இறுதி எச்சரிக்கை கொடுப்பதோ, காலக்கெடு நிர்ணயிப்பதோ உங்களுக்கும் நேருவுக்கும் பிடிக்கவில்லை. ஆனால் உங்களுடைய பொது வாழ்க்கையில் நீங்கள் பல தடவை காலக்கெடு கொடுத்து போராடியிருக்கிறீர்கள். ஏன்? நேற்று கூட ராஜ்கோட் பிரச்சினையில் அதைத்தான் செய்திருக்கிறீர்கள்.

நம்முடைய தேசிய கோரிக்கையை ஒரு காலக்கெடு நிர்ணயித்து பிரிட்டிசு அரசாங்கத்திடம் கொடுப்பதற்கு மட்டும் உங்களுக்கு என்ன ஆட்சேபனை இருக்க முடியும்? அப்படி செய்தால் நாம் மிக விரைவில் பூரண சுதந்திரம் அடைய முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். இன்றைய சூழ்நிலையில் நமது போராட்டம் நீண்ட காலம் நடக்க வேண்டிய அவசியம் இருக்காது. நாம் துணிச்சலோடு இறுதிக் கெடுவை அறிவித்துவிட்டு போராட்டத்தில் குதித்தால் இன்றையிலிருந்து அதிகபட்சமாகப் போனால் 18 மாதங்களுக்குள் நாம் சுதந்திரத்தை பெறமுடியும் என்று நான் நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறேன். இந்த விஷயத்தில் நான் முழுநம்பிக்கையோடு இருப்பதினால் இதற்காக எப்படிப்பட்ட தியாகத்தினையும் நான் செய்ய தயாராக உள்ளேன். இந்த போராட்டத்தினை நீங்கள் தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் உங்களுக்கு கீழ்ப்பட்ட சாதாரண தொண்டனாக பாடுபட தயாராக உள்ளேன், என்னைத் தவிர வேறொரு தலைவரின் கீழ் காங்கிரசு இருந்தால் இந்த போராட்டம் நன்றாக நடத்த முடியும் என்று நீங்கள் கூறினால் நான் விலகத் தயாராக உள்ளேன் மற்றும் உங்கள் விருப்பப்படி அமையும் காரிய கமிட்டிதான் திறமையோடு போராட முடியும் என்று நீங்கள் விரும்பினால் அதையும் நான் மகிழ்ச்சியோடு ஏற்கிறேன். என் விருப்பமெல்லாம் இந்த நெருக்கடியான நிலையை நீங்களும் காங்கிரசும் உறுதியோடு எழுந்து நின்று பூரண சுதந்திரத்திற்கான போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்பது தான்.

இந்த காந்தி-போசு கடித போக்குவரத்தைப் பற்றியும் கருத்துகளை பற்றியும் பத்திரிகையில் வெளியிடும் பொறுப்பை காந்தி, போசுக்கு வழங்கியிருந்தார். காந்தி இந்த கடித பரிமாற்றத்தினை நான் பத்திரிகைக்கு வழங்க விரும்பவில்லை, நீங்கள் வேண்டுமெனில் பத்திரிகைகளுக்குக் கொடுங்கள் என்று போசுவிடம் காந்தி கூறியிருந்தார். ஆனால் டில்லிப் பத்திரிகைகளில் போசு-காந்தி கடிதப் போக்குவரத்தின் விவரங்கள் வெளிவரத் தொடங்கின. போசு எந்தத் தகவலும் பத்தரிகைகளுக்குக் கொடுக்கவில்லை. ஆனால் டெல்லி பத்திரிக்கைகளில் செய்தி எப்படி வருகின்றது என்று தெரியவில்லை. சர்தார் பட்டேல், நேருஜி, கிருபளானி போன்ற தம் சகாக்களுக்குக் கடிதப் போக்குவரத்தின் விவரத்தை அவ்வப்போது தெரிவிப்பதாக காந்தி ஒப்புக் கொண்டார். அவர்களில் யாரோ ஒருவர்தான் செய்தி கொடுக்கிறார் என்பது புரிந்தது. அதைத் தவிர்ப்பது குறித்து போசு, காந்திக்கு தந்தி அனுப்பினார். பத்திரிகைகளுக்கு செய்திகள் எப்படிக் கிடைத்தன என்று தமக்குத் தெரியாது என்று காந்தி கையை விரித்தார்.

பின், போசு, உங்கள் விருப்பப்படி காரியகமிட்டியை அமைத்து அதனை அகில இந்திய காங்கிரசு கமிட்டியில் வெற்றி பெறவேண்டும் அல்லது நீங்கள் ராஜினாமா செய்யவேண்டும் என்றார் காந்தி. போசு, காந்தியின் இந்த ஆலோசனைக்கு, நீங்கள் காங்கிரசு பிளவுக்கு ஆலோசனைக் கூறுகிறீர்கள் ஒருவேளை பழைய தலைவர்கள் அனைவரையும் திரும்பவும் காரியகமிட்டியில் நியமிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படியானால் காங்கிரசிலிருந்து ஒதுங்கியிருப்பதை விட்டுவிட்டு உடனே கட்சியில் உறுப்பினராகி நீங்களே நேரடியாக தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள், இப்படி கூறுவதற்கு மன்னியுங்கள். உங்களுக்கும் உங்கள் சீடர்களுக்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. சகல தரப்பினரையும் சேர்த்து காரியகமிட்டியை அமைக்க வேண்டும் என்ற என் கருத்தை நீங்கள் ஆதரிக்கவில்லை என்றார் போசு.

இதற்கிடையில் கல்கத்தாவில் அகில இந்திய காங்கிரசு கமிட்டி கூட்டம் கூட இருந்தது. இதற்கு காந்தியை கண்டிப்பாக வரவேண்டும் என்று தந்தி அனுப்பினார் போசு காந்தி வர முயற்சிக்கிறேன் என்றார். போசு, கூட்டத்தின் தேதியை உங்களுக்காக மாற்றி வைக்கப்படும் என்றார். பின் காந்தி, கூட்டத்தில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டார். காந்தியோடு போசு மற்றும் நேரு நீண்ட நேரம் விவாதித்தும் ஒரு பயனும் இல்லை. தன் விருப்பப்படி காரியகமிட்டியை அமைத்து அகில இந்திய காங்கிரசு ஒப்புதலுக்கு விடவேண்டும் என்றார் காந்தி, அவருடைய சீடர்களும் அதையே கூறினார்கள். சர்வதேசச் சூழ்நிலை எப்படி இருந்தால் என்ன? நாடு தழுவிய போராட்டம் நடந்தால் என்ன?, நடக்காவிட்டால் என்ன? எங்களுக்கு போசு தலைமையை பறிக்க வேண்டும் என்ற ரீதியிலேயே அவர்கள் நடந்துகொண்டனர். போசுக்கு நிலைமை தெளிவாகப் புரிந்துவிட்டது, அடுத்து தாம் என்ன செய்ய வேண்டும் என்பதும் தெரிந்துவிட்டது.

subash11939 ஏப்ரல் மாதம் கல்கத்தாவில் அகில இந்திய காங்கிரசு கமிட்டி கூடியது. கூட்டத்தில் குழப்பம் நீடித்தது. காந்தியின் ஆதரவாளர்கள் மேடையில் பேசவிடவில்லை. வங்காள இளைஞர்கள் காந்தியின் கைக்கூலிகளே திரும்பிப் போய்விடுங்கள் என்றனர் கூட்டத்தில். கூட்டத்தைக் கட்டுப்படுத்த போசுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. வல்லபாய் பட்டேல் வங்காளத்திற்குப் போனால் உயிரோடு திரும்பமுடியாது என்று அஞ்சி கல்கத்தா காங்கிரசுக்கு வரவே இல்லை. தமிழ்நாட்டில் ராஜாஜிக்கு போகும் இடம் எல்லாம் கருப்புக்கொடி காட்டப்பட்டது. பட்டேல் கல்கத்தா காங்கிரசுக்கு வராமல் இருந்தது புத்திசாலித்தனமான முடிவு என்று ஜே.பி.கிருபளானி பின்னாளில் எழுதியிருக்கிறார்.

subash21939 மே மாதம் முதல் தேதியன்று அகில இந்திய காங்கிரசு மகாசபைக் கூட்டம் தொடங்கியதும், தலைவர் போசு எழுந்து காங்கிரசு தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக அறிவித்தார். தொண்டர்கள் கூடாது கூடாது என்று கூச்சலிட்டனர். இறுதியில் போசு வங்காள விருந்தாளிகளாக வந்திருக்கும் காங்கிரசு தலைவர்களை அவமதிப்பது என்னை அவமதிப்பதாகவே பொருள் என்றதும் சபையில் அமைதி திரும்பியது. பின் ராஜேந்திர பிரசாத்தை புதிய தலைவராக தேர்ந்தெடுத்து அவர் பழைய காரிய கமிட்டியை மீண்டும் நியமித்தார். இந்த கமிட்டியில் சேர தனக்கு விருப்பம் இல்லை என்றார் நேரு. திரிபுராவில் பந்த் தீர்மானத்தை முன் மொழிந்த பண்டித கோவிந்த வல்லப பந்த்துக்கும் அந்தத் தீர்மானத்தை எழுதிக் கொடுத்து ஆலோசனை கூறிய ராஜாஜிக்கும் இந்தப் புதிய காரிய கமிட்டியில் இடமளிக்கவில்லை. இவர்கள் தான் போசின் ராஜினாமாவுக்குக் காரணமாக இருந்தவர்கள். மகாகவி ரவீந்திரநாத் தாகூருக்கே இந்த அநியாத்தைக் கண்டு மனம் வருந்தி போசுக்கு ஒரு பாராட்டு கடிதம் அனுப்பினார். அது “ஆத்திரமூட்டும் சூழ்நிலைக்கு மத்தியிலும் நீங்கள் காட்டிய கண்ணியமும் பெருந்தன்மையும் சகிப்புத் தன்மையும் என்னை மிகவும் கவர்ந்தது. உங்கள் தலைமையில் நம்பிக்கைக் கொள்ளச் செய்து விட்டது. இதே பெருந்தன்மையும் சகிப்பு குணமும் தொடர்ந்து வங்காள மக்களால் பின்பற்றப்பட்டால்தான் வங்காளத்தின் கௌரவமும் உங்கள் கௌரவமும் காப்பற்றப்படும். அதுதான் உங்களுடைய வெளிப்படையான இந்தத் தோல்வியை நிரந்தர வெற்றியாக மாற்றிக் காட்ட உதவும்”.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 23”

அதிகம் படித்தது